வியாழன், 5 ஏப்ரல், 2012

ஓடு லோலா ஓடு

                                                             உலக அரங்கில் சினிமா
உங்களில் எத்தனை பேர் தமிழ்த் திரைப்படங்களைத் தவிர வேறு மொழிப்படங்களைப் பார்த்திருப்பீர்கள்? ஆங்கிலப் படங்களையும்,ஹிந்திப் படங்களையும் அனேகமானோர் பார்த்திருக்கக் கூடும்.வேறு மொழிகளில் வெளியான வித்தியாசமான,நல்ல கதையமைப்புள்ள என்னைக் கவர்ந்த திரைப்படங்களைப் பற்றி ‘உலக அரங்கில் சினிமா’ என்ற தொடர் மூலம் கூறலாமென்றிக்கிறேன்.        
                                                                 ஓடு லோலா ஓடு
நாம் அன்றாட வாழ்வில் அடிக்கடி நினைத்துக் கொள்ளும் ஒரு எண்ணம் தான் இந்தப் படத்தின் கதைக்கரு.அதாவது சில செயற்பாடுகளை நாம் சற்றுத் தாமதமாகச் செய்யும் போது ஏற்படும் பாதகமான விளைவுகளைக் கண்டு “நான் மட்டும் சரியான நேரத்துக்கு இந்தக் காரியத்தைச் செய்திருந்தால்...?” என்று எத்தனை தடவைகள் நமது வாழ்க்கையில் நினைத்திருப்போம்.அதுவே தான் இந்தத் திரைப்படத்தின் கதைக்கருவும்.
உதாரணத்துக்கு  வெளிநாடு செல்லவிருக்கும் ஒரு நண்பனின் குடும்பத்தைப் பார்ப்பதற்கு நீங்கள் சைக்கிளில் புறப்படுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். நண்பனைப் பார்ப்பதற்கு மட்டுமல்ல.உங்களுக்கு நல்லதொரு வேலையை எடுத்துத் தரக் கூடிய ஒரு நபரையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துவதாக நண்பன் சொல்லியிருக்கிறான்.அது மட்டுமல்லாமல் அண்மையில் சைக்கிளால் விழுந்த நண்பனின் தாயை சுகம் விசாரித்து, நன்றாகச் சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக் கொள்ளுமாறு சொல்லி முட்டைமாவும் கொடுக்கப் போகிறீர்கள்.அதெல்லாவற்றையும் விட இன்னொரு முக்கியமான காரணம் நண்பனின் தங்கை.ஏற்கனவே சாடை மாடையாக அப்படி இப்படி என்றிருக்கும் உங்கள் காதல் விஷயத்தை முதன் முதலாகத் தெரிவித்து விடும் நோக்கில் ஒரு கடிதம் எழுதி அதை அவளுக்குப் பிடித்த ரமணிச்சந்திரன் எழுதிய நாவல் ஒன்றினுள் வைத்து அதையும் கொண்டு போகிறீர்கள். நீங்கள் வீட்டை விட்டுப் புறப்படும் போதே வீட்டில் கூலி வேலை செய்பவர் ஒருவர் உள்ளே நுழைய உங்களின் அம்மா,உங்களைச் சற்று நின்று,  நின்று வீட்டில் என்னென்ன வேலை செய்ய வேண்டும்மென்று சொல்லி விட்டுப் போகுமாறு சொல்கிறார்.நீங்களும் முடிந்த மட்டில் வேகமாக கூலி வேலை செய்பவருக்கு வேலைகளைச் சொல்லி விட்டு மீண்டும் புறப்படுகிறீர்கள். வழியில் காளை மாடு ஒன்று உங்களை முட்டுவதற்கு வர நீங்களும் பயந்து பாதையை விட்டு சைக்கிளை சற்று விலகிச் செலுத்த,சைக்கிள் டயரில் முள்ளுக் குத்திக் காற்றுப் போய் விட.......  சைக்கிளை உருட்டிக் கொண்டு போகிறீர்கள்.போகும் வழியில் உங்களுக்குச் சமய  பாடம் எடுத்த ஒரு அறுவை ஆசிரியரைச் சந்திக்கிறீர்கள்.ஒருவாறாக அவரது அறுவையிலிருந்து தப்பி இன்னொரு சமயம் சந்திப்பதாகக் கூறி மீண்டும் உருட்டுகிறீர்கள். பின்னர் சைக்கிளை, சைக்கிள் கடையில் விட்டு விட்டு ஒரே ஓட்டமாக ஓடுகிறீர்கள். நண்பனின் ஒழுங்கையை அடையும் தருணத்தில் இருவர் பெரியதொரு தகரத்தை உங்கள் முன்னால் தூக்கிச் செல்ல,உங்கள் உருவம் முழுவதுமாக அந்தத் தகரத்தில் மறைக்கப்பட சரியாக அதே கணத்தில் உங்கள் நண்பனும் அவனது குடும்பமும் செல்லும் வாகனம் அந்த ஒழுங்கையை விட்டு வெளிக்கிளம்புகிறது.நீங்களும் அந்த நண்பனின் பெயரைச் சொல்லிக் கத்துகிறீர்கள்.அந்த சமயத்தில் தகரத்தைத் தூக்கிக் கொண்டு போன இருவரும் அதை ஒரு பாட்டியின் மேல் போட்டு விட தகரத்திலிருந்து எழுந்த சத்தமும்,பாட்டியின் தொண்டையிலிருந்து கிளம்பிய சத்தமும் உங்கள் குரலை அமுக்கி விட  வாகனம் புறப்பட்டுப் போய் விடுகிறது.உங்களை அந்த இடத்தில் வைத்துப் பாருங்கள்.என்ன நினைப்பீர்கள்? “அடச்சே!கூலியாள் சற்றுத் தாமதமாக வந்திருந்தால்....மாடு காணிக்குள் நுழைந்ததும்,நான் அந்த வழியால் வந்திருந்தால்......சமய பாட வாத்தியார் அந்தச் சமயத்தில் வராமலிருந்தால்......தகரம் தூக்கிய இருவரும் சற்றுத் தாமதமாகத் தூக்கியிருந்தால்………அந்தப் பாட்டி அந்த நேரம் வராமலிருந்தால்....... என்று நினைப்பீர்களா இல்லையா?அதைத்தான் இந்தத் திரைப்படத்திலும் காட்டுகிறார்கள்.
இதை வாசிக்கும் போது இதே கதைக் கருவைக் கொண்ட 2001 இல் இந்தியாவில் ஜீவாவின் இயக்கத்தில்   வெளியாகி ஷ்யாம்,ஜோதிகா,சிம்ரன்  ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்த “12B“ திரைப்படம் உங்கள் ஞாபகத்திற்கு வரலாம். 1998 இல் ஜெர்மனியில்  Tom Tykwer இன் இயக்கத்தில் வெளியாகி Franka Potente,Moritz Bleibtreu ஆகியோர் நடித்த  “Run Lola Run” என்ற  இந்தத் திரைப்படத்தின் மையக் கருத்தை அடியொற்றியே “12B” எடுக்கப்பட்டிருக்கலாம் என்பது எனது கருத்து. இனி படத்தின் கதையைப் பார்ப்போம்.  
தொலைபேசி மணியடித்ததும் அதை எடுக்கிறாள் லோலா.மறுமுனையில் பதட்டத்துடன் அவளது காதலன் மானி.”ஏன் நீ சொன்ன இடத்திற்கு சொன்ன நேரத்திற்கு வரவில்லை?” என்று அவன் ஏச,லோலா என்ன நடந்தது என்று வினாவுகிறாள்.தனக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்துப் பற்றி அவளிடம் கூறுகிறான்.
 மானி.கடத்தல் தொழில் செய்யும் மானி வைரங்களை சேர்ப்பிக்க வேண்டிய இடத்தில் சேர்ப்பித்து விட்டு  ஒரு லட்சம் பணத்துடன் திரும்பி வருகிறான்.லோலாவுக்கு  ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னை  வந்து சந்திக்குமாறு ஏற்கனவே அவன் கூறியிருந்தும் அவள் தனது மோட்டார் சைக்கிளைத் தொலைத்து விட்டதனால் அந்த இடத்திற்கு சற்றுத் தாமதமாக வருகிறாள்.இதற்கிடையில் லோலாவைக் காணாததால்  மானி பணத்துடன் புகைவண்டியில் ஏறி விடுகிறான்.பயணத்தின் போது சோதனை அதிகாரிகள் வர,பதட்டத்துடன் பணத்தை எடுக்காமல் இறங்கி விட,அதை ஒரு தாடிக்காரன் எடுத்து விடுகிறான்.
“நீ மட்டும் சரியான நேரத்தில் வந்திருந்தால்எனக்கு இந்த இக்கட்டு நேர்ந்திராது. 12 மணிக்குள் தொலைத்த  பணத்தைக் கடத்தல்காரர்களிடம் கொடுக்கா விட்டால் எனது உயிருக்கே ஆபத்து.12 மணிக்கு ஒரு கடையைக் கொள்ளையடிக்கப் போகிறேன்” என்று மானி சோல்ல லோலா “அவசரப்படாதே.எப்படியாவது பணத்துடன் வருகிறேன்” என்று கூறித் தொலைபேசியை வைத்து விட்டு மணியைப் பார்க்கிறாள்.12 மணிக்கு இன்னும் 20 நிமிடங்கள் இருக்கின்றன.யாரிடம் பணம் கேட்கலாம் என்று யோசித்து தனது  அப்பாவிடம் கேட்பதாக முடிவெடுத்துக் கொண்டு  ஓடத் தொடங்குகிறாள்.
இதற்கிடையில் மானி தொலைபேசிக் கூண்டினுள் நுழைந்து கொண்டு எத்தனையோ பேரிடம் பணத்தைக் கேட்டுப் பார்க்கிறான்.ஒருத்தரும் தருவதாக இல்லை.
ஓடும் போது ஒரு பெண்ணுடன் மோதுகிறாள்.கூட்டமாக வரும் கன்னியாஸ்திரிகளைக் கடக்கிறாள்.ஒரு வீட்டிலிருந்து வெளியே வரும் கார் ஒன்று அவளை மோதப் பார்க்கிறது.சைக்கிளில் வரும் ஒருவன் அந்தச் சைக்கிள் விலைக்கு வேண்டுமா என்று கேட்கிறான்.மானியின் பணத்தை எடுத்த தாடிக்காரன் அவளைக் கடந்து போகிறான். ஒன்றிலும் கவனம் திரும்பாத லோலா சிறிது கூட நிற்காமல் ஓடிச் சென்று தனது அப்பாவின் வங்கியை அடைந்து அவரது அறைக்குள் நுழைகிறாள்.
சரியாக அவள் நுழையும் நேரம் பார்த்து அவளது அப்பா தான் இரண்டாவது திருமணம் செய்வது குறித்து அவரது காதலியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.திடீரென்று  அவளைப் பார்த்து விட்டு அதிர்ச்சியாகி என்ன விடயம் என்று வினாவுகிறார் ஒரு லட்சம் பணம்  வேண்டுமென்று லோலா சொல்கிறாள். 5 நிமிட வாக்குவாதத்தின் பின் “நான் உனக்கு அப்பாவுமல்ல.நீ எனக்கு மகளுமல்ல” என்று துரத்த லோலா வெளியே வந்து மீண்டும் வெறியோடு ஓடத் தொடங்குகிறாள்.
சரியாகப் 12 மணிக்கு லோலா அந்தத் தெருவுக்கு வந்து விடுகிறாள்.அவள் அழைத்தது கேட்காமல்    மானி துப்பாக்கியுடன் அருகிலிருந்த  கடைக்குள் நுழைகிறான்.வேறு வழியில்லாமல் லோலாவும் சேர்ந்து கொண்டு மானியோடு கொள்ளையடிக்கிறாள். கொள்ளையடித்து விட்டு வெளியே வரும் இருவரையும் காவல்துறை சுற்றி வளைத்துக் கொள்கிறது.மணி பணப்பையைத் தூக்கி எறிகிறான்.லோலாவைத் துப்பாக்கிக் குண்டொன்று தாக்குகிறது. இறக்கும் தருவாயில் மானி லோலாவைப் பார்த்து “என்னைப் பிரிந்து போகப் போகிறாயா?” என்று கேட்க இப்படியெல்லாம் நடக்காமல் இருந்தால் என்று நினைத்துக் கொண்டே “இல்லை” என்று கத்துகிறாள்.
லோலா ஒரு நொடி முன்னதாக வந்திருந்தால்......படம் முதற் காட்சியிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கிறது.ஆவலுடன் மோதிய பெண்,கடந்து வந்த கன்னியாஸ்தி ரிகள்,சைக்கிளில் அவளை முந்திக் கொண்டு போனவன்,பணத்துடன் போகும் தாடிக்காரன் என்று முதலில் எல்லாப் பாத்திரங்களும் வருகின்றன.ஆனால் ஒரு வினாடி முன்னதாக.
அவள் தனது அப்பாவின் அலுவலகத்தினுள் நுழையும் போது இந்த முறை அவர் லோலாவைப் பற்றியும்   அவளது தாயைப் பற்றியும் தவறாகக் கதைத்துக் கொண்டிருக்கிறார்.இந்தச் சூழ்நிலையில் லோலா அவரிடம் பணம் கேட்கும் போது அவர் அவளைக் கோபத்தில் அடித்து விடுகிறார்.லோலா துப்பாக்கியைக் கொண்டு அப்பாவை மிரட்டி அவரிடம் ஒரு லட்சம் பணம் வாங்கிக் கொண்டு வெளியில் வந்து ஓடத் தொடங்குகிறாள்.
இந்த முறை மானி கடைக்குள் கொள்ளையடிக்க நுழையும் முன் லோலா அழைப்பது அவனுக்குக் கேட்க... கதை மாறுகிறது.மகிழ்ச்சியுடன் லோலாவை நோக்கி  சாலையைக் கடந்து வரும் மானி மீது அம்புலன்ஸ் வண்டி மோதுகிறது.  மானி இறக்கும் தருவாயில் இப்படியெல்லாம் நடக்காமல் இருந்தால் என்று நினைத்துக் கொண்டே “இல்லை” என்று கத்துகிறான்.


படம் முதற் காட்சியிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கிறது.மீண்டும் லோலா ஓட ஆரம்பிக்கிறாள்.(சில படங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள் என்று எவ்வளவு யோசித்தாலும் புரியாது.ஆனால் இந்தப் படம் அப்படியல்ல.)திரும்பவும் அதே விஷயங்கள்.இந்த முறை எதிரில் வரும் பெண் இடிக்காமல் போகிறாள்.சைக்கிள் வேண்டுமா என்று கேட்கும் இளைஞனும் பணத்தை எடுத்த தாடிக்காரனும் சந்தித்துக் கொள்கிறார்கள்.தாடிக்காரன் பணத்தைக் கொடுத்து அந்தச் சைக்கிளை வாங்கிக் கொண்டு விட ஒரு வினாடியில் கதையே மாறி விடுகிறது.லோலா வரும் முன் அவளது அப்பா அலுவலகத்தை விட்டு வெளியே கிளம்பி விடுகிறார்.லோலாவுக்குக் காத்திருந்த மானி சைக்கிளில் போகும் தாடிக்காரனைக் கண்டு அவனைத் துரத்திப் பிடித்து பணத்தை வாங்கி விடுகிறான்.படம் முழுவதுமே ஓடிக் கொண்டிருக்கும் லோலா சரியாக 12 மணிக்கு அந்த இடத்திற்கு வருகிறாள்.அந்த நேரத்தில் கடத்தல்காரர்களிடம்  பணத்தைக் கொடுத்து விட்டு மானியும் அந்த இடத்திற்கு வருகிறான். “என்ன,இந்த இடத்திற்கு ஓடியே வந்து விட்டாயா?” என்று மானி கேட்க லோலா சிரிக்கிறாள்.இருவரும் கை கோர்த்துக் கொண்டு செல்வதோடு படம் நிறைவடைகிறது.
ஒரு நொடி மாறுவதால் வாழ்க்கையின் ஒரு இருபது நிமிடத்திற்குள் எவ்வளவோ விஷயங்கள் மாறி விடுகின்றன என்பதை 3 விதமான கற்பனையில் சொல்லியிருக்கும் இந்தப் படம் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பையும் நிறைய விருதுகளையும் பெற்றது.சாலையில் லோலா ஓடி வரும் போது கடந்து வரும் மனிதர்கள்,கார்கள்,சைக்கிள்கள்,புகைவண்டி,அம்புலன்ஸ்  என்பன ஒரு நொடி பிந்துவதால் அல்லது ஒரு நொடி முந்துவதால் அல்லது சரியான நேரத்தில் இயங்குவதால் எப்படி எப்படியெல்லாம் வித்தியாசப்படுகின்றன என்பதை சுவாரஸ்யமாக மட்டுமன்றி புத்திசாலித்தனமாகவும் காட்டியிருப்பது இப்படத்தின் சிறப்பெனலாம்.கடிகாரத்தின் வினாடி முள் தொடர்ந்து ஒலிக்கும் ஓசையைப் பின்னணி இசையாகக் காட்டி பின்னியிருக்கிறார்கள்.வேகமான திரைக்கதைக்கேற்ப காட்சிகளைத் தொகுத்திருக்கும் editing அபாரம் என்று சொல்ல வைக்கிறது என்றால் மிகையில்லை.
அடுத்த வினாடி எனவும் நடக்கலாம் என்றொரு நிச்சயமில்லாத உலகத்தில் நாமெல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.ஒவ்வொரு முறையும் தவறாக ஏதும் செய்யும் போது அப்படி நடக்காதிருந்தால்... என்று நினைக்க மட்டும் தான் முடியும்.”Run Lola Run” இல் வருவது போல் நடந்து முடிந்ததை வேறு விதமாக மாற்றிப் பார்க்கும் வசதி எங்களிடமில்லையே என்ற ஏக்கம் இந்த படம் முடிந்ததும் வருவது இயல்பானது.   
                                                                    

சுனாமி 2004

              சுனாமி 2004

 
அம்மா சொன்னதைக் கேட்க சந்தோசமாகவும்,அதே சமயம் கவலையாகவும் இருந்தது.ப்ரியா என்னை விரும்புவதை நினைக்க சந்தோசமாகவும்,அது அம்மாவுக்குப் பிடிக்காமல் போனதை நினைக்கக் கவலையாகவும் இருந்தது. “ஏன் அம்மா பிரியா என்ன சொன்னவ?” என்று கேட்டேன். “நேரடியா ஒண்டும் சொல்லெல்ல.ஆனா நீ ஒடுறதப் பாக்க அவளுக்கு விருப்பமெண்டும் அவள் ஒடுறதப் பாக்க உனக்கு விருப்பமெண்டும் சொன்னவ.நானும் நேரடியா ஒண்டும் சொல்லாம, ஜானகியின்ட மகளும் நல்லா ஓடுவாள்.இந்தியாவில அவள் படிக்கிற கல்லூரியிலயே ஒட்டப்போட்டிகள்ள பங்குபற்றி எத்தனையோ பரிசு வாங்கியிருக்காள்.இவனுக்கும் அவளுக்கும் நல்ல சோடிப்பொருத்தம் எண்டு சொன்னனான்” என்று அம்மா புதுக்கதையொன்று சொன்னாள்.
“ அம்மா நீங்களும் நல்லாக் கதை எழுதுவீங்கள் போல இருக்கு. ஜானகி....மகள்....இந்தியா...கல்லூரி...ஒட்டப்போட்டி...நல்லா கற்பனை தான்.” என்றேன். “கற்பனையெல்லாம் ஒண்டுமில்ல.போன வருஷம் அம்மன் கோவில்  திருவிழாவுக்கு ஜானகி வந்திருந்தவள்.அப்பாவுக்கு ஒண்டு விட்ட சகோதரி.அப்பாவும் நானும் விரும்பி முடிச்சாப் பிறகு எங்களோடு பழகாம விட்ட அப்பாவின்ட சொந்தக்காரச் சனத்திலே அவயலும் சேர்த்தி.அப்பா போனதுக்கு துக்கம் விசாரிச்ச பிறகு கூட ஏழெட்டு வருஷமா உங்களோடு தொடர்பு இல்லாம இருந்திட்டம்.இவ்வளவு நாளா உங்களக் கவனிக்காம விட்டதுக்கும் சேர்த்து உங்களக் கவனிக்க வேணும் மாதிரி இருக்கு எண்டு அவர் சொன்னவர்.எனக்கும் அதிலே உடன்பாடு தான்.பிருந்தாவுக்கு நல்லா மாப்பிள்ளை ஒண்டு தேடினனாங்கள்.ஆனா எங்களுக்கு வாய்க்கிறதுக்கு முன்னால பிருந்தா விரும்பின பெடியனக் கட்டி வச்சிட்டீங்கள்.உங்கட மகனுக்கு யாரையும் மனசில நினைச்சிருக்கிங்களோ தெரியல்ல.அப்படி இல்லாட்டி எங்களை நினைச்சுக்கொள்ளுங்கோ”
எண்டு இதமா சொன்னது ஏண்டா மனதில நல்லாப் பதிஞ்சுட்டுது.உடனே அவளுக்கு ஒண்டும் சொல்லாட்டியும் கூட பிறகு பிறகு யோசிச்சுப் பாத்தனான். அப்பாவின்ட ஆக்களோட ஒண்டு சேர்ரதுக்கு இது நல்லா வாய்ப்பா இருக்கும்…..நீ மனசு வச்சா.இந்த வயசில இதெல்லாம் உனக்குச் சொல்லக் கூடாது எண்டு தானிருந்தனான்.இப்ப சொல்ல வேண்டி வந்துட்டுது” என்று சொல்லி முடித்தாள்.அம்மாவோடு என்ன கதைப்பது என்று தெரியாமல் போய் கட்டிலில் படுத்துக்கொண்டேன்.
விளையாட்டுப் போட்டிகளில் ப்ரியாவோடு பழக்கம் ஏற்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியிருந்தாலும் அவள் மீது ப்ரியம் ஏற்பட்டு ஐந்தாறு மாதங்கள் கூட ஆகவில்லை.ஆனாலும் இருவரும் சேர மாட்டோமா என்று நினைக்கையில் எனக்குள் ஏற்படும் வேதனையை நினைக்க எனக்கே ஆச்சரியமாகத்தான் தான் இருந்தது.இவ்வளவு குறுகியகாலப் பகுதிக்குள் மனம் எவ்வளவு   தீவிரமாக அவளை விரும்பியிருக்கிறது. 
அன்று பின்னேரமும் வெளியில் போக மனம் இருக்கவில்லை.பாட்டுக் கேட்டதிலேயே பொழுது போய் விட்டது.அம்மாவுக்கும் எனது குழப்பம் விளங்கியிருக்க வேண்டும்.வேறு கதைகள் கதைத்த போதிலும் தப்பித் தவறிக் கூட அந்த விஷயத்தைப் பற்றி ஒன்றும் கதைக்கவில்லை.கை வீக்கத்துக்கு பக்கத்து ஒழுங்கைப் பரிகாரியாரிடம் போய் வருவோம் என்று அழைத்த போது கூட அம்மா ஏதும் அதைப் பற்றிக் கதைக்கக் கூடும் என்று நான் நினைத்தாலும் கூட அதுவும் நடக்கவில்லை.
“வாடா கேசவா ,என்ன நான் உருட்டுக்கட்டையால தேக்கிறதுக்குப் பயந்து கொண்டு அம்மாவையும் கூட்டிக் கொண்டு வந்தனியோ?” என்று வரவேற்ற பரிகாரியார்  கடந்த ஒரு வருடமாக நான் அவரிடம் போய் வர ஆரம்பித்ததிலிருந்து எனக்கு ஒரு சினேகிதன் மாதிரியே ஆகி விட்டிருந்தார்.அவர் நோவெண்ணெய் தேய்த்து உருவி விட்ட போது ஏற்பட்ட வலியைப் பொறுத்துக் கொள்ள பிரியாவின் நினைப்பு உதவியது.காலையில் என்னைப் பார்க்க வந்த போது,  தன் கையால் எனது கை வீக்கத்தைத் தொட்டுப் பார்க்கக் கையை நீட்டி விட்டு, பிறகு சட்டென்று  ஏதோ நினைத்து விட்டு குழந்தையின் கையால் என் கை வீக்கத்தைத் தடவியது ஞாபகம் வர, பரிகாரியாரின் கையை ப்ரியாவின் கையாக நினைத்துக் கொண்டேன். “அம்மா,இவன் என்ட கையை யாரோ ஒரு பெட்டையிண்ட கையாக நினைக்கிறான்.மற்ற நேரங்கள்ள குளர்ரவன் இப்ப பேசாம இருக்கிறான்.பாருங்கோ ” என்று பரிகாரியார் கச்சிதமாக என் மனதைப் படித்து அம்மா என்னை முறைத்துப் பார்க்கும்படி செய்தார்.
நாளை காலை அக்காவைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.எந்தப் பிரச்சனையையும் அக்காவுடன் பகிர்ந்து கொண்டால் அதற்கான தீர்வோ அல்லது ஆறுதலோ கிடைக்கும்.படிப்பில் ஏற்படும் சந்தேகங்கள்,எட்டாம் வகுப்பில் எனக்கு ஏற்பட்ட முதல் காதல்,நண்பர்களோடு ஏற்பட்ட மனஸ்தாபங்கள்,அம்மாவுடன் ஏற்படும் சண்டைகள் போன்ற  எல்லாவற்றுக்கும் நான் நாடும் ஒரே நபர் அக்கா தான். இப்போது திருமணம் முடித்து எங்களைப் பிரிந்திருந்தாலும் கூட அந்தப் பழக்கத்தை என்னால் விட முடியாதிருந்தது.
காலையில் எழுந்த போதே அக்காவின் நினைப்போடு தான் எழுந்தேன்.அம்மா கோப்பி கொண்டு வந்து தரும் போது “என்ன, பிருந்தாட்ட போகல்லையோ? என்று கேட்டாள்.அம்மா உட்பட பொதுவாக எல்லோருமே என் மனதைச் சுலபமாகப் படித்து விடுகிறார்கள் என்று தோன்றியது.அதுவும் ஒரு வகையில் நல்லது தான்.நான் என்னைச் சிரமப்பட்டு வெளிப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.”போறண்டா எண்ணெய்ப்புட்டு செய்து தாரன்.கொண்டு போ.”என்று அம்மா சொல்லத் தலையாட்டினேன்.
வல்லைவெளியால் சைக்கிள் உழக்கிய போது அத்தான் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.எங்கள் ஊரில் காணி வீடு இருந்தும் புத்தூரில் வீடு வாங்கி எங்களையும் அக்காவையும் பிரித்ததோடு இப்படிச் சைக்கிள் உழக்க வைத்து விட்டாரே என்ற நினைப்புத் தான்  அவர் மேல் கடுப்பை ஏற்படுத்தியது.வல்லைப் பாலத்தைக் கடந்த போது ஒரு பழைய ஞாபகம்.சாதாரண தரப் பரீட்சை முடிந்த அன்றே விமலன்,உதயன்,வினோத்தோடு பாலத்திலிருந்து பாய்ந்து நீச்சலடித்தது ஞாபகத்துக்கு வர சைக்கிளால் இறங்கி கொஞ்ச நேரம் ஓடும் நீரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.ஒரு முறை பாய்ந்து நீந்தினால் என்ன என்று எனக்குள் எழுந்த எண்ணத்தைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன்.மூன்று நாட்களுக்கு முன் நல்ல மழை பெய்திருந்ததால் வெள்ளம் சுழித்துக் கொண்டு ஓடியது.நீரின் வேகத்தைப் பார்ப்பதற்காகஅருகில் கிடந்த சுள்ளி ஒன்றை எடுத்துப் போட  அது ஒரு நிமிடத்திற்குள் கிட்டத்தட்ட 30m அல்லது 40 m போயிருக்கும்.இப்போது பாய்ந்தால் நீர் மட்டதிற்கு மேல் தலையைத் தூக்குவதற்குள் சிறிது தூரம் நீரோட்டத்தோடு போய் விடுவேன்.திரும்பி பாலத்தை நோக்கி நீந்தி வருவது சற்று  சிரமமாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு மனமில்லாமல் கிளம்பினேன்.
அக்கா வீட்டை அடைந்த போது அத்தான் அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். “வாங்கோ மச்சான்,பின்னேரம் நான் திரும்பி வரேக்குள்ள  நிப்பீங்களோ?”என்று கேட்டார். “இல்லை அத்தான்,மத்தியானமே வெளிக்கிட்டிருவன்.பின்னேரம் match ஒண்டு இருக்குது”என்றேன்.என் குரல் கேட்டதும் சாப்பாட்டுப் parcel உடன் ஓடி வந்த அக்காவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு “கவனம்,கவனம் நீங்க விழுந்தாலும் பரவாயில்ல,என்ட சாப்பாட்டப் போட்டுறாதீங்கோ.சந்தோசத்தில கையும் ஓடல்ல,கையும் ஒடல்ல எண்டு சொல்லிக் கேட்டிருக்கன்.இஞ்ச  சந்தோசத்தில கை கால் எல்லாம் இன்னும் வேகமா  எல்லோ ஓடுது.பிருந்தா,மச்சானுக்கு நான் வாங்கி வச்சிருக்கிற சாமானக் குடுத்து விடுங்கோ,வாரன் மச்சான்” என்று சொல்லியவாறே மோட்டார் சைக்கிளை முறுக்கியவாறே கிளம்பினார்.
“என்னடா,நீ இஞ்ச வந்து ஒரு மாசத்துக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கு.நான் ரெண்டு தரம் வீட்ட வந்தும்  உன்னக் காணல்ல.அக்கா எண்டு ஒரு ஆள் இருக்கிறா எண்டு ஞாபகம் இருக்குதோ?” என்று காதை முறுக்கிய அக்காவிடம் “என்ன அக்கா,மறந்தாத் தானே ஞாபகம் வர்ரதுக்கு...” என்றேன். “இந்தத் தேன் ஒழுகிற பேச்சுக்கு ஒண்டும் குறைச்சல் இல்ல” என்று கூறி என் கையிலிருந்த எண்ணெய்ப்புட்டை கிட்டத்தட்ட பிடுங்கிக் கொள்ள “சரி சரி,அதக் கொட்டிக் கொள்ளுறதுக்கு முதல் எனக்கு ஏதாவது கொட்டிக் கொள்ளத் தாங்கோ” என்றேன். “கொட்டிக் கொள்ளுறதுக்குத் தானே.களனித் தண்ணியும்,தேங்காய்ப் பூ சக்கையும் ஒகேயா”என்று கிண்டலாகக் கேட்ட அக்காவுக்கு “ஏன் முழுக்கச் சாப்பிட முடியாம மிச்சம் விட்டுட்டீங்களோ?” என்று கேட்டு விட்டு பதிலடி கொடுத்து விட்டேன் என்று  திருப்திப்பட்டுக் கொள்ள முதல் “இல்லடா,இது நீ போன முறை மிச்சம் விட்டது.பத்திரமா எடுத்து வச்சனான்’ என்று அக்கா சொல்ல அவளுக்கு என்ன பதில் சொல்லுவது என்று யோசிப்பதற்குள் அக்கா “1,2,3” என்று எண்ணி விட்டு தனது வலது கையைத் தூக்கித் தான் வெற்றி பெற்றதாக அறிவித்தாள். “ சரி அக்கா,உங்கட வெற்றியக் கொண்டாடுறதுக்காவது atleast   ஒரு டீயாவது தாங்களன்” என்று நான் சரணடைய “வெள்ளைக் கொடி காட்டினா நாங்க யாரையும் தாக்குறதில்ல.மன்னிப்பும் அதோட நல்ல சாப்பாடும் தருவம்” என்று சொல்லி விட்டு “கொஞ்சம் பொறுடா.புட்டு அடுப்பில அவியுது.அதுக்கு இடையில நான் அதிசயாவ ஒருக்கா பாத்திட்டு வாரன்” என்று அறைக்குள் போன அக்காவுக்குப் பின்னால் நானும் போனேன்.
அதிசயா அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.உண்மையிலேயே பெயருக்கேற்ற அதிசயமான பிள்ளை தான்.ஒன்றரை வயது தான் இருக்கும்.அந்த வயது குழந்தைகளிடம் இருக்கும் குழப்படி அவளிடம்  அநியாயத்துக்குக் குறைவாக இருந்தது.பால் கேட்டு லேசாகச் சிணுங்குதல்,நித்திரை வரும் போது லேசாகச் சிணுங்குதல்....இவை தான் அவளிடம் இருக்கும் ஆகக் கூடுதலான குழப்படிகள்.அந்த விதத்தில் தோற்றத்தில் அக்காவை ஒத்திருந்தாலும் குணத்தில் அத்தானை ஒத்திருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.
“சரி நீ வந்து சாப்பிடு,இப்ப ரெண்டு மூண்டு நாளா மாமா வேணும் எண்டு கேட்டுக் கொண்டிருந்தவள்.” என்று சொன்னவாறே குசினிக்குப் போன அக்காவைத் தொடர்ந்து நானும் போனேன்.அக்கா புட்டை இறக்குவதற்குள் நான் எனது மனப்பாரத்தை இறக்கி விட்டேன்.ஆனாலும் நான் சொன்னதை ஆறுதலாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, சொல்லி முடித்ததும் அவள் சொன்ன விடயம் என்னைத் திடுக்கிட வைத்தது.
                                                             (தொடரும்)                   
120x90 Natural Skin Shop Coupon

சில விசேட சொற்றொடர்கள்(தொடர்ச்சி)

                                                        சில விசேட சொற்றொடர்கள்(தொடர்ச்சி)
 
21. Burn the candle in both ends: வேலை மும்முரத்தின் காரணமாக தாமதமாகப் படுக்கைக்குச் செல்லுதலும், அதிகாலையிலேயே எழுதலும்.
22. Cook the books: திருட்டு நோக்கத்தோடு நிறுவனத்தின் கணக்குகளில் பிழையான பதிவுகளை மேற்கொள்ளல்.
23. Acid test: ஒன்றின் தரத்தை அல்லது அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் பரிசோதனை.
24. Shut the stable door, after the horse has bolted: ஒரு தீங்கான, பாரதூரமான விடயம் நடைபெறுவதற்குக் காரணமாக இருந்த காரணியைத் தடை செய்தல். (பெரும்பாலும் இந்தச் செயல் பயனில்லாததாக இருக்கும்)
25. Lick the wounds: ஒரு தோல்வியின் பின் கிடைக்கும் மகிழ்ச்சியற்ற அனுபவம்.  
26. Ad infinitum: ஒரு செயல் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக நடைபெறுதல்.
27. Last but not least: கடைசி நபரை அறிமுகப்படுத்தும் போது சொல்லப்படுவது. அதாவது முக்கியத்துவத்தில் அவர் எந்த விதத்திலும் குறைந்தவரல்ல என்பதை அறிவுறுத்துவதற்காக.
28. Generation gap: மூத்த தலைமுறைக்கும்,இளைய தலைமுறைக்கும் எண்ணங்களிலும், கருத்துக்களிலும்,செயல்களிலும் உள்ள வித்தியாசம்.
29. Be under a cloud: ஒரு தவறான செயலைச் செய்திருக்கக் கூடுமென மற்றவர்களால் சந்தேகிக்கப்படும் நிலைமை.
30. The silent majority: ஒரு நாட்டில் அல்லது நிறுவனத்தில் அல்லது வீட்டில் தங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் வெளிப்படையாகத் தெரிவிக்காமல் மெளனமாக இருக்கும் அதிக எண்ணிக்கையானோர்.       
120x240 Natural Skin Shop Coupon

இறப்பின் பின் வாழ்வு

                                                    இறப்பின் பின் வாழ்வு
 
இந்தத் தலையங்கத்தைப் படித்து,இதில் போட்டிருக்கும் படத்தையும் பார்த்ததும்  ‘இறப்பின் பின் வாழ்வா?சரியாப் போச்சுடா. நாங்கள் இன்னும் சரியாக வாழவே ஆரம்பிக்கவில்லை, என்ன இழவுடா இது?’ என்று யாரும் நினைத்தீர்களாயின் நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புவது ‘அட நான் கேட்பதும் அதைத்தான்,அதாவது “என்ன இழவுடா இது?இழவின் பின் என்னடா நடக்கிறது?’ என்பதைத்தான்.
உண்மையில் இறப்பு என்றால் என்ன? இதயம் துடிப்பதை நிறுத்துவதா?மூளை சிந்திப்பதை நிறுத்துவதா?மூச்சு நிற்பதா?இரத்த ஓட்டம் நிற்பதா?அல்லது மேற்கூறியவற்றில் ஏதாவது ஒன்றிரண்டின் சேர்க்கையா அல்லது எல்லாவற்றினதும் சேர்க்கையா? உங்களில் யாருக்காவது இதன் விடை தெரியுமா? “இன்று காலை என்ன சாப்பிட்டீர்கள்? இடியப்பமா?ரொட்டியா?தோசையா? புட்டா?” என்ற கேள்விக்குப் பதிலளிப்பது போல் சட்டுப் புட்டென்று சொல்லி விட முடியாது.ஒன்று பொருத்தமாகத் தோன்றும்.இன்னொன்று இன்னும் பொருத்தமாகத் தோன்றும்.கடைசியில் குழப்பமே மிஞ்சும். “சரி நீயே சொல்லு.” என்று சொல்கிறீர்களா?எனக்குத் தெரியாது என்று தானே நான் உங்களைக் கேட்கிறேன்.
சரி அதை விடுங்கள்.இறப்பு என்றதும் உங்கள் மனதில் தோன்றும் உணர்ச்சி என்ன?அச்சம்…..கவலை…….விரக்தி....?உண்மையில் இறப்புத் தான் நமது முடிவா,அல்லது இறப்பின் பின் இன்னொரு பிறப்பு இருக்கிறதா?அல்லது இன்னொரு உலகத்திற்குப் போவதற்கான வாசல் திறக்கிறதா?மரணத்தின் வாசல் வரை போய் மீண்டு வந்தவர்கள் சொல்லும் கதைகளை நான் ஏன் நம்ப மறுக்கிறோம்? பிறப்பின் முடிவு இறப்பின் ஆரம்பம் என்று என்று ஏற்றுக் கொள்ளும் யதார்த்தவாதிகள்  இறப்பின் முடிவு பிறப்பின் ஆரம்பம் (கடைசி வசனத்தை மீண்டும் படியுங்கள்.) என்ற தத்துவ ரீதியான விளக்கத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பது ஏன்?
இறப்பின் பின் என்ன நடக்கிறது என்று எத்தனையோ கட்டுரைகள் வந்திருப்பினும் விஞ்ஞானம் அவற்றை ஏற்றுக் கொள்வதாக இல்லை.1882 இல் அமெரிக்காவில் இறப்பின்  பின் என்ன நிகழ்கிறது என்பதை ஆராய்வதற்கு ஒரு உளவியல் ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்பட்டது.அங்கு நடைபெற்ற எந்த ஆராய்ச்சியும் நம்பும்படியான எந்தவொரு ஆதாரத்தையும் வெளியிடவில்லை.இப்போது அந்த நிறுவனத்துக்கு என்ன  நடந்தது என்று தான் ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கும்.
1926இல் William Barrett என்பவர்’ எழுதிய ‘Deathbed Visions’ (இறக்கும் போது தோன்றும் விம்பங்கள்) எனும் நூலில் மரணத்தின் அருகே சென்று மீண்டவர்கள் சிலரின் அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.மரணத்தின் போது வித்தியாசமான ஒலியைக் கேட்டதாகவும்,தங்கள் உடலை விட்டு உயிர் பிரிந்ததைக் காண முடிந்தது என்றும் இன்னும் சிலர் ஏற்கனவே இறந்தவர்கள் சிலரைக் காண முடிந்தது என்றும்(ஹையா! நீயும் வந்திட்டியா?இனிமே ஜாலி தான்) தெரிவித்திருக்கிறார்கள். விஞ்ஞானத்துக்கு அழுத்தந் திருத்தமான விளக்கம் தேவைப்படுவதால் அந்தக் கூற்றுக்களையும் விஞ்ஞானிகள் நிராகரித்திருந்தார்கள்.இறந்ததாகவும் பின்பு அதிலிருந்து மீண்டு வந்ததாகவும் சொல்லிக் கொள்பவர்களின் கூற்றேயொழிய இறந்தவர்களின் கூற்று அல்ல என்பதே அவர்களின் வாதம்.இது எப்படி இருக்கு? விஞ்ஞானிகளை நம்ப வைக்க ஆவியே வந்தாலும் “நீர் ஆவி என்பதற்கு என்ன ஆதாரம்? நீரிலிருந்து வரும் ஆவியை ஏற்றுக் கொள்கிறோம்.நீர் ஆவி என்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?”என்று தான் விஞ்ஞானம் கேட்கும். “அடப் பாவி”  என்று திட்டியவாறே ஆவியும் போய் விடும். விஞ்ஞானிகள் இந்த அனுபவங்களை ஒப்புக் கொள்ளாததன்  காரணம் இவைகள் யாவும் இறக்கும்போது செயலிழக்கும் மூளையில் ஏற்படும் பிரமைகள் அல்லது, ஒருவிரிந்த கனவு என்று அவர்கள் கருதுவதனாலேயாகும் .
சரி,இறப்பின் பின் ஏற்படும் அனுபவங்களை(life after death) அல்லது சாவுக்கு அண்மித்ததான அனுபவத்தை (near death experience) விஞ்ஞானிகள்  நம்புகிறார்களோ  இல்லையோ நீங்கள் நம்புகிறீர்களா  இல்லையா? “சொன்னால் தானே, நம்புவதா இல்லை உன்னை நெம்புவதா என்று தெரியும்.” என்று சொல்கிறீர்களா?அதுவும் சரி தான்.அதையும் இரண்டு வகையாகச் சொன்னால் தான் தெளிவு அதிகமாக இருக்கும்
.1.மேலைத்தேய நாட்டினரின் அனுபவங்கள்
2.கீழைத்தேய நாட்டினரின் அனுபவங்கள்
மேலைத்தேய நாட்டினரின் அனுபவங்கள்
1. சைப்பிரஸ் நாட்டின் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அனுபவம்…. அந்தப் பெண்ணுக்கு ஒரு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை நடந்து நான்காவது நாள் அந்தப்பெண் பல மணி நேரங்களுக்கு நினைவிழந்தாள். தான் நினைவிழந்திருந்தாலும் உயிர் பிழைத்துப் பல ஆண்டுகளுக்குப் பின்னர்கூட தான் மயக்கமாயிருந்த நிலையில் அறுவை சிகிச்சை நிபுணரும், மயக்கமருந்து கொடுப்பவரும் நிகழ்த்திய உரையாடல்களை நினைவுகூற முடிவதாகக் கூறினார். அவர் கூறுகிறார், " நான் எனது உடலுக்கு மேலே படுத்திருந்தேன் - எந்த வலியுமில்லை. அப்போது நான் கீழே இருக்கும் எனது உடலில் முகம் வலியால் துடிப்பதைக் கண்டு பரிதாபப் பட்டேன். நான் அமைதியாக மிதந்து கொண்டிருந்தேன்.  பிறகு... நான் ஒரு இருண்ட  இடத்தை நோக்கி - இருண்டிருந்தாலும் பயமேதுமில்லை. மிதந்து கொண்டிருந்தேன் - பிறகு ஒரே அமைதி. சிலபொழுதில் எல்லாமே மாறியது - மறுபடியும் எனது உடலுக்குள் வந்துவிட்டேன். மறுபடியும் வலியை உணர ஆரம்பித்தேன்"என்று.
2. Maria என்ற வாஷிங்டன் நகரைச் சேர்ந்த பெண் 1977ம் ஆண்டு தன் நண்பர்களைக் காண முதல்முறையாக சியாட்டில் நகருக்கு வருகிறாள். வந்த இடத்தில் அவளுக்கு பலத்த இருதயநோய் ஏற்பட அவள் Harbourview மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அங்கு Kimberly Clerk  என்ற சமூகசேவகி மரியாவை உடனிருந்து கவனித்து வந்தார். திடீரென மரியாவின் இருதயம் செயலிழக்க, மருத்துவர்கள் செயற்கை முறையில் அவள் இருதயத்தை இயங்க வைக்க முயற்சி செய்து வெற்றி அடைந்தார்கள். 
அதன் பின்னர் Kimberly Clerk  இடம் Maria  சொன்ன செய்திகள் தான் பரபரப்பானவை. "வைத்தியர்களும் தாதிமார்களும் எனத் உடலைச் சோதனை செய்துகொண்டிருந்தபோது அதிசயமான அனுபவம் எனக்கு ஏற்பட்டது. நான் நான்காவது  மாடியின் உயரத்திற்கு மிதந்து சென்று அந்த மேற்கூரையிலிருந்து என்மீது நடத்தப்படும் சோதனைகளைக் காண முடிந்தது என்று மரியா கூறியபோது கிளார்க் அதை நம்பவில்லை. ஆனால் அதற்குப்பிறகு அவள் கூறியவை திகைப்பூட்டின. தனது உடல்நிலைபற்றிய குறிப்புப்படங்கள் கணனியின் திரையிலிருந்து  வெளிவருவதைப் பார்த்ததாகக் கூறினாள். அதுதவிர, தான் மேலும் அந்தக் கட்டிடத்திற்கு வெளியே மிதந்து சென்றதாகவும் அவள் கண்ட அவசர சிகிச்சை வழியைப்பற்றியும் அதன் கதவுகள் முன்புறமாகத் திறக்கப்படுவதைப் பற்றியும் விரிவாகக் கூறியபோது நம்பாமலும் இருக்க முடியவில்லை. ஏனென்றால், அந்த மருத்துவமனைக்கு முதல் முறையாக மரியா வந்திருப்பதால் அதன் பல வேறு இடங்கள் பற்றி அவள் அறிந்திருக்க வழியேயில்லை. அவள் மேலும் தனது கட்டிடத்திற்கு வலதுபக்கத்தில் உள்ள கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் ஒரு ஜன்னலின் விளிம்பில் ஓரத்தில் கிழிந்துபோன ஒரு டென்னிஸ் காலணியைக்  கண்டதாகவும் அதன் முடிச்சு காலணியின் அடிப்பாகத்தில் இருந்ததாகவும் கூறினாள். மரியா இருந்த இடத்திலிருந்து அப்படிப்பார்க்க வாய்ப்பே இல்லை. கிளார்க் அடுத்த கட்டிடத்தின் மூன்றாவது மாடிக்குச் சென்று அந்த ஜன்னலில் சோதனையிட்டபோது மரியா கூறியது சரியாகவே இருப்பது தெரியவந்தது.
3. மற்றுமொரு நிகழ்ச்சி.
Laurelynn என்ற பெண்மணி ஒரு சாதாரண அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்கிறாள். ஆனால், அறுவை சிகிச்சையின் போது ஆழமாகக் கத்தி பாய்ந்ததால் அவளது உடலிலிருந்து ஏராளமான ரத்தம் வெளியேறியது. அறுவை சிகிச்சை நிபுணர்கள் பரபரப்புடன் இருந்தார்கள். அவர்கள் உடையில் வெளியே எங்கு பார்த்தாலும் ரத்தம். என்னால் அங்கு என்ன நடக்கிறதென்று அறிந்துகொள்ள முடியவில்லை. அப்போது என்னால் வைத்தியர்கள் என்னுடைய உடலில்தான் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை. ஆனால் அதுபற்றிய கவலையும் அப்போது எனக்கில்லை; நான் மிகவும் சுதந்திரமாக உணர்ந்தேன்; அருமையான நேரம் அது. அவர்களிடம், 'எனக்கு ஒன்றுமில்லை, என்னைப்பற்றிக்கவலைப் படாதீர்கள், நான் சந்தோஷமாக இருக்கிறேன்' என்று சொல்ல நினைத்தேன். உடலைவிட்டுப் பிரிந்து சென்ற நான் வேறு உலகத்தில் பிரவேசிக்கிறேன். அங்கு அமைதி- பூரண அமைதி- உடலில் எந்தவிதமான வலியுமில்லை. ஆனால் ஒரு சுகானுபவம் இருந்தது; இருட்டான, ஒரு மகிழ்ச்சி ததும்பும் ஒரு இடம்; அன்பும் ஆதரவும் என்னைச் சுற்றிப் பரவியிருப்பதை உணர்ந்தேன். அந்த சுகமான இருட்டு வழி தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தது. இதுவரை பூமியில் அனுபவிக்காத ஒரு மயிர்க்கூச்செறியும் அனுபவம் அது- இருட்டுவழியின் எல்லையில் ஒரு மஞ்சள் நிறம் கலந்த வெண்மையான ஒளியைக் காண்கிறேன். அந்த அமைதியை அந்த ஆனந்தத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. வெண்மை கலந்த ஜோதியை நான் அடைவதற்கு முன்னால், எனது வலதுபுறம் யாரோ இருப்பதை உணரமுடிந்தது- அதுவேறுயாருமில்லை- ஏழு மாதங்களுக்கு முன்னால் இறந்த என் மனைவியின் சகோதரன்தான். என்னுடைய கண்களாலும் காதுகளாலும் பார்க்கவோ கேட்கவோ முடியாவிட்டாலும் அது எனது மனைவியின் சகோதரன்தான் என்பதை உணரமுடிந்தது. அவனுக்கு உருவமில்லை; ஆனால் அவனை உணர முடிந்தது- அவனது சிரிப்பை அவனது நகைச்சுவை உணர்வை என்னால் அறிய முடிந்தது- அவன் என்னை வரவேற்கக் காத்திருந்தான்" – Kenneth Ring இன்  ‘Lessons from the Light’ எனும் நூலிலிருந்து.
கீழைத்தேய நாட்டினரின் அனுபவங்கள்
1.1986 இல் Satwant Pasricha வும்,Ian Stevenson உம்  “Americamn Society Of Phychical Research’ எனும்  ஆராய்ச்சிக் கட்டுரையில் ‘இறப்பின் பின் வாழ்வு’ என்ற வகையில் 16  சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அவற்றில் சில
1.Vasudev Pandey :இவரைப் பேட்டி கண்டது 1975இல்.இவர் பிறந்தது 1921 இல். Vasudev Pandey 10 வயதாக இருக்கும் போது கடுமையான நெருப்புக் காய்ச்சலால் இறந்து விட (அதாவது அப்படிக் கருதி விட) பிரேதம் தகனக் கிரியைகளுக்காக மயானத்துக்காகக் கொண்டு செல்லப்பட்டது.ஆனால் அங்கே அவருக்கு உயிர் இருப்பதான சில அறிகுறிகள் தெரிய அவர் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.அங்கே உணர்ச்சி இல்லாமல் கோமா நிலையில் 3 நாட்கள் இருந்தார்.அந்த 3 நாட்களில் தனக்கு நேர்ந்தவற்றை அவர் பின்வருமாறு தெரிவித்தார்.
“இருவர் என்னை இறுக்கிப் பிடித்தபடி தங்களுடன் சேர்த்து என்னையும் நடத்திக் கொண்டு போனார்கள்.நீண்ட நேரம் நடந்ததால் எனக்குக் கால்கள் சோர்ந்து விட,என்னை இழுத்துக் கொண்டு போய் ஒரு பயங்கரமான கறுப்பு நிறமுடைய மனிதனின் முன் நிறுத்தினார்கள்.அவன் ஆடைகள் ஒன்றும் அணிந்திருக்கவில்லை. தோட்டக்கார வாசுதேவனைக் கொண்டு வரச் சொன்னால் சின்னப் பொடியனைக் கொண்டு வந்து விட்டதாக அவன் கடுமையான வார்த்தைகளால்  என்னைக் கொண்டு வந்தவர்களைக் கடிந்து கொள்ள எனக்கு சுயவுணர்வு திரும்பி விட்டது.அப்போது எனக்கு முன்னால் நின்ற நபர்களுடன் தோட்டக்கார வாசுதேவனும் நின்று கொண்டிருந்தார்.அவரைப் பார்த்த போது நல்ல ஆரோக்கியமாகத் தான் தென்பட்டார்.எனினும் அடுத்த நாள் காலை காலமாகி விட்டார்.”
2.Durga Jatav :இவரைப் பேட்டி கண்டது 1979 இல்.அப்போது அவருக்கு 50 வயதிருக்கும்.கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன் அவருக்கு அந்த வினோதமான சம்பவம் நேர்ந்திருக்கிறது. கடும் நெருப்புக் காய்ச்சலால் எத்தனையோ நாட்கள் துன்பப்பட்டு கடைசியில் அவரது உடல் குளிர்ந்து விறைத்துக் கொண்டு விட இறுதிக் கிரியைகளுக்காக ஆயத்தம் செய்த போது உடலில் மீண்டும் அசைவுகள் தென்பட்டன.அதன் பின், தான் மரணமான(?) பின் என்ன நேர்ந்தது என்று கூறுகிறார்.
“ 10 நபர்களால் நான் பலவந்தமாக வழி நடத்திச் செல்லப்பட்டேன்.அவர்களிடமிருந்து நான் தப்பிச் செல்ல முயற்சித்த போது எனது கால்கள் முழங்காலுடன் வெட்டப்பட்டன.அதன் பின்பு கிட்டத்தட்ட 50 பேரளவில் இருந்த மண்டபத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டேன்.அவர்களில் ஒருவரின் கையில் இருந்த பெயர்ப்‌பட்டியலில் எனது பெயர் இருக்கிறதா என்று பார்க்கப்பட்ட பின் தாங்கள் சொல்லாத ஆளை அழைத்து வந்திருப்பதாக அவர்களை ஏசி என்னைத் திரும்பிப் போகுமாறு கூறினார்கள்.காலில்லாமல் எப்படித் திரும்பிப் போவது என்று நான் அவர்களிடம் கேட்ட என்னிடம் எத்தனையோ சோடி வெட்டப்பட்ட கால்கள்  காட்டப்பட்டன.அவற்றில் எனது கால்களை நான் அடையாளம் கண்டு காட்ட அவை அங்குள்ள சிலரால் மீண்டும் எனது உடலில் பொருத்தப்பட்டன.சிறிது நாட்களுக்கு காலை மடித்து வேலை செய்ய வேண்டாம் என்றும் எனக்கு அறிவுரை கூறப்பட்டது.சற்று நேரத்தின் பின் எனக்கு சுயவுணர்வு திரும்பி விட்டது.”
துர்க்கா‘உயிர்த்த’ பின் இவரது இரு முழங்கால்களிலும் வித்தியாசமான அடையாளம் இருந்ததெனவும் பின்பு அது காலப்போக்கில் மறைந்து விட்டதெனவும் அவரது சகோதரி கூறியதும் இங்கே கவனிக்கத்தக்கது.
3.Chhajju Bania  :இவரிடம் பேட்டி எடுத்தது 1981 இல்.அப்போது அவருக்கு 40 வயது.இவருக்கும் அப்படியானதொரு வினோத சம்பவம் 6 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாகக் கூறினார்.கடும் சுவீனத்தால் அவரது உடல் நிலை மிகவும் மோசமாகிக் கொண்டே வந்து கடைசியில் அவர் இறந்ததாகக் கருதி இறுதிக் கிரியைகளுக்கான ஏற்பாடுகள் நடக்க அவர் மீண்டும் ‘உயிர்த்து’ தனக்கு நிகழ்ந்ததைக் கூறினார்.
“நான்கு கறுத்த நபர்கள் நபர்கள் என்னை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.எனது உடல் மிகவும் சிறிதாகி விட்டதாக உணர்ந்தேன்.ஒரு வயதான பெண்மணியின் முன்னால் நிறுத்தப்பட்டேன்.அவரின் முன்னால் குவியல் குவியலாகப் புத்தகங்களும் கோர்வைகளும் வைக்கப்பட்டிருந்தன.அவர் அவற்றிலொரு கோர்வையை எடுத்துப் பார்த்து  தங்களுக்குத் தேவை வியாபாரியாகிய சஜ்ஜு பானியா அல்ல.குயவனாகிய சஜ்ஜு குமார் தான். சஜ்ஜு பானியா இன்னும் வாழ வேண்டியிருப்பதால் திரும்பிப் போகலாம் என்று கூறப்பட்டதும் நான் ஒரு உயர்ந்த ஆசனத்தில் வெண்தாடியுடனும்,மஞ்சள் ஆடையுடனும் அமர்ந்திருந்த ஒருவரின் முன் நிறுத்தப்பட்டேன்.உனக்கு என்ன வேண்டும் என்று அவர் கேட்க நான் அங்கேயே தங்கப் போவதாகக் கூறினேன்.அதற்கு அவர் கையை நீட்டுமாறு கூறினார்.நானும் கையை நீட்டினேன்.அவர் எதுவும் தந்தாரா இல்லையா என்று தெரியவில்லை.அதே சமயத்தில் எனக்கு சுயவுணர்வும் திரும்பி விட்டது.
சரி,இரு வேறுபட்ட நாட்டினரினதும் அனுபவங்கள் அவர்கள் சார்ந்த இடம்,அவர்களின் நம்பிக்கை மற்றும் சமய மத கலாச்சாரப் பின்னணியில் வேறுபடுவதைக் காணலாம். மேலைத்தேய நாட்டினரின் அனுபவங்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் கீழைத்தேய  நாட்டினரின் அனுபவங்கள் நீண்ட காலத்திற்குப் பின் அதாவது எத்தனையோ வருடங்களுக்குப் பின் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் காணலாம். கீழைத்தேய நாட்டின்  பின்தங்கிய தொழில்நுட்ப வளர்ச்சி தான் இதற்குக் காரணம் எனினும் நீண்ட காலத்திற்குப் பின் எடுக்கப்பட்ட பேட்டிகள் என்பதால் அவற்றின் நம்பகத்தன்மை குறைவாகவே காணப்படுகிறது.
  இனி மேலைத்தேய நாட்டினரினதும் கீழைத்தேய நாட்டினரினதும் அனுபவங்களில் உள்ள வித்தியாசங்களைப் பார்ப்போமா?
1. கீழைத்தேய நாட்டினரின் அனுபவங்கள் பெரும்பாலும் யாரேனும் சிலரால் ஒரு இடத்திற்குக் கொண்டு ஒருவரின் முன்னால் நிறுத்தப்பட்டதாகவும்  பின்பு அவர்கள் தவறாகக் கொண்டு வந்து சேர்த்து விட்டதாகவும் தெரிவித்து ‘இன்று போய் நாளை வா’ கூறித் திருப்பி அனுப்பப் பட்ட சம்பவங்களாகவே காணப்படுகின்றன.ஆனால் மேலைத்தேய நாட்டினரின் அனுபவங்கள் ஒருத்தரின் உத்தரவுமின்றி தாங்களாகவே திரும்பி வந்ததாகவே தெரிவிக்கப்பட்டுள்ளன.
2.மேலைத் தேய நாட்டினரின் அனுபவங்கள் தங்கள் உடலைத் தாங்களே கண்டதாகத்  தெரிவித்த போதும்,கீழைத்தேய நாட்டினரின் அனுபவங்கள் அவ்வாறு தெரிவிக்கவில்லை.
3. மேலைத் தேய நாட்டினரின் அனுபவங்கள் அந்த அனுபவத்தின் போது ஒரு குகைக்குள்ளாகச் சென்று திரும்பிய அனுபவத்தை அடைந்ததாகத் தெரிவித்த போதும், கீழைத்தேய நாட்டினரின் அனுபவங்களில் அவ்வாறு தெரிவிக்கப்படவில்லை.
4. மேலைத் தேய நாட்டினரின் அனுபவங்கள் அந்த அனுபவத்தின் போது ஏற்கனவே இறந்த தங்களுக்குத் தெரிந்தவர்களைக் கண்டதாகக் கூறிய போதும், கீழைத்தேய நாட்டினரின் அனுபவங்கள் அவ்வாறு கூறவில்லை.

குறிப்பு:இந்தக் கட்டுரைக்கு livingextra.com,மற்றும் near-death.com  ஆகிய வலைத்தளங்களிருந்து தகவல்கள் பெறப்பட்டிருந்தன.
                        
250x300 Natural Skin Shop Coupon

தனியுடமை வியாபாரப் பெயர்ப்பதிவு

                                 தனியுடமை வியாபாரப் பெயர்ப்பதிவு
 
கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் புதிதாக ஆரம்பிக்கப்படும் தொழில் முயற்சிகள் ஆண்டுதோறும் அதிகரித்துச் செல்வதை எங்கள் ஊரிலேயே அவதானிக்கக் முடிகிறது.அது தவிர பருத்தித்துறை பிரதேச செயலகத்திலும் இது பற்றிய புள்ளி விபரத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.2010 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2011இல் சட்ட ரீதியாகப் பதிவு செய்யப்பட்ட தனியுடமை வர்த்தக முயற்சிகள் 12 % ஆல் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரியான திட்டத்துடன் அதாவது ஆரம்பிக்கப்படவிருக்கும் வியாபாரம் எதனை மையமாகக் இயங்கவிருக்கிறதோ,அதற்கு அப்பிரதேசத்தில் உள்ள கேள்வி,அதற்கு ஏற்கனவே உள்ள போட்டியாளர்களிடமிருந்து  எவ்வாறு வேறுபட்டு உங்கள் பொருள் அல்லது சேவையை வழங்கவிருக்கிறீர்கள் என்பதற்கான தெளிவு ,வியாபாரத்தில் ஈடுபடுத்தப்படவிருக்கும் வளங்களின் கிடைப்பனவு,பொருள் அல்லது தரத்தின் சேவையைத் தொடர்ந்து பேணுதல் போன்ற சரியான திட்டங்களுடன் தொடங்கும் வியாபாரம் என்றுமே சோடை போகப்போவதில்லை.அப்படிப் போனாலுமே கூட அது தற்காலிகப் பின்னடைவாகத்தான் இருக்கும்.
என்ன தான் நிரந்தர வருமானம் தரும் தொழில், தொழிற் பாதுகாப்பைத் தந்தாலும்,சொந்தத் தொழில் முயற்சியில் சில கூடுதலான சிரமங்கள் இருந்தாலும், சொந்தத் தொழிலில் உள்ள திருப்தி நிரந்தர வருமானம் தரும் தொழிலில் இல்லை.என்ன தான் நிரந்தர வருமானம் என்று சொன்னாலும் கூடஅதில் உங்கள் முயற்சி அதிகரித்தாலும் வருமானம் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கப் போகிறது. .ஆனால் சொந்தத் தொழிலில் உங்கள் முயற்சி அதிகரித்தால் உங்களுக்குக் கிடைக்கும் லாபமும் அதிகரிக்கப் போகிறது. (ஏன் நட்டமும் அதிகரிக்கலாம் தானே என்று எதிர் மறையாக யோசிக்க வேண்டாமே.)
சொந்தத் தொழில் முயற்சி செய்ய உத்தேசித்திருப்போரை ஊக்குவிக்கும் எண்ணத்தோடும்,அப்படியான உத்தேசம் இல்லாதோருக்கு அப்படியொரு எண்ணத்தை வரவழைக்கும் நோக்கத்துடன் தான் திரு சாரூபன்.திரு ஜெயகாந்த் ஆகியோரின் ‘கேள்வி ஒன்று பதில் இரண்டு’ பகுதியும் பிரசுரிக்கப்படுகின்றது.இதுவும் உங்களுக்கு ஒரு உபயோகமான ஆக்கமாக இருக்கலாம் என்பது எனது எண்ணம்.
சரி,இனி தனியுடமை வியாபாரப் பெயர்ப்பதிவை எவ்வாறு மேற்கொள்வது  என்று படிப்படியாக  விபரிக்கின்றேன்.
1.முதலில் தனியுடமை வியாபாரப் பெயர்ப்பதிவைச் செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தினை உங்களுக்குரிய பிரதேச செயலகத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும்.அதன் மாதிரி வடிவம் கீழே தரப்பட்டுள்ளது
2.மேலே கூறப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை  நிரப்பிக் கொண்டுஅத்துடன் நீங்கள் தொழில் செய்யவிருக்கும் இடத்தின்  மீது உங்களுக்கிருக்கும்  சட்ட ரீதியான பிணைப்பைக் காட்டக்கூடிய காணி உறுதி,வாடகை அல்லது குத்தகை ஒப்பந்தம்,அல்லது காணிக்காரரின் சார்பில் அவரது அதிகாரபூர்வமான பிரதிநிதியாகச் செயற்பட அனுமதி வழங்கும் அதிகாரப்பத்திரம் (இப்படி நீட்டி முழக்கினால் சில வேளைகளில் உங்களுக்குப் புரியாமலிருக்கலாம் ‘Power Of Attorney’ என்று சொன்னால் ‘அட அது தானா இது?சொல்லவேயில்ல’ என்பீர்கள்.)ஆகியவற்றைக் கொண்டு போக வேண்டும்.P.O.A ஆயின் அதில் “இன்னரை இந்த இடத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதியளிக்கின்றேன்”என்ற மாதிரியான ஒரு வசனம் இருப்பது அவசியம்.மூலப் பத்திரத்தையும்,பிரதிப்பத்திரத்தையும் கொண்டு போய்க் கொடுத்தால் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து விட்டு மூலப் பிரதி திருப்பி உங்களிடம் கையளிக்கப்படும்.அத்துடன் ,பிரதேச செயலாளரால் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட  ஒரு அதிகாரியால் உங்களின் விபரங்கள் அரைவாசிப் பக்கத்தில்  நிரப்பப்பட்டு மீதமிருக்கும் பக்கத்தில் உங்களது ஏனைய சில விபரங்கள் உங்களது பகுதி  கிராம சேவையாளர் மூலமாக உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படும்.சில வேளைகளில் சற்றுப் பொறுத்துக் கொள்ளுமாறு கூறி  உடனே அந்த விண்ணப்பத்தைத் தருவார்கள்.அல்லது இன்னொரு நாள் நீங்கள் போக வேண்டி வரும்.
3. உங்கள் பகுதி கிராம சேவையாளரிடம் போய் மிகுதி அரைவாசிப் பகுதியை நிரப்பித் தருமாறு அவரிடம் கொடுக்க வேண்டும்.இதில் ஏனைய கேள்விகளோடு  உங்கள் வியாபாரத்தின் பெயரில் பெயர்ப்பலகை உள்ளதா,பற்றுச் சீட்டு உள்ளதா என்றும் இரண்டு கேள்விகள் கேட்கப்படும்.கிராம சேவையாளர் சில வேளைகளில் பற்றுச் சீட்டை பார்க்க வேண்டும் என்று கேட்பதோடு,பெயர்ப்பதிவைப் பார்ப்பதற்கும் உங்கள் வியாபார ஸ்தலத்திற்கும் விஜயம் செய்யக்கூடும்.ஆனால் இதெல்லாமே உங்களுக்கும் கிராம சேவையாளருக்கும் இடையிலுள்ள புரிந்துணர்விலும், பிணைப்பிலும் தான் தங்கியிருக்கிறது.இதில் இன்னொரு சிக்கலான விடயம் உள்ளது.பெயர்ப்பலகை,பற்றுச் சீட்டு இரண்டிலுமே உங்கள் வியாபாரப் பெயர்ப்பதிவிலக்கம் இருப்பது அவசியம்.ஆனால் கடைசியாகத் தானே அது உங்களுக்குக் கிடைக்கப் போகிறது.அப்படியானால் என்ன செய்யலாம்?ஒன்று  இரண்டிலுமே அதற்கான இடத்தைக் காலியாக வைத்து விட்டு பின்பு பதிவிலக்கம் கிடைத்த பின் ஏதேனும் ஒரு வகையில்(பற்றுச் சீட்டாயின் பேனாவாலும், பெயர்ப்பலகையாயின் தூரிகையாலும்) நிரப்பிக் கொள்ளலாம்.அல்லது மீண்டும் சொல்கிறேன்...... இதெல்லாமே உங்களுக்கும் கிராம சேவையாளருக்கும் இடையிலுள்ள புரிந்துணர்விலும், பிணைப்பிலும் தான் தங்கியிருக்கிறது. கிராம சேவையாளரால் நிரப்பப்பட வேண்டிய படிவத்தை நீங்கள் கீழே காணலாம்.
4.கிராம சேவையாளரின் விண்ணப்பத்தைக் கொண்டு மீண்டும் பிரதேச செயலகத்திற்கு ஒரு பயணம்.இம்முறை  பிரதேச செயலாளரால் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட  ஒரு அதிகாரியால் இன்னாரால் இந்த இடத்தில் அமையவிருக்கும்  இந்த நிறுவனத்தைப் பதிவு செய்வதற்கு சிபாரிசுக்கடிதத்தை வழங்கியுதவுமாறு உதவித் தொழில் ஆணையாளரிடம் ஒரு கடிதம் மூலமாகக் கேட்டுக் கொள்ளப்படும்.உங்களுக்கு ஒரு பிரதியும், உதவித் தொழில் ஆணையாளருக்கு ஒரு பிரதியுமாக இரண்டு பிரதிகளுமே உங்களிடமே வழங்கப்படும்.அந்தக் கடிதத்தின் மாதிரி கீழே தரப்பட்டுள்ளது.
5. உதவித் தொழில் ஆணையாளருக்கு வழங்கப்பட பிரதியையும் கொண்டு நீங்கள் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் அமைந்திருக்கும் மாவட்டத் தொழில் அலுவலகத்திற்குக் கொண்டு சென்று அவரிடம் கையளிக்க வேண்டும்.எத்தனை நாட்களின் பின் வந்து அனுமதிக் கடிதத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அங்கு கூறப்படும்.அல்லது பதிவுத் தபால் மூலம் உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.மாவட்டத் தொழில் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்படும் கடிதம் எப்படி இருக்கும் என்பதை உங்கள் பார்வையைச் சற்றுப் பதித்துத் தெரிந்து கொள்ளலாம்.

ஆக நீங்கள் குறைந்தது ஐந்தாறு தடவைகளாவது பிரதேச செயலகத்திற்குப் போக வேண்டி வரும்.உங்களால், கிராம சேவையாளரால்,நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள்,மாவட்டத் தொழில் அலுவலகத்தில் பெற்றுக் கொண்ட கடிதம் எல்லாவற்றையும் பிரதேச செயலகத்தில் ஒப்படைக்க முன்னர் பிரதி எடுத்துக் கொள்ளல் உசிதம்.
இந்த ஆக்கத்திற்கான யோசனையைத் தந்த சாரூபனுக்கு வல்வை  அலையோசையின்  சார்பில் எனது நன்றிகள்.     

6.நீங்கள் மீண்டும் மாவட்டத் தொழில் அலுவலகத்திற்குச் சென்று பெற்றுக் கொண்ட  அல்லது பதிவுத் தபால் மூலம் பெற்றுக் கொண்ட அனுமதிக் கடிதத்தைக் கொண்டு மீண்டும் பிரதேச செயலகத்திற்கு ஒரு முறை போக வேண்டும்.அந்தக் கடிதத்தை வாங்கிக் கொண்ட பின்னர் வியாபாரப் பெயர்ப்பதிவிற்கான முத்திரைக் கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவீர்கள்.அந்தக் கொடுப்பனவிற்கான பற்றுச் சீட்டினை ஒரு பிரதி எடுத்துக் கொண்டு அந்தப் பிரதி,  மாவட்டத் தொழில் அலுவலகத்தில் பெற்றுக் கொண்ட கடிதத்துடன் இணைக்கப்பட்டு மூலப் பிரதி உங்களிடம் கையளிக்கப்படும்.அனேகமாக அடுத்த நாளோ அல்லது இரண்டு நாட்கள் கழித்தோ வந்து வியாபாரப் பெயர்ப் பதிவுச் சான்றுப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவீர்கள்.சில வேளைகளில் அன்றே, ஒன்றிரண்டு மணித்தியாலங்களில் பெற்றுக் கொள்ளலாம்.அதனை நீங்கள் கீழே காணலாம்.