வியாழன், 5 ஏப்ரல், 2012

சுனாமி 2004

              சுனாமி 2004

 
அம்மா சொன்னதைக் கேட்க சந்தோசமாகவும்,அதே சமயம் கவலையாகவும் இருந்தது.ப்ரியா என்னை விரும்புவதை நினைக்க சந்தோசமாகவும்,அது அம்மாவுக்குப் பிடிக்காமல் போனதை நினைக்கக் கவலையாகவும் இருந்தது. “ஏன் அம்மா பிரியா என்ன சொன்னவ?” என்று கேட்டேன். “நேரடியா ஒண்டும் சொல்லெல்ல.ஆனா நீ ஒடுறதப் பாக்க அவளுக்கு விருப்பமெண்டும் அவள் ஒடுறதப் பாக்க உனக்கு விருப்பமெண்டும் சொன்னவ.நானும் நேரடியா ஒண்டும் சொல்லாம, ஜானகியின்ட மகளும் நல்லா ஓடுவாள்.இந்தியாவில அவள் படிக்கிற கல்லூரியிலயே ஒட்டப்போட்டிகள்ள பங்குபற்றி எத்தனையோ பரிசு வாங்கியிருக்காள்.இவனுக்கும் அவளுக்கும் நல்ல சோடிப்பொருத்தம் எண்டு சொன்னனான்” என்று அம்மா புதுக்கதையொன்று சொன்னாள்.
“ அம்மா நீங்களும் நல்லாக் கதை எழுதுவீங்கள் போல இருக்கு. ஜானகி....மகள்....இந்தியா...கல்லூரி...ஒட்டப்போட்டி...நல்லா கற்பனை தான்.” என்றேன். “கற்பனையெல்லாம் ஒண்டுமில்ல.போன வருஷம் அம்மன் கோவில்  திருவிழாவுக்கு ஜானகி வந்திருந்தவள்.அப்பாவுக்கு ஒண்டு விட்ட சகோதரி.அப்பாவும் நானும் விரும்பி முடிச்சாப் பிறகு எங்களோடு பழகாம விட்ட அப்பாவின்ட சொந்தக்காரச் சனத்திலே அவயலும் சேர்த்தி.அப்பா போனதுக்கு துக்கம் விசாரிச்ச பிறகு கூட ஏழெட்டு வருஷமா உங்களோடு தொடர்பு இல்லாம இருந்திட்டம்.இவ்வளவு நாளா உங்களக் கவனிக்காம விட்டதுக்கும் சேர்த்து உங்களக் கவனிக்க வேணும் மாதிரி இருக்கு எண்டு அவர் சொன்னவர்.எனக்கும் அதிலே உடன்பாடு தான்.பிருந்தாவுக்கு நல்லா மாப்பிள்ளை ஒண்டு தேடினனாங்கள்.ஆனா எங்களுக்கு வாய்க்கிறதுக்கு முன்னால பிருந்தா விரும்பின பெடியனக் கட்டி வச்சிட்டீங்கள்.உங்கட மகனுக்கு யாரையும் மனசில நினைச்சிருக்கிங்களோ தெரியல்ல.அப்படி இல்லாட்டி எங்களை நினைச்சுக்கொள்ளுங்கோ”
எண்டு இதமா சொன்னது ஏண்டா மனதில நல்லாப் பதிஞ்சுட்டுது.உடனே அவளுக்கு ஒண்டும் சொல்லாட்டியும் கூட பிறகு பிறகு யோசிச்சுப் பாத்தனான். அப்பாவின்ட ஆக்களோட ஒண்டு சேர்ரதுக்கு இது நல்லா வாய்ப்பா இருக்கும்…..நீ மனசு வச்சா.இந்த வயசில இதெல்லாம் உனக்குச் சொல்லக் கூடாது எண்டு தானிருந்தனான்.இப்ப சொல்ல வேண்டி வந்துட்டுது” என்று சொல்லி முடித்தாள்.அம்மாவோடு என்ன கதைப்பது என்று தெரியாமல் போய் கட்டிலில் படுத்துக்கொண்டேன்.
விளையாட்டுப் போட்டிகளில் ப்ரியாவோடு பழக்கம் ஏற்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியிருந்தாலும் அவள் மீது ப்ரியம் ஏற்பட்டு ஐந்தாறு மாதங்கள் கூட ஆகவில்லை.ஆனாலும் இருவரும் சேர மாட்டோமா என்று நினைக்கையில் எனக்குள் ஏற்படும் வேதனையை நினைக்க எனக்கே ஆச்சரியமாகத்தான் தான் இருந்தது.இவ்வளவு குறுகியகாலப் பகுதிக்குள் மனம் எவ்வளவு   தீவிரமாக அவளை விரும்பியிருக்கிறது. 
அன்று பின்னேரமும் வெளியில் போக மனம் இருக்கவில்லை.பாட்டுக் கேட்டதிலேயே பொழுது போய் விட்டது.அம்மாவுக்கும் எனது குழப்பம் விளங்கியிருக்க வேண்டும்.வேறு கதைகள் கதைத்த போதிலும் தப்பித் தவறிக் கூட அந்த விஷயத்தைப் பற்றி ஒன்றும் கதைக்கவில்லை.கை வீக்கத்துக்கு பக்கத்து ஒழுங்கைப் பரிகாரியாரிடம் போய் வருவோம் என்று அழைத்த போது கூட அம்மா ஏதும் அதைப் பற்றிக் கதைக்கக் கூடும் என்று நான் நினைத்தாலும் கூட அதுவும் நடக்கவில்லை.
“வாடா கேசவா ,என்ன நான் உருட்டுக்கட்டையால தேக்கிறதுக்குப் பயந்து கொண்டு அம்மாவையும் கூட்டிக் கொண்டு வந்தனியோ?” என்று வரவேற்ற பரிகாரியார்  கடந்த ஒரு வருடமாக நான் அவரிடம் போய் வர ஆரம்பித்ததிலிருந்து எனக்கு ஒரு சினேகிதன் மாதிரியே ஆகி விட்டிருந்தார்.அவர் நோவெண்ணெய் தேய்த்து உருவி விட்ட போது ஏற்பட்ட வலியைப் பொறுத்துக் கொள்ள பிரியாவின் நினைப்பு உதவியது.காலையில் என்னைப் பார்க்க வந்த போது,  தன் கையால் எனது கை வீக்கத்தைத் தொட்டுப் பார்க்கக் கையை நீட்டி விட்டு, பிறகு சட்டென்று  ஏதோ நினைத்து விட்டு குழந்தையின் கையால் என் கை வீக்கத்தைத் தடவியது ஞாபகம் வர, பரிகாரியாரின் கையை ப்ரியாவின் கையாக நினைத்துக் கொண்டேன். “அம்மா,இவன் என்ட கையை யாரோ ஒரு பெட்டையிண்ட கையாக நினைக்கிறான்.மற்ற நேரங்கள்ள குளர்ரவன் இப்ப பேசாம இருக்கிறான்.பாருங்கோ ” என்று பரிகாரியார் கச்சிதமாக என் மனதைப் படித்து அம்மா என்னை முறைத்துப் பார்க்கும்படி செய்தார்.
நாளை காலை அக்காவைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.எந்தப் பிரச்சனையையும் அக்காவுடன் பகிர்ந்து கொண்டால் அதற்கான தீர்வோ அல்லது ஆறுதலோ கிடைக்கும்.படிப்பில் ஏற்படும் சந்தேகங்கள்,எட்டாம் வகுப்பில் எனக்கு ஏற்பட்ட முதல் காதல்,நண்பர்களோடு ஏற்பட்ட மனஸ்தாபங்கள்,அம்மாவுடன் ஏற்படும் சண்டைகள் போன்ற  எல்லாவற்றுக்கும் நான் நாடும் ஒரே நபர் அக்கா தான். இப்போது திருமணம் முடித்து எங்களைப் பிரிந்திருந்தாலும் கூட அந்தப் பழக்கத்தை என்னால் விட முடியாதிருந்தது.
காலையில் எழுந்த போதே அக்காவின் நினைப்போடு தான் எழுந்தேன்.அம்மா கோப்பி கொண்டு வந்து தரும் போது “என்ன, பிருந்தாட்ட போகல்லையோ? என்று கேட்டாள்.அம்மா உட்பட பொதுவாக எல்லோருமே என் மனதைச் சுலபமாகப் படித்து விடுகிறார்கள் என்று தோன்றியது.அதுவும் ஒரு வகையில் நல்லது தான்.நான் என்னைச் சிரமப்பட்டு வெளிப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.போறண்டா எண்ணெய்ப்புட்டு செய்து தாரன்.கொண்டு போ.”என்று அம்மா சொல்லத் தலையாட்டினேன்.
வல்லைவெளியால் சைக்கிள் உழக்கிய போது அத்தான் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.எங்கள் ஊரில் காணி வீடு இருந்தும் புத்தூரில் வீடு வாங்கி எங்களையும் அக்காவையும் பிரித்ததோடு இப்படிச் சைக்கிள் உழக்க வைத்து விட்டாரே என்ற நினைப்புத் தான்  அவர் மேல் கடுப்பை ஏற்படுத்தியது.வல்லைப் பாலத்தைக் கடந்த போது ஒரு பழைய ஞாபகம்.சாதாரண தரப் பரீட்சை முடிந்த அன்றே விமலன்,உதயன்,வினோத்தோடு பாலத்திலிருந்து பாய்ந்து நீச்சலடித்தது ஞாபகத்துக்கு வர சைக்கிளால் இறங்கி கொஞ்ச நேரம் ஓடும் நீரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.ஒரு முறை பாய்ந்து நீந்தினால் என்ன என்று எனக்குள் எழுந்த எண்ணத்தைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன்.மூன்று நாட்களுக்கு முன் நல்ல மழை பெய்திருந்ததால் வெள்ளம் சுழித்துக் கொண்டு ஓடியது.நீரின் வேகத்தைப் பார்ப்பதற்காகஅருகில் கிடந்த சுள்ளி ஒன்றை எடுத்துப் போட  அது ஒரு நிமிடத்திற்குள் கிட்டத்தட்ட 30m அல்லது 40 m போயிருக்கும்.இப்போது பாய்ந்தால் நீர் மட்டதிற்கு மேல் தலையைத் தூக்குவதற்குள் சிறிது தூரம் நீரோட்டத்தோடு போய் விடுவேன்.திரும்பி பாலத்தை நோக்கி நீந்தி வருவது சற்று  சிரமமாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு மனமில்லாமல் கிளம்பினேன்.
அக்கா வீட்டை அடைந்த போது அத்தான் அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். “வாங்கோ மச்சான்,பின்னேரம் நான் திரும்பி வரேக்குள்ள  நிப்பீங்களோ?”என்று கேட்டார். “இல்லை அத்தான்,மத்தியானமே வெளிக்கிட்டிருவன்.பின்னேரம் match ஒண்டு இருக்குது”என்றேன்.என் குரல் கேட்டதும் சாப்பாட்டுப் parcel உடன் ஓடி வந்த அக்காவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு “கவனம்,கவனம் நீங்க விழுந்தாலும் பரவாயில்ல,என்ட சாப்பாட்டப் போட்டுறாதீங்கோ.சந்தோசத்தில கையும் ஓடல்ல,கையும் ஒடல்ல எண்டு சொல்லிக் கேட்டிருக்கன்.இஞ்ச  சந்தோசத்தில கை கால் எல்லாம் இன்னும் வேகமா  எல்லோ ஓடுது.பிருந்தா,மச்சானுக்கு நான் வாங்கி வச்சிருக்கிற சாமானக் குடுத்து விடுங்கோ,வாரன் மச்சான்” என்று சொல்லியவாறே மோட்டார் சைக்கிளை முறுக்கியவாறே கிளம்பினார்.
“என்னடா,நீ இஞ்ச வந்து ஒரு மாசத்துக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கு.நான் ரெண்டு தரம் வீட்ட வந்தும்  உன்னக் காணல்ல.அக்கா எண்டு ஒரு ஆள் இருக்கிறா எண்டு ஞாபகம் இருக்குதோ?” என்று காதை முறுக்கிய அக்காவிடம் “என்ன அக்கா,மறந்தாத் தானே ஞாபகம் வர்ரதுக்கு...” என்றேன். “இந்தத் தேன் ஒழுகிற பேச்சுக்கு ஒண்டும் குறைச்சல் இல்ல” என்று கூறி என் கையிலிருந்த எண்ணெய்ப்புட்டை கிட்டத்தட்ட பிடுங்கிக் கொள்ள “சரி சரி,அதக் கொட்டிக் கொள்ளுறதுக்கு முதல் எனக்கு ஏதாவது கொட்டிக் கொள்ளத் தாங்கோ” என்றேன். “கொட்டிக் கொள்ளுறதுக்குத் தானே.களனித் தண்ணியும்,தேங்காய்ப் பூ சக்கையும் ஒகேயா”என்று கிண்டலாகக் கேட்ட அக்காவுக்கு “ஏன் முழுக்கச் சாப்பிட முடியாம மிச்சம் விட்டுட்டீங்களோ?” என்று கேட்டு விட்டு பதிலடி கொடுத்து விட்டேன் என்று  திருப்திப்பட்டுக் கொள்ள முதல் “இல்லடா,இது நீ போன முறை மிச்சம் விட்டது.பத்திரமா எடுத்து வச்சனான் என்று அக்கா சொல்ல அவளுக்கு என்ன பதில் சொல்லுவது என்று யோசிப்பதற்குள் அக்கா “1,2,3” என்று எண்ணி விட்டு தனது வலது கையைத் தூக்கித் தான் வெற்றி பெற்றதாக அறிவித்தாள். “ சரி அக்கா,உங்கட வெற்றியக் கொண்டாடுறதுக்காவது atleast   ஒரு டீயாவது தாங்களன்” என்று நான் சரணடைய “வெள்ளைக் கொடி காட்டினா நாங்க யாரையும் தாக்குறதில்ல.மன்னிப்பும் அதோட நல்ல சாப்பாடும் தருவம்” என்று சொல்லி விட்டு “கொஞ்சம் பொறுடா.புட்டு அடுப்பில அவியுது.அதுக்கு இடையில நான் அதிசயாவ ஒருக்கா பாத்திட்டு வாரன்” என்று அறைக்குள் போன அக்காவுக்குப் பின்னால் நானும் போனேன்.
அதிசயா அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.உண்மையிலேயே பெயருக்கேற்ற அதிசயமான பிள்ளை தான்.ஒன்றரை வயது தான் இருக்கும்.அந்த வயது குழந்தைகளிடம் இருக்கும் குழப்படி அவளிடம்  அநியாயத்துக்குக் குறைவாக இருந்தது.பால் கேட்டு லேசாகச் சிணுங்குதல்,நித்திரை வரும் போது லேசாகச் சிணுங்குதல்....இவை தான் அவளிடம் இருக்கும் ஆகக் கூடுதலான குழப்படிகள்.அந்த விதத்தில் தோற்றத்தில் அக்காவை ஒத்திருந்தாலும் குணத்தில் அத்தானை ஒத்திருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.
“சரி நீ வந்து சாப்பிடு,இப்ப ரெண்டு மூண்டு நாளா மாமா வேணும் எண்டு கேட்டுக் கொண்டிருந்தவள்.” என்று சொன்னவாறே குசினிக்குப் போன அக்காவைத் தொடர்ந்து நானும் போனேன்.அக்கா புட்டை இறக்குவதற்குள் நான் எனது மனப்பாரத்தை இறக்கி விட்டேன்.ஆனாலும் நான் சொன்னதை ஆறுதலாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, சொல்லி முடித்ததும் அவள் சொன்ன விடயம் என்னைத் திடுக்கிட வைத்தது.
                                                             (தொடரும்)                   
120x90 Natural Skin Shop Coupon

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக