சனி, 31 டிசம்பர், 2011

வணக்கம்

வணக்கம்,
ஒரு வித்தியாசமான புதிய முயற்சி.முழுக்க முழுக்கப் புதிய முயற்சி என்று சொல்ல முடியாது.என்றாலும் அறிந்த தெரிந்த வட்டத்திற்குள் அவ்வாறு சொல்லலாம் என்று நினைக்கிறேன்.அப்படி இல்லை என்றால் கூட பரவாயில்லை.இணைய சஞ்சிகை(online magazine’ க்கு தமிழ் சரியா?) ஆரம்பிக்க நினைத்து மூன்று மாதங்களுக்கு மேல் இருக்கும்.Solo வாக single ஆக ஆரம்பிப்பதில் உள்ள முக்கிய பிரச்சனை இது தான். கண்ணுங்களா,சிங்கம் மட்டுமில்ல,இந்தப் பன்னி  கூடத் தனியாத் தான் வரும் என்று நான் சொல்லிக் கொள்ளத் தயாராக இல்லை.இந்த முயற்சிக்கு குறிப்பிடத்தக்களவு ஆதரவும் வரவேற்பும் கிடைத்து இது தொடர்ந்து வெளி வருமாக இருந்தால் ஏனையோரின் ஆக்கங்களையும்  சேர்க்கலாம்.......... பார்க்கலாம்.எனக்கு என்ன அனுபவம் என்று கேட்க நினைப்பீர்கள்.பக்கம் பக்கமாக கடிதங்கள் எழுதியதைத் தவிர சொல்லிக் கொள்ளும்படியாக அனுபவம்  ஒன்றும் இல்லை.கடிதங்கள் எழுதியவனெல்லாம் இணைய சஞ்சிகை ஆரம்பித்தால்,எங்கள் கதி....... என்று நீங்கள் நினைக்கக் கூடும். ஏலக்காய் இருக்கிறதென்று லட்டு பிடிக்கப் (செய்யப்) புறப்பட்டவனின் நிலையும் எனது நிலையும் ஒன்று தான் என்று உணர்ந்தாலும் கூட துணிந்து இறங்கி விட்டேன்.இனி எனது ஆக்கங்களைப் படிக்க நீங்கள் துணிந்தால் சரி. அது தவிர ஒன்றிரண்டு ஆங்கிலக் கதை,கட்டுரைகளை மொ(மு)ழி  பெயர்ப்புக்களும் செய்திருக்கிறேன்.அத்தோடு இப்போது ஒரு கதை எழுத ஆரம்பித்திருக்கிறேன்.அது தொடர் கதையாக வலைச் சஞ்சிகையில் வரும்.
           சரி,Blogger என்பது பொதுவாக தனிப்பட்ட கருத்துகளை பதிவு செய்யும் நாட்குறிப்பு  போன்றதொரு வலைத் தளம் தானே! ஏன் இத்தளத்தில் எனது வலைச் சஞ்சிகையை ஆரம்பிக்க நினைத்தேன் என்று நீங்கள் கேட்க நினைக்கக் கூடும்.(நீங்கள் கேட்க நினைக்கவில்லை என்றாலும் கூட நான் சொல்லத் போகிறேன்).Blogger சாராத தனியாக ஒரு பெயரில் (Domain) ஆரம்பிப்பதில் சிக்கல் என்னவென்றால்.... நிதிப் பிரச்சனை தான்.எனக்கு ஆர்வம் இருந்தாலும் கூட அனுபவமில்லை. சிறு பிள்ளை வேளாண்மை வீடு போய்ச் சேராது என்பார்கள்.இதில் காசை வேறு செலவழிக்க வேண்டுமா என்றொரு எண்ணம்.அப்படித் தனியான பெயரில் வலைச் சஞ்சிகை ஆரம்பித்தால் நன்மைகளும் இருக்கின்றன.முக்கியமானது எனது வலைத்தளத்திற்கு வருகை தரும் நபர்களின் எண்ணிக்கைக்கேற்ப அதாவது இறங்கு வரிசைப்படி  Google,Yahoo,Bingo ஆகிய தேடல் இயந்திரங்களில் எனது வலைத்தளம் பட்டியல்படுத்தப்பட்டு பிரபல்யம் ஆகும்  வாய்ப்புக் கிடைக்கும்.வருகைகள் அதிகமானால் Adsense இல் விளம்பரங்கள் மூலமாக உழைத்துக் கொள்ளும் வாய்ப்பும் கிட்டும்.ஆனால் அதற்கு ஆங்கிலத்தில் எழுதுவதும் அவசியம் என்று நினைக்கிறேன்.இவ்வலைச் சஞ்சிகையில் பதியப்படும் விடயங்களில் ஏதும் திருத்தங்கள் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தாலோ,அல்லது கருத்துத் தெரிவிக்க நினைத்தாலோ தயவு செய்து முன் வாருங்கள்.
    சரி,இனி எனது இம் முயற்சிக்கு உந்துகோலாக அமைந்த என்னைக்  கவர்ந்த,என்னைப் பாதித்த,என்னைப் பிரமிக்க வைத்த,என்னால் மறக்க முடியாத  எழுத்துக்களைப்  பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.
    அப்பா.........அதிகாலை 3 அல்லது 4 மணியளவில் தனது தொழில் சம்பந்தமான கோர்வைகளுடன் எழுத்து வேலைகளைத் தொடங்கு முன்னர் அப்பா அம்மாவுக்குக் கடிதம் எழுதுவதைப் பார்க்கும் போது வியப்பாக இருக்கும்.(அநேகமாக 2 வாரங்களுக்கு ஒரு தடவை)சற்றே சரிந்த, ஆனால் தெளிவான, தனது குடும்பத்தின் மேல் வைத்துள்ள பாசத்தை வெளிப்படுத்தும் எழுத்து.எங்கள் அப்பா எங்களை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து இரண்டு கிழமைகளாக்கி விட்டது.எனது இந்த முயற்சியை அப்பாவுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.
                  அம்மா......நான் அம்மாவைப் பிரிந்து பதுளையில் ,கொழும்பில் இருந்த நாட்களில் அம்மாவிடம் இருந்து வரும் குண்டு குண்டான எழுத்துக்களுடன் கூடிய 15, 20 பக்கக் கடிதங்கள் தான் என்னை  முதலில் பாதித்த எழுத்தாகக் கொள்ள முடியும்.மிகவும் விலாவாரியாக உற்றார்,உறவினர்,அயலவர் விடயங்களையும்,ஊர் நிலவரங்களையும் புட்டுப் புட்டு வைக்கும் அம்மாவின் கடிதங்கள் என்னைக் குட்டிக் குட்டி வைக்கவில்லை என்பது கவியின்(எனது மனைவியின்) ஆதங்கம்.
        அப்பாச்சி......வயதானவர்களுக்கே உரிய சிடுசிடுப்புச் சற்று இருந்தாலும் கூட    உன்னால் தான் தனது கால் முடமானது என்று சக்கர நாட்காலியில் வாழ்ந்த கிட்டத்தட்ட 10 வருடங்களில் ஒரு முறை கூட என்னைக் கடிந்து எழுதாமல் அதற்கு மாறாக கடைசிக்  காலத்தில் என் மேல் இன்னும் அதிக அன்பை வெளிப்படுத்திய அப்பாச்சியின் கடிதங்களும் என்னுள் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.(மின்சாரமே இல்லாமல் நாங்கள் வாழ்ந்த காலப்பகுதியில் ஒரு நாள் அதிகாலையில் நான் படிப்பதற்கு விளக்கேந்தி வந்த அப்பாச்சி,காற்றினால் விளக்கு அணைந்து விட,அத்துடன் எண்ணெயும் சற்றுச் சிந்தி விட,திரும்பிப் போய் மீண்டும் விளக்கேற்றி வரும் போது சிந்திய எண்ணெயில் வழுக்கி விழுந்து கால் முறிந்து அதன் பின் சிகிச்சைக்காக  மாமியுடன் U.K போனதும் அதன் பின் பத்து  வருடங்களுக்கு மேல் அப்பாச்சி மறையும் வரை எங்களுக்கிடையிலான தொடர்பு இருந்தது கடிதம் மூலம் என்பதும் உங்களுக்கு ஒரு உதிரித் தகவல்.)
       கவி.....(எனது முன்னாள் காதலி. இந்நாள் மனைவி) நான் மிகவும் விரும்பிய எழுத்து.அதென்ன,விரும்பிய....... என்று இறந்த காலத்தில் சொல்வதால் போட்டுக் கொடுத்து மாட்டிக் கொடுத்து விடுவோம் என்று நீங்கள் நினைப்பீர்களானால் அது தவறு.இப்போது கவியின் எழுத்து உச்ச பட்சமாக புளி ¼ கிலோ,வெங்காயம் 1 கிலோ என்ற ரீதியில்   அமைவதால் தான் அப்படிச் சொன்னேன்.(இவன் பொழச்சுக்குவான் என்று நினைக்கிறீர்களா?)அந்த நாட்களில் கவிதை வேறு அவவுக்கு சரளமாக வரும்.கவிதைகள் பெரும்பாலும் இயற்கையை வர்ணிப்பதாக அமையும்.
       செல்வம் மாமி........அப்பாவின் தங்கை.புவியியல் ரீதியாக மிகத் தொலைவில் இருந்த போதும் மனதளவில் மிகவும் நெருங்கிய சொந்தங்களில் ஒன்று.கடிதங்களில் மட்டுமல்ல.எனது ஒரு வயதில் இருந்து என் திருமணத்தின் பின்பும் கூட அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்துக்களிலும் மாமியின் அன்பு வெளிப்பட்டிருக்கிறது.
    வதனிச்சித்தி.....சித்தியாக நினைத்ததை விட சகோதரியாகவும்,சினேகிதியாகவும் நினைத்தது அதிகமென்பதால் சண்டைகள்,மனஸ்தாபங்கள்,குறைகள் போன்றவை தான் கடிதங்களில் அதிகம் பரிமாறப்பட்டன.ஆனாலும் அடிப்படைக் காரணம் அன்பு தான்.
        சத்யா.........அனேகமான எனது நண்பர்களின் மனைவிமார்கள் மற்றும் எனது மனைவியின் சினேகிதிகள் எல்லோருமே என்னை அன்பாக  அண்ணா என்று அழைத்த போதிலும்,கடிதங்கள் எழுதிய போதிலும் எல்லோருமே மரியாதையின் நிமித்தம் சற்றுத் தள்ளியே நின்று கொண்டார்கள்.என்னை நெருங்கி என்னில் உரிமையும் கண்டிப்பும் காட்டக் கூடிய அக்கா தங்கையின் அன்புக்காக நான் ஏங்கிய நாட்களும் இருக்கின்றன.முழுக்க முழுக்க எனது எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப் படாத போதிலும் ஓரளவேனும் பூர்த்தி செய்த நான்கைந்து  பேர் இருக்கிறார்கள்.அவர்களுள் கடிதத் தொடர்பு இருந்தது சத்யாவுடன் தான்.இப்போது நீண்ட நாட்களாகத் தொடர்பு  இல்லை என்றாலும் கூட மறக்க முடியாத உறவு;மறக்க முடியாத எழுத்து.
   குயிலன் அப்பாச்சி........அந்தத் தள்ளாத வயதிலும் கூட நீண்ட காலமாகக் குழந்தை இல்லாமல் இருந்த எங்களுக்காகப், பிரார்த்தனை செய்து வரும் கடிதங்களையும் கடிதங்களுடன் இலவச இணைப்பாக வரும் விபூதிப் பொட்டலங்களையும்  மறக்கவே முடியாது.ஆனாலும் கூட எங்களுக்கு மகள் பிறந்த செய்தியைக் கேட்க குயிலன் அப்பாச்சி இல்லாதது கவலை தான்.
     ஓவியா(எங்களின் மகள்).....மிகவும் அழுத்தமான எழுத்து......80 ஒற்றைக்  கொப்பியில் முதலாவது பக்கத்தில் எழுதினால் கடைசிப் பக்கத்தில் பதியும் அளவுக்கு அளவுக்கு ரொம்பவே அழுத்தம்.
   குமார்....இந்த ஊரில் எனக்குக் கிடைத்த முதல் நண்பன்.என்றாலும் கூட எங்கள் நட்புக் கோட்டைக்கு நல்லதொரு அத்திவாரம் போடப்பட்டது அவன் என்னை விட்டுப் பிரிந்து வெளிநாடு போன பின்பு, எங்களுக்கிடையில் பரிமாறப்பட்ட கடிதங்கள் மூலமாகத் தான் என்று சொன்னால் மிகையில்லை.சொல்ல வேண்டியதை நேர்த்தியாக அலட்டல் இல்லாமல் எழுதும் விதம் அலாதியானது.
          பாலன்,நான் பார்த்ததிலே பாலனின் எழுத்தைத் தான் நல்ல கிறுக்கல் என்பேன். நல்ல கிறுக்கல் என்பேன்.ஆனாலும் எந்த நேரமும் உதவத் தயாராக இருக்கும் குணம் அனேகமாக எல்லாக் கடிதங்களிலும் வெளிப்பட்டிருக்கிறது.கடிதம் எழுத ஆரம்பித்ததும் சீக்கிரமாக எழுதி முடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் எழுத்து அப்படி ஒரு போக்குப் போகும் என்று நினைக்கிறேன்....விபத்து நடப்பதற்கு முன்பு வேகமாக வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் வாகனத்தில் பயணிப்பதைப் போல்.
                 வாசன்…..எனது நண்பர்களிலே கலைஞன் என்ற பெயருக்கு மிகப் பொருத்தமானவன்.கதை,கவிதை,கட்டுரை,நாடகம்,சித்திரம்,கல்யாண வீட்டு அலங்காரம் போன்ற எல்லாவற்றையுமே திறமையாகச் செய்யக் கூடியவன்.(கல்யாண வீட்டு அலங்காரங்களுக்கு வாசன் தலைமையில் போகும் குழுவில் நானும் இன்னும் ஒரு சில நண்பர்களும் மிக்சர் சாப்பிட்டு தேநீர் குடிப்பதற்கு மாத்திரம் போவதுண்டு)அவனது திறமைகளில் என்னை அதிகம் கவர்ந்தது அவனது எழுத்துத் தான்.அதனால் தான் அவன் எழுதிய நாடகத்தில் ஒரு கொரில்லாவாக நடிக்கச் சம்மதித்தேன்.
        P.K alias பிரேம்குமார்....P.K Australia போய்ச் சேர்ந்ததும் எழுதிய ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று எழுதிய கடிதமும் மறக்க முடியாதது.ஒவ்வொரு நண்பர்களுக்கும் தனிப் பக்கம் ஒதுக்கி, எங்களுக்குப் பொருத்தமான மிருகங்களின் படத்தையும் போட்டு மறக்க முடியாமற் பண்ணி விட்டான்.எனக்குரிய பக்கத்தில் ஒரு தேவாங்கின் படம் போட்டிருந்தது கொஞ்சம் வருத்தமாகவே இருந்தாலும் கூட முகச் சாயல் இருக்கவே செய்தது.
    குமரன்.....மிகவும் சுருக்கமாக,உணர்ச்சிகளுக்கு அதிகம் இடம் கொடுக்காமல்,லேசான தீர்க்கதரிசனத்தோடு வெளிப்படும் எழுத்து.உதாரணத்திற்கு 2002 இல் சமாதானம் வந்தது பற்றி குமரன் எழுதியிருந்ததை உதாரணமாகக் கொள்ளலாம். “இது நீண்ட காலத்திற்கு நிலைக்கப் போவதில்லை.2 அல்லது 3 வருடங்களில் மீண்டும் சண்டை தொடங்கும்.சண்டை முடிந்தாலும் கூட தீர்வுத் திட்டம் அது இது என்று இழுபடவே செய்யும்”..........ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.அதோடு நான் நண்பர்களைப் பற்றிக் குறைப்பட்டுக்கொண்டால்,இதையெல்லாம் குறையாக எடுக்கக் கூடாது.அதற்கு ஏதேனும் காரணம் இருக்கும் என்று அருமையாக அறிவுரை கூறி(எழுதி) மனதில் உள்ள மனஸ்தாபத்தை நீக்குவதற்கு குமரனின் எழுத்துக்கள் உதவியிருக்கின்றன.வல்வை நண்பர்களைப் பற்றிய தகவல்கள்,படங்கள் அடங்கிய வலைத் தளத்தின் ஸ்தாபகர் என்ற பெருமையும் குமரனுக்குப் போய்ச் சேர வேண்டியதே.எல்லோராலும் முடியாத காரியம் அது.நிறையப் பேருக்கு எண்ணம் இருந்தாலும் செயற்படுத்தியது குமரன் தான்.
       சேதுவின் படிப்பில் தெரிந்த புத்திசாலித்தனம் சேது எழுதிய கடிதங்களிலும் இடைக்கிடை வெளிப்பட்டு ரசிக்கும்படியாகவே இருந்ததிருக்கிறது.அது தவிர பொதுவாக சேதுவின் எழுத்து மிகவும் simple ஆக சேது மாதிரியே இருக்கும்.
     டொப்பன் alias பரணீதரன்........நான் இது வரை என்னைக் கவர்ந்த,என்னைப் பாதித்த,என்னால் மறக்க முடியாத எழுத்துகளைப் பற்றித் தான் சொன்னேன்.என்னைப் பிரமிக்க வைத்த என்ற எழுத்து என்ற வகையில் அடங்குவது பரணீதரனின் எழுத்து மட்டும் தான்.எங்களுடன் ஒன்றாகச் சுற்றித் திரிந்த டொப்பனா இப்படி எல்லாம் இணையத் தளங்களில் இவ்வளவு விஷய ஞானத்துடன் எழுதுகிறான் என்ற பிரமிப்பு இன்னும் தீர்ந்தபாடில்லை.என்றாலும் பரந்துபட்ட அறிவுடன்,புத்திஜீவித்தனமான சொற்களையும், வசனங்களையும்  பரணீதரன் பிரயோகிப்பதால் சொல்ல வரும் விடயத்தைக் கிரகிப்பதில் என்னைப் போன்ற பாமரனுக்குச் சிக்கலாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.(பரணீதரனின் சார்பில் இந்தக் குற்றச் சாட்டுக்கும் நானே பதிலைத் தெரிவித்துக் கொள்கிறேன். “அறிவில்லாத பாமரனுக்கு இணையத் தளங்களில் என்ன வேலை?”)
       விக்கி……தொழில் புரியும் இடத்தில் கிடைத்த நட்பு.ஆசைக்கொன்று, ஆஸ்திக்கொன்று என்பது போல் உள்ளேயேயிருந்து ஒன்று,வெளியேயிருந்து ஒன்று ...மொத்தமாக இரண்டே கடிதங்கள் தான்.இந்த நாட்டின் நிலைமையை அறிந்தவர்களுக்கு உள்ளே என்றால் என்னவென்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.எனக்கு எழுதப்பட்ட கடிதங்களுள் மிகவும் வித்தியாசமான சூழலிருந்து எழுதப்பட்ட கடிதம் என்ற வகையில் மனதைப் பாதித்த எழுத்து.
     என் மனங் கவர்ந்த  இனிய நண்பர்கள் பலர் இன்னும் இருக்கிறார்கள்.ஒவ்வொருத்தரைப் பற்றியும் ஒரு நாவல் எழுதும் அளவுக்குச் சுவாரசியமானவர்கள்.ஆனாலும் இதில் நான் குறிப்பிடுவது அவர்களின் எழுத்தைப் பற்றித் தான் என்பதால் அவர்கள் விடுபடக் கூடும்.ஏனெனில் அவர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் நண்பர்களாக இருப்பார்கள்.ஆனாலும் பொருத்தமான சந்தர்ப்பங்களில் அவர்களைப் பற்றியும் குறிப்பிடுவேன்.இது தவிர இன்னும் மூன்று பேர் இருக்கிறார்கள்.
          மகேஷ் அண்ணா.....பெரியப்பாவின் மகன்.தன்னைச் சுற்றியுள்ளவர்களை ஏதாவது  சொல்லிச் சிரிக்க வைப்பவர்..நான் பதுளையில் இருந்த போது அவர் எனக்கு எழுதிய முதலாவதும் கடைசியுமான கடிதமும், அவர் இறந்து  விட்ட செய்தியைத் தாங்கி வந்த அம்மாவின்  கடிதமும்  அவர் விமானக் குண்டு வீச்சால் இறந்து இரண்டு கிழமைகளின் பின் எனக்குக் கிடைத்ததும், முதலில் நான் அவரின் கடிதத்தைப் படித்து விட்டு  அவருக்கு என்னென்ன எழுத வேண்டும் என்ற எண்ணியவாறே அம்மாவின் கடிதத்தைப் படித்ததும் நான் வாழ்நாளில் மறக்க முடியாத கடிதமாக அமைவதற்குக் காரணமாக அமைந்து விட்டன.அதுவொரு காலம்.....தந்தி,தொலைபேசி உரையாடல்,sms,e.mail,skype போன்ற ஒரு விதமான தொடர்பாடல் சாதனங்களும் இல்லாமல்,தகவல் பரிமாறுவதற்குக் கடிதம் ஒன்றையே நம்பியிருந்த காலம்.இதைப் படிக்கும் எத்தனையோ பேருக்கு அப்படியொரு காலத்தைக் கற்பனை செய்து பார்க்கவே பயங்கரமாக இருக்கும்.
     சபேஷ். alias குகன் .....(எனது ஒன்று விட்ட தம்பி)Blogger இல் சபேஷின் இணையத் தளத்திற்குப் போய் அவர் எழுதியவற்றை வாசித்த போது, அமைதியாக இருக்கும் சபேஷ் மனதில் இவ்வளவு நகைச்சுவை உணர்வா என்று தோன்றியது.தொடர்ந்து எழுதினால் இன்னும் சிறப்பாக மிளிரக் கூடும்.ஆனாலும் பொறியியலாளராக இருப்பதால் அதற்கெல்லாம் நேரம் கிடைப்பது கடினமாக இருக்கும்.
       Last, but not least..ஜயன்....எனது தம்பி....ஊரில் உள்ள பாடசாலைகள்,கோவில்கள்,வர்த்தக நிலையங்கள்,வங்கிகள் போன்றவற்றின் விபரங்கள்,751 வழித்தட பேரூந்து,சிற்றூர்தி சேவைகள் எங்கள் ஊரால் போய் வரும் நேரங்கள்  போன்றதொரு தகவல் களஞ்சியத்தைச் சேகரித்து  ஜயன் எழுதி வைத்திருப்பதைப் பார்த்த போது வியப்பாக இருந்தது.ஜயனின் அனுமதியுடன் அதிலிருந்து சில பகுதிகளையும் இவ்வலைச் சஞ்சிகையில் பிரசுரிக்க நினைக்கிறேன்.
     கடைசியாக இந்த இணைய சஞ்சிகைக்கு ஏன் 'வல்வை அலையோசை' என்ற வைத்தேன் என்று..........ஊர் பெயரும்,கடல் சம்பந்தப்பட்ட பெயரும் வர வேண்டுமென்று விரும்பினேன்.வல்வை……. அலை........நான் இந்த இணையத்தின் மூலம் ஏதாவதொரு செய்தியை உங்களுக்கெல்லாம் சொல்கிறேன் தானே.அதை 'ஓசை' எனக் கொள்ளலாம் தானே. "வல்வை அலையோசை".இந்தப் பெயரைத் தெரிவு செய்த எனது அண்ணாவுக்கு எனது நன்றி.

……………………………..தீபன்

1 கருத்து:

  1. நண்பன் தீபனுக்கு வணக்கம்.
    உங்களின் இந்த முயற்சியை இப்போது தான் படிக்க முடிந்தது. அருமையான முகவுரை. மிகவும் அழகாகவும் உணர்வுப்பூர்வமாகவும் ஆரம்பித்துள்ளீர்கள்.
    தன்னடக்கம் வேண்டும் தான் ஆனால் உங்கள் எழுத்துக்களில் கொஞ்சம் அதிகமாக தெரிகின்றது. ஒரு கதாசிரியன் போல இல்லாவிட்டாலும் ஒரு எழுத்தாளன் போல கொஞ்சம் மிடுக்காக எழுதலாம் என தோணுகின்றது.
    தொடரட்டும் உங்க ஓசை அலையோசை வல்வை அலையோசை 👍

    பதிலளிநீக்கு