சனி, 31 டிசம்பர், 2011

சுனாமி 2004

  
                                      சுனாமி 2004
   2004 டிசம்பர் 26ம் திகதியை உங்கள் ஒருத்தராலும் மறக்க முடியாது.உங்களில் சிலர் கொடூரமான அந்த நாளின் நேரடிச் சாட்சிகளாய்,உடலில் காயங்களின் வடுக்களோடும்,உள்ளத்தில் உற்றார் உறவினர் நண்பர்களைப் பிரிந்த துயரத்தோடும் இருப்பீர்கள்.உங்கள் நினைவுகளைக் கிளறி உங்களை வேதனைக்குள்ளாக்கும் எண்ணமில்லை. எனக்கு நிகழ்ந்த ஒரு பயங்கரமான சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ளவே இதனைத் தட்டச்சுகிறேன்.
           எதிர்ப் பக்கமாகக் கடந்து சென்ற புகையிரதத்தின்  கட கட சத்ததிலும்,முகத்தில் அறைந்த காற்றினாலும் திடுக்கிட்டு நித்திரையால் விழித்துக் கொண்டேன்.நான் திடுக்கிட்டதனால்,என் தோளில் சாய்ந்திருந்த  ப்ரியாவும், என் மடியில் உறக்கத்தில் இருந்த சுவாதியும் கூட விழித்துக் கொண்டனர். “நீங்கள் படுங்கள்” என்று கூறியவாறே புகையிரதத்தின் வேகத்தினால் கலைந்திருந்த ப்ரியாவின் தலை முடியைச் சீர் செய்து அவளது காதிற்கும்  தலைக்கும் இடையே செருகி விட்டு சுவாதியின் தலையை வருட முயன்ற போது திடீரென்று  புகையிரதத்தின் வேகம் குறைந்து காதுக்கு அசெளகரியத்தை அளிக்கக் கூடிய “கிறீச்” என்ற கூர்மையான ஒலியுடன் புகையிரதம் தனது வேகத்தை மட்டுப் படுத்திக் கொள்ள  எனது வலது கை ஜன்னலின் விளிம்பில் மோதிக் கொள்ள “ஆ” என்று வேதனையோடு முனகினேன்.எனது வருடலில் மீண்டும் உறங்கத் தொடங்கியிருந்த ப்ரியா சட்டென எழுந்து “என்ன?” என்று என்னை நோக்கியவள் வேதனை நிறைந்த என் முகத்தைப் பார்த்து விட்டு தனது பார்வையைத் திருப்பியவள் என் கையைக் கவனித்து விட்டாள்.சுற்றிக்  கட்டியிருந்த துணியையும் மீறிக் கொண்டு ரத்தம் கசியத் தொடங்கியிருந்தது. “சுவாதிக் குட்டி எழும்படி “ என்று கூறியவாறே அவளை மென்மையாக என் மடியிலிருந்து தூக்கி இருக்கையில் இருத்தியவாறே “என்ன,நல்லா நோகிறதா?” என்று கூறிக் கொண்டே என் கையில் கட்டியிருந்த துணியை அவிழ்த்தாள்.நகங்கள் எதுவுமே அற்ற தீப்புண்களின்  தளும்புகளோடும்,காயங்களின் வடுக்களோடும் இரத்தம் கன்றியிருந்த எனது கையைப் பார்க்க எனக்கே அசிங்கமாக இருந்தது.அவிழ்த்த துணியை ஒரு கடதாசியில் சுற்றி ஒரு மூலையில் வைத்து விட்டு தனது கைப்பையைத் திறந்து ஒரு குட்டிப் போத்தலில் இருந்த டெட்டோலை பஞ்சினால் தொட்டு கசியும் ரத்தத்ததை ஒத்தியெடுத்து புதுத் துணியினால் கட்டுப் போட்டு விட்டாள்.
          “அம்மா ஏ மாமட்ட மொனவாத வுனே?”(அந்த மாமாவுக்கு என்ன நடந்தது?) என்று முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ஆண் குழந்தை (4 வயதிருக்கும்) தானது தாயைப் பார்த்துக் கேட்டது.அதை நான் கவனித்து விட்டதைக் கண்ட தை எங்களைப் பார்த்து தர்மசங்கடமான புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு “துவாலவெலா,ஓயா நிதாகன்ன”(காயம் பட்டு விட்டது.நீங்கள் படுத்துக் கொள்ளுங்கள்.) என்று கூறியவாறே அந்தக் குழந்தையை உறங்க வைக்க முயன்றாள்.
       நீண்ட “கூ” என்ற ஒலியுடன் புகையிரதம் மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கியது.சுவாதியை ப்ரியா தனது மடியில்  தூக்கி வைத்துக் கொள்ள புகையிரதத்தின் தாள லயத்தோடு கூடிய ஆட்டத்திட்கு உடனே உறங்கிப் போனாள்.
     பார்வையைத் திருப்பி வெளியே கடலை அவதானித்தவாறே  மெல்லக் கண்களை மூடத் தொடங்கிய எனக்கு ஏதோ வித்தியாசமாயிருக்கிறதே என்று மூளையின் செல்கள் தந்தியடிக்க கண்களைத் திறந்து கடலைக் கவனித்த பொது தான் அந்த வினோதம் தெரிந்தது.கிட்டத்தட்ட 200 மீட்டர் தூரத்திற்குக் கடல் நீர் உள்வாங்கியிருந்தது.எனது வாழ் நாளில் கடல் நீர் அவ்வளவு தூரம் உள்வாங்கி நான் கண்டதே இல்லை.இயற்கையில் ஏனிந்த மாற்றம்?இப்படியே வற்றிக் கொண்டு போனால் இந்தியாவுக்குக் கால்நடையாகப் போகக் கூடியதாக  வந்து விடுமோ என்று சிறுபிள்ளைத்தனமாக நினைத்த மனம் இப்போது நாம் இலங்கையின் தென் பகுதியில் அல்லவா இருக்கிறோம் .அப்படியானால் மாலைத்தீவுக்குத் தான் போகலாம் என்று எண்ணத் தொடங்கியது.ஊரில் இருந்தால் இந்தியாவுக்கு நடந்து போகலாம் தான் எண்ணத் தொடங்கியதும் ஊர் ஞாபகங்கள் அலை மோதத் தொடங்கியது.ஞாபகங்களைக் கட்டுப்படுத்துவதற்காகத் தலையை ஆட்டிக் கொண்டேன் .
      “என்ன,கேசவன்  தலையை மோதிக் கொண்டு வீட்டீர்களா?” என்ற ப்ரியாவின் குரல் என்னை மீண்டும் நனவுலகத்திற்குக் கொண்டு வந்தது.”ஒன்றும் இல்லை” என்றவாறே பார்வையைத் தாழ்த்த, ப்ரியாவின் அழகான விரல்கள் எனது அசிங்கமான கையைத் தடவுவதைக் கண்டேன்.என் வாழ்வில் ப்ரியா இணைந்து கொள்வதற்கு அடிகோலிய சந்தர்ப்பங்களை மனம் அசை போடத் தொடங்கியது.
      எங்கள் இருவருக்கும் இடையிலான ஆரம்ப கட்ட இணைப்பை ஏற்படுத்தியது கோட்ட மட்டத்தில் இடம் பெற்ற விளையாட்டுப் போட்டிகள் தான்.நான் பங்கு பற்றும் விளையாட்டுக்களான 400 மீட்டர்,800 மீட்டர் ஓட்டப் போட்டிகளே அவளும் பங்கு பற்றும் விளையாட்டுக்களாய் இருந்ததால் எங்களுக்கிடையில் மெல்லிய புரிந்துணர்வுடன் கூடிய நட்பு இயல்பாகவே உருவானது.வென்றால் ஒருவருக்கொருவர் வாழ்த்துத் தெரிவிப்பதும்,தவறும் வேளைகளில்,அதற்கான காரணத்தை விவாதித்து திருத்திக் கொள்ள அறிவுரை கூறுவதுமாக எங்கள் நட்பு ஆரம்பமானது.ஒரு தடவை,400மீட்டர் ஓட்டப் போட்டியின் போது கடந்த இரு வருடங்களில் நான் முதலாம் இடத்தைக் கோட்டை விடக் காரணமாக இருந்தவனை நான் முந்திக் கொண்டு வந்தாலும் கடைசி வினாடிக்கும் குறைவான நேரத்தில் நெஞ்சை முன்னகர்த்தி அவன் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட சம்பவம் என்னை விட அவளைப் பெரிதும் பாதித்தது.”சே .கடைசி நேரத்தில் விட்டுட்டீங்களே!நெஞ்சைக் கொஞ்சம் நீட்டியிருக்கலாம் தானே” என்று அவள் உண்மையான வருத்தத்துடன்  சொல்ல,நான் “நெஞ்சை நீட்டுறதா?அதெப்படி? ?உங்களுக்கெண்டா பிரச்சனையில்ல”என்று கொஞ்சம் இடக்காகச் சொல்லி விட வில்லங்கமாகி விட்டது.சட்டென முறைத்துப் பார்த்து வீடு எழுந்து போய் வீட்டாள்.நானும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதன் பின்பு எங்கள் ஊர் அம்மன் கோவில் இந்திர விழாவின் போது தோழிகளோடு ப்ரியாவைக் கண்டு விட்டு புன்னகை செய்ய எனக்குக் கிடைத்தது சுடும் பார்வை தான்.போதாதற்கு “ஓ ப்ரியா ப்ரியா,உன் ப்ரியா ப்ரியா”,”கல்யாணந் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?இல்ல ஓடிப் போயி கல்யாணந் தான் கட்டிக்கலாமா” என்றெல்லாம் பாடி எனது நண்பர்கள் இன்னும் கடுப்பேற்றி விட்டார்கள்.
           அதன் பின்பு நாமிருவரும் எதேச்சையாகச் சந்தித்துக் கொண்ட போதெல்லாம் ஒருவரையொருவர் காணாதது போல் பாசாங்கு செய்வதிலும் அப்படித் தற்செயலாக முகத்துக்கு முகம் சந்திக்க வேண்டி வந்தாலும் முகத்தைச் சட்டென திருப்பிக் கொள்வதிலும் அல்லது முகத்தைச் சுளிப்பதிலும் முனைப்பாக இருந்தோம்.
      ஒரு நாள் சந்தர்ப்பவசமாக ப்ரியா வீட்டுக்குப் போக நேரிட்டது எள்ளுருண்டை வாங்குவதற்காக.அவளின் அம்மா வீட்டில் எள்ளுருண்டை செய்து கொடுப்பதில் பிரபலமாக இருந்தாள்.முதலில் அம்மா பனங்கட்டி எள்ளுருண்டை வாங்கி  வருமாறு சொன்ன போது ஆங்காரமாக மறுத்தேன். ஏனென்று கேட்ட போது “அங்கே எனது கோபக்காரப் பெட்டை இருக்குது” என்று சொன்னேன்.”ஏண்டா,அது அப்படிக் கோபப்படுவதட்கு நீ என்ன சொன்னனீ அல்லது செய்தனீ?” என்று அம்மா விசாரித்ததும் வில்லங்கமாகி விட்டது எனக்கு.இன்னும் இருந்தால் இந்த மனுசி நோண்டி நுங்கெடுத்து விடுவாள் என்று கறுவியவாறே பனங்கட்டியை அம்மாவிடம்  வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.தனியாகப் போக விருப்பம் இல்லாமல் விமலன் வீட்டுக்குப் போய்  தூங்கிக் கொண்டிருந்த அவனை எழுப்பி வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு கிளம்பினேன்.”டேய்,ஏண்டா இந்த   வெயிலில கூட்டிக் கொண்டு போற?கறுத்துப்  போடுவண்டா” என்று புலம்பிய அவனை ‘’Fair & Lovely’ வாங்கித் தருவதாக சமாதானப்படுத்தினேன்.ப்ரியா வீட்டுக்குப் போகிறோம் என்றதும் மனதில் இனம் புரியாத சந்தோஷம்.குண்டு விமலனை ஏற்றி வந்தது கூடத் தெரியவில்லை.ஒரே மூச்சில் ப்ரியா வீட்டை அடைந்தது போல் ஒரு உணர்வு.விமலன் வீட்டுக் கதவைத் தட்டி “அம்மா” என்று மாடு போல் கத்தினான்.”டேய்,மனுஷன் மாதிரி கூப்பிடடா “ என்று அவனை அடக்கிக் கொண்டே “வீட்டுக்காரர்” என்று கதவைத் தட்டி  விட்டுக் காத்திருக்க மெல்லத் திறந்தது கதவு.
        கீழே குனித்திருந்ததால் முதலில் பாதங்களே தென்பட்டன.பரிச்சயமான பாதங்கள்.போட்டிகளின் போது புழுதியைக் கிளப்பியவாறே புயலென விரையும் பாதங்கள்.இப்போது புதிதாக வெள்ளிக் கொலுசும் அவள் பாதங்களில் அரங்கேறியிருந்தது.இவ்வாறாக நான் அவள் பாதங்களைப் பார்த்துக் கொண்டிருக்க அவள் குரல் ஒலித்தது.”பழைய சாப்பாடு ஒண்டும் இல்ல.போய் பிறகு வாங்கோ”.விமலனுக்குக் கடுப்பாகி விட்டது.”என்ன நக்கலா?நாங்க எள்ளுருண்டை வாங்க வந்தனாங்கள்.” என்று அவன் கத்த,பதிலுக்கு அவள் அமைதியாக “எள்ளுருண்டை இல்ல.மாட்டுக்கு வைக்கிற புண்ணாக்கு இருக்கு.வேணுமா?”என்று கேட்டாள்.ஏன் இண்டைக்கு நீங்க விரதமா?”என்று விமலனும் விடாமல் பதிலடி கொடுத்தான்.ப்ரியா ஏதோ சொல்வதற்கு வாயைத் திறந்த போது “என்ன ப்ரியா யார் வாசல்ல?”என்றொரு குரல் கேட்டது. “இல்லயம்மா.அது வந்து...”என்று ப்ரியா தடுமாற நான் முந்திக் கொண்டு “ஆன்டி,நாங்க எள்ளுருண்டை செய்றதுக்கு பனங்கட்டி குடுத்துட்டுப் போக வந்தனாங்கள்.உங்கட மகள் எங்கள வெருட்டிக் கலைக்கப் பாக்கிறா” என்று சத்தமாகக் கூறினேன். “என்ன சேட்டை இது ப்ரியா?” என்று கேட்டவாறே ப்ரியாவின் அம்மா வந்தாள்.இன்னும் இருபது வருடங்களுக்குப் பின் ப்ரியா எப்படி இருப்பாளோ.... அப்படியொரு தோற்றம். “இருபது பனங்கட்டி  எள்ளுருண்டை.நாளைக்குக் காலையில வந்து எடுக்கவா ஆன்டி?” என்று கேட்க ஓம் தம்பி.ஒரு பத்து மணி போல வாங்கோ.”என்று அமைதியான பதில் கிடைத்தது.வரும் போது விமலன் “என்ன ஆன்டி,உங்கட மகள் இப்படி இருந்தா எப்படி வியாபாரம் ஓடும்?” என்று மாட்டி விட்டு வரத் தவறவில்லை. “ஆனா,அவ நல்லா ஓடுவா” என்று மெல்ல முணுமுணுத்துக் கொண்டேன்.
   அடுத்த நாள் காலை பத்தரை மணி போல் ப்ரியா வீட்டுக்கு நாதனுடன் போனேன்.இந்த முறை விமலனைக் காய் வெட்டியாயிற்று.அவன் வந்தால் பிரியாவுக்கு ஏன் மேலுள்ள கோபம் இன்னும் அதிகமாகும்.பழைய ப்ரியாவாக மாறி என்னோடு சாதாரணமாகக் கதைக்க மாட்டாளா என்ற ஏக்கம் சில நாட்களாகவே என்னை வாட்டத் தொடங்கியிருந்தது.அதனால் இந்த முறை நாதனை அழைத்துப் போனேன்.அவன் சாது..மூக்கைப் பிடித்தால் வாயால் மூச்சு விடத் தெரியாத அப்பாவி. “வீட்டுக்காரர்,வீட்டுக்காரர்”என்று சத்தமாக அழைக்க நாதன் வெருண்டு போயி “என்னடா,இவ்வளவு சத்தமாக் கூப்பிடுற?பக்கத்து வீட்டுச் சனமும் வரப் போகுது” என்று சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் “ப்ரியா” என்றும் சத்தமாக அழைக்க..பிடித்தது வில்லங்கம். “யாரடா,….....மகன்.பிரியாவைக் கூப்பிடுறவன்”:என்றொரு முரட்டுக் குரலும்,படாரென்று யாரோ எதிலோ மோதி தொம்மென்று விழுந்து  வரும் சத்தமும் கேட்டது. “டேய்,நாதன் என்னடா செய்வது?” என்று கேட்டவாறே நாதனைத் திரும்பிப் பார்க்க அவனைக் காணவில்லை.தூரத்தில் ஒரு சைக்கிள் புழுதியைக் கிளப்பியவாறே விரைவது தெரிந்தது. அடேங்கப்பா என்ன ஒரு வேகம். என்று நினைத்தவாறே திரும்ப ஒரு முரட்டுக்கை எனது சட்டையைப் பிடித்தது.நான் சுதாரிப்பதற்குள் பளாரென்று முகத்தில் விழுந்த அறையால் நிலை தடுமாறி சைக்கிளின் மேலே விழுந்து சைக்கிளோடு சேர்ந்து கீழே விழுந்தேன்.
                           (தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக