சனி, 2 ஜனவரி, 2021

Contagion-ஆங்கிலத் திரைப்படம்

 

Contagion-ஆங்கிலத் திரைப்படம்


ஹாங்காங்கில் ஒரு வணிக பயணத்திலிருந்து திரும்பும்  பெத் எம்ஹாஃப்  தனது பயணத்தின் இடையில் சிகாகோவில் தனது முன்னாள் காதலரை  சந்திக்கிறார். இருவரும் உல்லாசமாக இருக்கின்றனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு, புறநகர் மினியாபோலிஸில் உள்ள அவளது  வீட்டில், வலிப்புத்தாக்கங்களுடன் அவள் மயங்கி விழ, அவரது கணவர் மிட்ச் எம்ஹாஃப் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார், ஆனால் அவர் அறியப்படாத காரணத்தால் இறந்துவிடுகிறார். மிட்ச் வீடு திரும்பியபோது, ​​அவரது வளர்ப்பு மகனான  கிளார்க்கும் இறந்துவிட்டார் என்பதைக் காண்கிறார். மிட்ச்சும்  தனிமையில் வைக்கப்படுகிறார், ஆனால் பின்னர் அவரது  நோய் எதிர்ப்பு சக்தி மூலம் அவருக்   கு அந்த மர்ம நோய் தொற்றாதது கண்டறியப்படுகிறது; அவர் தனது மகள் ஜோரியுடன்  வீடு திரும்புகிறார்.

 

அட்லாண்டாவில், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் மற்றும் நோய் கட்டுப்பாட்டுத் தடுப்பு மையங்களின் பிரதிநிதிகள் டாக்டர் எல்லிஸ் செவரைச் சந்தித்து, இந்த நோய், அமெரிக்கர்கள் எதிர்வரும் வார இறுதியில்  கொண்டாடவிருக்கும் நன்றி செலுத்தும் பண்டிகையின் போது   பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு உயிரியல் ஆயுதம்  என்ற அச்சத்தை வெளிப்படுத்துகிறார்கள் . செவர் ஒரு தொற்றுநோய் புலனாய்வு சேவை அதிகாரியான டாக்டர் எரின் மியர்ஸை மினியாபோலிஸுக்கு விசாரணைக்கு அனுப்புகிறார். அவர் இந்த தீவிர நோய் பரம்பலுக்கு மூல காரணம் பெத் எம்ஹாஃப் என்பதைக் கண்டு பிடிக்கிறார். . உள்ளூர் அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார், அவர்கள் மக்களின்  பொது சுகாதாரத் தேவைகளுக்காக வளங்களைப் பயன்படுத்தத்  தயங்குகிறார்கள். சில நாட்களின் பின்னர்  மியர்ஸும்  தொற்று ஏற்பட்டு  இறந்து விடுகின்றார்.  நோய்க்கிரு மிகளின் தீவிர பரம்பலின் விளைவாக பல நகரங்கள் தனிமைப்படுத்தப்படுகின்றன.மேலும் கொள்ளை மற்றும் வன்முறைகள்  நாடெங்கும் பரவுகின்றன.

நோய் கட்டுப்பாட்டுத் தடுப்பு மையத்தில் பணி புரியும் டாக்டர் அல்லி ஹெக்ஸ்டால், இந்த நோயானது  பன்றி மற்றும் வௌவால் மூலம் பரவும் நோய்க்கிருமிகளிலிருந்து வரும் மரபணு பொருட்களின் கலவையெனக் கண்டுபிடிக்கிறார்.  தனிமைப்படுத்தல் மையங்களில்  வேலை செய்தாலொழிய புதிதாக அடையாளம் காணப்பட்ட இந்த வைரஸை (MEV-1) அழிப்பதற்கு வளர்ப்பதற்கு தடுப்பு மருந்தை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க முடியாது என்று தீர்மானிக்கிறார். கலிஃபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் இயன் சுஸ்மான் தனக்கு இடப்பட்ட உத்தரவுகளை மீறி வௌவாலின் உயிர்க்கலங்களில் இருந்து இந்த நோய்க்கிருமியானது எவ்வாறு உருவாகிறது என்று   அடையாளம் காட்டுகிறார். இந்தத் திருப்புமுனையோடு இதற்கான தடுப்பு மருந்தைக் கண்டு பிடிக்கும் வேலையைத் தொடங்குகிறார். பிற விஞ்ஞானிகள் சுவாச நீர்த்துளிகள் மற்றும்  தொடுபொருட்கள் மூலம் இந்த நோய் பரவுவதாக்கத் தீர்மானிக்கிறார்கள். இந்த நோய்க்கிருமியானது நான்கு மடங்காக இனப்பெருக்கம்  செய்யும் என்ற அனுமானத்துடன் உலக மக்கள்தொகையில் 12 ல் 1 பேர் 25-30% இறப்பு விகிதத்துடன் பாதிக்கப்படுவார்கள் என்று அவர்கள் கருதுகின்றனர்.



இதற்கிடையில் ஆலன் க்ரூம்வீட் என்பவர்  தனது வலைப்பதிவில் நோய்க்கிருமிகள்  குறித்த ஒளிப்பதிவுகளை  இடுகிறார். அதிலொரு  ஒளிப்பதிவில் ஃபோர்சித்தியா என்றழைக்கப்படும் மஞ்சள் பூக்களைக் கொண்ட தாவரத்திலிருந்து  பெறப்பட்ட ஹோமியோபதி சிகிச்சையைப் பயன்படுத்தி தான் நோயைக்  குணப்படுத்தியதாகக் கூறுகிறார். இதன் விளைவாக மக்கள்  ஃபோர்சித்தியாவைத் தேடிப் படையெடுக்கிறார்கள் . ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது, ​​க்ரூம்வீட், சீவர் தனிமைப்படுத்தப்படுவதற்கு முன்னர் சிகாகோவை விட்டு வெளியேறுமாறு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ரகசியமாக அறிவித்ததாக வெளிப்படுத்துகிறார். அவர்  இது சம்பந்தமாக விசாரிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுவதுடன் ஃபோர்சித்தியாவின் விற்பனையை அதிகரிப்பதற்காக தனது நோய் உண்டாகி பின்பு குணமானதாகப் போலியாகச் சித்தரித்த மோசடிகளுக்காக க்ரூம்வீட் கைது செய்யப்படுகிறார்.

ஒரு வீரியம் குறைந்த  வைரஸைப் பயன்படுத்தி, ஹெக்ஸ்டால் ஒரு தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கிறார். . அதனைப் பயன்படுத்த பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து சம்மதத்தைப் பெறுவதற்கு எடுக்கும் நீண்ட நேரத்தை குறைப்பதற்காக ஹெக்ஸ்டால் பரிசோதனைக்காக தனக்குத் தானே தடுப்பூசி ஏற்றிக் கொண்டு , தொற்றடைந்த தனது  தந்தையை சந்திக்கிறார். ஆனால் உண்மையில் அவரது தந்தை  MEV-1ஆள் பாதிக்கப்பட்டிருக்கவில்லை. ஹெக்ஸ்டாளுக்குத் தொற்று ஏற்படாததை அடுத்து  தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டு விட்டதென வெற்றிகரமாக அறிவிக்கப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டுத் தடுப்பு மையம் பிறந்த தேதியை அடிப்படையாகக் கொண்ட வரிசையில் தடுப்பூசிகளை வழங்குகிறது. இந்த நேரத்தில், இறப்பு எண்ணிக்கை அமெரிக்கவில் 2.5 மில்லியனையும் உலகளவில் 26 மில்லியனையும் எட்டுகிறது. 

 


முன்னதாக, ஹாங்காங்கில், உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் லியோனோரா ஓரண்டஸ் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் மக்காவ் சூதாட்ட விடுதியில் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் இந்த நோயின் முதல் தொற்று பெத் எம்ஹாஃப் தான் என்று அடையாளம் காண்கிறார்கள். அரசாங்க அதிகாரி சன் ஃபெங் தனது கிராமத்திற்கு MEV-1 தடுப்பூசியைப்  பெறுவதற்காக ஓரண்டஸை கடத்திச் சென்று  அவரைப் பல மாதங்கள் அடைத்துவைத்திருக்கிறார்.  .உலக சுகாதார அமைப்பு அதிகாரிகள் சன் ஃபெங்கின்கிராமத்துக்குத்  தடுப்பூசிகளை வழங்கும் போது அவள்  விடுவிக்கப்படுகிறாள். கிராமத்திற்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள் போலி மருந்துகள் என்று ஓரண்டஸ் அறிந்ததும், அவற்றை எச்சரிக்க அவள் ஓடுகிறாள்.

ஒரு நினைவுமீட்புக் காட்சியில் , சீனாவில் மழைக்காடுகளை அழிக்கும் போது ஒரு மண் அள்ளும் இயந்திரம் ஒரு வாழை மரத்தைக் கீழே விழுத்த, அதிலிருந்த வெளவால்கள்  பறந்து செல்கின்றன. ஒரு பன்றி, பண்ணையில் கொண்டு போய் வைக்கப்பட்ட அந்த வெளவால்கள் உண்டு மீதம் வைக்கப்பிட்டிருந்த வாழைப்பழங்களின் ஒரு பகுதியை சாப்பிட்டு விடுகிறது. மக்காவ் சூதாட்ட விடுதியில் ஒரு சமையல்காரரால் பன்றி கொல்லப்பட்டு சமைக்கப்படுகிறது.  அந்த சமையல்காரரில் தொற்றடைந்திருந்த  நோய்க்கிருமி பெத்துக்கு கைகுலுக்கல் மூலம் தொற்றுகிறது. 


புராதன எகிப்தின் மர்மங்கள்

புராதன எகிப்தின் மர்மங்கள்
புராதன எகிப்து என்றாலே எங்கள் மனதில் பிரமிட்டுக்களின் ஞாபகம் வருவதைத் தவிர்த்துக் கொள்ள முடியாது . இந்த எகிப்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும் வரலாற்றாசிரியர்களையும் ஆட்டிப்படைக்கும் ஒரு விடயமாக இருந்து வருகிறது. எகிப்து பல சுவாரசியமான மர்மங்களை உள்ளடக்கிய , பரந்த மணல் வெளிகளைக் கொண்ட நாடாகும். ஏற்கனவே வெளிவந்த மர்மங்கள் ஒருபுறம் இருக்க, சில மர்மங்கள் இப்போதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்னும் பல வெளிவரக் காத்திருக்கின்றன. அதாவது இவ்வளவு காலம் கடந்தும் கூட, இன்னும் வெளிப்படுத்தப்படாத விடயங்கள் ஏராளம் இருக்கின்றன . பண்டைய உலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகள் சில இன்னும் எகிப்தின் மணலுக்கு அடியில் மூடப்பட்டு, வெளிப்படுத்தப்படக் காத்திருக்கின்றன. அவை வெளிப்படுத்தப்படும் வரை பதிலளிக்கப்படாத கேள்விகள் ஏராளம் இருந்து கொண்டே தானிருக்கும். 

  எகிப்தின் தொலைந்த லாபிரிந்த்
2,500 ஆண்டுகளுக்கு முன்பு, எகிப்தில் ஒரு பெரிய தளம் இருந்ததாக நம்பப்படுகிறது, இங்கு இது சம்பந்தமாக அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் பிரமிட்டுகளைக் கூட மிஞ்சிவிடும் விசாலமான, சிக்கலான கட்டிட அமைப்பைக் கொண்டதாக அந்தத் தளத்தைக் குறிப்பிடுகிறார்கள். ." அது ஒரு பெரிய கட்டிடம், இரண்டு மாடிகள் உயரம். உள்ளே, நம்பமுடியாத 3,000 வெவ்வேறு அறைகள் இருந்தன. மிகவும் சிக்கலான கட்டிட அமைப்பின் மூலமாக இணைக்கப்பட்டுள்ள இந்த அறைகளுக்குள் நுழைபவர்கள் யாராக இருந்தாலும் , ஒரு சரியான வழிகாட்டி இல்லாமல் வெளியேற முடியாது. கீழே, நிலத்தடி மட்டத்தில் ,மன்னர்களின் கல்லறையும் , மற்றும் மேலே ஒரு பிரம்மாண்டமான கல்லால் செய்யப்பட்ட ஒரு பெரிய கூரையும் இருந்தது.” இவ்வாறாக சில பண்டைய எழுத்தாளர்கள் இதை நேரில் பார்த்ததாக விவரித்தும் கூட , 2,500 ஆண்டுகளுக்குப் பிறகு, அது எங்கிருக்கிறது என்பது இன்னும் தெரியவரவில்லை . 300 மீட்டர் அகலமுள்ள (1,000 அடி) பிரம்மாண்டமான இந்த கல் பீடபூமியைக் கண்டறிவதற்காக 2008 ஆம் ஆண்டில், புவி-மின்காந்த நிபுணர்களின் குழுவொன்று பீடபூமியை ஊடுகதிர் (scan) ஊடாக நுட்பமாகப் பரிசோதனை செய்ததில், மண்ணுக்கடியில், பண்டைய எழுத்தாளர்கள் விவரித்ததைப் போலவே ஒரு நிலத்தடித் தளம் காணப்படுவதைக் கண்டறிந்தாலும் கூட இதுவரை, யாரும் அடுத்த கட்டமாக அதனைக் கண்டுபிடித்து உள்ளே நுழைந்ததில்லை. யாரோ ஒருவர் அந்தச் சிக்கலான இடத்திற்குச் செல்லும் வரை, எகிப்தின் மிகப் பெரிய தொல்பொருள் அதிசயத்தை நாங்கள் உண்மையில் கண்டுபிடித்திருக்கிறோமா இல்லையா என்பது கூட எங்களுக்குத் தெரியாது. 

  எகிப்தின் அறியப்படாத ராணி
2015 ஆம் ஆண்டில், அகழ்வாராய்ச்சியின் மூலம் காண்டுபிடிக்கப்பட்ட பெரிய பிரமிடுகளுக்கிடையில், ஒரு கல்லறையில் "ராஜாவின் மனைவி" மற்றும் "ராஜாவின் தாய்" என்று அழைக்கப்படும் கல்வெட்டுகள் இருந்தன. 4,500 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த பெண் உயிருடன் இருந்தபோது, அவர் இந்தக் கிரகத்தின் மிக முக்கியமான நபர்களில் ஒருவர் என்றும் தேசத்தின் வேறு எந்தப் பெண்ணையும் விட அவளுக்கு அதிக சக்தி இருந்தது என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவள் யார் என்று யாருக்கும் தெரியாது. அவர் இரண்டாம் கெந்தகாவேஸ் மகாராணியின் மகள் என்ற அனுமானத்தின் கீழ் வரலாற்றாசிரியர்கள் அவளை “கெந்தகாவெஸ் III” என்று பெயரிட்டுள்ளனர். அவர் பார்வோன் நெஃபெரெஃப்ரேயின் மனைவியாகவும், பார்வோன் மெகாஹூரின் தாயாகவும் இருந்திருக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள் - ஆனால் அது ஆதாரங்கள் இல்லாத வெறும் யூகம் தான். எகிப்தின் புராணங்கள் மற்றும் வரலாறுகளில் , கெந்தகாவெஸ் III பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. அவள் யாராக இருந்தாலும், கல்வெட்டுக்களின்படி அவள் ஒரு காலத்தில் நம்பமுடியாத சக்திவாய்ந்த பெண்ணாக இருந்திருக்கிறாள் , ஆனால் இன்று, அவள் எல்லோருக்கும் ஒரு புதிராக இருக்கிறாள். 

  இஸ்ரேலின் சிங்க்ஸ்
2013 ஆம் ஆண்டில், இஸ்ரேலின் டெல் ஹாசோரில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எகிப்திலிருந்து இதுவரை கண்டுபிடிக்க எதிர்பார்க்காத ஒன்றைக் கண்டுபிடித்தனர்: அவை 4,000 ஆண்டுகள் பழமையான எகிப்திய சிஹின்க்ஸ் என்று அழைக்கப்படும் சிங்கச் சிலையின் பெரிய பாதங்களாகும். அந்த சிங்கச் சிலையின் பாதங்கள் தவிர்ந்த மீதமுள்ள உடற்பாகங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமென்றே அழிக்கப்பட்டன என்றும் யாரோ, அதைக் கவிழ்ப்பதற்கு முன்பு, அது 1 மீட்டர் (3.3 அடி) உயரமும் அரை டன் எடையும் இருந்திருக்கும் என்றும் நம்பப்படுகிறது. ஒரு எகிப்திய சிலை எவ்வாறு இஸ்ரேலில் காணப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. கிமு 2500 இல் எகிப்தை ஆண்ட ஒரு பார்வோனின் பெயரான "கிங் மைசெரினஸ்" என்ற பெயரைக் கொண்ட அரசனின் கல்லறையில் காணப்பட்ட ஒரு கல்வெட்டு மட்டுமே மீதமுள்ள துப்பு. டெல் ஹஸோர் எகிப்தியர்களால் கைப்பற்றப்பட்டிருக்கச் சாத்தியமில்லை. மைசெரினஸின் (அகா மென்காரே) ஆட்சியின் போது, டெல் ஹஸோர் கானானில் ஒரு வர்த்தக மையமாக இருந்தது, இது எகிப்துக்கும் பாபிலோனுக்கும் இடையில் இருந்தது. இப்பகுதியில் உள்ள இரண்டு பெரிய சக்திகளின் பொருளாதார நல்வாழ்வுக்கு டெல் ஹஸோர் முக்கியமானதாக இருந்தது. அது ஒரு பரிசு என்பதும் கிங் மைசெரினஸ் அதை இஸ்ரேலுக்குஅனுப்பினார் என்பதும் வரலாற்றாசிரியர்களின் ஊகமாக இருந்தாலும் கூட, யாராவது ஏன் அதை சிதறடிக்கும் அளவுக்கு ஏன் கோபமடைந்தார்கள் என்று அவர்களால் ஊகிக்க முடியவில்லை. 

  கிங் டுட்டின் மர்மமான மரணம்
துட்டன்காமுன் மன்னர் இறக்கும் போது அவருக்கு 19 வயதுதான். என்ன நடந்தது என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. அவரது மரணம் ஒரு மர்மமாகவே இருந்தது. . அவருடைய இளம் வயது மரணத்துக்குக் காரணம் அவர் எகிப்து நாட்டின் முக்கியமானவராக இருந்தது மட்டுமல்ல, அவரிடம் சில உடல்நலக் குறைபாடுகள் இருந்ததும் தான். அவருக்கு மலேரியா இருந்தது மட்டுமல்ல. வளைந்த பாதங்கள் போன்ற பல மரபணு குறைபாடுகளும் இருந்தன. இதற்குக் காரணம் அவரது பெற்றோர், சகோதரர் சகோதரியாக இருந்தது தான் என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள். அவருடைய மண்டை ஓடு உடைந்திருந்ததால் அவர், தலையில் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதினார்கள். அவரது உடல் பாடம் செய்யப்படும் போது அவரது தலை சேதமடைந்திருக்க வாய்ப்புண்டு என்று நம்பப்பட்டாலும் கூட , அவர் கொலை செய்யப்படுவதற்கான வாய்ப்பு நிராகரிக்கப்படவில்லை. அவர் இறப்பதற்கு சற்று நேரத்துக்கு முன்பு கூட தனது முழங்காலை உடைத்துக் கொண்டிருந்தார். இதனால் அவரது மரணத்துக்குக் காரணம் ஒரு தேர் விபத்து என்று கூட அனுமானம் நிலவியது. ஆனாலும் அப்படிபட்ட உடல்நிலையுடன் இருந்த ஒருவர் , தேரில் செல்ல நினைத்ததும் ஒரு விந்தையான விடயம். எப்படியாயினும் ஒன்றுக்கு மேற்பட்ட பல காரணிகள் அவருடைய மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம். அவர் தனது இறுதிக் கட்டத்தில் பல மோசமான விடயங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது என்பது அனேகமான வரலாற்றாசிரியர்களின் முடிவாக இருந்தது. 

  பெரிய பிரமிட்டின் மறைக்கப்பட்ட அறை
அவை அனைத்திலும் மிகப் பெரிய பிரமிடு 4,500 ஆண்டுகளுக்கு முன்பு பரோரா கப்ரா வுக்காகக் கட்டப்பட்டது. இது கிட்டத்தட்ட 150 மீட்டர் (490 அடி) உயரமுள்ள மிகப்பெரிய கட்டமைப்பாகும், இது 2.3 மில்லியனுக்கும் அதிகமான கல் தொகுதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இங்கே சமீபத்திய காலம் வரை வரை, உள்ளே மூன்று அறைகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு இருந்தன. நிச்சயமாக இன்னும் பல அறைகள் இருக்கும் என்று நம்பிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் குழுவொன்று 2017 ஆண்டின் இறுதிப்பகுதியில் ஊடுகதிர் ஊடாக நுட்பமாகப் பரிசோதனை செய்து அவர்கள் தவறவிட்ட ஏதாவது இருக்கிறதா என்று பார்த்த போது பிரமிட்டின் பெரிய கூடத்திற்குக் கீழே முழு பிரமிட்டின் அளவில் மறைக்கப்பட்ட அறை இருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகளைக் கண்டறிந்தனர். விசித்திரமான விஷயம் என்னவென்றால், இதனைக் கட்டிய எகிப்தியர்கள் வேண்டுமென்றே மறைக்கப்பட்ட அறையை முற்றிலும் அணுக முடியாத வகையில் கட்டினர். அதனுடன் இணைக்கப்பட்ட தாழ்வாரங்களோ அல்லது பாதைகளோ என்று எதுவும் இல்லை. இதனால் மறைக்கப்பட்ட அறையின் உட்புறத்தை இன்னும் ஒருவரும் பார்த்ததில்லை. இதன் காரணமாக அவர்கள் அந்த மறைக்கப்பட்ட அறையின் உள்ளே மிகப் பெறுமதியான ஒன்றை வைத்திருக்கலாம் அல்லது அதனைக் கட்டுவித்தவர்கள் பகல் ஒளியைக் காண விரும்பாமலிருக்கலாம் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

  கைத்தறிப் பக்கங்களால் போர்த்தப்பட்ட ஒரு மம்மி (பாடம் செய்யப்பட்ட உடல்)
1848 ஆம் ஆண்டில், ஒரு நபர் அலெக்ஸாண்டிரியாவில் ஒரு கடைக்காரரிடமிருந்து ஒரு பண்டைய எகிப்திய மம்மியை அதாவது பாடம் செய்யப்பட்ட உடலை வாங்கினார். பல ஆண்டுகளாக, அவர் அதை ஒரு அலங்காரப் பொருளாகக் கருதிக் காட்சிக்கு வைத்தார்,அவர், தான் கண்டுபிடித்த ஒரு கலைப்பொருளின் விசித்திரத்தை உணரவில்லை. சில தசாப்தங்களுக்குப் பிறகு அந்த மம்மியின் கட்டுகளை உரித்தபின், விஞ்ஞானிகள் மிகவும் அசாதாரணமான ஒன்றைக் கண்டார்கள். மம்மி ஒரு புத்தகத்தின் கைத்தறி பக்கங்களினால் மூடப்பட்டிருந்தது. இன்னொரு முக்கியமான விடயம் அது எகிப்திய மொழியில் எழுதப்படவில்லை. அது என்ன மொழி என்பதைக் கண்டுபிடிக்க நடைபெற்ற பல ஆண்டுகால விசாரணையின் பின்னர் , அது, இத்தாலியில் வாழ்ந்த ஒரு பண்டைய நாகரிகத்தின் மொழியான எட்ருஸ்கனில் எழுதப்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது இது எங்களுக்கு அதிகம் தெரியாத மொழி. இந்த மம்மியைச் சுற்றியுள்ள சொற்கள், நாம் இதுவரை கண்டிராத மிக நீண்ட எட்ரூஸ்கான் உரையை உருவாக்கியிருந்தன. அந்த உடல் ஒரு பெண்ணின் உடலென்று தெரிகிறது. உரை என்ன சொல்கிறது என்பது இன்னும் தெரிய வரவில்லை. தேதிகள் மற்றும் தெய்வங்களின் பெயர்கள் என்று தோன்றும் சில சொற்களை மட்டுமே எங்களால் புரிந்து கொள்ள முடியும், அதையும் மீறி, இதன் பொருள் என்னவென்று யாருக்காவது புரிந்தாலும் கைத்தறி பக்கங்களினால் ஆக்கப்பட்ட எட்ருஸ்கன் புத்தகத்தை ஏன் ஒரு இறந்த உடலைச் சுற்றிக் கொள்ளப் பயன்படுத்தினார்கள் என்பதையும் கண்டு பிடிக்க வேண்டும். அவள் இத்தாலியைச் சேர்ந்தவளா? அப்படியானால், அவள் எகிப்தில் என்ன செய்து கொண்டிருந்தாள்? அவள் உலகிற்கு தனது இறுதி செய்தியில் என்ன சொன்னாள்? இது போன்ற இன்னும் நிறைய கேள்விகளுக்குப் பதில்கள் இன்னும் கிடைக்கவில்லை. 

  டெண்டெரா ஒளி
எகிப்தின் டெண்டெராவில் உள்ள ஒரு கோவிலின் சுவரில் மிகவும் விசித்திரமான உருவத்தைக் காட்டும் பெரிய சித்திரமொன்று உள்ளது . மனிதக் கரங்களினால் பிடிக்கப்பட்டிருக்கும் ஒரு தாமரை மலரிலிருந்து கிளம்பும் ஒரு வெளிச்சம் ஒரு பாம்பைக் காட்டுவதாகவும், அந்தப் பாம்பு ஒரு தூணிலிருந்து வெளிக்கிளம்பும் இரு கைகளினால் பிடிக்கப்படுவது போலவும் சுவரில் செதுக்கப்பட்டுள்ள அந்தச் சித்திரத்தில் காட்டப்படுகிறது. இது ஒரு வித்தியாசமான படம் - தாமரை மலர் போன்ற தோற்றம் ஒரு ஒளி விளக்கைப் போல தோற்றமளிக்கிறது, இது எவ்வாறு ஒளியை உருவாக்குவது என்பதைக் காட்டும் வரைபடமாக இருக்கலாம் என்றும் புராதன எகிப்தில் காணப்பட்ட ஒரு முன்னேற்றமடைந்த மின் தொழில்நுட்பத்தை எடுத்துக்காட்டுவதாகவும் சிலர் நினைக்கிறார்கள். முழு கோவிலிலும் தீ எரியும் விளக்குகள் இல்லாத ஒரே அறை டெண்டெரா லைட்டைக் காட்டும் அறை. எகிப்தியர்கள் கட்டிடத்தின் மற்ற எல்லா பகுதிகளிலும் விளக்குகளை எரித்ததைக் காட்டும் எச்சங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆகவே, அந்த அறையில் முன்னேற்றமடைந்த மின் தொழில்நுட்பமொன்று பாவிக்கப்பட்டிருக்கலாம் என்பது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் அனுமானமாக இருக்கிறது.

  அழிக்கப்பட்ட பிரமிடு
அண்மையில் பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தின் டாக்டர் மைக்கேல் பாட் அபு ரவாஷில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சிகள்டிஜெடெஃப்ரே பிரமிடு உண்மையில் கட்டி முடிக்கப்படவில்லை என்று கூறுகின்றன. அவ்வாறு கட்டி முடிக்கப்பட்டிருந்தால் பிரமிடுகளில் மூன்றாவது பெரிய மென்கேரின் பிரமிடு போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது. இது பிரமிடுகளில் மிகவும் அழகாக இருந்ததாகவும் வெளிப்புறத்தின் அழகை மெருகூட்ட, இறக்குமதி செய்யப்பட்ட கிரானைட், சுண்ணாம்பு என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் நம்பப்படுகிறது. டிஜெடெஃப்ரேயின் பிரமிட் அவரது முன்னோர்களிடமிருந்து கட்டடக்கலை ரீதியாக வேறுபட்டது, அதில் அறைகள் உள்ளே இல்லாமல் பிரமிட்டுக்கு அடியில் இருந்தன. அத்துடன் பிரமிட் ஒரு இயற்கை மேட்டின் மீது கட்டப்பட்டுருந்தது. ஏதோ சில காரணங்களால், எகிப்தின் மற்ற அனைத்து பிரமிடுகளும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும்அழியாமல் நிலைத்து நிற்கும்போது, டிஜெடெஃப்ரேயின் பிரமிடு மட்டும் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. எஞ்சியிருப்பது அடிப்படைக் கட்டுமாணம் தான் அதற்கு என்ன நடந்தது என்பது பற்றி யாருக்கும் முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் சில அனுமானங்கள் உள்ளன. வேலைகளைச் முடிப்பதற்கு முன்பே டிஜெடெஃப்ரே இறந்துவிட்டார் என்று சிலர் நினைக்கிறார்கள். ரோமானியர்கள், ஒரு மடாலயத்தைக் கட்ட ஆரம்பித்த போது இந்தப் பிரமிட்டை அழித்து இதன் கற்களை அந்த மடாலயத்தைக் கட்டுவதற்குப் பயன்படுத்தினர் என்று இன்னும் சிலர் நினைக்கின்றனர். இன்னும் சிலர் எகிப்து மக்கள் உண்மையிலேயே டிஜெடெஃப்ரே அரசரை வெறுத்தார்கள் என்றும் அதனால் அவர்கள் ஒரு முழு பிரமிட்டையே அழிப்பதற்குத் தயாராக இருந்தனர் என்றும் நம்புகின்றனர். 

  ராணி நெஃபெர்டிட்டியின் (இதுவரை) தேடப்படும் பிரமிட்
எகிப்தை ஆண்ட சில பெண்களில் ஒருவராக ராணி நெஃபெர்டிட்டி புகழ்பெற்றவர். அவர் அரசர் அகெனாடனின் மனைவியாக இருந்தார். மேலும் தனது கணவனின் இறப்பின் பின் இவர் எகிப்தை ஆட்சி செய்ததாக நம்பப்படுகிறது.மற்ற எகிப்திய அரசர்கள் மற்றும் அரசிகளின் கல்லறைகள் இன்றும் எகிப்தில் கோபுரமாக இருக்கும்போது, நெஃபெர்டிட்டியின் இறுதி ஓய்வு இடத்தை இதுவரை யாரும் கண்டுபிடிக்காததும் கூட ஒரு புதிராகவே கருதப்படுகிறது. அவரது முகத்தின் சிற்பம் மிகப் பிரபலமானது, அவரது கல்லறையைத் தேடுவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. 2018 வரை, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் டுட்டின் கல்லறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு ரகசிய அறையில் அவள் அடக்கம் செய்யப்பட்டதாக நம்பினர். ஆனாலும் பின்பு ஊடுகதிர்கள் மூலமாக நுட்பமாகப் பரிசோதித்த போது செய்தபோது, அங்கே எதுவும் இல்லை என்பதைக் கண்டறிந்தனர். இன்னொரு புதிர் என்னவெனில் எகிப்திய வரலாற்றில் அவரது மரணம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அவரது கணவர் அகெனாடனின் ஆட்சியின் சுமார் 12வருடங்களுக்குப் பின்பு , அவரது குறிப்புகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டிருக்கின்றன . ஏனெனில் அதன் பின்பு நெஃபெர்டிட்டியின் பெயர் பார்வோன் என்று குறிப்பிடப்பட்டதாக சில வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். 

  தொலைந்த பிரதேசம்
பண்டைய எகிப்திய எழுத்துக்கள் மூலம் பன்ட் என்ற இடத்தைப் பற்றிப் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இது எகிப்தியர்களின் கற்பனைகளை உற்சாகப்படுத்திய தங்கம், தந்தங்கள் மற்றும் விலங்குகள் நிறைந்த ஒரு பண்டைய ஆப்பிரிக்க இராச்சியமாகவும் மிகவும் சக்திவாய்ந்ததாகவும் எகிப்தியர்களின் மரியாதைக்குரிய இடமாகவும் வரலாற்றாசிரியர்கள் அதனை கருதினர். "கடவுளின் நிலம்" என்று இது எகிப்தின் வரலாறுகளில் குறிப்பிடப்படுகிறது. பன்ட் இருந்ததில் எந்த சந்தேகமும் இல்லை. பண்டைய எழுத்துக்களில் அதைப் பற்றி எண்ணற்ற குறிப்புகள் உள்ளன. ஒரு பண்டைய எகிப்திய கோவிலில் பன்ட் ராணியின் படம் கூட உள்ளது. ஆனாலும் அந்த சக்திவாய்ந்த முக்கியமான இடம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. எகிப்தியர்கள் வைத்திருந்த கலைப்பொருட்கள் தான் பண்டின் தடயங்களாகக் கருதப்பட்டன. எகிப்தின் ஏனைய மர்மங்கள் போல் அகழ்வாராய்ச்சியாளர்கள் மட்டுமல்லாமல் ,இந்த மர்மத்தில் விஞ்ஞானிகளும் கூட இந்த இராச்சியம் எங்கே என்று கண்டுபிடிக்க ஆசைப்பட்டனர். எகிப்தியர்கள் பண்டிலிருந்து கிடைத்த இரண்டு குரங்குகளின் பதப்படுத்தப்பட்ட உடல்களின் எச்சங்களை ஆய்வு செய்து, அவை நவீன கால எரித்திரியா அல்லது கிழக்கு எத்தியோப்பியப் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என்று தீர்மானித்தனர். இது, பன்ட்டைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு தொடக்க புள்ளியை நமக்குத் தருகிறது . ஆனாலும் கூட இது தொல்பொருள் தேடலுக்கான மிகப்பெரிய பகுதியாக இருப்பதால் . பன்ட் இராச்சியத்தின் இடிபாடுகளை நாம் எப்போது கண்டறியப் போகிறோமோ என்று தெரியாது. அவ்வாறு கண்டறிந்தால் அது, கடந்த காலத்தை வெளிக்கொணர்வதுடன் மேலும் பல தொடர் மர்மங்களுக்குரிய ஆரம்பப் புள்ளியாகவும் இருக்கலாம்.

பருத்தித்துறைக் கலங்கரை விளக்கம்

 பருத்தித்துறைக் கலங்கரை விளக்கம்

தரையில் நாங்கள் பயணம் செய்யும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தை அடையாளம் காண  கட்டிடங்கள், நிலக்குறிப்புக்கள், மரங்கள், நீர்நிலைகள் என்று எத்தனையோ விடயங்கள் இருக்கும். ஆனால் கடலில்.....?கரையோடு அண்டி பகல் நேரங்களில் பிரயாணம் செய்வதில் பிரச்சனைகள் இல்லை. ஆனால் ஆழ்கடல் பகுதிகளில், இரவு நேரங்களில்....... சற்றே கற்பனை செய்து பாருங்கள்....கண்ணுக்கெட்டிய தூரம் மட்டும்  கடல், கடல், கடல். அந்த அச்சத்தைத் தரும் சூழ்நிலையில்  ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி சரியான  திசையில் செல்வதென்பது மிகக் கடினமான பணியாகும். ஏன் நட்சத்திரங்களை அடையாளம் வைத்துப் பயணம் செல்லலாம் என்று சிலர் நினைப்பீர்கள். எல்லா நேரமும் அது சாத்தியமாகுமா? உதாரணமாக நாங்கள் வீட்டிலிருந்தே அவதானிக்கும் போது ஒரு இடத்தில் காணப்படும் நட்சத்திரம் இன்னொரு  நாள் அதே இடத்தில் இருப்பதில்லை.  இதற்குக் காரணம் பூமியின் சுழற்சி. அது தவிர இருண்ட மேகங்கள் நிறைந்த அல்லது மழை அல்லது புயலடிக்கும் நேரங்களில்.......? இப்போது கடலில் வழி கண்டுபிடிக்க எத்தனையோ நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இங்கு குறிப்பிடப்படுவது திசையறி கருவிகள் கூடக் கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னர்.  இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் தான் கலங்கரை விளக்கங்களின் சேவை மகத்தானதாக அமைந்தது.  கலம் என்றால் கடலில் பயணிக்க உதவும் சாதனங்கள் அல்லது வாகனங்களைக் குறிக்கும். அதாவது கலம் கரையைக் கண்டுபிடிப்பதற்கு விளக்கமாக அமைந்த உயரமான கட்டிடங்களே கலங்கரை விளக்கங்களாகும். இரண்டு வகையான கலங்கரை விளக்கங்கள் உள்ளன: நிலத்தில் அமைந்துள்ளவை, மற்றும் கடற்பகுதிகளில் அமைந்துள்ளவையே அவையாகும். 


தெளிவாக வரையறுக்கப்பட்ட துறைமுகங்களின் வளர்ச்சிக்கு முன்னர், கடற்படையினர் மலையடிவாரத்தில் உண்டாக்கப்பட்ட  தீ மூலம் தாங்கள் போக வேண்டிய திசையை அறிந்து கடற்பயணம் மேற்கண்டனர்.  தெளிவுநிலையை மேம்படுத்துவதற்காக நெருப்பை உயர்த்துவது அக்காலப் பழக்கமாக இருந்தது.  இவ்வாறாக நெருப்பை ஒரு மேடையில் வைத்துக் கப்பல்களுக்கு வழிகாட்டியதே கலங்கரை விளக்கத்தின் தோற்றத்துக்கு வழிகோலியது எனலாம்.
ஆனால் கடுங்காற்று, மழை ஆகிய வானிலை அம்சங்கள் நெருப்பை உண்டாக்குவதற்குத் தடையாக அமைந்ததால்  காலப்போக்கில் விளக்குகள் மற்றும் கண்ணாடி வில்லைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி  ஒளியை உண்டாக்கி , கடலில் அல்லது உள்நாட்டு நீர்வழிகளில் மாலுமிகளுக்கு பயணிப்பதற்கு உதவியாகவும்  ,ஆபத்தான கடற்கரைகள், ஆழங்குறைந்த பகுதிகள் , திட்டுகள், பாறைகள் மற்றும் துறைமுகங்களுக்குள் பாதுகாப்பாக நுழையும் பாதைகளை அடையாளம் காண்பதற்கு உதவியாகவும் மிகவும் உயரமான கோபுரங்கள் கட்டப்பட்டன  .மூடுபனியால் கடற்பகுதி முழுவதும் மூடப்பட்டுத் திக்குத்திசை தெரியாத இடங்களிலும் இவற்றின் பயன்பாடு மகத்தானதாக இருந்தது.   நிலத்திலிருந்து பல மைல் தொலைவில் அமைந்துள்ள பவளப்பாறைகளை அல்லது நீரில் மூழ்கிய தீவுகளை  அடையாளம் காண்பதற்கும் கலங்கரை விளக்கங்கள் உதவியாக அமைந்தன.  முன்னொரு காலத்தில் அவை வான்வழிப் பயணத்துக்கும்  வழிகாட்டியாக அமைந்தன என்றால் உங்களுக்கு அது ஆச்சரியமாக இருக்கும். சாதாரண விளக்குகளை விடப் பன்மடங்கு பிரகாசமான விளக்குகளுடன் கூடிய உயரமான பல மைல்களுக்குத் தெரியும் கோபுரம் என்பதாலேயே இது சாத்தியமாயிற்று.


இப்போது கடற்கொள்ளைகள் மிகவும் அருகி விட்டாலும் கூட இரண்டு, மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர், ஒரு கப்பல் புறப்படும் இடத்திலிருந்து போய்ச்சேரவிருக்கும் துறைமுகத்திற்குப் போவதற்குள் கடற்கொள்ளையரிடம்‌ சிக்காமல் போனால் அதிஷ்டம் தான் என்று கருதப்படும் அளவுக்கு கடற்கொள்ளையரின் நடமாட்டம் மிகவும் அதிகமாக இருந்தது.  செல்லும் பாதையறிந்து போகும் கப்பல்களை விட திசையறியாமல் கடலில் அலையும் கப்பல்களே எளிதாகக் கடற்கொள்ளையரின் தாக்குதலுக்கு இலக்காகின. இதனால் கலங்கரை விளக்கங்களின் உருவாக்கமும்  பயன்பாடும் கடற்கொள்ளையரின் பிரசன்னத்தைக் குறைப்பதில் பெரும் பங்காற்றின.     


கலங்கரை விளக்கங்களின் நவீன சகாப்தம் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடங்கியது, அட்லாண்டிக் வர்த்தகத்தின் வளர்ச்சி,கட்டடக்கலையின் வளர்ச்சி, பொறியியல் துறையின் வளர்ச்சி  மற்றும் புதிய மற்றும் செயற்திறன் மிக்க  ஒளி வழங்கும்  கருவிகளின் முன்னேற்றங்கள் என்பன  கலங்கரை விளக்கங்களின் படிப்படியான வளர்ச்சிக்கு வழிவகுத்தன.  இவ்வாறாகக் கலங்கரை விளக்கங்கள் படிப்படியான வளர்ச்சிக்கு உட்பட்டிருப்பினும்  பாறைகள் அல்லது திட்டுகள் போன்ற கப்பல் அபாயங்களுக்கு எதிராக ஒரு தெளிவான எச்சரிக்கையை வழங்கும் அதன் பிரதான நோக்கம் மாறவில்லை. .

கடலில் வழிகாட்ட உதவும் நவீன சாதனங்களின்  வருகையின்  காரணமாகவும், அதிகரித்த பராமரிப்புச்செலவு காரணமாகவும்  இப்போது செயற்படுகின்ற  கலங்கரை விளக்கங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. பெரும்பாலான  கலங்கரை விளக்கங்கள்  சுற்றுலாப்பயணிகள் சென்று வருகிற இடங்களாக மாறி விட்டனவே தவிர  கடற்பிரயாணத்துக்கு எந்த வகையிலும்  உதவவில்லை என்று இணையத்தளங்கள்  மூலம் அறியக் கூடியதாக இருக்கிறது.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் எல்லாமாக 23 கலங்கரை விளக்கங்கள் உள்ளன.இவற்றில் பெரும்பாலானவை துறைமுக அதிகார சபையால் இயக்கிப் பேணப்பட, சில கடற்படையின்  கட்டுப்பாட்டில் உள்ளன. இன்னும் சில முழுமையாகக் கைவிடப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட  நிலையில் இருக்கின்றன. 


இலங்கையில் உள்ள 23 கலங்கரை விளக்கங்கள் உள்ளன.  கிழக்கு மாகாணத்தில் ஒலுவில்(24m),வட்டத்தீவு-திருகோணமலை-கெவுலியா(21m),மிகவும் உயரம் குறைந்த,இயங்காத நிலையிலுள்ள  சங்கமன்கந்தை முனை(8m),மட்டக்களப்பு(28m)சப்பல் ஹில் திருகோணமலைக்குடா(தரவுகள் இல்லை) ஃபவுல் முனைத்தீவு(21m)  இயங்காத நிலையிலும் . தென் மாகாணத்தில் பெரிய பசெஸ் பவளப்பாறை(37m),சிறிய பசெஸ் பவளப்பாறை(37m), காலி(26.5m) அம்பாந்தோட்டை (14m)கைவிடப்பட்ட நிலையிலும், இலங்கையிலுள்ள கலங்கரை விளக்கங்களிலேயே மிகவும் உயரமான டொன்றா முனை(49m) ஆகியனவும் மேல் மாகாணத்தில்  பார்பேரின் –பேருவில(தரவுகள் இல்லை), கொழும்பு(34m), இயங்காத நிலையிலுள்ள பழைய கொழும்பு(29m), கொழும்புத்தீவு வடஎல்லை(12m), கொழும்புத்தீவு தென்எல்லை(12m) வட மாகாணத்தில் முல்லைத்தீவு(20m)-இது 1996/1997 காலப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்துக்கும் இடையில்  இடம்பெற்ற யுத்தத்தின் போது அழிக்கப்பட்ட நிலையிலும், , புங்குடுதீவு(தரவுகள் இல்லை) காங்கேசந்துறை(22m), தலைமன்னார்(19m), உருமலை-மன்னார்(19m),கோவிலான் முனை-காரைதீவு(30m), பருத்தித்துறை(32m)  என்பன இயங்கும் நிலையிலுமாக  இலங்கையிலுள்ள கலங்கரை விளக்கங்களாகும். 

  2013 இல் ஓவியா, தீபன், - பின்னணியில் தென் மாகாணத்திலுள்ள  26.5 மீற்றர் உயரமான, காலி             கோட்டையில் அமைந்திருக்கும்  கலங்கரை விளக்கம் 


சரி, கதை ஒன்று.......  ஐந்தாம் வகுப்பு மாணவனொருத்தன் புலமைப்பரிசில் பரீட்சைக்காக ‘மாமரம்’ என்ற கட்டுரையைப் பாடமாக்கிக் கொண்டு போனானாம். ஆனால் பரீட்சைக்கு வந்ததோ ‘எங்கள் வீட்டு மாடு’ கட்டுரை.  கலங்காத அவன், பாடமாக்கி வைத்திருந்ததை முழுமையாக எழுதி விட்டு கடைசியில் எழுதினானாம் “இந்த மாமரத்தில் தான் எங்கள் மாட்டைக் கட்டுவார்கள்.”

சரி, இந்தக் கதை ஏன் இடையில் வந்தது என்று யோசிக்கிறீர்களா?

எழுத விரும்பியது பருத்தித்துறை கலங்கரை விளக்கத்தைப் பற்றி. ஆனால் ஒரு கட்டுரையாக எழுதும் அளவுக்கு அதனைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க முடியவில்லை.  ஆனால் பொதுவாக கலங்கரை விளக்கங்களைப் பற்றி நிறையத் தகவல்கள் சேகரிக்கக் கூடியதாக இருந்ததுடன் சொந்தச்சரக்கையும் சேர்த்து எழுதக் கூடியதாக இருந்தது. சரி, பொதுவாகக் கலங்கரை விளக்கங்களைப் பற்றி  வாசகர்களுக்கு அறியத் தந்து விட்டு கடைசியாக பருத்தித்துறை கலங்கரை விளக்கத்தைப் பற்றி அறியத்தரலாமே  என்று தான் இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. 



 இலங்கையின் வடக்கின் உச்சமாகக் கருதப்படும் பருத்தித்துறையின் கிழக்கு  முனைப்பகுதியில்   அமைந்திருக்கும் கலங்கரை விளக்கம் 1916 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட, 32 மீட்டர் (105 அடி) உயரமானதாகும்.  இந்தக் கலங்கரை விளக்கமானது  விளக்கு மற்றும் சுற்று உப்பரிகை அல்லது  சுற்று  மேல்மாடத்தைக் கொண்டுள்ளது. உயரமான இடத்திலிருந்து கடற்பகுதியைப் பார்ப்பது ஒரு அற்புதமான அனுபவம். ஆனால் இப்போது அந்த அனுபவத்தைப் பெற முடியாத வகையில் கடற்படையினரால் அந்தப் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு, வேலியிடப்பட்டு, புகைப்படம் எடுக்கத் தடை விதிக்கப்பட்டு, அவர்களின் பிரத்தியேக  பாவனைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அருகில் இலங்கை கடற்படைக்காகக் கட்டப்பட்டிருக்கும் அதனை விட உயரமான  தகவல் தொடர்பு கோபுரத்தால் கலங்கரை விளக்கம் குள்ளமாகக் காட்சியளிக்கிறது. 


எங்கள் முன்னோர்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், கடற்பயணத்துக்கு உதவும் எந்தவிதமான கருவிகளுமன்றி தனியே,( இரவெனில்) வானத்தில் தெரியும் நட்சத்திரங்களையும், (பகலெனில்) சில நிலக்குறிப்புக்களையும் வைத்துப் பயணத்தை மேற்கொண்டதை நினைக்க வியப்பாகத்தான் இருக்கிறது. அதுவும் வாழ்வாதாரத்துக்கான மீன்பிடிப்பயணம் மட்டுமல்லாமல் வியாபார நிமித்தமாக கிழக்காசிய நாடுகளுக்கு மட்டுமல்லாமல் உலகத்தின் மறுகோடியிலிருக்கும் அமெரிக்காவுக்குக் கூட, மோசமான காலைநிலை, கடற்சீற்றங்கள்,வேகமான நீரோட்டங்கள்,திமிங்கிலங்கள்  ஆகிய எத்தனையோ தடைகளைத் தாண்டி  வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட  ‘அன்னபூரணி’ என்ற கப்பல் மூலம்  போய் திரும்பி வந்தனர் என்ற வரலாற்றுச் சான்றுகளுடன் கூடிய நிகழ்வு வியப்பின் உச்சம்.  வடமராட்சிப் பகுதி மீனவர்கள் மற்றும் கடல் வாணிபத்தை மேற்கொண்ட வர்களின் நலன் கருதி இந்தக் கலங்கரை விளக்கம்  1916 ஆம் ஆண்டில் சுண்ணாம்புக் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. கலங்கரை விளக்கத்தின் கதவுக்கு மேலே பொறிக்கப்பட்ட தேதி 30-6-1931 ஆகும்.

இடமிருந்து வலமாக  சின்னன் என்று அழைக்கப்படும் சிவமனோகரன், அரவிந்தன், ஆசுகன், தீபன், சேகர்,கர்ணா

இப்போது தான் அதற்குள் நுழையத் தடை செய்யப்பட்டிருக்கிறது எனினும் இற்றைக்கு மூன்று தசாப்தங்களுக்கு முன், எல்லோரும் போய்வரக் கூடிய  மாதிரித்தான்தான் இருந்தது. அதாவது பொது மக்களுக்கான நுழைவு அந்தக் காலத்தில் தடை செய்யப்படவில்லை. அதற்கு பருத்தித்துறை கலங்கரை விளக்கத்தில் எடுத்துக் கொண்ட,  மேலேயுள்ள இந்தப் படமே சாட்சி.  இதில் உள்ளவர்கள் ஆகியோர். . பெரும்பாலும் இந்தப்படம்  உயர்தரப் பரீட்சையில் தோற்றி விட்டு அவிழ்த்து விட்ட மாடுகளாய்த் திரிந்த 1992/1993 காலப்பகுதியில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தப் படத்தை இவ்வளவு காலமும் பத்திரமாக வைத்திருந்து  அனுப்பி வைத்த அரவிந்தனுக்கு நன்றி. 


இரணை தீவுக்கொரு இரகசியப் பயணம்

 இரணை தீவுக்கொரு இரகசியப் பயணம்


நல்ல  வெயிலடித்துக் கொண்டிருந்த வானிலை, முதலை போன்ற  சங்குப்பிட்டிப் பாலத்தின் தோற்றம் தூரத்தில் தெரியத் தொடங்க  நெருங்க ‘சட்’டென்று மாறியது. சூரியனை மறைத்துக் கொண்டு கருமுகில்கள் கூட, ஐந்து நிமிடங்களுக்குள் இருட்டி மழை பொழியத் தொடங்கியது. காலை பத்து மணி போல் இல்லாமல் இருட்டுவதற்கு சற்று முன்னதான அந்திமாலை நேரம் போல் தோற்றமளித்தது  என்று சொன்னால் அது மிகையில்லை. மழையில் நனைவது சின்ன வயதிலிருந்தே மிகவும் விருப்பமான விடயங்களுள் ஒன்று என்பதால் “வாரணம் ஆயிரம்” படத்தில் சூர்யா, “சட்டென்று மாறுது வானிலை, பெண்ணே உன் மேல் பிழை.” என்று சமீரா ரெட்டியைக் குற்றம் சாட்டியது போல் ஒருத்தரையும் குற்றம் சாட்டாமல்,  மனமும் உடலும் நனைவதில் லயித்தது.இப்படியான ஒரு வெட்ட வெளியில் நல்ல வேகத்தில் உந்தூர்தியில் செல்லும் போது நனைவதும் ஒரு அருமையான அனுபவம் தான்.  அந்தப்பாடலில் வந்த வரிகள் போல் “நில்லாமல்  பெய்யும் மாமழை”யாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் சங்குப்பிட்டிப் பாலத்தில் (“ஜிவ்”வென்று) ஏறி (“சொய்ங்”கென்று) இறங்கி   பூநகரி நகரத்தை அடைவதற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன் மழை நின்று விட்டது. ‘அட மழை இன்னும் சற்றுப் பெய்திருக்கலாமே’ என்ற ஏக்கம் ஏற்பட்டாலும் கூடஇப்படியே நனைந்த கோழியாகப் போகாமல் முழங்காவில்லை அடைவதற்கு முன் ஈரம் காய்ந்தால் தான் நல்லது என்ற எண்ணம் தோன்ற, திருப்தி ஏற்பட்டது.

பூநகரிச் சந்தியிலிருந்து வலப்பக்கமாக திரும்பி மன்னார் செல்லும் பெருந்தெருவில் திரும்பவே சூரியன் “சுள்”ளென்று சுட்டெரிக்கத் தொடங்கி விட்டது.  ஏற்கனவே மைக்கேல் கைதொலைபேசியில் “கிட்டத்தட்ட நீங்க முப்பத்தஞ்சு கிலோமீற்றருக்குக் கிட்ட வரவேண்டியிருக்கும்” என்று சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. அவர் குறிப்பிட்ட தூரம்  குத்துமதிப்பாகச் சரி  தான். அவர்  குறிப்பட்டது போல் நாச்சிக்குடா கடந்து முழங்காவில் சந்திக்கு முன் வலப்பக்கம் வந்த தேவாலயத்தின் அருகே இருந்த ஒழுங்கையில் திரும்ப, முப்பது மூன்று கிலோமீற்றர்  ஆகியிருந்தது. அடித்த வெயிலில் ஆடைகளும் காய்ந்து விட்டிருந்தன.அந்த இடத்தில்  நின்று மைக்கேலுடன்கைத்தொலைபேசியில்  கதைத்து விட்டு மீண்டும் புறப்பட, கிட்டத்தட்ட ஒரு கிலோமீற்றருக்கு முன்பே மைக்கேலின் ஏழெட்டு வயதான மகன் அடையாளத்திற்காக கை  காட்டிக் கொண்டு நின்றான்.

மைக்கேலின் வீட்டில் நுழைவதற்கு முன் ஒரு சிறு அறிமுகம். இங்கிலாந்து,கனடா, மற்றும் அவுஸ்திரேலிய நண்பர்கள் இந்த முறை கடலட்டை வளர்ப்பு வாழ்வாதார உதவி செய்வதற்குத் தெரிவு செய்திருந்த இரணைமாதா நகர், முழங்காவிலைச் சேர்ந்த முன்னாள் போராளியான  கில்பெர்ட்டின் மூத்த சகோதரன் தான் மைக்கேல். முந்தைய நாள் முழுவதும் கில்பேர்ட்டின் கைத்தொலைபேசி வேலை செய்யாததால் இந்த உதவித்திட்டத்தை முன்மொழிந்த நண்பன் அரவிந்தன் மூலம் கிடைத்தது தான் மைக்கேலின்  தொடர்பு. கில்பேர்ட் இரணைதீவுக்குப் போயிருப்பதால், தான் படகில் இரணைதீவுக்கு அழைத்துச் செல்வதாக அவர் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் தான் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவரும் ஒரு முன்னாள் போராளி தான்.

மைக்கேலின்  வீட்டில் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. அங்கே மைக்கேலைச் சந்தித்து உரையாடிய போது, கில்பேர்ட்டின் கைத்தொலைபேசி, இரணைதீவில் குறைவாகக் கிடைக்கும் தொலைத்தொடர்பு சமிக்ஞை காரணமாவோ அல்லது மின்னேற்றம் தீர்ந்திருந்ததாலோ  கைத்தொலைபேசி அணைக்கப்பட்டிருப்பதனாலோ  தொடர்பு கொள்ள முடியாமற் போயிருக்கலாம் என்று குறிப்பிட்டார். அவரது இளைய சகோதரன் என்று இன்னொரு நபரை அறிமுகப்படுத்தினார். கிலரி என்ற பெயருடைய அவரும் முன்னாள் போராளிதான் . அவரது குடும்பத்தில் நான்கு பேர் போராளிகள் என்றும் இன்னொரு போராளியான அவர்களது மூத்த சகோதரி இறுதிப்போரில் வீரமரணம் அடைத்து விட்டதாக அவர்கள் சொன்ன போது நெழ்வாக இருந்தது. மேலும்அவர்களிருவருடனும்  கதைத்துக் கொண்டிருந்த போது தான் இரணைதீவு நோக்கி மேற்கொள்ளவிருக்கும் பயணத்தில் ஒரு சிக்கல் இருப்பது தெரிய வந்தது. அந்தச் சிக்கல் கடற்படையின் அனுமதி தான். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தான் கடற்படை இரணைதீவுக்குப் பொதுமக்களை அனுமதித்தது என்றும் ஆனாலும் இப்போதும் கூட படகுக்கான வழித்தட அனுமதி, தனிப்பட்ட நபர்களுக்கான பயண அனுமதி, மற்றும் இரணைதீவில் தங்குவதற்கான அனுமதி என்று கடற்படை கெடுபிடியாகத்தான் இருப்பதாகக்  கூறி அண்மையில் கூட வெளியிடத்திலிருந்த வந்த ஒரு நபருக்கு இரணை தீவுக்கான பயண அனுமதி மறுக்கப்பட்டது  என்று  கூறினார்கள். அனுமதி கேட்டால் பெரும்பாலும் மறுக்கப்படும் என்றும் அதை விட அனுமதி எடுக்காமலே பயணிக்கலாம் என்பாடு அவர்களின் கருத்தாக இருந்தது. இவ்வளவு  தூரம் வந்து விட்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளியையும், அவர் கடலட்டை வளர்ர்க்கத் தெரிவு செய்திருக்கும் இடத்தையும் பார்க்காமல் போக மனம் ஏற்காததால் அவர்களுடைய கருத்துடன் உடன்பட வேண்டியேற்பட்டது.

சாதாரணமாக கடற்தொழிலாளர்  போலத் தோற்றமளிக்க வேண்டுமென்பதால்  சட்டையிலிருந்து உள் மேலாடைக்கும் நீளக்காற்சட்டையிலிருந்து சாரத்துக்கும் ,சப்பாத்திலிருந்துசெருப்புக்கும், மாறவேண்டியிருந்தது. அத்துடன் வாயில் கொஞ்சம் வெற்றிலையும்  மென்றவாறே ஒரு துண்டுபீடியையும் செருகிக் கொண்டால் அசலாக இருக்கும் என்று அவர்கள் சொன்னாலும் கூட நல்ல வேளையாக அதை செய்யுமாறு வற்புறுத்தவில்லை.   முதலில் மைக்கேல் கடற்கரைக்குப் போய்  நிலவரத்தைப் பார்த்து  நிலவரம், கலவரம் இல்லை என்ற செய்தியை அனுப்ப, கிலரி, மக்கள் நடமாட்டம் மிகக் குறைந்த ஒரு காட்டுப்பாதையின் வழியே கடற்கரைக்கு அழைத்துப் போனார். கடற்கரைக்கு மிகவும் அருகிலிருந்த கிலரியின்  மாமி வீட்டில் தனது உந்தூர்தியை  நிறுத்தி விட்டு, படகின் இயந்திரத்தைப் பொருத்தி விட்டுக் காத்திருந்த மைக்கேலுடன் படகில் ஏறிக்கொள்ள சற்றுத்தூரம் மெதுவாகப்போன படகு இடஞ்சுழியாகத் திரும்பி ஒரு வட்டம் அடிக்க, மைக்கேலும் கிலரியும் தூரத்தில் தெரிந்த தேவாலயத்தைப் பார்த்து  வாயிலும் நெஞ்சிலும் தொட்டு “ஏசுவே”என்று முணுமுணுத்துக் கொள்ள படகு வேகமெடுக்க,   இரணை  தீவை நோக்கிய எங்களுடைய பயணம் ஆரம்பித்தது. 


நாச்சிக்குடா மீனவர்களின் கடலட்டைப் பண்ணைகள் 

படகு புறப்பட்ட இடத்துக்கு வலப்பக்கமாக கடலில் கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 200-300 மீற்றர் தூரத்தில் சில குடிசைகளைக் காணக் கூடியதாகஇருந்தது. அவை என்னவென்று விசாரிக்க அவை நாச்சிக்குடா மீனவர்களின் கடலட்டைப்பண்ணைகள் என்று தெரிய வந்தன. ‘அப்படியானால் ஏன் இவர்கள் இவ்வளவு தூரம் இரணைதீவு வரை போய் கடலட்டைப்பண்ணை அமைக்க வேண்டும்?’ என்று மனதில் ஓடிய எண்ணத்தைப் புரிந்து கொண்ட கிலரி “கடலட்டை வளர்ப்புக்கு நாச்சிக்குடாவை விட இரணைதீவு தான் திறமான இடம். அங்கை கடலட்டைப் பெருக்கம் கூட.. அதோட எங்கட பூர்வீகமும் அங்க தானே. எங்களுக்கு அரசாங்கம் தந்த கடற்பகுதியும் அங்க தானே இருக்குது.” என்று சொன்னார்.   

இந்த வருட இரண்டாம் மாதத்தின் நடுப்பகுதியில் திருகோணமலை புறாமலைக்கு  நண்பர்களுடன் மேற்கொண்ட படகுப் பயணத்தின் பின் மேற்கொள்ளும் கடற்பயணம். நண்பர்களும் கூட இருந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையில் மனம் சற்று நேரம் லயித்தது.

கடற்தாவரத்தின் இலைகள் நீரோட்டம் காரணமாக ஒன்றுகூடி ஒரே நேர்கோட்டில் ஊர்வலம் போவது போல் பயணித்தது பார்க்க அழகாக இருந்தது. இப்படியான நிறைய ஊர்வலங்களைப் பார்க்கக் கூடியதாக இருந்தது.  நீச்சல் போட்டியில் பங்குபற்றும் போட்டியாளர்கள் முன்னே செல்லும் போட்டியாளன் செல்லும் அதே தடத்தில்  நீந்தினால் நீரின் எதிர்ப்புவிசை  குறைவாக இருப்பதுடன் வேகமாக நீந்தக் கூடியதாக இருக்கும் என்று  இணையத்தில்  வாசித்த தகவல் ஒன்று ஞாபகம் வந்தது. அந்தத் தகவலுக்கும் இந்த ஊர்வலத்துக்கும்  ஏதாவது தொடர்பு இருக்குமா என்று மனதில் எழுந்த கேள்வியைத் தொடர்ந்து படகிலிருந்து குதித்து நீந்தும் ஆசை உண்டானது. வேகமாகச் செல்லும் படகிலிருந்து குதிப்பது மிகவும் விருப்பமானதொரு விடயம் மைக்கேல்,கிலரியிடம் கேட்டால் நிச்சயம் அனுமதிக்கப்போவதில்லை. அலையின் எழுச்சியும்,படகின் ஆட்டமும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ஏதுவாகத் தானிருந்தன. உயர்ந்து வரும் அலைக்காக படகை மைக்கேல் சற்றுத் திருப்பஃப் படகு சற்று ஆடிய போது  இது தான் சாட்டென்று பின்பக்கமாக தலைகீழாக தடுமாறி விழுவது போல் நடிப்பதில் சிரமம் ஒன்றும் இருக்கவில்லை. படகின் பாதையிலிருந்து சற்று விலகிக் கொள்வதற்கு படகின் அடிப்பகுதியில் பாதங்களால் ஒரு சின்ன உந்துதல் கொடுக்கவும் மறக்கவில்லை.

வித்தியாசமான அனுபவம் தலைகீழாக பின்பக்கமாக விழுந்ததாலோ என்னவோ விழுந்த வேகத்தில் கண்கள் இருட்டி புரையேறிக்கொள்ள , சாரத்தின் கட்டும் அவிழ்ந்து விட தண்ணீரில் சமநிலையில் நின்று கொண்டு இருமி, தலையில் தட்டி நிதானப்படுத்திக் கொள்ள சற்று நேரம் தேவைப்பட்டது. இதற்கிடையில் 20, 30 மீற்றர்கள் வரை தள்ளிப் போய்விட்ட படகை மைக்கேல் பதறிப்போய்த்  திருப்பிக் கொண்டு வந்தார். படகிலிருந்து பாயத் தயாரான கிலரியைத் ‘தேவையில்லை’ என்று இருமலின் மத்தியில் சைகை காட்டி விட்டு  அலைகளையும், படகின் இயந்திரம் எழுப்பிய நீரின் ஆட்டத்தையும் சமாளித்துக் கொண்டு சாரத்தைக் கொடுக்குக் கட்டிக் கொண்டு, படகின் பக்கவாட்டில் கைகளின் உந்தலால் எம்பி சற்றுப் பிரயாசையுடன் ஏறிக்கொண்டு படகில் அமர்ந்து, பதறிப்போன இருவரின் முகத்தையும் பார்க்க இலேசான குற்றவுணர்ச்சி ஏற்பட்டது. “நல்லாப் பயப்படுத்திப் போட்டிங்கள். எங்களுக்கு நெஞ்சில தண்ணியே இல்லாமப்போட்டுது,புரக்கேறிக் கஷ்டப்பட்டுட்டீங்களோ ”என்று கிலரியும் “எப்பிடி விழுந்தனீங்கள்? அவ்வளவுக்கு நான் போட்ட (படகை) வெட்டிட்டனோ?எங்கையும் அடிகிடி பட்டதோ?” என்று மைக்கேலும் கேட்ட கேள்விகளுக்கு ஏற்கனவே மனதில் தயார்படுத்தி வைத்திருந்த பதில்களைச் சொல்லி, தலையைத் துவட்டி மாற்று ஆடைகளை மாற்றிக் கொள்ள, மீண்டும்  படகு தனது பயணத்தைத் தொடங்க, கைத்தொலைபேசியில் நேரத்தைப் பர்ர்த்த போது பன்னிரெண்டு இருபத்தைந்து ஆகியிருந்தது.

கொஞ்ச  நேரத்தில் படகு பயணிப்பதற்கு நேரே தூரத்தில் இரண்டு தீவுகள்  புலப்பட ஆரம்பித்தன. “அந்த ரெண்டு தீவும் கிட்டக்கிட்டஇருக்கிறதால தான்  இரணைத்தீவு எண்டு பேர் வந்தது. ஒண்டாப்ப  பிறக்கிற பிள்ளைகல இரணைப்பிள்ளைகள் எண்டு சொல்றது மாதிரி. நாங்கள், பெரியதீவு, சின்னத்தீவு எண்டு தான்  சொல்றநாங்கள். நாங்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் இஞ்ச தான். 90ஆம் ஆண்டோட  சண்டையால இந்த இடத்த விட்டுப் போக வேண்டியதாப் போட்டுது. சரி, சண்ட முடியும் வர தான் பாதுகாப்புக் காரணம் எண்டு சொல்லி எங்கள மறிச்சுப்போட்டு, சண்ட  முடிஞ்சாப்பிறகும் எங்கள வர விடாம மறிக்கிறது எந்த விதத்தில நியாயம்?2017 இல இருந்து 2018 வர ஒரு வருஷம், எங்கள இரணைதீவுக்குள்ள விடச்சொல்லி போராட்டம் நடத்தினம். எங்களுக்கு நல்ல பதில் கிடைக்கல்ல. பொறுமை இழந்து போய் ஒரு நாள் வெள்ளக்கொடியக் கட்டிக் கொண்டு ஒரு அம்பது அறுபது போட்டில வெளிக்கிட்டுப் போயிட்டம்”      ” என்று மைக்கேல் தங்கள் கதையைச் சொல்லிக் கொண்டு வர, இரணைதீவுக்கு கிட்டத்தட்ட 200 மீற்றர்கள் தூரத்தில் அமைக்கப்பட்டிருந்த கடலட்டைப் பண்ணைகளையும்  பண்ணைகளுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த குடிசைகளையும் நெருங்கி விட்டோம்.பெரும்பாலான குடிசைகளுக்கு அருகில் ஓடங்களும் மிதந்து கொண்டிருந்தன. . கண் மட்டமாகப் பார்த்த போது ஒரு இருபது, இருபத்தைந்து  குடிசைகள்  இருக்குமென்று தோன்றியது.  எல்லாக் குடிசைகளும் பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் அனுபவத்தால்  தங்களுடைய குடிசையை அடையாளம் கண்டு கொண்ட மைக்கேல் படகை அதற்கு அருகே ஒதுக்கினார்.

குடிசைக்குக்குள்ளிருந்து  இரண்டு பேர் எட்டிப்பார்த்தனர்.மைக்கேல் ஒருவரைக் காட்டி “இவன் நெல்சன்-என்ட தம்பி” என்றும் மற்றவரைக் காட்டி “இவன் வில்சன்-தம்பியின்ட சிநேகிதன்”  என்று அறிமுகப்படுத்தினார். முதலில் படகில் கொண்டு வரப்பட்டிருந்த சிறிய நல்ல தண்ணீர் பீப்பாய்களை குடிசைக்குள் ஏற்றி விட்டு அந்த இரண்டு பேரின்  உதவியோடு குடிசையில் ஏறினோம் .நான்கு உறுதியான தடிகளைக் கடலில் ஊன்றி நட்டு, அவற்றுக்குக் குறுக்காகத் தடிகளைக் கட்டி அவற்றின் மேல் பலகைகளைப் பரவி,வேயப்பட்ட ஓலைகளைக் கூரையாக வேய்ந்து எளிமையாக, அழகாகக் குடிசை அமைக்கப்பட்டிருந்தது.  சாதாரணமாக நீரில் ஊன்றப்பட்டிருந்த தடிகளை அதன் மேல் மேடை போல் அமைக்கப்பட்டிருந்த குடிசையில் நாங்கள் சாதாரணமாக நிற்கக் கூடியதாக இருந்தது சற்று வியப்பாக இருந்தது. “தடிய எப்பிடி ஊண்டி நட்டிருக்கிறீங்கள்?” என்று கேட்டதற்கு ‘இரும்புக்குழாய், ட்ரில்லர் (துளைப்பான் கருவி) எல்லாம் பாவிச்சு  ஆழமாக் கிண்டி விட்டுத் தடிய வச்சு லேசா மூடினாலே    இந்தக் கடல் மண்ணிண்ட சேற்றுத் தன்மைக்குத் தடி அப்படியே இறுகிக் கொண்டிரும்”என்று வில்சன் சொன்னார். “மாரி காலத்தில தண்ணி மட்டம் கூடி குடிசைக்குள்ள தண்ணி வராதோ?” என்ற அடுத்த கேள்விக்கு “எங்கட அனுபவத்தக் கொண்டு தான் கட்டியிருக்கிறம். எவ்வளவு பெரிய மாரிக்கும்..”நடப்பட்டிருந்த தடியில் அரையடிக்குக் கீழே தொட்டுக்காட்டி “...இதுக்கு மேல வராது”என்று நெல்சன் கூறினார்.”சரி, காலை வேளையில மலசலம் கழிக்க என்ன செய்வீங்கள்?” என்று கேட்க வில்சன் சிரித்துக்கொண்டே “ஓடத்தில சின்னத்தீவுக்குப் போயிருவம்” என்று சொன்னார். மலசலம் கழிக்க ஓடத்தில்போகவேண்டியிருக்கும் என்று நினைக்க வேடிக்கையாகத்தான் இருந்தது.  இதற்கிடையில் பக்கத்துப் பண்ணைக்குப் பயணம் போயிருந்த கில்பெர்ட்டுக்குத் தொலைபேசி அழைப்பு  மைக்கேலால் மேற்கொள்ளப்பட்டது. “லண்டன்ல இருந்து உதவி செய்யப்போற அண்ணான்மாரிந்த சினேகிதன் வந்திருக்கிறேர்.கெதியா வா”


இடமிருந்து வலமாக கிலரி, தீபன், (தண்ணீரில் ) மைக்கேல், கில்பேர்ட், நெல்சன் 


“கிட்பேர்ட்டுக்குப் பாத்துக்  கொண்டிருக்கிற நேரத்தில அண்ணைக்குக் கடலட்டையைக் காட்டுவம், என்ன?” என்று சொல்லி விட்டு மைக்கேல் கடலில் இறங்கினார். வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடைப்பட்ட அளவில் தான் தண்ணீர் இருந்தது. குடிசைக்கு அருகிலேயே தடிகள் நட்டு வலையிடப்பட்டிருந்த  வேலியைத் தாண்டிக் கடலட்டைப் பண்ணையில் இறங்கிய மைக்கேல்  முகத்திற்கு நீர்க்கண்ணாடியை மாட்டிக் கொண்டு நீரில் மூழ்கி சில கடலட்டைகளைப் பிடித்துக் கொண்டு ஒரு நெகிழிப்(plastic)பெட்டியில் அவற்றைக் கொண்டு வந்தார். அவற்றைப் பார்த்தபோது ‘தன்னைப் பிடிப்பவனிடமிருந்து தப்பியோட முடியாத, குறைந்தபட்சம்  ஒரு சின்ன எதிர்ப்பைக் கூட வெளிப்படுத்த முடியாத ஒரு உயிரினம்’ என்று மனதில் பச்சாதாபம் ஏற்பட்டது. “இப்ப என்ட  கையில இருக்கிறது எல்லாம் 350 தொடக்கம் 400 ரூவா வரைக்கும் விக்கக்கூடிய கடலட்டைகள். இதுகளைப் பாதுகாக்கிறதுக்குத் தான் நாங்கள் கடல்ல குடிசை போட்டு இருக்கிறம்   ” என்று கூறி மீண்டும் அவற்றைக் கடலில் விட்டுவிட்டு வந்தார்.


                                                             கடலட்டைகளைக் காட்டும் மைக்கேல்  

இதற்கிடையில் கில்பேர்ட் வந்து சேர்ந்து கொள்ள அறிமுகங்கள் முடிய” இப்ப நான் எங்கட அண்ணா கில்பேர்ட்டிட்ட சம்பளத்துக்கு நிக்கிறன். ஒரு சொந்தப் பண்ணை வைக்கிறதுக்குத் தான் உங்கள்ட்ட உதவிய எதிர்பார்க்கிறன்”  என்று கூறிய அவர் “கடலட்டயப் பற்றி எங்களுக்குத் தெரியாது. கொஞ்சம் விபரமாச் சொல்லுவீங்களோ?” என்று கேட்க   கடலட்டை சமபந்தமாக மேலும்  சில தகவல்களைக் கூறினார். சாதாரணமாக எங்களது  நடுவிரல் அளவு உள்ள, சிறிய கடலட்டைகளை, அட்டைகள் பிடிக்கும் தொழிலைச் செய்பவர்களிடம்  40 முதல் -50 ரூபா கொள்வனவு செய்து பண்ணைகளில் விடுவதாகவும் ஆறு முதல் எட்டு மாதங்களில் கிட்டத்தட்ட எங்கள் எங்கள் மணிக்கட்டு அளவில் வளர்ந்து அவை அறுவடைக்குத் தயாராகி விடுவதாகவும் அதற்கிடையில்  அவை இனப்பெருக்கம் செய்து , பல மடங்காகப் பெருகியும் இருக்கும் என்றும் இந்தக் கடலட்டை அறுவடையின் பின் கொதிநீர் விட்டு அவிக்கப்பட்டுப் பின்பு காயவைத்துக் கருவாடாக்கி சீனா, தாய்வான், சிங்கப்பூர், ஹொங்காங் ஆகிய நாடுகளுக்கு இங்கு வாங்கப்பட்ட விலையின் மூன்று, நான்கு மடங்கு விலையில் (1200-1500 ரூபா) ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அறிந்து கொள்ள முடிந்தது. கடலில் உள்ள கழிவுகளையும் சேற்றையும் இவை உண்டு வாழ்வதால்  இவற்றுக்கு  உணவு இட வேண்டிய தேவையும் இல்லை என்றும் அவர் கூறினார். அவருக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருக்கும் ஒரு ஏக்கர் கடற்பிரதேசத்தில் வலை, தடி ஆகியவற்றைப் பாவித்து வேலி போடுவதற்கு ஏறத்தாழ ஒன்றரை லட்சம் ரூபாவும்  2000 கடலட்டைக்குஞ்சுகள்  வாங்குவதற்கு ஒரு லட்சம் ரூபாவும் ஒரு நல்ல குடிசை அமைப்பதற்குரிய மூங்கில்கள்,பலகைகள் மற்றும் இதர பொருட்களை வ   வாங்குவதற்கு ஐம்பதினாயிரம் அளவில் தேவைப்படும் என்றும் முதற்தடவை இடப்படும் மூலதனத்தைக் கொண்டு எதிர்பாராத விதத்தில்  இயற்கை அனர்த்தம் ஏற்பட்டாலொழிய, ஐந்து வருடங்களுக்கு அதாவது கிட்டத்தட்ட வருடத்திற்கு இரண்டு தடவைகளாக பத்துத் தடவைகள் அறுவடை செய்ய முடியும் என்பதையும் அவர் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.

                              அருகிலிருந்த  கடலட்டைப் பண்ணையிலிருந்து வந்து சேர்ந்த கில்பேர்ட் 

இந்த உதவித்திட்டத்திற்குத் தயாரிக்கப்பட்ட திட்ட முன்மொழிவில் குறிப்பிடப்பட்ட பணம் நண்பர்களிடமிருந்து இன்னும் வந்து சேரவில்லை என்றும் வந்து சேர்ந்ததும் அவர் குறிப்பிடும் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பப்படும் என்றும் நிகழும் செலவினங்களுக்குரிய ரசீதை மற்றும் கடற்பண்ணை அமைக்கும் போது படங்கள் எடுத்து நண்பர்களுக்கு அனுப்ப வேண்டியிருக்கும் என்றும்  அறிவுறுத்த கில்பேர்ட் அதற்கு சம்மதம் கூறினார்.

‘கடலட்டைகளைப் பார்த்தாயிற்று, படங்களை எடுத்தாயிற்று,தேவையான அளவு தகவல்களைப் பெற்றுக் கொண்டாயிற்று, இனி என்ன? போக வேண்டியது தானே’ என்று நினைத்தது தான் தாமதம்  மைக்கேலும் “சரி அண்ண, நான் மாறிக் காவலுக்கு நிக்கப்போறன். கில்பேர்ட்டும், கிலரியும், நெல்சனும்   உங்களோட வருவினம். உங்களுக்கு இறங்கின உடனே கோழிக்கறியோட சாப்பாடு ஆயத்தமா இருக்கும். தயவு செய்து சாப்பிட்டிட்டுப் போங்கோ. இப்ப ஒண்டே முக்கால்  ஆகிது, ரெண்டரைக்கெல்லாம் போயிடுவீங்கள்.  ” என்று கூறி விட்டு கிலறியைப் பார்த்து “போகக்குள்ள அண்ணய வடிவாப் பிடிச்சுக் கொண்டு போ, கடல்ல விழுந்திடாம.”   என்று கூறினார்.

கடலட்டைப் பண்ணைகளைத் தாண்டி வரும் வரை நெல்சன் படகிலிருந்த நீளமான தடியைக் கொண்டு ஊன்றி, ஊன்றி படகை நகர்த்தினார். அவை தாண்டியதும் படகு இடஞ்சுழியாக இறைவட்டம் அடித்து மீண்டும் இரணை தீவை நோக்கித் திரும்ப மூன்று பெரும் வாயிலும், நெஞ்சிலும் கையை வைத்து “ஏசுவே” என்று சொல்லிக்கொள்ள படகு வேகமெடுக்கத் தொடங்கியது.

அரைவாசித்தூரத்திற்கு மேல் போயிருப்போம். இன்னொரு  இயந்திரப் படகின் உறுமல் கேட்க, எல்லோரும் சத்தம் வந்த  திசையைப் பார்க்க வலது புறத்தில் கடற்படைப் படகொன்று வருவது தெரிந்தது. திடீரென்று எல்லோரும் பதட்டமாகினர். “பாஸ் கேட்டானோ துலஞ்சம். அண்ணயோட எங்களையும் சேர்த்துப் பிடிச்சுப் போடுவான்”என்று நெல்சன் பீதியைக் கிளப்ப, கிலரி “ அண்ண டக்கெண்டு அணியத்துக்குள்ள போங்கோ” என்று கூறினார். அதற்குள் நுழைந்ததுதான் தாமதம், பின்னால் வைக்கப்பட்டிருந்த வலையைக் கொண்டு மூச்சுத் திணறும் அளவுக்கு மூடி விட்டார்கள்.

எங்கள் படகுக்கு முன்னால் கடற்படைப்படகு குறுக்காகக் கடந்து போவது சத்தத்திலிருந்து புரிந்தது. நொடிப்பொழுதிலேயே  சத்தம் தொலைவுக்குப் போய்விட்டதிலிருந்து அவர்களது படகின் வேகம் எப்படிப்பட்டது என்று புரிந்தது. அந்தப்படகு   எழுப்பிய அலைகள் எங்களது படகைத் தள்ளாட வைக்க,  கொள்ள, அதற்கு மேல் அணியத்தில் இருக்க முடியவில்லை. அணியத்திலிருந்து எழுந்து பார்க்க, அந்தக் கடற்படைப்படகு கிட்டத்தட்ட 150, 200  மீற்றர்கள் போய்விட்டிருந்தது. படகின் பின்னால் திரும்பிப் பார்க்க தூரத்தில்புள்ளியாக  இரணைதீவு தெரிந்தது. நண்பர்களின் வேலையைச் செய்து முடித்த திருப்தியில் தீவுக்குக் கிட்டத்தட்ட 200 மீற்றர்கள் முன்னாலேயே கடலட்டைப் பண்ணையோடு திரும்பி விட்டதும் இரணைதீவின் அழகை ரசிப்பதற்கு  அருகில் செல்லவில்லை என்பதும் ஞாபகத்துக்கு வந்தது.’அட இனி மேல் இரணைதீவை அருகில் சென்று பார்க்கும் வாய்ப்புக் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் மீண்டும் இரணைதீவைப் பார்க்க, முதலில் தெரிந்த புள்ளியும் மறைந்து விட்டிருந்தது.