வியாழன், 5 ஏப்ரல், 2012

இறப்பின் பின் வாழ்வு

                                                    இறப்பின் பின் வாழ்வு
 
இந்தத் தலையங்கத்தைப் படித்து,இதில் போட்டிருக்கும் படத்தையும் பார்த்ததும்  இறப்பின் பின் வாழ்வா?சரியாப் போச்சுடா. நாங்கள் இன்னும் சரியாக வாழவே ஆரம்பிக்கவில்லை, என்ன இழவுடா இது?’ என்று யாரும் நினைத்தீர்களாயின் நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புவது அட நான் கேட்பதும் அதைத்தான்,அதாவது “என்ன இழவுடா இது?இழவின் பின் என்னடா நடக்கிறது?’ என்பதைத்தான்.
உண்மையில் இறப்பு என்றால் என்ன? இதயம் துடிப்பதை நிறுத்துவதா?மூளை சிந்திப்பதை நிறுத்துவதா?மூச்சு நிற்பதா?இரத்த ஓட்டம் நிற்பதா?அல்லது மேற்கூறியவற்றில் ஏதாவது ஒன்றிரண்டின் சேர்க்கையா அல்லது எல்லாவற்றினதும் சேர்க்கையா? உங்களில் யாருக்காவது இதன் விடை தெரியுமா? “இன்று காலை என்ன சாப்பிட்டீர்கள்? இடியப்பமா?ரொட்டியா?தோசையா? புட்டா?” என்ற கேள்விக்குப் பதிலளிப்பது போல் சட்டுப் புட்டென்று சொல்லி விட முடியாது.ஒன்று பொருத்தமாகத் தோன்றும்.இன்னொன்று இன்னும் பொருத்தமாகத் தோன்றும்.கடைசியில் குழப்பமே மிஞ்சும். “சரி நீயே சொல்லு.என்று சொல்கிறீர்களா?எனக்குத் தெரியாது என்று தானே நான் உங்களைக் கேட்கிறேன்.
சரி அதை விடுங்கள்.இறப்பு என்றதும் உங்கள் மனதில் தோன்றும் உணர்ச்சி என்ன?அச்சம்…..கவலை…….விரக்தி....?உண்மையில் இறப்புத் தான் நமது முடிவா,அல்லது இறப்பின் பின் இன்னொரு பிறப்பு இருக்கிறதா?அல்லது இன்னொரு உலகத்திற்குப் போவதற்கான வாசல் திறக்கிறதா?மரணத்தின் வாசல் வரை போய் மீண்டு வந்தவர்கள் சொல்லும் கதைகளை நான் ஏன் நம்ப மறுக்கிறோம்? பிறப்பின் முடிவு இறப்பின் ஆரம்பம் என்று என்று ஏற்றுக் கொள்ளும் யதார்த்தவாதிகள்  இறப்பின் முடிவு பிறப்பின் ஆரம்பம் (கடைசி வசனத்தை மீண்டும் படியுங்கள்.) என்ற தத்துவ ரீதியான விளக்கத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பது ஏன்?
இறப்பின் பின் என்ன நடக்கிறது என்று எத்தனையோ கட்டுரைகள் வந்திருப்பினும் விஞ்ஞானம் அவற்றை ஏற்றுக் கொள்வதாக இல்லை.1882 இல் அமெரிக்காவில் இறப்பின்  பின் என்ன நிகழ்கிறது என்பதை ஆராய்வதற்கு ஒரு உளவியல் ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்பட்டது.அங்கு நடைபெற்ற எந்த ஆராய்ச்சியும் நம்பும்படியான எந்தவொரு ஆதாரத்தையும் வெளியிடவில்லை.இப்போது அந்த நிறுவனத்துக்கு என்ன  நடந்தது என்று தான் ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கும்.
1926இல் William Barrett என்பவர் எழுதிய Deathbed Visions’ (இறக்கும் போது தோன்றும் விம்பங்கள்) எனும் நூலில் மரணத்தின் அருகே சென்று மீண்டவர்கள் சிலரின் அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.மரணத்தின் போது வித்தியாசமான ஒலியைக் கேட்டதாகவும்,தங்கள் உடலை விட்டு உயிர் பிரிந்ததைக் காண முடிந்தது என்றும் இன்னும் சிலர் ஏற்கனவே இறந்தவர்கள் சிலரைக் காண முடிந்தது என்றும்(ஹையா! நீயும் வந்திட்டியா?இனிமே ஜாலி தான்) தெரிவித்திருக்கிறார்கள். விஞ்ஞானத்துக்கு அழுத்தந் திருத்தமான விளக்கம் தேவைப்படுவதால் அந்தக் கூற்றுக்களையும் விஞ்ஞானிகள் நிராகரித்திருந்தார்கள்.இறந்ததாகவும் பின்பு அதிலிருந்து மீண்டு வந்ததாகவும் சொல்லிக் கொள்பவர்களின் கூற்றேயொழிய இறந்தவர்களின் கூற்று அல்ல என்பதே அவர்களின் வாதம்.இது எப்படி இருக்கு? விஞ்ஞானிகளை நம்ப வைக்க ஆவியே வந்தாலும் “நீர் ஆவி என்பதற்கு என்ன ஆதாரம்? நீரிலிருந்து வரும் ஆவியை ஏற்றுக் கொள்கிறோம்.நீர் ஆவி என்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?”என்று தான் விஞ்ஞானம் கேட்கும். “அடப் பாவி”  என்று திட்டியவாறே ஆவியும் போய் விடும். விஞ்ஞானிகள் இந்த அனுபவங்களை ஒப்புக் கொள்ளாததன்  காரணம் இவைகள் யாவும் இறக்கும்போது செயலிழக்கும் மூளையில் ஏற்படும் பிரமைகள் அல்லது, ஒருவிரிந்த கனவு என்று அவர்கள் கருதுவதனாலேயாகும் .
சரி,இறப்பின் பின் ஏற்படும் அனுபவங்களை(life after death) அல்லது சாவுக்கு அண்மித்ததான அனுபவத்தை (near death experience) விஞ்ஞானிகள்  நம்புகிறார்களோ  இல்லையோ நீங்கள் நம்புகிறீர்களா  இல்லையா? “சொன்னால் தானே, நம்புவதா இல்லை உன்னை நெம்புவதா என்று தெரியும்.” என்று சொல்கிறீர்களா?அதுவும் சரி தான்.அதையும் இரண்டு வகையாகச் சொன்னால் தான் தெளிவு அதிகமாக இருக்கும்
.1.மேலைத்தேய நாட்டினரின் அனுபவங்கள்
2.கீழைத்தேய நாட்டினரின் அனுபவங்கள்
மேலைத்தேய நாட்டினரின் அனுபவங்கள்
1. சைப்பிரஸ் நாட்டின் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அனுபவம்…. அந்தப் பெண்ணுக்கு ஒரு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை நடந்து நான்காவது நாள் அந்தப்பெண் பல மணி நேரங்களுக்கு நினைவிழந்தாள். தான் நினைவிழந்திருந்தாலும் உயிர் பிழைத்துப் பல ஆண்டுகளுக்குப் பின்னர்கூட தான் மயக்கமாயிருந்த நிலையில் அறுவை சிகிச்சை நிபுணரும், மயக்கமருந்து கொடுப்பவரும் நிகழ்த்திய உரையாடல்களை நினைவுகூற முடிவதாகக் கூறினார். அவர் கூறுகிறார், " நான் எனது உடலுக்கு மேலே படுத்திருந்தேன் - எந்த வலியுமில்லை. அப்போது நான் கீழே இருக்கும் எனது உடலில் முகம் வலியால் துடிப்பதைக் கண்டு பரிதாபப் பட்டேன். நான் அமைதியாக மிதந்து கொண்டிருந்தேன்.  பிறகு... நான் ஒரு இருண்ட  இடத்தை நோக்கி - இருண்டிருந்தாலும் பயமேதுமில்லை. மிதந்து கொண்டிருந்தேன் - பிறகு ஒரே அமைதி. சிலபொழுதில் எல்லாமே மாறியது - மறுபடியும் எனது உடலுக்குள் வந்துவிட்டேன். மறுபடியும் வலியை உணர ஆரம்பித்தேன்"என்று.
2. Maria என்ற வாஷிங்டன் நகரைச் சேர்ந்த பெண் 1977ம் ஆண்டு தன் நண்பர்களைக் காண முதல்முறையாக சியாட்டில் நகருக்கு வருகிறாள். வந்த இடத்தில் அவளுக்கு பலத்த இருதயநோய் ஏற்பட அவள் Harbourview மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அங்கு Kimberly Clerk  என்ற சமூகசேவகி மரியாவை உடனிருந்து கவனித்து வந்தார். திடீரென மரியாவின் இருதயம் செயலிழக்க, மருத்துவர்கள் செயற்கை முறையில் அவள் இருதயத்தை இயங்க வைக்க முயற்சி செய்து வெற்றி அடைந்தார்கள். 
அதன் பின்னர் Kimberly Clerk  இடம் Maria  சொன்ன செய்திகள் தான் பரபரப்பானவை. "வைத்தியர்களும் தாதிமார்களும் எனத் உடலைச் சோதனை செய்துகொண்டிருந்தபோது அதிசயமான அனுபவம் எனக்கு ஏற்பட்டது. நான் நான்காவது  மாடியின் உயரத்திற்கு மிதந்து சென்று அந்த மேற்கூரையிலிருந்து என்மீது நடத்தப்படும் சோதனைகளைக் காண முடிந்தது என்று மரியா கூறியபோது கிளார்க் அதை நம்பவில்லை. ஆனால் அதற்குப்பிறகு அவள் கூறியவை திகைப்பூட்டின. தனது உடல்நிலைபற்றிய குறிப்புப்படங்கள் கணனியின் திரையிலிருந்து  வெளிவருவதைப் பார்த்ததாகக் கூறினாள். அதுதவிர, தான் மேலும் அந்தக் கட்டிடத்திற்கு வெளியே மிதந்து சென்றதாகவும் அவள் கண்ட அவசர சிகிச்சை வழியைப்பற்றியும் அதன் கதவுகள் முன்புறமாகத் திறக்கப்படுவதைப் பற்றியும் விரிவாகக் கூறியபோது நம்பாமலும் இருக்க முடியவில்லை. ஏனென்றால், அந்த மருத்துவமனைக்கு முதல் முறையாக மரியா வந்திருப்பதால் அதன் பல வேறு இடங்கள் பற்றி அவள் அறிந்திருக்க வழியேயில்லை. அவள் மேலும் தனது கட்டிடத்திற்கு வலதுபக்கத்தில் உள்ள கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் ஒரு ஜன்னலின் விளிம்பில் ஓரத்தில் கிழிந்துபோன ஒரு டென்னிஸ் காலணியைக்  கண்டதாகவும் அதன் முடிச்சு காலணியின் அடிப்பாகத்தில் இருந்ததாகவும் கூறினாள். மரியா இருந்த இடத்திலிருந்து அப்படிப்பார்க்க வாய்ப்பே இல்லை. கிளார்க் அடுத்த கட்டிடத்தின் மூன்றாவது மாடிக்குச் சென்று அந்த ஜன்னலில் சோதனையிட்டபோது மரியா கூறியது சரியாகவே இருப்பது தெரியவந்தது.
3. மற்றுமொரு நிகழ்ச்சி.
Laurelynn என்ற பெண்மணி ஒரு சாதாரண அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்கிறாள். ஆனால், அறுவை சிகிச்சையின் போது ஆழமாகக் கத்தி பாய்ந்ததால் அவளது உடலிலிருந்து ஏராளமான ரத்தம் வெளியேறியது. அறுவை சிகிச்சை நிபுணர்கள் பரபரப்புடன் இருந்தார்கள். அவர்கள் உடையில் வெளியே எங்கு பார்த்தாலும் ரத்தம். என்னால் அங்கு என்ன நடக்கிறதென்று அறிந்துகொள்ள முடியவில்லை. அப்போது என்னால் வைத்தியர்கள் என்னுடைய உடலில்தான் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை. ஆனால் அதுபற்றிய கவலையும் அப்போது எனக்கில்லை; நான் மிகவும் சுதந்திரமாக உணர்ந்தேன்; அருமையான நேரம் அது. அவர்களிடம், 'எனக்கு ஒன்றுமில்லை, என்னைப்பற்றிக்கவலைப் படாதீர்கள், நான் சந்தோஷமாக இருக்கிறேன்' என்று சொல்ல நினைத்தேன். உடலைவிட்டுப் பிரிந்து சென்ற நான் வேறு உலகத்தில் பிரவேசிக்கிறேன். அங்கு அமைதி- பூரண அமைதி- உடலில் எந்தவிதமான வலியுமில்லை. ஆனால் ஒரு சுகானுபவம் இருந்தது; இருட்டான, ஒரு மகிழ்ச்சி ததும்பும் ஒரு இடம்; அன்பும் ஆதரவும் என்னைச் சுற்றிப் பரவியிருப்பதை உணர்ந்தேன். அந்த சுகமான இருட்டு வழி தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தது. இதுவரை பூமியில் அனுபவிக்காத ஒரு மயிர்க்கூச்செறியும் அனுபவம் அது- இருட்டுவழியின் எல்லையில் ஒரு மஞ்சள் நிறம் கலந்த வெண்மையான ஒளியைக் காண்கிறேன். அந்த அமைதியை அந்த ஆனந்தத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. வெண்மை கலந்த ஜோதியை நான் அடைவதற்கு முன்னால், எனது வலதுபுறம் யாரோ இருப்பதை உணரமுடிந்தது- அதுவேறுயாருமில்லை- ஏழு மாதங்களுக்கு முன்னால் இறந்த என் மனைவியின் சகோதரன்தான். என்னுடைய கண்களாலும் காதுகளாலும் பார்க்கவோ கேட்கவோ முடியாவிட்டாலும் அது எனது மனைவியின் சகோதரன்தான் என்பதை உணரமுடிந்தது. அவனுக்கு உருவமில்லை; ஆனால் அவனை உணர முடிந்தது- அவனது சிரிப்பை அவனது நகைச்சுவை உணர்வை என்னால் அறிய முடிந்தது- அவன் என்னை வரவேற்கக் காத்திருந்தான்" – Kenneth Ring இன்  ‘Lessons from the Light’ எனும் நூலிலிருந்து.
கீழைத்தேய நாட்டினரின் அனுபவங்கள்
1.1986 இல் Satwant Pasricha வும்,Ian Stevenson உம்  Americamn Society Of Phychical Research’ எனும்  ஆராய்ச்சிக் கட்டுரையில் இறப்பின் பின் வாழ்வு என்ற வகையில் 16  சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அவற்றில் சில
1.Vasudev Pandey :இவரைப் பேட்டி கண்டது 1975இல்.இவர் பிறந்தது 1921 இல். Vasudev Pandey 10 வயதாக இருக்கும் போது கடுமையான நெருப்புக் காய்ச்சலால் இறந்து விட (அதாவது அப்படிக் கருதி விட) பிரேதம் தகனக் கிரியைகளுக்காக மயானத்துக்காகக் கொண்டு செல்லப்பட்டது.ஆனால் அங்கே அவருக்கு உயிர் இருப்பதான சில அறிகுறிகள் தெரிய அவர் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.அங்கே உணர்ச்சி இல்லாமல் கோமா நிலையில் 3 நாட்கள் இருந்தார்.அந்த 3 நாட்களில் தனக்கு நேர்ந்தவற்றை அவர் பின்வருமாறு தெரிவித்தார்.
“இருவர் என்னை இறுக்கிப் பிடித்தபடி தங்களுடன் சேர்த்து என்னையும் நடத்திக் கொண்டு போனார்கள்.நீண்ட நேரம் நடந்ததால் எனக்குக் கால்கள் சோர்ந்து விட,என்னை இழுத்துக் கொண்டு போய் ஒரு பயங்கரமான கறுப்பு நிறமுடைய மனிதனின் முன் நிறுத்தினார்கள்.அவன் ஆடைகள் ஒன்றும் அணிந்திருக்கவில்லை. தோட்டக்கார வாசுதேவனைக் கொண்டு வரச் சொன்னால் சின்னப் பொடியனைக் கொண்டு வந்து விட்டதாக அவன் கடுமையான வார்த்தைகளால்  என்னைக் கொண்டு வந்தவர்களைக் கடிந்து கொள்ள எனக்கு சுயவுணர்வு திரும்பி விட்டது.அப்போது எனக்கு முன்னால் நின்ற நபர்களுடன் தோட்டக்கார வாசுதேவனும் நின்று கொண்டிருந்தார்.அவரைப் பார்த்த போது நல்ல ஆரோக்கியமாகத் தான் தென்பட்டார்.எனினும் அடுத்த நாள் காலை காலமாகி விட்டார்.”
2.Durga Jatav :இவரைப் பேட்டி கண்டது 1979 இல்.அப்போது அவருக்கு 50 வயதிருக்கும்.கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன் அவருக்கு அந்த வினோதமான சம்பவம் நேர்ந்திருக்கிறது. கடும் நெருப்புக் காய்ச்சலால் எத்தனையோ நாட்கள் துன்பப்பட்டு கடைசியில் அவரது உடல் குளிர்ந்து விறைத்துக் கொண்டு விட இறுதிக் கிரியைகளுக்காக ஆயத்தம் செய்த போது உடலில் மீண்டும் அசைவுகள் தென்பட்டன.அதன் பின், தான் மரணமான(?) பின் என்ன நேர்ந்தது என்று கூறுகிறார்.
10 நபர்களால் நான் பலவந்தமாக வழி நடத்திச் செல்லப்பட்டேன்.அவர்களிடமிருந்து நான் தப்பிச் செல்ல முயற்சித்த போது எனது கால்கள் முழங்காலுடன் வெட்டப்பட்டன.அதன் பின்பு கிட்டத்தட்ட 50 பேரளவில் இருந்த மண்டபத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டேன்.அவர்களில் ஒருவரின் கையில் இருந்த பெயர்ப்‌பட்டியலில் எனது பெயர் இருக்கிறதா என்று பார்க்கப்பட்ட பின் தாங்கள் சொல்லாத ஆளை அழைத்து வந்திருப்பதாக அவர்களை ஏசி என்னைத் திரும்பிப் போகுமாறு கூறினார்கள்.காலில்லாமல் எப்படித் திரும்பிப் போவது என்று நான் அவர்களிடம் கேட்ட என்னிடம் எத்தனையோ சோடி வெட்டப்பட்ட கால்கள்  காட்டப்பட்டன.அவற்றில் எனது கால்களை நான் அடையாளம் கண்டு காட்ட அவை அங்குள்ள சிலரால் மீண்டும் எனது உடலில் பொருத்தப்பட்டன.சிறிது நாட்களுக்கு காலை மடித்து வேலை செய்ய வேண்டாம் என்றும் எனக்கு அறிவுரை கூறப்பட்டது.சற்று நேரத்தின் பின் எனக்கு சுயவுணர்வு திரும்பி விட்டது.”
துர்க்காஉயிர்த்த பின் இவரது இரு முழங்கால்களிலும் வித்தியாசமான அடையாளம் இருந்ததெனவும் பின்பு அது காலப்போக்கில் மறைந்து விட்டதெனவும் அவரது சகோதரி கூறியதும் இங்கே கவனிக்கத்தக்கது.
3.Chhajju Bania  :இவரிடம் பேட்டி எடுத்தது 1981 இல்.அப்போது அவருக்கு 40 வயது.இவருக்கும் அப்படியானதொரு வினோத சம்பவம் 6 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாகக் கூறினார்.கடும் சுவீனத்தால் அவரது உடல் நிலை மிகவும் மோசமாகிக் கொண்டே வந்து கடைசியில் அவர் இறந்ததாகக் கருதி இறுதிக் கிரியைகளுக்கான ஏற்பாடுகள் நடக்க அவர் மீண்டும் உயிர்த்து தனக்கு நிகழ்ந்ததைக் கூறினார்.
“நான்கு கறுத்த நபர்கள் நபர்கள் என்னை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.எனது உடல் மிகவும் சிறிதாகி விட்டதாக உணர்ந்தேன்.ஒரு வயதான பெண்மணியின் முன்னால் நிறுத்தப்பட்டேன்.அவரின் முன்னால் குவியல் குவியலாகப் புத்தகங்களும் கோர்வைகளும் வைக்கப்பட்டிருந்தன.அவர் அவற்றிலொரு கோர்வையை எடுத்துப் பார்த்து  தங்களுக்குத் தேவை வியாபாரியாகிய சஜ்ஜு பானியா அல்ல.குயவனாகிய சஜ்ஜு குமார் தான். சஜ்ஜு பானியா இன்னும் வாழ வேண்டியிருப்பதால் திரும்பிப் போகலாம் என்று கூறப்பட்டதும் நான் ஒரு உயர்ந்த ஆசனத்தில் வெண்தாடியுடனும்,மஞ்சள் ஆடையுடனும் அமர்ந்திருந்த ஒருவரின் முன் நிறுத்தப்பட்டேன்.உனக்கு என்ன வேண்டும் என்று அவர் கேட்க நான் அங்கேயே தங்கப் போவதாகக் கூறினேன்.அதற்கு அவர் கையை நீட்டுமாறு கூறினார்.நானும் கையை நீட்டினேன்.அவர் எதுவும் தந்தாரா இல்லையா என்று தெரியவில்லை.அதே சமயத்தில் எனக்கு சுயவுணர்வும் திரும்பி விட்டது.
சரி,இரு வேறுபட்ட நாட்டினரினதும் அனுபவங்கள் அவர்கள் சார்ந்த இடம்,அவர்களின் நம்பிக்கை மற்றும் சமய மத கலாச்சாரப் பின்னணியில் வேறுபடுவதைக் காணலாம். மேலைத்தேய நாட்டினரின் அனுபவங்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் கீழைத்தேய  நாட்டினரின் அனுபவங்கள் நீண்ட காலத்திற்குப் பின் அதாவது எத்தனையோ வருடங்களுக்குப் பின் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் காணலாம். கீழைத்தேய நாட்டின்  பின்தங்கிய தொழில்நுட்ப வளர்ச்சி தான் இதற்குக் காரணம் எனினும் நீண்ட காலத்திற்குப் பின் எடுக்கப்பட்ட பேட்டிகள் என்பதால் அவற்றின் நம்பகத்தன்மை குறைவாகவே காணப்படுகிறது.
  இனி மேலைத்தேய நாட்டினரினதும் கீழைத்தேய நாட்டினரினதும் அனுபவங்களில் உள்ள வித்தியாசங்களைப் பார்ப்போமா?
1. கீழைத்தேய நாட்டினரின் அனுபவங்கள் பெரும்பாலும் யாரேனும் சிலரால் ஒரு இடத்திற்குக் கொண்டு ஒருவரின் முன்னால் நிறுத்தப்பட்டதாகவும்  பின்பு அவர்கள் தவறாகக் கொண்டு வந்து சேர்த்து விட்டதாகவும் தெரிவித்து இன்று போய் நாளை வா கூறித் திருப்பி அனுப்பப் பட்ட சம்பவங்களாகவே காணப்படுகின்றன.ஆனால் மேலைத்தேய நாட்டினரின் அனுபவங்கள் ஒருத்தரின் உத்தரவுமின்றி தாங்களாகவே திரும்பி வந்ததாகவே தெரிவிக்கப்பட்டுள்ளன.
2.மேலைத் தேய நாட்டினரின் அனுபவங்கள் தங்கள் உடலைத் தாங்களே கண்டதாகத்  தெரிவித்த போதும்,கீழைத்தேய நாட்டினரின் அனுபவங்கள் அவ்வாறு தெரிவிக்கவில்லை.
3. மேலைத் தேய நாட்டினரின் அனுபவங்கள் அந்த அனுபவத்தின் போது ஒரு குகைக்குள்ளாகச் சென்று திரும்பிய அனுபவத்தை அடைந்ததாகத் தெரிவித்த போதும், கீழைத்தேய நாட்டினரின் அனுபவங்களில் அவ்வாறு தெரிவிக்கப்படவில்லை.
4. மேலைத் தேய நாட்டினரின் அனுபவங்கள் அந்த அனுபவத்தின் போது ஏற்கனவே இறந்த தங்களுக்குத் தெரிந்தவர்களைக் கண்டதாகக் கூறிய போதும், கீழைத்தேய நாட்டினரின் அனுபவங்கள் அவ்வாறு கூறவில்லை.

குறிப்பு:இந்தக் கட்டுரைக்கு livingextra.com,மற்றும் near-death.com  ஆகிய வலைத்தளங்களிருந்து தகவல்கள் பெறப்பட்டிருந்தன.
                        
250x300 Natural Skin Shop Coupon

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக