சனி, 31 டிசம்பர், 2011

பெர்முடா முக்கோணப் பிரதேசத்தின் தீர்க்கப் படாத மர்மம்

பெர்முடா முக்கோணப் பிரதேசத்தின் தீர்க்கப் படாத மர்மம்
இன்னும் இந்த உலகத்தில் தீர்க்கப் படாத மர்மங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகத் திகழ்வது பெர்முடா முக்கோணப் பிரதேசத்தின் மர்மமாகும்.இப்படியொரு மர்மம் இருப்பதாக அநேகர் அறிந்திருந்த போதிலும் அதைப்பற்றி அறிந்ததென்னவோ கொஞ்சம் தான்.
    மேற்கு அட்லாண்டிக் பகுதியில் அமைந்துள்ள இம்முக்கோணப் பிரதேசம் இது வரை பல நூற்றுக்கணக்கான கப்பல்களையும் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் காவு கொண்டுள்ளது.இது வரை எந்த விஞ்ஞானியாலும் இந்த மரணப் பொறியின் முடிச்சை அவிழ்க்க முடியவில்லை.அத்தோடு எதிர்வு கூற முடியாத துரதிஷ்டமான விதியை இப்பிரதேசத்தில் சந்தித்தவர்கள்  மிகக் குறைந்தளவு தடயங்களையே விட்டுச் சென்றுள்ளார்கள்.

இந்த அமானுஷ்யம் நிறைந்த ஆபத்துப் பிரதேசம் அமைந்திருப்பது புளோரிடா,பெர்முடா, புவட்றோறிக்கோ ஆகிய முக்கோணப் பிரதேசத்திலாகும்.ஆரம்பத்தில் திடீரென்று எதிர் பாராத விதத்தில்  இப்பிரதேசத்தில் மறைந்த கப்பல்களும் மனித உயிர்களும் தற்செயலான நிகழ்வாகத் தான் கருதப்பட்டது.ஆனால் படிப்படியாக பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மக்கள் அதற்கான காரணத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார்கள்.ஆனால் அவர்களால் எந்த முடிவுக்கும் வார முடியவில்லை.மறைந்த கப்பல்களோ,மனித உயிர்களோ எவ்வித தடயங்களையும் விட்டுச் செல்லாததால் இதன் மர்ம முடிச்சு மேலும் இறுகியது.விறுவிறுப்பான இவ் விவகாரம் விஞ்ஞானிகளால் ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளப் பட்டது.
    எல்லா விதமான கற்பனையுடன் கூடிய சாத்தியமான நிகழ்வுகளும் கருத்தில் கொள்ளப்பட்டது சில அவதானிகள் அளவுக்கதிகமான புவியீர்ப்பு விசை மற்றும் கடுமையான காந்த விசை தான் இப்பிரதேசத்தில் வானொலியின் இயக்கம் தடைப்படுவதற்கும் திசைகாட்டி பிழையான வாசிப்பைக் காட்டுவதற்கும் காரணமெனக் கூறினார்கள்.இன்னும் சிலர் தொலைந்ததாகக் கருதப்பட்ட அட்லாண்டிக் நாகரிகத்தின் குடிகள் இன்னும் பெர்முடா பிரதேசத்தைத் தளமாகக் கொண்டு வாழ்கிறார்கள் என்றும் அவர்களால் இயக்கப்படும் அசாதாரணமான நவீன இயந்திரத்தின் காரணமாகத் தான் இது நிகழ்கிறது என்றும் தெரிவித்தார்கள்.அதோடு கடலில் ஏற்படும் கருந்துவாரம்‌ வேறோர் பரிமாண உலகத்திற்கு வாசலாக அமையலாம் என்ற கற்பனையோடு கூடிய காரணமும் கூறப்பட்டது 
     இந்த விஞ்ஞான விளக்கங்களை விட இன்னொரு காரணமும் முன் வைக்கப்பட்டது.வேற்றுக் கிரகத்தில் இருந்து வருகை தரும் மாமிச பட்சிணிகளின் வேட்டைப் பிரதேசமே பெர்முடா முக்கோணப் பிரதேசம் என்ற கருத்தே அது.
       இவ்வாறான உத்தேசங்களுக்கும் அனுமானங்களுக்கும் முடிவே இல்லாமற் போயிற்று.ஆனால் இவை எதுவுமே பகுத்தறியும் தன்மை கொண்ட மனித மனங்களைத் திருப்திப் படுத்தவில்லை என்பதே உண்மை.அவ்வாறாயின் இம்முக்கோணப் பிரதேசத்தின் உண்மை தான் என்ன?
      பெர்முடா முக்கோணப் பிரதேசத்தின் சகாப்தம் ஒன்றும் மிகப் பழைமையானதல்ல. இக்கருத்தானது  முதன்முதலில் 1964இல் வின்சென்ட் ஹடீஸ் என்பவரால் ‘Argosy’  என்ற ஒரு வாரப் பத்திரிகையில் முன் வைக்கப் பட்டது.அதைத் தொடர்ந்து குஷே என்பவரால் நடாத்தப்பட்ட ஆய்வொன்றில்  1800 காலப் பகுதியிலிருந்து  இப்பிரதேசத்தில் தொலைந்த கப்பல்கள்,விமானங்கள் என்பவற்றின் அறிக்கைகள் பகுத்தாராயப்பட்டது.இந்த பகுத்தாராய்வின் போது வெளிப்பட்ட ஆச்சரியமான விடயம் என்னவெனில், உண்மையில் அப்படி மாயமாக மறைந்த சம்பவங்களே இடம் பெறவில்லை என்பதும் அப்படி இடம் பெற்ற ஒரு சில சம்பவங்களும் மிகவும் தெளிவான விளக்கங்களுக்குட்பட்டே நிகழ்ந்துள்ளன என்பதுமாகும்.அத்தோடு இவ்விதமான விபத்துக்கள் அட்லாண்டிக் சமுத்திரத்தில் மட்டுமில்லாமல் ஏனைய சமுத்திரங்களிலும் நிகழ்ந்துள்ளன என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
      இவ்விதமாக காட்டுவதற்கு அவர் எடுத்துக் கொண்ட விடயம் 1945 இல் நடந்த 5 விமானப்படையினரோடு கூடிய அவெஞ்சர் விமானங்களின் மறைவாகும்.இதன் போது 1945 டிசம்பர் 5 ஆம் திகதி தமது வழமையான கடலுக்கு மேலான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட 5 விமானங்களும் எவ்விதத் தடயங்களுமின்றி மறைந்தன.இதில் ஆச்சரியப் படத்தக்க  விடயம் என்னவெனில் இந்த 5 விமானிகளும் (ஒரு தலைமை விமானி உட்பட) மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பது தான்.இந்த 5 விமானங்களின் இறங்கு தளமான லாண்டர்டேல் கோட்டையின் கட்டுப்பாட்டுக் கோபுரத்தோடு தொடர்பு கொண்ட தலைமை விமானி டெய்லர் “எங்களுக்கு எந்தத் திசை மேற்கு என்று தெரியவில்லை .எல்லாமே பிழையாக,வித்தியாசமாக உள்ளன.கடலும் கூட இருக்க வேண்டிய விதத்தில் இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறது.என்றும் இன்னொரு விமானி “நாங்கள்  லாண்டர்டேல் கோட்டையிலிருந்து வடகிழக்கில் 225 மைல் தூரத்தில் பறந்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.நாங்கள் ஒரு ........” என்று கூறிக் கொண்டிருக்கையில் 5 விமானங்களுடனான சகல தொடர்புகளும் துண்டிக்கப்படு முழுமையான மெளனம் உணரப்பட்டது.உடனே அனர்த்தத்த்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் லாண்டர்டேல் கோட்டையிலிருந்து13 பேரைக் கொண்ட மார்டினர் எனப்படும் விமானம் புறப்பட்டது.ஆனால் சில தொடர்புகளின் பின் அவ்விமானத்தின் தொடர்புகளும் முழுமையாகத் துண்டிக்கப்பட்டது .அதன் பின்பு அந்த விமானத்திலிருந்து எந்த விதமான தொடர்புகளோ அல்லது சமிக்ஞைகளோ கிடைக்கவில்லை.
         குஷே தனது கூற்றை மெய்ப்பிப்பதற்கு இந்த விடயத்தை ஆதாரமாகக் கொண்டார்.இவ்விமானங்களின் மறைவு சம்பந்தமான கடற்படையினரின் அறிக்கையைக் கவனமாக ஆராய்ந்து எல்லோரும் வியக்கத்தக்க வகையில் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.தலைமை விமானி தவிர்ந்த ஏனைய அவெஞ்சர் விமானிகள் அனுபவமற்றவர்கள் என்றும்,தலைமை விமானி அனுபவம் வாய்ந்தவரெனினும்  அந்தப் பகுதிக்கு அவர் புதியவரே என்றும், கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கும் விமானங்களுக்கும் இடையில் எந்த விதமான தொடர்புகளும் இருந்திருக்கவில்லை   என்றும் ஆதாரபூர்வமாக நிரூபித்தார்.இதன் மூலம் தலைமை விமானி டெய்லர் கட்டுப்பாட்டுக் கோபுரத்துடன் நடாத்திய உரையாடலைப் பொய்யாக்கினார்.இரவு 8 மணியளவில் பறப்பதற்கான எண்ணெய் முழுவதுமாகத் தீர்ந்த நிலையில் அவெஞ்சர் விமானங்கள் கடலோடு சங்கமித்திருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்தார்.
        உதவிக்கு விரைந்த மார்டினர் பற்றிக் கூறுகையில் லாண்டர்டேல் கோட்டையிலிருந்து சில மைல்கள் தொலைவில் தனது பிரயாணத்தை மேற்கொண்டிருந்த நீராவிக் கப்பலான கெய்ன்ஸ் மில் இல் இருந்தவர்கள் நாடு வானில் ஒரு வெடி விபத்தைக் கண்ணுற்றார்கள் என்றும் தெரிவித்த குஷே,மார்டினர் ரக விமானங்கள் அந்நாட்களில் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வந்ததால் மக்களால் நகைச்சுவையாக பறக்கும் வாயுத்தாங்கி என வர்ணிக்கப்பட்டதாகத் தெரிவித்து அதன் மர்மத்திற்கும் ஒரு முற்றுப் புள்ளி வைத்தார்.
          அமெரிக்க ,ரஷ்ய விஞ்ஞானிகள் கூட்டாக இணைந்து அப்பிரதேசத்தில்  தமது ஆராய்ச்சிகளை மேற்கொண்ட போதும் ரஷ்ய விஞ்ஞானிகள் அந்தப் பிரதேசத்தில் சுழிகள் இருப்பதைக் கண்டு பிடித்தனரெனினும் அது தவிர்ந்த வேறெந்த மர்மங்களையும் கண்டு பிடிக்க முடியவில்லை.
   பெர்முடா முக்கோணப் பிரதேசத்தைப் போல் இன்னொரு பிரதேசம்…. ஆனால் இந்தளவிற்குப் பிரசித்தம் இல்லாத ஓர் இடம் தான் ஜப்பான் இல் சாக்கடலில் உள்ள டிராகன் முக்கோணப் பிரதேசம்.இது ஜப்பான் இற்கும் பொனின் தீவுக்கும் இடையில் பிலிப்பைன்ஸ்‌ கடற்பரப்பின் பெரும்பகுதியைக் கொண்ட பிரதேசமாகும்.இப்பிரதேசத்திலும் ஏராளமான கப்பல்களும் விமானங்களும்  காணாமல் போயிருக்கின்றன.1950 இல் இப்பிரதேசத்தை ஆபத்துப் பிரதேசமாக ஜப்பான் அரசாங்கம் அறிவித்திருந்தது. 1952 இல் இந்தக் கடற்பிரதேசத்தின் மர்மத்தை ஆராய்வதற்காகப் புறப்பட்ட  9  விஞ்ஞானிகளும் 22 மாலுமிகளும்,கடற்சிப்பந்திகளும்  அடங்கிய குழுவொன்று  காணாமல் போனதும் இவ்விவகாரத்தை மேலும் சுவாரசியமாக்கியது.இவ்விரண்டு மர்மப் பிரதேசங்களும் ஒன்றுக்கொன்று நேரெதிரே உலகத்தின் மறு பக்கத்தில் அமைந்திருப்பதால் இங்கு கப்பல்களும்,விமானங்களும் காணாமல் போவதைத் தற்செயலான நிகழ்வாகக் கருத முடியாது என்றே பெரும்பாலான விஞ்ஞானிகள் கருதினாலும் கூட மர்ம முடிச்சு மேலும் இறுகியதே தவிர அவிழவில்லை.
    இவ்விரண்டு கடற்பிரதேசங்களிலும் பயணம் செய்தவர்களின் அனுபவங்களையும்,அனுமானங்களையும் கொண்டு,அங்கு இடம்பெற்ற காணாமல் போதல்களுக்கும்,மர்ம நிகழ்வுகளுக்கும்  பொதுவாக எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பின்வரும் காரணங்கள் முன் வைக்கப் பட்டன.
1.மெதேன் வாயு:கடலின் அடி மட்டத்திலிருந்து வெளி வரும் மெதேன் வாயுக்குமிழிகள்(இவை சில வேளைகளில் பெரிய கப்பலின் அளவில் கூடக் காணப்படலாம்) நீரின் அடர்த்தியைச் சடுதியாகக் குறைத்து கப்பலின் மிதக்கும் தன்மையை இல்லாமல் செய்து கப்பலை மூழ்கச் செய்யும் தன்மை வாய்ந்தவை.
2.நீரோட்டம் :அக்கடற்பரப்பில் காணப்படும் நீரோட்டமானது மெக்ஸிகோவிலிருந்து ஆரம்பித்து புளோரிடா நீரிணை ஊடாக வட அட்லாண்டிக் பகுதியைச் சென்றடைகிறது.இந்த நீரோட்டமானது கடலுக்குள்ளே ஓடும் ஆறு போன்றது.அப்பகுதியில் உள்ள மிதக்கும் பொருட்களைத் தான் போக்கில் இழுத்துச் செல்லும்  நீரோட்டமானது அப்பகுதியில் நடந்த விபத்துக்களின் தடயங்களையும் கொண்டு சென்றிருக்கலாம் என்ற அனுமானம் அலட்சியப்படுத்தப் படக் கூடியதல்ல.
3. ராட்சத அலைகள்:அமைதியான கடலில் கூட திடீரென எழும் ராட்சத அலைகள் விபத்துக்களுக்குக் காரணமாகலாம்.இவை மிகவும் அரிதாகவே இடம் பெரும் என்றாலும் கூட சில கடற்பிரதேசங்களில் நீரின் வேகமானது இந்நிகழ்வானது இடைக்கிடை இடம் பெறலாம் என்பதை ஒப்பிக்கிறது.
4. காலநிலை மாற்றங்கள் :கடலில் ஏற்படும் சடுதியான காலநிலை மாற்றங்களும் பல உயிர்களைக் காவு கொண்டிருக்கலாம்.பெர்முடா பிரதேசமானது திடீரென உண்டாகும்  இடி மின்னல்,புயல்,சூறாவளி போன்றதற்குப்  பெயர் பெற்றதால் இவற்றுக்கு அனுபவமற்ற கப்பலோட்டிகளும் விமானவோட்டிகளும் இரையாகியிருப்பதற்கான வாய்புக்கள் மிக அதிகம்.
5.மின் பனிப்புகை :கடலிலே சில சமயங்களில் மேக மூட்டத்திற்கு மத்தியில் அமானுஷ்யமான சத்தத்தோடு கூடிய சுழன்றடிக்கும் வெளிச்சமும் இங்கு இடம்பெற்ற துர் நிகழ்வுகளுக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.இதற்குள் ஏதோ அசாதாரணமாக நடைபெறுகிறது என்று தோன்றினாலும் இது காரண காரியங்களுடன் விளக்கப் படவில்லை.
6.ஆழ்கடல் எரிமலைகள் :அனேகமான ஆழ்கடல் எரிமலைகள் தண்ணீரின் எடை காரணமாக வாயுக்கள் வெடித்துச் சிதறுவது தடுக்கப் பட்டு நீராவியையும் பாறைத் துகள்களையும் வெளிப்படுத்தி,கடலின் மேல்தளத்தைப் பாதிக்காமல் தாங்கள் இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும்,சில எரிமலையின் குழம்புகள் அதையும் தாண்டி மேலே வந்து அனர்த்தங்களை விளைவிக்கக் கூடியவை.
7.ராட்சத சுழிகள்:இரண்டு நேரெதிர் திசைகளில் பயணிக்கும் நீரோட்டங்கள் ஒன்றையொன்று சந்தித்துத் தங்களைப் பிணைத்துக் கொள்ள முயற்சிக்கும் போது ஏற்படும் அனர்த்தமே இதுவாகும்.கப்பல்களை விழுங்கக் கூடிய சுழிகள் உண்டாவதற்கான சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு என்றாலும் கூட இருக்கவே இருக்காது என்று அடித்துச் சொல்ல முடியாததால் இங்கு நடைபெறும் அனர்த்தங்களில் இதற்கும் பங்குண்டு என்று கருத இடமுண்டு.
8.மனிதனால் வேண்டுமென்றே செய்யப்படும் செயற்பாடுகள் (கடற்கொள்ளை,யுத்தங்கள்),அல்லது மனிதனால் விடப்படும் தவறுகள்:இவை எல்லாப் பிரதேசத்திற்கும் பொதுவானதாகையால் பெர்முடா பிரதேசமும் இதற்கு விதி விலக்கானதல்ல.       
      குஷேயின் கூற்று உண்மையாக இருக்கலாம்.மேற்கூறப்பட்ட காரணங்களும் ஏற்றுக் கொள்ளத் தக்கவையாக இருக்கலாம்.இந்த முக்கோணப் பிரதேசத்தில் நிகழ்ந்த விபத்துக்கள் கட்டுக் கதையிலிருந்து வேறுபடலாம்.ஆனால் மனதை உறுத்திக் கொண்டிருக்கும் கேள்வி என்னவெனில் ஏன் இந்தப் பிரதேசத்தில் மாத்திரம் எத்தனையோ விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன?சில வேளைகளில், புனை கதைகளை விட உண்மை விநோதமாக இருக்கும் என்ற கூற்று இதற்கும் பொருத்தமாக இருக்குமோ என்னமோ?
 

1 கருத்து:

  1. மிகவும் அருமையான பதிவு தீபன்.
    உங்கள் தேடல்கள் மிகவும் அற்புதமானவை. இத்தனை பெரிய விடயத்தை இவ்வளவு ரத்தின சுருக்கமாக மிக அழகாக பதிவிட்டுள்ளீர்கள். உங்கள் எழுத்து திறமைக்கு ஒரு வணக்கம்.

    என்ன கடைசியில் இருக்கலாம் இருக்கலாம் என்றே முடிந்துள்ளது...
    விடை தெரியாத பல கேள்விகளுக்கு நீங்களும் இருக்குமோ என்னமோ என கேள்விக்குறியுடன் பதிவை முடித்துள்ளீர்கள்.

    மனிதன் விஞ்ஞானத்தின் முன்னால்
    இன்னமும் சிறு பிள்ளை தான் ....

    பதிலளிநீக்கு