வியாழன், 5 ஏப்ரல், 2012

யோகாசனம்

                                                                                       யோகாசனம்
  
யோகாசனம் என்பது ஒரு புராதன விஞ்ஞானமாகக் கருதப்படுகிறது.அதென்ன மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல் இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா? விஞ்ஞானம் என்றால் என்ன?பயிற்சியின் மூலம் அல்லது படிப்பின் மூலம் பெறப்பட்ட அறிவே விஞ்ஞானம் எனப்படும் போது யோகாசனத்தை விஞ்ஞானம் என்று சொல்வதில் தவறில்லை தானே.இதன் ஆரம்பகர்த்தா யார்,எப்போது ஆரம்பிக்கப்பட்டது போன்ற முக்கியமான கேள்விகளுக்கெல்லாம் பழைய புராண,இதிகாசங்களிலும்,சமய நூல்களிலும் விடை இல்லை.ஆயினும்  யோகப்பயிற்சிகளை முறையாகச் செய்பவர்களை யோகிகள் எனக் குறிப்பிடும் வகையில் முதலாவது யோகியாகக் கருதப்படுபவர் இந்து மதத்தின் முழுமுதற் கடவுளான சிவனே.
காலத்திற்குக் காலம் யோகக்கலை எத்தனையோ முனிவர்களாலும் யோகிகளாலும்  பின்பற்றப்பட்டு வந்திருப்பதற்கான ஆதாரங்கள் புராதன நூல்களில் வாசிக்கக் கூடியதாக இருப்பது மட்டுமன்றி புராதன சிற்பங்களில் காணக்கூடியதாகவும் இருக்கிறது.இவர்கள் யோகிகளாக இருந்தாலும் கூட  குழந்தைமனதைக்  கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். ஒளிரும் நட்சத்திரங்கள்,நெடிதுயர்ந்த மலைகள்,பெருக்கெடுத்தோடும் ஆறுகள்,பயங்கரமான மிருகங்கள்,அழகான பறவைகள்…. ஏன் சிறிய வெட்டுக்கிளிகளைக் கூட இவர்கள் ரசித்திருக்கிறார்கள்.இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.உண்மை,அஹிம்சை,நேர்மை,சுய கட்டுப்பாடு,எளிமை….இவையே இவர்களின் தாரக மந்திரமாக இருந்திருக்கிறது.
இவ்வாறாக எத்தனையோ பேர் யோகக் கலையைப் பின்பற்றினாலும் இந்த யோகப் பயிற்சிகளை தொகுத்து நெறிப்படுத்தியவராக பதஞ்சலி மா முனிவர் கருதப்படுகிறார். இவர் வாழ்ந்த காலம் கி.பி 200.இவர்  பின்வரும் மூன்று துறைகளில் மிகச் சிறந்து விளங்கினாரென பழைய இதிகாசங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிக்கின்றது.சமஸ்கிருத இலக்கணம்,ஆயுர்வேத மருத்துவம்,யோகாசனம் என்பனவே அவையாகும்.
யோகம் என்ற சொல்லுக்கு இணைத்தல்,ஒருங்கிணைத்தல் என்று பொருள்படும்.அதாவது முதலில் உடலையும் மனத்தையும் இணைத்து அதன் பின் அவ்விரண்டையும் உண்மைப்பொருளோடு ஒருங்கிணைத்தலே யோகக்கலை எனலாம். யோகக்கலையை முறையாகப் பயில்வதன் மூலம்   மூலம் நிலையான,அமைதியான,தீய எண்ணங்களில் திசை திரும்பாத மனம் உங்கள்  வசமாகும்.இப்படியான மனதோடு தொடர்ந்து தியானத்தில் ஈடுபட்டால் மோட்சம் உங்கள் வசமாகும்.(இதெல்லாம் எங்களுக்குக்  கொஞ்சம் over தான் என்று நீங்கள் நினைக்கக் கூடும்.ஆனாலும் யோகக்கலையைப் பற்றி எழுதும்போது இதனைத் தவிர்க்க முடியாது) மோட்சமே யோகக்கலையின் இறுதி இலக்காகும்.மோட்சம் என்றால் நிறையப் பேருக்குப்  புரியாது.கொஞ்சம் இலகுவாகச் சொல்வதென்றால் சமாதி நிலை என்று சொல்லலாம்.
யோகக்கலையைக் கற்பவர்கள்  மிகவும் அர்ப்பணிப்புடனும்  கவனத்துடனும் செயற்பட வேண்டியவர்கள் என்று பதஞ்சலி முனிவர் குறிப்பிடுகிறார்.அதோடு வெற்றி தோல்வியைச் சமனாகக் கருதுபவர்களாகவும்,கோபத்தைக் கட்டுப்படுத்தக் கூடியவர்களாகவும்,இரக்க உணர்ச்சி உள்ளவர்களாகவும்   ,மற்றவர்களை சந்தோஷப்படுத்தக் கூடியவர்களாகவும்,எப்போதும் மற்றவர்களில் குறை காணாமல் தன்னைத் திருத்திக் கொள்பவர்களாகவும்  இருக்க வேண்டியது அவசியம் எனவும் கூறுகிறார். அலட்சிய மனப்பான்மை,சுயநலம்,கோபம் வெறுப்பு ,சோம்பல்,சந்தேக மனப்பான்மை,கவனமின்மை  போன்ற குணங்கள் யோகாக்கலையின் தடைகளாக அமையலாம் எனவும் இவர் குறிப்பிடுகிறார்.
பதஞ்சலி முனிவரின் “யோக சூத்திரம்” எனும் நூலில் அஷ்டாங்க யோகம் பற்றி அதாவது எட்டுப் படிகள் உள்ள வாழ்க்கை முறை பற்றிக் குறிப்பிடப்படுகிறது.இதில் மூன்றாவது படியே யோகாசனமாகும்.
84 லட்சம் உயிர்கள் இருப்பதாகவும்,ஒரு உயிருக்கு ஒரு ஆசனம் என்ற வகையில் 84 லட்சம் ஆசனங்கள் இருப்பதாகவும் அதில் 250 ஆசனங்களே பழக்கத்தில் உள்ளதாகவும் அதிலும் 18 ஆசனங்களே மிக முக்கியமானவை எனவும் அவற்றைப் பழகினாலே ஏனையவை கைகூடி வந்து விடும் எனவும் இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பதஞ்சலி முனிவர் குறிப்பிடும் அஷ்டாங்க யோகங்கள் பின் வருமாறு
1.இயமம்: இயமம் என்பது பிரபஞ்ச ஆணைகளைக் குறிக்கும்.அவ்வாணைகளுள்  முக்கியமானவை
     1.அஹிம்சை:துன்பம்,வேதனை ஏற்படுத்தாதிருத்தல்.
     2.சத்யம்:நாம் அறிந்தவற்றை அறிந்தவாறு கூறுதல் .                                           
     3.அஸ்தேயம்:களவு தவிர்த்தல்
     4.பிரம்மச்சார்யம்: சுய கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுங்குமுறை
     5 .அபரிக்ரஹாம்:பிறர் பொருளுக்கு ஆசைப்படாமை

2.நியமம்:நியமம் என்றால் நெறிமுறை என்று பொருள்படும்.நெறிமுறைகள்  5 வகைப்படும்.
     1.சௌச்சம்:தூய்மை.எங்கும் தூய்மை,எதிலும் தூய்மை.
     2.சந்தோஷம்:உள்ளத்தில் மனநிறைவு
     3.தபஸ்:ஒரு செயல் அல்லது எண்ணம் நிறைவடையும் வரை சொல்,செயல்
       சிந்தனை மூன்றிலும் இருக்கும் விடா முயற்சி.
     4.ஸ்வாத்யாவம்: தன்னைத் தானே அறிதல்,சுய தேடல்.
     5.ஈஸ்வரப்ரனிதானம்:இந்த உலகிலுள்ள அனைத்துமே ஏதோவொரு அளப்பரிய
       சக்தியினால் இயங்குகின்றன என்ற எண்ணம்.

3. ஆசனம்:நமது உடலை,அதிலுள்ள உறுப்புக்களை ஒரு குறிப்பிட்ட நிலையில் அசைவின்றி வைத்திருத்தல்.
4. பிராணாயாமம்:மூச்சுப் பயிற்சி
5. பிரத்தியாதாரம்:ஐம்புலன் கட்டுப்பாடு
6. தரணம்:ஒருமுகப்படுத்தப்பட்ட மனதுடன் கூடிய கவனம்,
7.தியானம்:மனதை ஒரு நிலைப்படுத்தி உண்மைப்பொருளை நினைத்தல்
8.சமாதி :உண்மைப்பொருளோடு ஐக்கியமாதல்.
சரி,இனி விஷயத்துக்கு வருவோம்.அப்படியானால் இவ்வளவு நேரம் சொன்னதில் விஷயமே இல்லையா என்று இடக்காக நினைக்கக் கூடாது.நான் சொல்ல வந்தது மூன்றாவது அஷ்டாங்க யோகமான யோகாசனம் தான்.ஆனால் எடுத்தவுடன் மொட்டையாக யோகாசனம் என்று ஆரம்பிக்கவும் விருப்பமில்லை.யோகாசனத்தின் வரலாறு,அதன் பின்னணி  பற்றியும் சொல்ல விரும்பினேன்.(Yoga For Children என்ற ஆங்கில நூலிலிருந்தும் இந்தியாவில் வெளிவரும் தினமலர் பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையிலிருந்தும் சில பகுதிகளை எடுத்திருந்தேன்.)என்னடா, இவன் O.L சமய பாடம் எடுக்கிறானா அல்லது A.L இந்து நாகரீகம் பாடம் எடுக்கிறானா? சரியான அறுவையாய் இருக்கிறதே” என்று கூட நீங்கள் நினைத்திருக்கக் கூடும்.சரி, உங்களுக்கு திரைப்படங்களில் வரும் சண்டைக்காட்சிகள் பிடிக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.அதற்காக சண்டைக்காட்சிகள் மட்டும் பார்ப்பீர்களா?.(ஏன் அடிக்கிறார்,யாருக்கு அடிக்கிறார் என்றாவது தெரிய வேண்டும் தானே) முழுப்படத்தையும் பார்ப்பீர்கள் தானே. அப்படி நினைத்துக் கொள்ளுங்களேன்.
யோகாசனம்
நமது உடலை,அதிலுள்ள உறுப்புக்களை ஒரு குறிப்பிட்ட நிலையில் அசைவின்றி வைத்திருத்தலே யோகாசனம் எனப்படுகிறது.
சில வேளைகளில் ஒரு முக்கியமான சந்தேகம் உங்களுக்கு வரக்கூடும்.யோகக் கலையின் மூன்றாவது படிநிலை தானே யோகாசனம்.முதலிரண்டு படிநிலைகளையும் சரியாகக் கடைப்பிடிக்காதவர்கள்(அதாவது அந்நிலைகளில் குறிப்பிடப்படும் சில தகமைகள் உங்களுக்கு இல்லை எனக் கருதுவீர்களாயின்) மூன்றாவது படி நிலையான யோகாசனத்தைப் பழகலாமா  என்ற சந்தேகம் தான் அது.நியாயமான சந்தேகம் தான்.அதற்கு நியாயமான விளக்கம் சொல்கிறேன்.சில தொழில்நிலைப் பரீட்சைகள் இருக்கின்றன.அதில் முதல் பகுதி சோதனையில் சில பாடங்கள் சித்தியெய்தாத போதும் இரண்டாவது பகுதி சோதனைக்கும் தயார் செய்து கொண்டு சித்தியெய்தாத பாடத்தையும் சேர்த்துப் படிக்கலாம்.அதனை Referred என்று சொல்வார்கள்.அல்லது பல்கலைக்கழகத்தில் செய்வதைப் போல் எடுக்கக் கூடிய சோதனைகளை எடுத்து விட்டு கடைசியாக நீங்கள் தேறாத பாடங்களை எடுத்துக் கொடுக்கலாம். அதனை Arrears என்று சொல்வார்கள்.இவற்றில் ஒன்றாக நீங்கள் இதனையும் நினைத்துக் கொள்ளலாம்.
சிலர் உடற்பயிற்சியையும் யோகாசனத்தையும் ஒன்றாக நினைப்பதுண்டு.அடிப்படையில் இரண்டுமே முழுக்க முழுக்க வித்தியாசமானவை.
உடற்பயிற்சி
யோகாசனம்
அசைவுள்ள செயற்பாடு
அசைவற்ற செயற்பாடு
சக்தி பயன்படுத்தப்படுகிறது
சக்தி சேமிக்கப்படுகிறது.
உடல் தசையமைப்பை மேம்படுத்துகிறது.
நரம்பு மண்டலத்தைப் பேணுகின்றது.
உடலைப் பணிக்குத் தயார்ப்படுத்துகின்றது.
உடலுக்கு ஓய்வளிக்கிறது.
திட உணவு அவசியம்.
திட உணவின் அவசியத்தைக் குறைக்கும்.
நோய்வாய்ப்பட்டிருப்போர் செய்ய முடியாது.
நோய்வாய்ப்பட்டிருப்போரும் சில ஆசனங்களைச் செய்யலாம்.
வயதானவர்கள் செய்ய முடியாது.
வயதானவர்களும் சில ஆசனங்களைச் செய்யலாம்.
போட்டிமனப்பான்மையும் அதனால் பிணக்கும் வரலாம்.
தனக்குள் ஆழ்வதை ஊக்குவிக்கிறது.
உடலை உஷ்ணப்படுத்துகிறது
உடலைக் குளிர்விக்கிறது.
உடலைப் பேணும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
உண்மைப் பொருளை அறியும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
உடலின் புறத் தசைகளை மட்டும் இயக்குகிறது
தசைகளோடு சேர்த்து நாடி நரம்புகளையும் இயக்குகிறது.
இதயத்தின் ரத்த ஓட்டம் அதிகமாகும்.
இதயத்திற்கு ஓய்வு கிடைக்கும்.
மன அழுத்தம் அதிகமாகலாம்.
மன அழுத்தம் நீங்கும்.


அட,யோகாசனத்தில் இவ்வளவு அனுகூலங்கள்  இருக்கும் போது அதைச் செய்து பார்த்தால் என்ன என்ற ஒரு மனநிலைக்கு நீங்கள் வந்து விட்டீர்களா?இனி யோகாசனத்துக்குரிய சில தேவைப்பாடுகளைச் சொல்கிறேன்.
நல்ல சுத்தமான, காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ள  அறையை யோகாசனம் செய்வதற்குத் தெரிவு செய்யுங்கள்.அறையின் நிலம் உயர வித்தியாசம் இன்றி ஒரே மட்டமாக இருக்க வேண்டும்.வீட்டுக்குள்ளே செய்ய முடியாவிடின் வெளியே சமதரையுள்ள ஒரு நல்ல இடத்தைத் தெரிவு செய்யலாம்.யோகாசனம் செய்வதற்கு உங்களுக்குத் தேவையான உபகரணங்கள் ஒரு பாயும் ஒரு தடிப்பான போர்வையும் தான்.இறுக்கமில்லாத தளர்வான ஆடைகள் அணிந்திருத்தல் அவசியம். உகந்த நேரம் காலை நேரம் தான்.உங்களுக்கு அது உகந்ததல்லதாயின் மாலை நேரத்தைத் தெரிவு செய்யலாம்.உணவாயின் உட்கொண்டு இரண்டு முதல் நான்கு மணித்தியாலங்கள் இடைவெளியும்,தேநீர்,சிற்றுண்டியாயின் ஒன்று முதல் இரண்டு மணித்தியாலங்கள் இடைவெளியும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளல் அவசியம்.இயலுமாயின் நீராடி காலைக்கடன் முடித்த பின் செய்தல் உசிதம்.
.உங்கள் உடல்நிலை சரியில்லாவிடின் நீங்கள் ஓய்வில் இருப்பதே நல்லது.இருப்பினும் தடிமல்,இருமல்,தலையிடி போன்ற சிறிய சுகவீனங்களாயின் யோகாசனத்தை முறையாகப் பயிற்றுவிப்பவரின் ஆலோசனையோடு செய்யலாம்.பெண்களாயின் மாதவிடாய் உள்ள நேரங்களில் தலைகீழாக நிற்கும் ஆசனங்களைத் தவிர ஏனையவற்றைச்  செய்யலாம்.சிறுவர்களுக்கு உடல் இலகுவில் வளையக் கூடியதாக இருப்பினும் சில ஆசனங்கள் செய்வதற்கான உடற்பக்குவம் வராதவர்களாகத் தான் கணிக்கப்படுகிறார்கள்.
ஆசனங்களைச் செய்யும் போது ஆழமாக மூச்சிழுக்கவோ,அல்லது மூச்சை இழுத்துப் பிடித்தவாறோ செய்ய வேண்டாம்.சாதாரணமாக மூச்சு விட்டாலே போதுமானது.யோகாசனம் செய்யும் போது மனதை அமைதியாகவும்,கவனத்தை ஒருமுகப்படுத்தியும் வைத்துக் கொள்வது சிறந்தது.
கடைசியாக மிக முக்கியமான ஒரு விடயம்.என்ன தான் நூல்களில் யோகாசனம் செய்யும் முறைகள் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும்,உங்களுக்கு வரும் சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொண்டு பழகுவதற்கு ஒரு ஆசான் அவசியம்.கொஞ்ச நாட்களுக்காவது ஒரு ஆசானிடம் அடிப்படை ஆசனங்களையும் அவற்றைச் செய்யும் முறைகளையும் தெரிந்து கொண்டு,உங்கள் மனதில் ஒரு நம்பிக்கை  வந்த பின் தனியாகச் செய்வது நலம்.
இனி வல்வை அலையோசையின் ஒவ்வொரு வெளியீட்டிலும் ஒவ்வொரு ஆசனங்களையும் அவற்றைச் செய்வதால் ஏற்படும் நன்மைகளையும் பார்ப்போம்.     
125x125 Get Lucky

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக