வியாழன், 5 ஏப்ரல், 2012

ஓடு லோலா ஓடு

                                                             உலக அரங்கில் சினிமா
உங்களில் எத்தனை பேர் தமிழ்த் திரைப்படங்களைத் தவிர வேறு மொழிப்படங்களைப் பார்த்திருப்பீர்கள்? ஆங்கிலப் படங்களையும்,ஹிந்திப் படங்களையும் அனேகமானோர் பார்த்திருக்கக் கூடும்.வேறு மொழிகளில் வெளியான வித்தியாசமான,நல்ல கதையமைப்புள்ள என்னைக் கவர்ந்த திரைப்படங்களைப் பற்றி உலக அரங்கில் சினிமா என்ற தொடர் மூலம் கூறலாமென்றிக்கிறேன்.        
                                                                 ஓடு லோலா ஓடு
நாம் அன்றாட வாழ்வில் அடிக்கடி நினைத்துக் கொள்ளும் ஒரு எண்ணம் தான் இந்தப் படத்தின் கதைக்கரு.அதாவது சில செயற்பாடுகளை நாம் சற்றுத் தாமதமாகச் செய்யும் போது ஏற்படும் பாதகமான விளைவுகளைக் கண்டு “நான் மட்டும் சரியான நேரத்துக்கு இந்தக் காரியத்தைச் செய்திருந்தால்...?” என்று எத்தனை தடவைகள் நமது வாழ்க்கையில் நினைத்திருப்போம்.அதுவே தான் இந்தத் திரைப்படத்தின் கதைக்கருவும்.
உதாரணத்துக்கு  வெளிநாடு செல்லவிருக்கும் ஒரு நண்பனின் குடும்பத்தைப் பார்ப்பதற்கு நீங்கள் சைக்கிளில் புறப்படுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். நண்பனைப் பார்ப்பதற்கு மட்டுமல்ல.உங்களுக்கு நல்லதொரு வேலையை எடுத்துத் தரக் கூடிய ஒரு நபரையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துவதாக நண்பன் சொல்லியிருக்கிறான்.அது மட்டுமல்லாமல் அண்மையில் சைக்கிளால் விழுந்த நண்பனின் தாயை சுகம் விசாரித்து, நன்றாகச் சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக் கொள்ளுமாறு சொல்லி முட்டைமாவும் கொடுக்கப் போகிறீர்கள்.அதெல்லாவற்றையும் விட இன்னொரு முக்கியமான காரணம் நண்பனின் தங்கை.ஏற்கனவே சாடை மாடையாக அப்படி இப்படி என்றிருக்கும் உங்கள் காதல் விஷயத்தை முதன் முதலாகத் தெரிவித்து விடும் நோக்கில் ஒரு கடிதம் எழுதி அதை அவளுக்குப் பிடித்த ரமணிச்சந்திரன் எழுதிய நாவல் ஒன்றினுள் வைத்து அதையும் கொண்டு போகிறீர்கள். நீங்கள் வீட்டை விட்டுப் புறப்படும் போதே வீட்டில் கூலி வேலை செய்பவர் ஒருவர் உள்ளே நுழைய உங்களின் அம்மா,உங்களைச் சற்று நின்று,  நின்று வீட்டில் என்னென்ன வேலை செய்ய வேண்டும்மென்று சொல்லி விட்டுப் போகுமாறு சொல்கிறார்.நீங்களும் முடிந்த மட்டில் வேகமாக கூலி வேலை செய்பவருக்கு வேலைகளைச் சொல்லி விட்டு மீண்டும் புறப்படுகிறீர்கள். வழியில் காளை மாடு ஒன்று உங்களை முட்டுவதற்கு வர நீங்களும் பயந்து பாதையை விட்டு சைக்கிளை சற்று விலகிச் செலுத்த,சைக்கிள் டயரில் முள்ளுக் குத்திக் காற்றுப் போய் விட.......  சைக்கிளை உருட்டிக் கொண்டு போகிறீர்கள்.போகும் வழியில் உங்களுக்குச் சமய  பாடம் எடுத்த ஒரு அறுவை ஆசிரியரைச் சந்திக்கிறீர்கள்.ஒருவாறாக அவரது அறுவையிலிருந்து தப்பி இன்னொரு சமயம் சந்திப்பதாகக் கூறி மீண்டும் உருட்டுகிறீர்கள். பின்னர் சைக்கிளை, சைக்கிள் கடையில் விட்டு விட்டு ஒரே ஓட்டமாக ஓடுகிறீர்கள். நண்பனின் ஒழுங்கையை அடையும் தருணத்தில் இருவர் பெரியதொரு தகரத்தை உங்கள் முன்னால் தூக்கிச் செல்ல,உங்கள் உருவம் முழுவதுமாக அந்தத் தகரத்தில் மறைக்கப்பட சரியாக அதே கணத்தில் உங்கள் நண்பனும் அவனது குடும்பமும் செல்லும் வாகனம் அந்த ஒழுங்கையை விட்டு வெளிக்கிளம்புகிறது.நீங்களும் அந்த நண்பனின் பெயரைச் சொல்லிக் கத்துகிறீர்கள்.அந்த சமயத்தில் தகரத்தைத் தூக்கிக் கொண்டு போன இருவரும் அதை ஒரு பாட்டியின் மேல் போட்டு விட தகரத்திலிருந்து எழுந்த சத்தமும்,பாட்டியின் தொண்டையிலிருந்து கிளம்பிய சத்தமும் உங்கள் குரலை அமுக்கி விட  வாகனம் புறப்பட்டுப் போய் விடுகிறது.உங்களை அந்த இடத்தில் வைத்துப் பாருங்கள்.என்ன நினைப்பீர்கள்? அடச்சே!கூலியாள் சற்றுத் தாமதமாக வந்திருந்தால்....மாடு காணிக்குள் நுழைந்ததும்,நான் அந்த வழியால் வந்திருந்தால்......சமய பாட வாத்தியார் அந்தச் சமயத்தில் வராமலிருந்தால்......தகரம் தூக்கிய இருவரும் சற்றுத் தாமதமாகத் தூக்கியிருந்தால்………அந்தப் பாட்டி அந்த நேரம் வராமலிருந்தால்....... என்று நினைப்பீர்களா இல்லையா?அதைத்தான் இந்தத் திரைப்படத்திலும் காட்டுகிறார்கள்.
இதை வாசிக்கும் போது இதே கதைக் கருவைக் கொண்ட 2001 இல் இந்தியாவில் ஜீவாவின் இயக்கத்தில்   வெளியாகி ஷ்யாம்,ஜோதிகா,சிம்ரன்  ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்த “12B“ திரைப்படம் உங்கள் ஞாபகத்திற்கு வரலாம். 1998 இல் ஜெர்மனியில்  Tom Tykwer இன் இயக்கத்தில் வெளியாகி Franka Potente,Moritz Bleibtreu ஆகியோர் நடித்த  Run Lola Run” என்ற  இந்தத் திரைப்படத்தின் மையக் கருத்தை அடியொற்றியே “12B” எடுக்கப்பட்டிருக்கலாம் என்பது எனது கருத்து. இனி படத்தின் கதையைப் பார்ப்போம்.  
தொலைபேசி மணியடித்ததும் அதை எடுக்கிறாள் லோலா.மறுமுனையில் பதட்டத்துடன் அவளது காதலன் மானி.”ஏன் நீ சொன்ன இடத்திற்கு சொன்ன நேரத்திற்கு வரவில்லை?” என்று அவன் ஏச,லோலா என்ன நடந்தது என்று வினாவுகிறாள்.தனக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்துப் பற்றி அவளிடம் கூறுகிறான்.
 மானி.கடத்தல் தொழில் செய்யும் மானி வைரங்களை சேர்ப்பிக்க வேண்டிய இடத்தில் சேர்ப்பித்து விட்டு  ஒரு லட்சம் பணத்துடன் திரும்பி வருகிறான்.லோலாவுக்கு  ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னை  வந்து சந்திக்குமாறு ஏற்கனவே அவன் கூறியிருந்தும் அவள் தனது மோட்டார் சைக்கிளைத் தொலைத்து விட்டதனால் அந்த இடத்திற்கு சற்றுத் தாமதமாக வருகிறாள்.இதற்கிடையில் லோலாவைக் காணாததால்  மானி பணத்துடன் புகைவண்டியில் ஏறி விடுகிறான்.பயணத்தின் போது சோதனை அதிகாரிகள் வர,பதட்டத்துடன் பணத்தை எடுக்காமல் இறங்கி விட,அதை ஒரு தாடிக்காரன் எடுத்து விடுகிறான்.
“நீ மட்டும் சரியான நேரத்தில் வந்திருந்தால்எனக்கு இந்த இக்கட்டு நேர்ந்திராது. 12 மணிக்குள் தொலைத்த  பணத்தைக் கடத்தல்காரர்களிடம் கொடுக்கா விட்டால் எனது உயிருக்கே ஆபத்து.12 மணிக்கு ஒரு கடையைக் கொள்ளையடிக்கப் போகிறேன்” என்று மானி சோல்ல லோலா “அவசரப்படாதே.எப்படியாவது பணத்துடன் வருகிறேன்” என்று கூறித் தொலைபேசியை வைத்து விட்டு மணியைப் பார்க்கிறாள்.12 மணிக்கு இன்னும் 20 நிமிடங்கள் இருக்கின்றன.யாரிடம் பணம் கேட்கலாம் என்று யோசித்து தனது  அப்பாவிடம் கேட்பதாக முடிவெடுத்துக் கொண்டு  ஓடத் தொடங்குகிறாள்.
இதற்கிடையில் மானி தொலைபேசிக் கூண்டினுள் நுழைந்து கொண்டு எத்தனையோ பேரிடம் பணத்தைக் கேட்டுப் பார்க்கிறான்.ஒருத்தரும் தருவதாக இல்லை.
ஓடும் போது ஒரு பெண்ணுடன் மோதுகிறாள்.கூட்டமாக வரும் கன்னியாஸ்திரிகளைக் கடக்கிறாள்.ஒரு வீட்டிலிருந்து வெளியே வரும் கார் ஒன்று அவளை மோதப் பார்க்கிறது.சைக்கிளில் வரும் ஒருவன் அந்தச் சைக்கிள் விலைக்கு வேண்டுமா என்று கேட்கிறான்.மானியின் பணத்தை எடுத்த தாடிக்காரன் அவளைக் கடந்து போகிறான். ஒன்றிலும் கவனம் திரும்பாத லோலா சிறிது கூட நிற்காமல் ஓடிச் சென்று தனது அப்பாவின் வங்கியை அடைந்து அவரது அறைக்குள் நுழைகிறாள்.
சரியாக அவள் நுழையும் நேரம் பார்த்து அவளது அப்பா தான் இரண்டாவது திருமணம் செய்வது குறித்து அவரது காதலியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.திடீரென்று  அவளைப் பார்த்து விட்டு அதிர்ச்சியாகி என்ன விடயம் என்று வினாவுகிறார் ஒரு லட்சம் பணம்  வேண்டுமென்று லோலா சொல்கிறாள். 5 நிமிட வாக்குவாதத்தின் பின் நான் உனக்கு அப்பாவுமல்ல.நீ எனக்கு மகளுமல்ல” என்று துரத்த லோலா வெளியே வந்து மீண்டும் வெறியோடு ஓடத் தொடங்குகிறாள்.
சரியாகப் 12 மணிக்கு லோலா அந்தத் தெருவுக்கு வந்து விடுகிறாள்.அவள் அழைத்தது கேட்காமல்    மானி துப்பாக்கியுடன் அருகிலிருந்த  கடைக்குள் நுழைகிறான்.வேறு வழியில்லாமல் லோலாவும் சேர்ந்து கொண்டு மானியோடு கொள்ளையடிக்கிறாள். கொள்ளையடித்து விட்டு வெளியே வரும் இருவரையும் காவல்துறை சுற்றி வளைத்துக் கொள்கிறது.மணி பணப்பையைத் தூக்கி எறிகிறான்.லோலாவைத் துப்பாக்கிக் குண்டொன்று தாக்குகிறது. இறக்கும் தருவாயில் மானி லோலாவைப் பார்த்து “என்னைப் பிரிந்து போகப் போகிறாயா?” என்று கேட்க இப்படியெல்லாம் நடக்காமல் இருந்தால் என்று நினைத்துக் கொண்டே “இல்லை” என்று கத்துகிறாள்.
லோலா ஒரு நொடி முன்னதாக வந்திருந்தால்......படம் முதற் காட்சியிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கிறது.ஆவலுடன் மோதிய பெண்,கடந்து வந்த கன்னியாஸ்தி ரிகள்,சைக்கிளில் அவளை முந்திக் கொண்டு போனவன்,பணத்துடன் போகும் தாடிக்காரன் என்று முதலில் எல்லாப் பாத்திரங்களும் வருகின்றன.ஆனால் ஒரு வினாடி முன்னதாக.
அவள் தனது அப்பாவின் அலுவலகத்தினுள் நுழையும் போது இந்த முறை அவர் லோலாவைப் பற்றியும்   அவளது தாயைப் பற்றியும் தவறாகக் கதைத்துக் கொண்டிருக்கிறார்.இந்தச் சூழ்நிலையில் லோலா அவரிடம் பணம் கேட்கும் போது அவர் அவளைக் கோபத்தில் அடித்து விடுகிறார்.லோலா துப்பாக்கியைக் கொண்டு அப்பாவை மிரட்டி அவரிடம் ஒரு லட்சம் பணம் வாங்கிக் கொண்டு வெளியில் வந்து ஓடத் தொடங்குகிறாள்.
இந்த முறை மானி கடைக்குள் கொள்ளையடிக்க நுழையும் முன் லோலா அழைப்பது அவனுக்குக் கேட்க... கதை மாறுகிறது.மகிழ்ச்சியுடன் லோலாவை நோக்கி  சாலையைக் கடந்து வரும் மானி மீது அம்புலன்ஸ் வண்டி மோதுகிறது.  மானி இறக்கும் தருவாயில் இப்படியெல்லாம் நடக்காமல் இருந்தால் என்று நினைத்துக் கொண்டே “இல்லை” என்று கத்துகிறான்.


படம் முதற் காட்சியிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கிறது.மீண்டும் லோலா ஓட ஆரம்பிக்கிறாள்.(சில படங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள் என்று எவ்வளவு யோசித்தாலும் புரியாது.ஆனால் இந்தப் படம் அப்படியல்ல.)திரும்பவும் அதே விஷயங்கள்.இந்த முறை எதிரில் வரும் பெண் இடிக்காமல் போகிறாள்.சைக்கிள் வேண்டுமா என்று கேட்கும் இளைஞனும் பணத்தை எடுத்த தாடிக்காரனும் சந்தித்துக் கொள்கிறார்கள்.தாடிக்காரன் பணத்தைக் கொடுத்து அந்தச் சைக்கிளை வாங்கிக் கொண்டு விட ஒரு வினாடியில் கதையே மாறி விடுகிறது.லோலா வரும் முன் அவளது அப்பா அலுவலகத்தை விட்டு வெளியே கிளம்பி விடுகிறார்.லோலாவுக்குக் காத்திருந்த மானி சைக்கிளில் போகும் தாடிக்காரனைக் கண்டு அவனைத் துரத்திப் பிடித்து பணத்தை வாங்கி விடுகிறான்.படம் முழுவதுமே ஓடிக் கொண்டிருக்கும் லோலா சரியாக 12 மணிக்கு அந்த இடத்திற்கு வருகிறாள்.அந்த நேரத்தில் கடத்தல்காரர்களிடம்  பணத்தைக் கொடுத்து விட்டு மானியும் அந்த இடத்திற்கு வருகிறான். “என்ன,இந்த இடத்திற்கு ஓடியே வந்து விட்டாயா?” என்று மானி கேட்க லோலா சிரிக்கிறாள்.இருவரும் கை கோர்த்துக் கொண்டு செல்வதோடு படம் நிறைவடைகிறது.
ஒரு நொடி மாறுவதால் வாழ்க்கையின் ஒரு இருபது நிமிடத்திற்குள் எவ்வளவோ விஷயங்கள் மாறி விடுகின்றன என்பதை 3 விதமான கற்பனையில் சொல்லியிருக்கும் இந்தப் படம் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பையும் நிறைய விருதுகளையும் பெற்றது.சாலையில் லோலா ஓடி வரும் போது கடந்து வரும் மனிதர்கள்,கார்கள்,சைக்கிள்கள்,புகைவண்டி,அம்புலன்ஸ்  என்பன ஒரு நொடி பிந்துவதால் அல்லது ஒரு நொடி முந்துவதால் அல்லது சரியான நேரத்தில் இயங்குவதால் எப்படி எப்படியெல்லாம் வித்தியாசப்படுகின்றன என்பதை சுவாரஸ்யமாக மட்டுமன்றி புத்திசாலித்தனமாகவும் காட்டியிருப்பது இப்படத்தின் சிறப்பெனலாம்.கடிகாரத்தின் வினாடி முள் தொடர்ந்து ஒலிக்கும் ஓசையைப் பின்னணி இசையாகக் காட்டி பின்னியிருக்கிறார்கள்.வேகமான திரைக்கதைக்கேற்ப காட்சிகளைத் தொகுத்திருக்கும் editing அபாரம் என்று சொல்ல வைக்கிறது என்றால் மிகையில்லை.
அடுத்த வினாடி எனவும் நடக்கலாம் என்றொரு நிச்சயமில்லாத உலகத்தில் நாமெல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.ஒவ்வொரு முறையும் தவறாக ஏதும் செய்யும் போது அப்படி நடக்காதிருந்தால்... என்று நினைக்க மட்டும் தான் முடியும்.”Run Lola Run” இல் வருவது போல் நடந்து முடிந்ததை வேறு விதமாக மாற்றிப் பார்க்கும் வசதி எங்களிடமில்லையே என்ற ஏக்கம் இந்த படம் முடிந்ததும் வருவது இயல்பானது.   
                                                                    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக