ஆளை விழுங்க ஆவலுடன் காத்திருக்கும் ஆவரங்கால் கிணறு
ஆளை விழுங்கக் காத்திருக்கும் என்று வாசித்ததும் ஏதோ பெர்முடா மர்மம் என்கிற சர்வதேசச் சமாச்சாரம் மாதிரி ஏதோ உள்ளூர் சமாச்சாரம் போலிருக்கிறது என்று யோசிக்கிறீர்களா?வல்லைவெளி,ஆவரங்கால் பிரதான சாலையின் மிக அருகிலேயே காணப்படும் சுற்றுச் சுவர் இல்லாத ஒரு கிணற்றைப் பற்றித் தான் இங்கு சொல்ல வருகிறேன்.
ஆவரங்கால் சந்தியில் இருந்து வல்லைவெளி நோக்கி வரும் போது
0.9 k.m தூரத்திலும், வல்லைவெளி(அச்சுவேலிக்குத் திரும்பும்) சந்தியில் இருந்து ஆவரங்கால் நோக்கிப் போகும் போது 1.3 k.m தூரத்திலும் அந்தக் கிணறு காணப்படுகிறது.(வல்லை வெளியிலிருந்து போகும் போது இடப்பக்கம்)பாதை அகலிப்பின் பின் எதிரே வரும் வாகனத்திற்கோ அல்லது முந்திச் செல்லும் வாகனத்திற்கோ இடம் விட்டு ஒதுங்கத் தேவை இல்லாததால் ஜல சமாதி அடைவதற்கான வாய்ப்புக்கள் மிக மிகக் குறைவு என்றாலும் கூட நடப்பவை எல்லாம் சொல்லிக் கொண்டு நடப்பதில்லையே.
ஆனாலும் இந்தக் கிணறு ‘முழிப்பாக’ இல்லை என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.உங்களில் எத்தனையோ பேர் அடிக்கடி யாழ்ப்பாணம் போய் வருபவர்கள் கூட இதனைக் கவனித்திருக்க மாட்டீர்கள்.அத்தோடு இந்தக் கிணறு முழிப்பாக இருந்தால் நிச்சயம் ஏதேனும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். பாவனையில் இல்லாத இந்தக் கிணற்றை ஏன் மூடாமல் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.குறைந்த பட்சம் சுற்றுச் சுவராவது கட்டலாமே.
ஒரு நாள் நான் நான் வல்லை வெளி தாண்டி மோட்டார் சைக்கிளில் போய்க் கொண்டிருக்கும் பொது எனக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பை எடுப்பதற்கு வேகத்தைக் குறைத்து மோட்டார் சைக்கிளை பாதையோரம் நிறுத்த முனைந்த போது தான் ஆளை விழுங்கக் காத்திருந்த கிணறு தெரிந்தது.இன்னும் கொஞ்சம் வேகமாகப் போயிருந்தாலோ அல்லது பிரேக் பிடிப்பதற்குச் சற்றுத் தாமதமாயிருந்தாலோ எனக்கு வந்த தொலைபேசி அழைப்பின் மறு முனையிலிருந்த நண்பன் “என்னடா,கிணற்றுக்குள் இருந்து கதைப்பது போல கதைக்கிற” என்றோ அல்லது “என்னடா, ‘தண்ணியில’ கதைப்பது போல கதைக்கிற” என்றோ கேட்டிருப்பான்.
சரி,இந்த விஷயத்தை இவ்வலைப் பதிவில் தெரிவிப்பதால் என்ன பயனென்று யோசிக்கிறீர்களா?உங்களில் எத்தனையோ பேர் யாழ்ப்பாணம் போய் வருபவர்களாய் இருப்பீர்கள்.உங்களுக்கு இந்த விஷயம் தெரிவது நல்லது.அத்தோடு நீங்களும் எத்தனையோ பேருக்குத் தெரிவிப்பீர்கள் தானே?. இந்த சஞ்சிகை வெளியான கையோடு இந்தப் பக்கத்தின் பிரதியொன்றை ‘உதயன்’ செய்திப் பத்திரிகைக்கும் அனுபப்வென்றிருக்கிறேன்.இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது வீதி அமைப்பு அதிகார சபையா அல்லது காணிச் சொந்தக்காரரா?
வல்லை வெளி நோக்கிய பார்வையில்..........
ஆவரங்கால் நோக்கிய பார்வையில்........
உங்க சமூக சிந்தனை பாராட்டுதலுக்குரியது தீபன்.
பதிலளிநீக்குநீங்கள் பதிவிட்டுள்ள நிழற்படத்தில் அதன் ( ஆவரங்கால் கிணற்றின்) ஆபத்து ஆழம் நன்றாக தெரிகின்றது.
உதயன் பத்திரிக்கையில் இது மற்ற ஏதாவது விழிப்பூட்டல் பதிவு வந்ததா?
இப்பொழுது இந்த கிணற்றின் நிலை என்ன என்று அறிய ஆவலாக உள்ளது.