வியாழன், 5 ஏப்ரல், 2012

தனியுடமை வியாபாரப் பெயர்ப்பதிவு

                                 தனியுடமை வியாபாரப் பெயர்ப்பதிவு
 
கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் புதிதாக ஆரம்பிக்கப்படும் தொழில் முயற்சிகள் ஆண்டுதோறும் அதிகரித்துச் செல்வதை எங்கள் ஊரிலேயே அவதானிக்கக் முடிகிறது.அது தவிர பருத்தித்துறை பிரதேச செயலகத்திலும் இது பற்றிய புள்ளி விபரத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.2010 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2011இல் சட்ட ரீதியாகப் பதிவு செய்யப்பட்ட தனியுடமை வர்த்தக முயற்சிகள் 12 % ஆல் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரியான திட்டத்துடன் அதாவது ஆரம்பிக்கப்படவிருக்கும் வியாபாரம் எதனை மையமாகக் இயங்கவிருக்கிறதோ,அதற்கு அப்பிரதேசத்தில் உள்ள கேள்வி,அதற்கு ஏற்கனவே உள்ள போட்டியாளர்களிடமிருந்து  எவ்வாறு வேறுபட்டு உங்கள் பொருள் அல்லது சேவையை வழங்கவிருக்கிறீர்கள் என்பதற்கான தெளிவு ,வியாபாரத்தில் ஈடுபடுத்தப்படவிருக்கும் வளங்களின் கிடைப்பனவு,பொருள் அல்லது தரத்தின் சேவையைத் தொடர்ந்து பேணுதல் போன்ற சரியான திட்டங்களுடன் தொடங்கும் வியாபாரம் என்றுமே சோடை போகப்போவதில்லை.அப்படிப் போனாலுமே கூட அது தற்காலிகப் பின்னடைவாகத்தான் இருக்கும்.
என்ன தான் நிரந்தர வருமானம் தரும் தொழில், தொழிற் பாதுகாப்பைத் தந்தாலும்,சொந்தத் தொழில் முயற்சியில் சில கூடுதலான சிரமங்கள் இருந்தாலும், சொந்தத் தொழிலில் உள்ள திருப்தி நிரந்தர வருமானம் தரும் தொழிலில் இல்லை.என்ன தான் நிரந்தர வருமானம் என்று சொன்னாலும் கூடஅதில் உங்கள் முயற்சி அதிகரித்தாலும் வருமானம் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கப் போகிறது. .ஆனால் சொந்தத் தொழிலில் உங்கள் முயற்சி அதிகரித்தால் உங்களுக்குக் கிடைக்கும் லாபமும் அதிகரிக்கப் போகிறது. (ஏன் நட்டமும் அதிகரிக்கலாம் தானே என்று எதிர் மறையாக யோசிக்க வேண்டாமே.)
சொந்தத் தொழில் முயற்சி செய்ய உத்தேசித்திருப்போரை ஊக்குவிக்கும் எண்ணத்தோடும்,அப்படியான உத்தேசம் இல்லாதோருக்கு அப்படியொரு எண்ணத்தை வரவழைக்கும் நோக்கத்துடன் தான் திரு சாரூபன்.திரு ஜெயகாந்த் ஆகியோரின் கேள்வி ஒன்று பதில் இரண்டு பகுதியும் பிரசுரிக்கப்படுகின்றது.இதுவும் உங்களுக்கு ஒரு உபயோகமான ஆக்கமாக இருக்கலாம் என்பது எனது எண்ணம்.
சரி,இனி தனியுடமை வியாபாரப் பெயர்ப்பதிவை எவ்வாறு மேற்கொள்வது  என்று படிப்படியாக  விபரிக்கின்றேன்.
1.முதலில் தனியுடமை வியாபாரப் பெயர்ப்பதிவைச் செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தினை உங்களுக்குரிய பிரதேச செயலகத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும்.அதன் மாதிரி வடிவம் கீழே தரப்பட்டுள்ளது
2.மேலே கூறப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை  நிரப்பிக் கொண்டுஅத்துடன் நீங்கள் தொழில் செய்யவிருக்கும் இடத்தின்  மீது உங்களுக்கிருக்கும்  சட்ட ரீதியான பிணைப்பைக் காட்டக்கூடிய காணி உறுதி,வாடகை அல்லது குத்தகை ஒப்பந்தம்,அல்லது காணிக்காரரின் சார்பில் அவரது அதிகாரபூர்வமான பிரதிநிதியாகச் செயற்பட அனுமதி வழங்கும் அதிகாரப்பத்திரம் (இப்படி நீட்டி முழக்கினால் சில வேளைகளில் உங்களுக்குப் புரியாமலிருக்கலாம் ‘Power Of Attorney’ என்று சொன்னால் அட அது தானா இது?சொல்லவேயில்ல என்பீர்கள்.)ஆகியவற்றைக் கொண்டு போக வேண்டும்.P.O.A ஆயின் அதில் “இன்னரை இந்த இடத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதியளிக்கின்றேன்”என்ற மாதிரியான ஒரு வசனம் இருப்பது அவசியம்.மூலப் பத்திரத்தையும்,பிரதிப்பத்திரத்தையும் கொண்டு போய்க் கொடுத்தால் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து விட்டு மூலப் பிரதி திருப்பி உங்களிடம் கையளிக்கப்படும்.அத்துடன் ,பிரதேச செயலாளரால் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட  ஒரு அதிகாரியால் உங்களின் விபரங்கள் அரைவாசிப் பக்கத்தில்  நிரப்பப்பட்டு மீதமிருக்கும் பக்கத்தில் உங்களது ஏனைய சில விபரங்கள் உங்களது பகுதி  கிராம சேவையாளர் மூலமாக உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படும்.சில வேளைகளில் சற்றுப் பொறுத்துக் கொள்ளுமாறு கூறி  உடனே அந்த விண்ணப்பத்தைத் தருவார்கள்.அல்லது இன்னொரு நாள் நீங்கள் போக வேண்டி வரும்.
3. உங்கள் பகுதி கிராம சேவையாளரிடம் போய் மிகுதி அரைவாசிப் பகுதியை நிரப்பித் தருமாறு அவரிடம் கொடுக்க வேண்டும்.இதில் ஏனைய கேள்விகளோடு  உங்கள் வியாபாரத்தின் பெயரில் பெயர்ப்பலகை உள்ளதா,பற்றுச் சீட்டு உள்ளதா என்றும் இரண்டு கேள்விகள் கேட்கப்படும்.கிராம சேவையாளர் சில வேளைகளில் பற்றுச் சீட்டை பார்க்க வேண்டும் என்று கேட்பதோடு,பெயர்ப்பதிவைப் பார்ப்பதற்கும் உங்கள் வியாபார ஸ்தலத்திற்கும் விஜயம் செய்யக்கூடும்.ஆனால் இதெல்லாமே உங்களுக்கும் கிராம சேவையாளருக்கும் இடையிலுள்ள புரிந்துணர்விலும், பிணைப்பிலும் தான் தங்கியிருக்கிறது.இதில் இன்னொரு சிக்கலான விடயம் உள்ளது.பெயர்ப்பலகை,பற்றுச் சீட்டு இரண்டிலுமே உங்கள் வியாபாரப் பெயர்ப்பதிவிலக்கம் இருப்பது அவசியம்.ஆனால் கடைசியாகத் தானே அது உங்களுக்குக் கிடைக்கப் போகிறது.அப்படியானால் என்ன செய்யலாம்?ஒன்று  இரண்டிலுமே அதற்கான இடத்தைக் காலியாக வைத்து விட்டு பின்பு பதிவிலக்கம் கிடைத்த பின் ஏதேனும் ஒரு வகையில்(பற்றுச் சீட்டாயின் பேனாவாலும், பெயர்ப்பலகையாயின் தூரிகையாலும்) நிரப்பிக் கொள்ளலாம்.அல்லது மீண்டும் சொல்கிறேன்...... இதெல்லாமே உங்களுக்கும் கிராம சேவையாளருக்கும் இடையிலுள்ள புரிந்துணர்விலும், பிணைப்பிலும் தான் தங்கியிருக்கிறது. கிராம சேவையாளரால் நிரப்பப்பட வேண்டிய படிவத்தை நீங்கள் கீழே காணலாம்.
4.கிராம சேவையாளரின் விண்ணப்பத்தைக் கொண்டு மீண்டும் பிரதேச செயலகத்திற்கு ஒரு பயணம்.இம்முறை  பிரதேச செயலாளரால் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட  ஒரு அதிகாரியால் இன்னாரால் இந்த இடத்தில் அமையவிருக்கும்  இந்த நிறுவனத்தைப் பதிவு செய்வதற்கு சிபாரிசுக்கடிதத்தை வழங்கியுதவுமாறு உதவித் தொழில் ஆணையாளரிடம் ஒரு கடிதம் மூலமாகக் கேட்டுக் கொள்ளப்படும்.உங்களுக்கு ஒரு பிரதியும், உதவித் தொழில் ஆணையாளருக்கு ஒரு பிரதியுமாக இரண்டு பிரதிகளுமே உங்களிடமே வழங்கப்படும்.அந்தக் கடிதத்தின் மாதிரி கீழே தரப்பட்டுள்ளது.
5. உதவித் தொழில் ஆணையாளருக்கு வழங்கப்பட பிரதியையும் கொண்டு நீங்கள் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் அமைந்திருக்கும் மாவட்டத் தொழில் அலுவலகத்திற்குக் கொண்டு சென்று அவரிடம் கையளிக்க வேண்டும்.எத்தனை நாட்களின் பின் வந்து அனுமதிக் கடிதத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அங்கு கூறப்படும்.அல்லது பதிவுத் தபால் மூலம் உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.மாவட்டத் தொழில் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்படும் கடிதம் எப்படி இருக்கும் என்பதை உங்கள் பார்வையைச் சற்றுப் பதித்துத் தெரிந்து கொள்ளலாம்.

ஆக நீங்கள் குறைந்தது ஐந்தாறு தடவைகளாவது பிரதேச செயலகத்திற்குப் போக வேண்டி வரும்.உங்களால், கிராம சேவையாளரால்,நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள்,மாவட்டத் தொழில் அலுவலகத்தில் பெற்றுக் கொண்ட கடிதம் எல்லாவற்றையும் பிரதேச செயலகத்தில் ஒப்படைக்க முன்னர் பிரதி எடுத்துக் கொள்ளல் உசிதம்.
இந்த ஆக்கத்திற்கான யோசனையைத் தந்த சாரூபனுக்கு வல்வை  அலையோசையின்  சார்பில் எனது நன்றிகள்.     

6.நீங்கள் மீண்டும் மாவட்டத் தொழில் அலுவலகத்திற்குச் சென்று பெற்றுக் கொண்ட  அல்லது பதிவுத் தபால் மூலம் பெற்றுக் கொண்ட அனுமதிக் கடிதத்தைக் கொண்டு மீண்டும் பிரதேச செயலகத்திற்கு ஒரு முறை போக வேண்டும்.அந்தக் கடிதத்தை வாங்கிக் கொண்ட பின்னர் வியாபாரப் பெயர்ப்பதிவிற்கான முத்திரைக் கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவீர்கள்.அந்தக் கொடுப்பனவிற்கான பற்றுச் சீட்டினை ஒரு பிரதி எடுத்துக் கொண்டு அந்தப் பிரதி,  மாவட்டத் தொழில் அலுவலகத்தில் பெற்றுக் கொண்ட கடிதத்துடன் இணைக்கப்பட்டு மூலப் பிரதி உங்களிடம் கையளிக்கப்படும்.அனேகமாக அடுத்த நாளோ அல்லது இரண்டு நாட்கள் கழித்தோ வந்து வியாபாரப் பெயர்ப் பதிவுச் சான்றுப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவீர்கள்.சில வேளைகளில் அன்றே, ஒன்றிரண்டு மணித்தியாலங்களில் பெற்றுக் கொள்ளலாம்.அதனை நீங்கள் கீழே காணலாம்.

1 கருத்து: