சனி, 31 டிசம்பர், 2011

அப்பாவின் கடைசி நாள்

       
                                                     அப்பாவின் கடைசி நாள்
         கட்டிலின் விளிம்பில் கை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்த நான் அப்பாவின் இருமல் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டேன்.நேரம் மு.ப 4.20. இடம் யாழ்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் ward.அப்பாவின் உடலிலுள்ள கலங்களில் ஒட்சிசனின் அளவைக் காட்டும் திரை 95 ஐக் காட்டிக் கொண்டிருந்தது. 3 மணியளவில் தான் அப்பாவின் இருமல் நின்று அப்பா,நான் இருவருமே உறங்கக் கூடியதாக இருந்தது. இப்போது மீண்டும் தொடங்கி  விட்டது.D –Protin எனப்படும் சத்துப் பானத்தை மூக்கின் குழாய் மூலமாக 280 ml விட்டு விட்டு அப்பாவின் நெஞ்சை நீவியவாறே அப்பாவின் கண்ணில் தெரிந்த வேதனையைப் பார்க்க முடியாமல் கண்ணை மூடிக் கொண்டேன்.எவ்வளவு நாட்களுக்கு இது தொடரப்  போகிறது?
         அப்பாவின் இருமலைப் பற்றி  இரண்டு  junior doctors இடம் முறையிட்டு  விட்டேன்.இருவருமே ஒரே மாதிரித் தான்  சொன்னார்கள்.அப்பாவின் நிலைமைக்கு உச்ச பட்சமாகச் கொடுக்கக் கூடிய மருந்தைத் தான்(anti biotic) இப்போது பன்னிரண்டாவது நாளாகக் கொடுப்பதாகச் சொன்னார்கள்.அப்பா அவஸ்தைப் படுவதைப் பார்க்கச் சகிக்காமல் Sucker (சளி இழுக்கும் இயந்திரம்) பாவித்து சளி அகற்ற முடியாதா  என்று கேட்டேன்.அப்பாவின் தற்போதைய நிலைமைக்கு இது பாவிப்பது உகந்ததல்ல அத்தோடு ,வாயில் இருக்கும் சளியைத் தான் sucker அகற்றுமே தவிர நுரையீரலில் இருக்கும் சளியை அல்ல என்று கை விரித்து விட்டார்கள்.அப்பா இருமும் போது வாயில் சளி இருப்பதாகத் தெரிந்தால் விரலை விட்டு சளி அகற்றலாமா என்று கேட்ட போதும் அது நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும் என்றும் சொல்லி விட்டார்கள்.அவர்களைப் பற்றித் தவறாக நினைக்க மனம் இடம் தரவில்லை.என்றாலும் கூட இன்று காலை ward rounds வரும் senior doctor இடமும் சொல்லிப் பார்ப்போம்  என்று நினைத்துக் கொண்டேன். மீண்டும் அப்பாவின் முகத்தைப் பார்த்தேன்.வரும் இருமலை அடக்கவும் முடியாமல்,இருமவும் முடியாமல் ஏற்பட்ட வேதனை முகத்தில் பரவி அப்படியே நிலைத்து விட்டதாகத் தோன்றியது..அப்பாவின் கடைசிக் காலம் வந்து விட்டதோ என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.என்றாலும் அந்த எண்ணத்தைத் தொடர்ந்து என்ன சளி தானே.எங்கள் குடும்பம் முழுவதற்குமே சளிப் பிரச்சனை இருக்கிறது தானே,சிறு நீரகத்தின் செயற்பாட்டிலேயே எவ்வளவோ முன்னேற்றம் வந்து விட்டதாக சொல்லியிருக்கும் போது சாதாரண சளி என்ன செய்து விடும் என்று எனக்கு நானே தைரியம் சொல்லிக் கொண்டேன். எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்துக் கொண்டேன்.எவ்வளவு சுயநலமான மனது.படுக்கையில் இருந்து சிரமப் படுவதை விட போய் விடுவது எவ்வளவோ மேல்.அவர்களுக்கும் வேதனை.அவர்களைப் பார்ப்பவர்களுக்கும் வேதனை  என்று பொதுவாக எத்தனையோ பேரோடு கதைத்திருந்தாலும் கூட எங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு என்று வந்து விட்டால் அப்படி நினைக்க முடிவதில்லையே.
     வெதுவெதுப்பான தண்ணீரில் துணியை ஒத்தி அப்பாவின் உடல் முழுவதும் துடைத்தேன்.நான் குழந்தையாக இருக்கும் போது என்னையும் அப்பா இப்படித் துடைத்திருக்கும் என்று நினைத்த போது என்னையறியாமல் கண்ணீர் பெருகியது. குழந்தையாக  என்று நினைத்ததும் என்னிடம் உள்ள புகைப் படங்களில் ஒன்றில் என்னைக் கைக் குழந்தையாக அப்பா ஏந்திய வண்ணம் நிற்கும் நிலை ஞாபகத்துக்கு வந்தது.அதைத் தொடர்ந்து என்னிடம் உள்ள ஆல்பம் ஒவ்வொரு பக்கமாக மனதிலே தட்டுப்பட,அப்பா இளம் வயதில் கம்பீரமாக நிற்கும் நிலையிலிருந்து முதுமையடைந்து நிற்க முடியாமல் இருக்கும் நிலை,பின்பு இருக்க முடியாமல் படுத்திருக்கும் நிலை வரைக்கும் எனது கற்பனையிலேயே அப்பாவின் தோற்றம் எனது மனத் திரையில் ஓடி முடிந்தது.
          நேரத்தைப் பார்த்தேன்.ஐந்தரை ஆகிக் கொண்டிருந்தது.கண்ணைத் துடைத்துக் கொண்டேன்.இனி தள்ளு வண்டியில் மருந்துகளும்,அதைத் தொடர்ந்து nurse மாரும் அதைத் தொடர்ந்து junior டாக்டர் உம் வரும் நேரம்.அப்பாவின் நிலைமையைப் பார்த்து விட்டு ஏதாவது  செய்ய யோசிக்கிறார்களோ தெரியவில்லை.
     இன்றும் அப்பாவுக்குக் குளுசைகள் இல்லை.கொடுக்க வேண்டிய மருந்துகள் எல்லாம் ஊசியாலேயே கொடுக்கிறார்கள்.நெஞ்சுச் சளி உண்டான பின் வாயால் கொடுக்கும் ஆகாரத்தை நிறுத்தி,மூக்கின் மூலமாக ஒரு சிறிய குழாய் விட்டு அதன் மூலமாகத் தான் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள்.Junior doctor வந்து அப்பாவைப் பரிசோதித்தார்.அப்பாவின் உடலிலுள்ள கலங்களின் ஒட்சிசனின் அளவு திரையில் 96 காட்டியது.காய்ச்சல் இல்லை.மூக்கின் குழாய் மூலமாக செலுத்திய நீராகாரம் 1790 ml.ஆனால் சிறுநீராக 700ml  தான் வெளியேறியிருந்தது.அப்பாவுக்கு Peritonal dialysis சிகிச்சை செய்த பின் உள்ளே போகும்,வெளியே வரும் அளவுகள் எல்லாம் கிட்டத்தட்ட சரிக்குச் சரியாகவே இருந்தன.சில வேளைகளில் வெளியேறும் அளவு அதிகமாகக் கூட இருந்திருக்கிறது.அதற்கான காரணம் கேட்ட போது மழை நாட்களில் பொதுவாக வெளியேறும் அளவு அதிகம் தான்.அத்தோடு சேலைன் மூலமாக உட்செலுத்தப்படும் திரவத்தையும் கணக்கெடுத்தால் சரியாகவே வரும் என்று சொல்லியிருக்கிறார்கள்.அப்படியானால் இன்று ஏன் இவ்வளவு குறைந்திருக்கிறது என்று கேட்டதற்கு உடல் பலவீனமாக இருக்கும் போது,அதுவும் திண்ம ஆகாரம் ஒன்றும் இல்லாமல் இருக்கும் போது,கூடுதலான திரவத்தைக் கிரகித்துக் கொள்ளும்.அது மட்டுமில்லாமல் நெஞ்சுச் சளி காரணமாக சிறுநீரகத்தின் செயற்பாடும் சற்றே குறைந்திருக்கலாம்.ஆனால் பயப்படத் தேவையில்லை என்று சொன்னார்.கூடவே இரண்டு நாட்களுக்கு முன் முள்ளந்தண்டுப் பகுதியில் ஊசி மூலம் பெறப்பட்ட திரவத்தின் மாதிரியைப் பரிசோதித்ததில் கிடைத்த பெறுபேறும் திருப்தியாகவே அதாவது அமுக்கம் சாதாரணமாகவும்,கிருமித் தொற்று இல்லையென்றும் தெரிய வந்ததையும் ஞாபகப்படுத்தினார்.இருமலாலும்,சளியாலும் அப்பா நேற்றிரவு முழுவதும் வேதனைப்பட்டதையும்,நித்திரை கொள்ளாமல் சிரமப்பட்டதையும் கூறி,sucker உபயோகப் படுத்தவே கூடாதா என்று மீண்டும் கேட்டேன்.அதைப் பற்றி senior doctor  இடம் ஆலோசனை கேட்பதாகக் கூறி அப்பாவுக்குரிய file இல் குறித்துக் கொண்டார்.
        முன் கட்டிலில்  உள்ள நோயாளியைப் பார்த்துக்  கொள்வதற்கு  இருந்தவரிடம் அப்பாவின் மீது ஒரு கண் வைத்திருக்குமாறு கூறி விட்டு சுடு தண்ணீருக்காகவும்,காலை உணவுக்காகவும் உணவுச் சாலைக்குப் போனேன்.நேற்றிரவு சாப்பிடாதது ஞாபகத்திற்கு வந்தாலும் சாப்பிட மனமில்லை.இரண்டு ரோல்ஸ் சாப்பிட்டு டீ குடிக்கவே வயிறு நிரம்பி விட்டது போன்ற உணர்வு.
       7:40 போல் மூக்கின் குழாய் மூலமாக அப்பாவுக்கு விருப்பமான  Marmite 250 ml விட்டேன்.விருப்பமான என்றாலும் கூட அந்தக் குழாய் நேரடியாக வயிற்றுக்குச் செல்வதால்  அதன் சுவையை உணரும் நிலையில் அப்பா இல்லை.
           9 மணி போல் senior doctor  வந்தார். அவர் முதலாவதாகப்  பார்த்தது அப்பாவைத் தான்.அப்பாவின் நிலைமை காரணமாக அப்பாவை மிகவும் முன்னுக்கு அதாவது doctors, nurses  உள்ள இடத்திட்கு மிக அருகில் நகர்த்திருந்தார்கள்.நானும் முன்பு வந்த junior doctor  உம் அப்பாவின் நிலைமையைத் தெளிவாக எடுத்துரைத்தோம்.Junior doctor sucker பாவிப்பது சம்பந்தமாகவும் கேள்வி எழுப்பினார்.ஆனால் senior doctor நெஞ்சை ஒரு முறை x –ray எடுத்து விட்டு பின்பு செய்ய வேண்டியதைத் தீர்மானிப்போம் என்று கூறினார்.
       Senior doctor மற்ற நோயாளிகளைப் பார்வையிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த  எனக்குக் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு முன் அப்பா பதுளையில் கல உட வைத்தியசாலையில்  நோயாளிகளைப் பார்வையிடுவது ஞாபகத்திற்கு வந்தது.அப்பாவுக்கு அங்கு உள்ள மக்கள் செலுத்தும் மரியாதையைப் பார்த்து நான் வியந்ததுண்டு.அங்கு அப்பா ஒரு சிற்றரசனின் நிலையில் இருந்தது என்று சொன்னால் அது மிகையில்லை.நான் அங்கு இருந்த போது அப்பாவின் செல்வாக்கைப் பயன்படுத்தி நான் ஒரு இளவரசனாக நடந்து கொண்டேன் என்று சொன்னால் அது கொஞ்சம் மிகையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.ஒன்றிரண்டு அல்ல 19 வருடங்கள்.பொதுவாக எல்லோருமே தவிர்க்க முடியாமல் ஒன்றிரண்டு வருடங்கள் வெளி மாவட்டங்களில் வேலை செய்து விட்டு தங்கள் மாவட்டங்களில் வேலை செய்யத் தான் விரும்புவார்கள்.ஆனால் அப்பாவுக்கோ  கல உடவும்,அதில் உள்ள ஆட்களும் மனதுக்குப் பிடித்து விட தொடர்ந்து ஓய்வூதீயம் எடுக்கும் வரை அங்கேயே வேலை செய்தது.தன்னிடம் மருந்து எடுக்க வரும் நோயாளிகளை மட்டுமல்ல அவர்களின் பிள்ளைகள் பெயர்களைக் கூட ஞாபகம் வைத்து அவர்களிடம் அன்பாக விசாரிக்கும் அப்பா, இப்போது தனது பிள்ளைகளின் பெயர்களை மட்டுமல்ல அவர்களையே அடையாளம் காண முடியாமல்..............நோயாளிகள்,அவர்களைப் பார்த்துக் கொள்பவர்கள்,doctors,nurses என எல்லோருமே கவனிக்கிறார்கள் என்று தெரிந்த போதும் எனக்கு அழுகையைக் கட்டுப்படுத்த  முடியவில்லை.
         ஒருவாறு என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு தம்பி தந்து விட்டுப் போன headphone ஐயும் MP3 ப்ளேயர் ஐயும் on பண்ணி விட்டு காதில் வைத்துக் கேட்டுப் பார்த்தேன். “வளர்ந்த கதை மறந்து விட்டாய்,ஏனடா கண்ணா”போய்க் கொண்டிருந்தது.அப்பாவின் காதில் headphone ஐ மாட்டி விட்டு “என்ன பாட்டு போய்க் கொண்டிருக்கிறது,தெரியுமா அப்பா?” என்று கேட்டேன்.அப்பா மிகுந்த சிரமப்பட்டு ஏதோ சொல்வதற்கு முயற்சி செய்தாலும் கூட இருமலும்,கண்ணில் கண்ணீரும் தான் வந்தது. “சரி அப்பா,ஒன்றும் சொல்ல வேண்டாம்” என்று அப்பாவின் நெஞ்சை நீவி விட்டேன். “அப்பாவோடு  கதையுங்கள்.பழைய ஞாபகங்களைக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள்.”என்று சில நாட்களுக்கு முன் senior doctor சொல்லியிருந்தார்.ஆனால் பழைய ஞாபகங்கள் சம்பந்தமாக என்ன கேள்வி கேட்டாலும் தெரியாது என்ற  பதிலே கிடைத்தது.அதனால் தான் ஜயனுக்கு இந்த யோசனை உதயமானது.இசை நோய்களைக் குணமாக்கும் என்பதன் அடிப்படையில் இசை பழைய ஞாபகங்களைக் கூடத் தூண்டலாம் என்ற நம்பிக்கையில் உதயமான யோசனை தான் அது.பழைய ஞாபகங்களைக் கொண்டு வந்ததா என்று தெரியாமல் போனாலும் அப்பா கையை ஆட்டி தாளம் தட்டுவதைப் பார்க்கச் சந்தோஷமாக இருந்தது.என்ன பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டாலும் அனேகமாகப் பாட்டின் ஒன்றிரண்டு வரிகளைச் சொல்வதைக் கேட்க இன்னும் சந்தோஷமாக இருக்கும்.இன்று அப்பாவுக்கு முடியவில்லை.    
       அதன் பின்பு 10:15 போல் அப்பாவுக்கு D-Protin  270 ml கொடுத்து விட்டுக் அதைக் கொப்பியில் குறித்துக் கொண்டேன்.அப்பாவுக்கு இருமல் வரும் போதெல்லாம் நெஞ்சை நீவுவதும்,இடைக்கிடை வீக்கமாக உள்ள அப்பாவின் கையைச் சற்று அழுத்தித் தடவுவதுமாக நேரம் கழிந்தது.12 மணி போல் எனது தம்பி ஜயன் வர அப்பாவைப் பற்றி doctors சொன்னதைச் சொல்லி விட்டு,அவற்றைக் கொப்பியிலும் குறித்துக் விட்டு,இருவருமாகச் சேர்ந்து அப்பாவின் உடலைச் சுடுதண்ணீர் ஒற்றிய துணி மூலம்  துடைத்து விட்டு இனி அப்பாவை உயிரோடு பார்க்கப் போவதில்லை என்று தெரியாமல் கிளம்பினேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக