ஞாயிறு, 27 நவம்பர், 2016

தற்காப்புக்கலை வீராங்கனை திருமதி மாலதி முரளியோடு ஒரு நேர்காணல்

வல்வையின் முதலாவது சாண்டோ குழு வீரர்களுள் ஒருவரான முரளி,(இவரோடு சேர்ந்து ராஜாராம் மற்றும் செல்வக்குமார் ஆகியோரும் சாண்டோ பயிற்சி பெற்று, சாதனைகள் புரிந்தது குறிப்பிடக்கூடியது) வல்வையின் முதலாவது கராத்தே தேசிய மட்டப் போட்டியில் தங்கம் வென்ற  திபாகர்(மூத்த மகன்), வல்வையின் முதலாவது குறைந்த வயது கராத்தே போட்டியாளரான பரிதியன்(இளைய மகன்)  இவ்வாறான சிறப்புக்களைக் கொண்ட குடும்பத்தில், இன்னுமொரு சிறப்பாக வல்வையிலிருந்து சென்று தேசிய கராத்தே போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற, வடமாகாணத்தின்   முதலாவது பெண்ணாக திருமதி மாலதி முரளி. அவரது பேட்டியைப் பெற்ற முதலாவது சஞ்சிகையாக ‘வல்வை அலையோசை’. இனி அவரோடு ஒரு நேர்காணல்.




கொழும்பில் இடம்பெற்ற தேசிய மட்டத்திலான கராத்தே போட்டியில் சண்டையில் மாலதி இரண்டாம் இடம் பெற்ற போது
1. .உங்களுக்குக் இந்தக் கலையைக் கற்றுக்கொள்ளத் தூண்டுதலாக அமைந்தது என்ன?
இதற்கு தூண்டுகோலாக இருந்தது எனது தந்தை தான். எனது தந்தை குட்டிமணி, ஜெகன் ஆகியோருடன் செயற்பட்ட ஒரு ஆரம்ப காலப் போராட்ட வீரர். ஞானலிங்கம் என்ற பெயரில் அவரைத் தெரியாவிடினும் ‘ஜீப் பிரட்டி’ ஞானலிங்கம் என்று சொன்னால் பழைய ஆட்களுக்கு அவரைத் தெரியும். ஒரு குண்டுவெடிப்பில் காயமுற்ற அவரைக் காவல்துறை பிடித்து யாழ்பாணம் கோட்டைக்குப் கொண்டு போகும் போது வல்லை வெளியில் அவரைக் கொண்டு சென்ற ஜீப் வாகனத்தை விபத்துக்குள்ளாக்கி விட்டுத் தப்பியதால் தான் அவருக்கு அந்தப் பெயர் வந்தது.  அவருடன் எனக்கு இருக்கக் கிடைத்தது கொஞ்சக் காலம் தான். அந்தக் கொஞ்சக் காலத்திலும் அவர் “யோகாசனம் மனதுக்கு சக்தியைத் தரும் பயிற்சியாகும். அதே போல் கராத்தே உடலுக்கு சக்தியைத் தரும் பயிற்சியாகும். இரண்டையும் கற்க வேண்டும்” என்று அவர் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் யோகாசனத்தை முறையாகப் பயின்றவர். கராத்தேயை பழகுவதற்கு விருப்பமிருந்த போதிலும் அதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. அப்பாவுக்கு விருப்பமான, கற்க முடியாமற் போன கலை என்ற எண்ணம் மனதில் பதிந்திருந்ததானால் எனக்கும் இயற்கையாகவே அதனில் ஆர்வமும், அதனைப் பழக வேண்டுமென்ற எண்ணமும் உண்டாகி விட்டது.
2. எத்தனையாம் ஆண்டிலிருந்து இந்த தற்பாதுகாப்புக் கலையைக் கற்று வருகிறீர்கள்? உங்களுக்கு இந்தக் கலையின்  குரு யார்?
2014 ஆம் ஆண்டிலிருந்து கற்று வருகிறேன். எனது குரு திரு. இரத்தினசோதி மாஸ்ரர் அவர்கள் ஆவார்.






மாலதியின் மூத்த மகனும் கராத்தே தேசிய மட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவருமான திபாகர் 2010 இல் ஊரணி வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தால் கெளரவிக்கப்பட்டபோது
3. எத்தனையோ தற்காப்புக் கலைகள் இருக்கின்றன. அவற்றுள் குறிப்பாக இந்தக் கலையை நீங்கள் தெரிவு செய்தது எதற்காக என்று கூற முடியுமா?

‘கராத்தே’ என்றால் ‘வெறுங்கை’ என்று அர்த்தம். இது ஆயுதமின்றித் தற்காத்துக் கொள்ளும் முறை. எல்லா வேளைகளிலும் எம்மிடம் ஆயுதம் இருப்பதில்லை. எப்போதும் எம்மிடம் இருப்பது எமது கைகள் என்பதனால் தான். அத்துடன் நான் ஏற்கனவே கூறியது போல் இது எனது அப்பாவுக்கு விருப்பமான கலை என்பதானாலும் தான்.

 4. இவ்வாறான தற்காப்புப் பயிற்சிகள் செய்பவர்கள் அவற்றில் சிறந்து விளங்குவதற்கு ஓட்டம், நீச்சல், கயிறடித்தல், மற்றும் யோகாசனப் பயிற்சிகள் செய்வதாக அறிந்திருக்கிறேன்? உங்களுக்கு அவற்றில் ஆர்வம் உண்டா? அவற்றில் ஈடுபடுவதுண்டா?

நிச்சயமாக, ஆனால் நான் ஒரு குடும்பத்தலைவியாக இருப்பதனால் என்னால் இவற்றிற்காக நேரம் ஒதுக்குவது என்பது மிகவும் கடினமான ஒரு விடயம். எனினும் இவை எல்லாவற்றிலும் மிகவும் சிறந்தது யோகாசனமே என்பது எனது கருத்தாகும்.





கொழும்பில் இடம்பெற்ற தேசிய மட்டத்திலான கராத்தே போட்டியில் ‘காட்டாவில்’ மாலதி மூன்றாம் இடத்தை இன்னொருவருடன் இணைந்து பெற்ற போது
5. போட்டிகளுக்காக நீங்கள் முதலில் மேடையேறியது எங்கே, எப்போது?

முதலாவது மேடை 2015.10.04  அன்று எமது தற்காப்புக் கலையகத்தால் ‘சிகான் பொன் ரொபேர்ட்’ மாஸ்ரர் அவர்களின் நினைவாக தும்பளை பருத்தித்துறையில் நடாத்தப்பட்ட போட்டியில் கலந்து கொண்டு முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டேன்.

6. உங்களை, இந்தக் கலையில் ஈடுபட உங்கள் கணவர் முழுமனதோடு அனுமதிக்கிறாரா? இது சம்பந்தமாக அவருடைய கருத்தென்ன?

முழு மனதோடு அனுமதிக்கிறார். அவரும் ஒரு சாண்டோ வீரர். அவருக்கு விளையாட்டுத்துறையில் மிகுந்த ஆரவம் உள்ளது. அத்தோடு அவருக்கும் கராத்தேயில் விருப்பமுள்ளது. ஆனால் அவர் அதனை முழுமையாகக் கற்கவில்லை. ஆனால் எமது மகன்கள் இருவரையும் அதில் தேர்ச்சி மிக்கவராக உருவாக்க வேண்டும் என்பது எமது அவா. அவ்வேளையில் எனக்கு இப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்தது அவருக்கும் மகிழ்ச்சி.

 7. பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிரான வன்முறை அதிகரித்துள்ள இக்காலத்தில் இது சம்பந்தமாக அவர்களுக்குக் கூற விரும்பும் அறிவுரை என்ன?

தற்காப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது. பெண்களுக்கு அத்தியாவசியமானது. சிறுவயதிலிருந்து கற்பது என்பது இக்கலையில் மிகவும் தேர்ச்சி உள்ளவராகவும், மனோபலமுள்ளவர்களாகவும் உருவாக்கும் என்பது எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய விடயம்.



மாலதியின் இளைய மகனும் இளம் கராத்தே வீரருமான பரிதியன் தனது தாயுடனும் பயிற்சியாளரான திரு.இரட்ணசோதி அவர்களுடனும்

8. இந்தக் கலையைக் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள், உடல் மற்றும் மன ரீதியில் எத்தகையவர்களாக  இருக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
உறுதியுள்ளவர்களாகவும், மனோதிடமுள்ளவர்களாகவும் இருப்பது நல்லது. முடியாதென்று எதுவுமில்லை. ‘முயற்சி செய்.இல்லையெனில் பயிற்சி செய்’ நிச்சயம் வெற்றி கிடைக்கும், அது எதுவாக இருந்தாலும்.
9. இந்நிலைமையை அடைவதற்கு நீங்கள் எதிர்கொண்ட தடைகள், முகம் கொடுத்த சவால்கள் பற்றிச் சுருக்கமாகக் கூற முடியுமா?
என்னைப் பொறுத்தவரை நீங்கள் குறிப்பிடும் தடைகள், சவால்கள் எல்லாவற்றையும் இனரீதியான புறக்கணிப்பு என்ற ஒரேயொரு விடயத்தில் அடக்கி விடலாம்  காட்டாவின் (கராத்தே தற்பாதுகாப்புக் கலையில் கை கால்களுடன் கூடிய உடல் அசைவுகளைத் தனியாகச் செய்து காட்டல்) போது நடுவர்களாகப் பெரும்பாலும்   பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களே  இருப்பார்கள். என்ன தான் அசைவுகளைத் திறமையாகச் செய்து காட்டினாலும் அவர்கள்,  சிறுபான்மையினத்தவர்களுக்கு பெரும்பான்மைமையினத்தவர்களோடு ஒப்பிடும் போது குறைவான புள்ளிகளையே வழங்குவார்கள். ஆனால் சண்டையின் போது நாங்கள் எதிராளிக்குக் கொடுக்கும் அடிகளுக்கேற்பப் புள்ளிகள் கிடைக்கும். இதில் நாங்கள் ஏமாற்றமுறுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு.  
 10. இந்தத் தற்பாதுகாப்புக் கலைக்கான பயிற்சி நிலையம் ஒன்று ஆரம்பிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஏற்கனவே இது சம்பந்தமாக யோசித்துள்ளீர்களா?
பயிற்சி நிலையம் ஆரம்பிப்பது நல்ல விடயம் தான். ஆனால் அதனை சிறப்பாக நடத்துவது மிகவும் கடினம். காரணம்.
  1. இன்னமும் எமது மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு குறைவு.
  2. சிறந்த ஆசிரியர்கள் பற்றாக்குறை.
  3. மாணவர்களிடம், முழுமையாகக் கற்று முடிக்க வேண்டும் என்ற மனோதிடமின்மை.
  4. ஒழுக்கமின்மை
போன்ற காரணிகள் இதற்குத் தடையாக இருக்கின்றன.






சேது பந்த சர்வாங்காசனம்


சேது என்றால் அணை அல்லது பாலம். பந்தம் என்றால் தொடர்பு. பாரதியாரின் “சிந்து நதியின்மிசை நிலவினிலே” என்ற பாடலில் சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம். சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்” என்ற வரிகள் ஞாபகத்துக்கு வருகிறதா? கழுத்தையும் முழங்காலையும் இடைப்பட்ட பகுதிகளான நெஞ்சு, வயிறு, இடுப்பு ஆகியவற்றின் பாலத்தை நினைவூட்டுவதனால் இந்த ஆசனத்துக்கு இப்படியொரு பெயர் வந்திருக்கலாம். இதனை அரைச்சக்கர ஆசனமென்றும் அழைப்பர்.( ஆனால் காற் சக்கரத்தின் தோற்றத்தைத் தான் ஒத்திருக்கிறது)  மேலே படத்திலுள்ள முறையை விட இன்னும் இரண்டு விதமாக சேது பந்த சர்வாங்காசனத்தைச் செய்யலாம். இதே முறையில் கைகளைக் கோர்த்துக் கொள்ளலாம். அல்லது கைகளைத் தாங்கியாகப் பாவித்து இடுப்பைப் பிடித்துக் கொள்ளலாம். இந்த நிலையிலிருந்து சற்று மாறி இரு கைகளாலும் இடுப்பைப் பிடித்துக் கொண்டு  இரு கால்களையும் மேலே வானத்தை நோக்கி உயர்த்தினால் அது  சர்வாங்காசனமாகும்.


சரி, இனி இதனைச் செய்யும் முறையைப் பார்ப்போம். சாதாரணமாக மேல்நோக்கியவாறே  படுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு முழங்கால்களை மடித்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக தலையை அப்படியே வைத்துக் கொண்டு நெஞ்சு, வயிறு, இடுப்பு ஆகிய பகுதிகளை நிலத்தை விட்டுத் தூக்க வேண்டும். இறுதியாக கைகளை அப்படியே கால்கள் இருக்கும் பக்கம் தரைக்குச் சமாந்திரமாக நீட்டி, சாதாரணமாக வைத்துக்கொள்ள வேண்டும் அல்லது கைகளைக் கோர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது கைகளைத் தாங்கியாகப் பாவித்து இடுப்பைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.அவ்வளவு தான். சிலருக்குக் கழுத்துக்கும் முழங்காலுக்கும் இடைப்பட்ட பகுதியைத் தூக்குவது பெரும்பாடாக இருக்கும். அப்படியானவர்கள் யாராவது ஒரு ஆளை வைத்துத் தூக்கச் சொன்னால் என்ன என்று நினைக்கக் கூடும்.. கொஞ்சமாவது நீங்கள் அந்த நபருக்கு உங்கள் உடலை உயர்த்திக் கொடுக்கா விட்டால் அந்த நபர் முகம் குப்புற உங்கள் மேல் விழ வேண்டி வரும் விழுந்தால் நீங்கள் தரையோடு தரையாக நசுங்க வேண்டி வரும். நிலைமை சற்றுத் தீவிரமானால் அடுத்த கட்டம் சவாசனம் தான். ஆகையால் தனித்துச் செய்வதே உசிதம்.(சும்மா உங்களைப் பயமுறுத்தினேன்.) உண்மையில் இது மிகவும் இலகுவான ஆசனமாகும். நீங்கள் நித்திரையிலிருந்து எழும் போதே இதைச் செய்து கொண்டே எழும்பலாம்.( ‘செய்யலாம் ..... சரி. எழும்பலாமா?’ என்று கேட்டால், ‘உங்கள் உடல் நிலையைப் பொறுத்துத் தான்’ என்று தான் பதில் சொல்ல வேண்டும்)
இந்த ஆசனத்தைச் செய்தால் இடுப்புப் பிடிப்பு நீங்கும். (மற்றவர்களின் இடுப்பின் மீது உள்ள பிடிப்பைச் சொல்லவில்லை) இடுப்புப் பலம் பெறும். மேலும் முள்ளந்தண்டின் இயக்கத்தை இலகுவாக்குவதற்கும், கேடயச் சுரப்பியைத் தூண்டுவதற்கும் இந்த ஆசனம் உதவி செய்கிறது என்று ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். கேடயச் சுரப்பியின்(Thyroid gland) தொழிற்பாடுகள் என்று இணையத்தில் தேடிப் பார்த்ததில் எங்கள் உடலின் வளர்ச்சியையும் மாற்றங்களையும் நெறிப்படுத்துவதுடன் கல்சியம் சமநிலையைப் பேண உதவும் என்று இருக்கிறது.      



சுனாமி 2004( 7ஆம் பாகம்)


அந்தக் குரலைக் கேட்டதும் வேறொன்றும் யோசிக்காமல் நளினியின் வீட்டுக்குள் நுழைந்தேன். இரண்டாம் வகுப்பில் என்னைப் பின்னால் நுள்ளி விட்டு, நான் நுள்ளியதாக குமாரசாமி வாத்தியாரிடம் மாட்டி விட்ட நளினி இப்போது பெயருக்கேற்றபடி நளினமாக இருப்பதாகத் தோன்றியது. “அம்மாக்கள் யாழ்ப்பாணம் போயிருக்கினம். வர்ரதுக்குக் குறைஞ்சது இன்னும் ஒரு மணித்தியாலமெண்டாலும் ஆகும். நான் ஒருக்கா பக்கத்தில இடியப்பம் வாங்கிக் கொண்டு வாறன். நீங்க ரெண்டு பேரும் கதைச்சுக் கொண்டிருங்கோ” என்று சொல்லியவாறு நளினம் உள்ளவள் மட்டுமல்ல இங்கிதமும் அறிந்தவள் என்று நினைக்க வைத்து விட்டுப் புறப்பட்டாள்.

பிரியாவின் முகத்தைப் பார்க்கு முன் அவளது கால்களைப் பார்த்தேன். அவள் மேல்  முதலில் ஏற்பட்ட ஈர்ப்பு அவள் ஓடும் அழகைப் பார்த்து வந்தது தான். அந்த அழகான ஓட்டத்தை வழங்கும் அந்தக் கால்களுக்குத் தான் முதல் மரியாதை. “என்ன சங்ககால பெண்கள் போலக் காலப் பாக்கிறீங்கள்?” என்ற பிரியாவின் முகத்தைப் பார்த்தேன். அங்கு கவலையின் சாயல் தெரியவில்லை. மகிழ்ச்சியின் துள்ளல் தான் தெரிந்தது. அந்த மகிழ்ச்சி என்னையும் தொற்றிக் கொள்ள “சந்தோஷமா இருக்கிறீங்கள் போல” என்றேன். “உங்கட விளையாட்டப் பாத்த சந்தோஷம் தான்,நல்லா விளையாடுறீங்கள்” என்றாள். “உண்மையாச் சொல்லுங்கோ, கடைசி வாய்ப்ப சரியாப் பயன்படுத்தினனானேயொழிய மற்றபடி சுமாருக்கும் கீழான விளையாட்டுத் தானே” என்றேன். “எப்படியோ,நீங்க அந்த வாய்ப்பச் சரியாப் பயன்படுத்தினதால தானே உங்கட அணிக்கு வெற்றி.” என்று உரையாடலை முடித்து வைத்தாள்.

“அண்டைக்கு நீங்க வீட்ட இருந்து போன மன நிலைக்கு,உங்கள இண்டைக்கு இப்பிடி சந்தோஷமாப் பாப்பன் எண்டு நான் நினைக்கேல்ல.” என்று நான் எங்கள் விடயத்துக்குள் வர “அண்டைக்கு உங்கட அம்மாந்த கதையக் கேக்க மனது நான் வேதனப் பட்டது உண்மை தான். ஆனா கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கோ. நிலமை ஒண்டும் கை மிஞ்சிப் போகல்ல.நாங்க ரெண்டு பேரும் சரியா நடந்தா நிலமை எங்கட கட்டுக்குள்ள தான். நான் மனம் மாறாம உறுதியா இருக்க வேணும். நீங்க உங்கள ஸ்திரப்படுத்திக்கொள்ள வேணும். அவ்வளவு தான். அதுக்குப் பிறகு நடக்க வேண்டியதெல்லாம் நடக்கும்” என்ற பிரியாவை நான் ஆச்சரியமாகப் பார்த்தேன். “இப்பிடி யதார்த்தமா,உறுதியா,அலட்டிக் கொள்ளாம ஒரு பாட்டி போலக் கதைக்க எங்க பழகினீங்கள்?” என்று நான் கேட்க “எல்லாம் உங்கட நினைப்பு தந்த மாற்றம் தான். இன்னும் நிறைய மாற்றங்கள நீங்க ஏற்படுத்துவீங்கள். அந்த மாற்றம் எல்லாம் நல்லா மாற்றமா இருக்க வேணும்” என்ற பிரியா திடீரென்று நான் எதிர் பார்க்காமல் ஒன்று செய்தாள். “உங்கட அணிக்கு வெற்றி தேடித் தந்த இந்த நெத்திக்கு என்ட அன்புப்பரிசு” என்று என் தலையைக் கீழே குனிய வைத்து நெற்றியில்முத்தமிட்டாள். அவளின் கைகளின் தொடுகையும் ,அவளது வாசமும், அவளது இதழ்களின் ஸ்பரிசமும் என்னை நிலை தடுமாற வைத்து ஏதோவெல்லாம் நினைக்க வைத்தது. ஒருவாறு என்னைச் சமாளித்துக் கொண்டு “இது முதலே தெரிஞ்சிருந்தா, நான் உதட்டாலேயே பந்த அடிச்சிருப்பன்” என்று நான் சொன்னது அவளது முதிர்ச்சியை நீக்கி வெட்கப்பட வைத்தது. “ நீங்க என்ன இப்பிடிக் கதைக்கிறீங்கள்.” என்று லேசாகச் சிணுங்கியவாறு “ உங்கட கை நோ எப்படி?” என்று கேட்டு விட்டு இன் கையைத் தொட்டுப் பார்க்கக் கையை நீட்டினாள்.

சரியாக அப்போது கதவை இலேசாகத் தட்டி விட்டு நளினி  உள்ளே நுழைந்தாள். “சொறிடி, வேளைக்கு வந்துட்டனா” என்று நளினி கேட்க “இல்லடி, கதைக்க வேண்டியதெல்லாம் கதைச்சிட்டம். நீ வந்ததும் நல்லதுக்குத் தான். இல்லாட்டி நேரம் போறதும் தெரியாது.” என்றாள் பிரியா. இன்னும் சற்று நேரம் பிரியாவுடன் கதைக்கத் தோன்றினாலும் எல்லாமே அளவோடு இருந்தால் நல்லதென்று தோன்றியது. “நாங்க சந்திக்கறதுக்கு ஏற்பாடு செஞ்சதுக்கு thanks  நளினி. கொஞ்சம் பயந்து கொண்டு தான் உங்கட வீட்டுக்குள்ள வந்தனான். ரெண்டாம் வகுப்பில நீங்க தந்த நுள்ளு இன்னும் ஞாபகம் இருக்கு” என்றேன். “ இனி, உங்கள நுள்ளுறதெண்டா இந்த மேடத்திண்ட அனுமதி எடுக்காம முடியுமா? அதோட இனி அதெல்லாம் வேறொருத்தர் தர வேண்டிய அவசியமேயில்ல. இனி அதெல்லாம் உங்களுக்குத் தாராளமாக் கிடைக்கும். இவ்வளவு நாள் நானும்,தமிழினியும்,மதுமதியும் தான் வாங்கிக் கொண்டிருந்தனாங்கள்” என்று நளினி பயமுறுத்தினாள். “சரி, அப்ப, இனி நான்....” என்று தொடங்கி விட்டு “உங்கள எப்ப, எங்க பார்க்கிறது? என்று கேட்போமா அல்லது வேண்டாமா என்று யோசித்தேன். “உங்களுக்கு ஏதாவது தகவல் சொல்லோனும் எண்டா அது எப்படியெண்டாலும் வந்து சேரும். நீங்க யோசிக்காமப் போங்கோ” என்று பிரியா சொன்னதும் “நான் ஒண்டும் யோசிக்கல்ல. நீங்க யோசிக்காட்டி சரி தான்” என்று கொஞ்சம் வீறாப்பாகச் சொல்லி விட்டு துவிச்சக்கர வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்.

போகும் வழியில் எங்கள் காதலைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். அனேகமான காதலர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் எங்களுக்கு ஏற்படவில்லை. “நான் உங்களைக் காதலிக்கிறேன். நீங்கள் என்னைக் காதலிக்கிறீர்களா?’ என்று கேட்கும் சங்கடம்  இருவருக்கும் ஏற்படவில்லை. ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்து கொண்டதால் அதற்கு அவசியம் ஏற்படவில்லை. இரண்டு, மூன்று வருடங்களாக அவள் மேல் எனக்கு இருந்த ஈர்ப்பும், என் மேல் அவளுக்கு இருந்த விருப்பமும் காதலாக மாறுவதற்கு ஒரு சந்தர்ப்பம் தேவையாக இருந்திருக்கிறது. அந்த சந்தர்ப்பம் பிரியாவின் குடிகார மாமா மூலமாக ஏற்பட்டிருக்கிறது. அவனுக்கு...... இல்லையில்லை  அவருக்கு எங்கள் ஊரிலுள்ள தவறணைக்கு அழைத்துச் சென்று ஒரு போத்தல் வாங்கிக் கொடுத்தாலென்ன என்று தோன்றிய நினைப்பு யாரும் குடித்து உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்வதற்கு நான் காரணமாக இருக்க வேண்டுமா என்ற கேள்வி மனதில் எழுந்ததும் அந்த எண்ணம் மாறியது. 

என்னைக் கண்டதும் அம்மா “ என்னடா, முகத்தில சந்தோஷம் வழியுது? என்றாள். அவளின் மருமகளைப் பற்றிச் சொல்லத் தோன்றினாலும் கூட அதனை மறைத்துக் கொண்டு கடைசி நேரத்தில் என்னால் எங்கள் அணி வென்றது பற்றி சந்தோஷமாகச் சொன்னேன். “அதெல்லாம் சரிதாண்டா, இன்னும் கொஞ்ச நாள்ல வரப்போற A.L  results, campus க்குப் போற மாதிரி வராட்டாலும் அத வச்சு, நீ ஏதும் மேல படிக்கக் கூடியதா வந்து விடோணும்” என்று அம்மா சொன்னதும் அந்த யோசனை என்னையும் தொற்றிக் கொண்டது.

கணக்கியல் எனக்கு விருப்பமான பாடம். ‘B’ அல்லது சில சமயங்களில் ‘A’ நிச்சயம் என நினைத்திருக்க இந்த முறை வந்த ‘பங்குடமை’ கணக்கும் தொங்கல் கணக்கும் அந்த நினைப்பில் சங்கூதி விட்டன. ஏனைய பாடங்களான ‘பொருளியல்’ வர்த்தகமும் நிதியியலும்’ ‘அளவையியல்’   எல்லாப் பாடங்களுமே சுமாராக ‘C” வருமளவுக்குத் தான் செய்திருக்கிறேன். அதுவும் அளவையியலில் சில நேரங்களில் ‘S’ கூட வரலாம். அப்படியிருக்க பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்பேயில்லை. ஆனாலும் சில சமயங்களில் .....என்று நான் நிச்சயமாக நடக்காது என்று தோன்றும் விடயத்தை விடயத்தை நினைத்துப் பார்ப்பது போல அம்மாவுக்கும் நப்பாசை இருக்கும் தானே என்றெல்லாம் ஆரம்பித்த என் யோசனை கட்டுக்கடங்காமல், நான் வேலைக்குப் போவது, எனக்கும் பிரியாவுக்கும் திருமணம் நடப்பது,  எங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறப்பது வரை நீண்டது. அதற்கு மேலும் நீள விடாமல் எனது யோசனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு சாப்பிட்டு விட்டு சற்று நேரம் வானொலியில் பாட்டுக்கள் கேட்டு விட்டு படுக்கப் போனேன்.

                                (தொடரும்)       

மறைந்த மலேசியன் விமானமும் மறையாத அதன் மர்மங்களும்

இரண்டரை வருடங்களுக்கு முன்பு (2014) மூன்றாம் மாதம் எட்டாம் திகதி மலேசியாவில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற  மலேசியன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான MH370 என்ற விமானம் மாயமாகி இரண்டரை வருடங்களுக்கு மேல் ஆகி விட்ட போதிலும் அதற்கு என்ன நேர்ந்தது என்பது  இன்னும் உலக மக்கள் அனைவரையும் உலுக்கி வரும் கேள்வி. ஆதாரமாக ஒன்றும் கிடைக்காத போதும் அனுமானங்களுக்குக் குறைவில்லை. அத்தகைய சில அனுமானங்கள்,
அந்தமான்

அந்த விமானத்தின் வழமையான பறப்புப் பாதையையும்,அதிலிருந்து கடைசியாகக் கிடைத்த சமிக்ஞையையும் வைத்துப் பார்க்கும் போது அது ஒரு கட்டத்தில் இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா ஆகிய நாடுகளுக்கு மேலே பறந்து கொண்டிருந்தது எனக் கொள்ளலாம். அந்த நாடுகள் நட்பு நாடுகள் ஆதலால் அவற்றிற்கிடையே ராடார் கருவிகளின் அவதானம் மிகக் குறைவாகவே இருக்கும் அல்லது இருக்கவே இருக்காது. இதனை வாய்ப்பாகக் கொண்டு அந்தமான் தீவொன்றினுள் விமானத்தை இறக்கியிருக்கலாம். இங்கு விமானங்கள் ஏறிஇறங்கும் ஒடுபாதைகள் நான்கு இருந்தாலும் கூட இந்திய இராணுவத்தின் கண்ணில் படாமல் இறக்குவது என்பது மிகக் கடினமான பணியாகவே இருக்கும். கடினமான பணியே தவிர சாத்தியமில்லாத ஒன்றல்ல.ஏனெனில் 570 க்கு மேற்பட்ட அந்தமான் தீவுகளில் 36 தீவுகளிலேயே மக்கள் வாழ்கின்றனர். இந்த மாதிரியான இடங்களில் விமானத்தின் சக்கரங்களை வெளிப்படுத்தி இறக்கும் போது கடற்கரை மணல் பகுதிகளில் விமானத்தின் கீழ்ப்பகுதி புதைந்து அழுத்தம் மற்றும் வேகம் காரணமாக கிழிந்து கொண்டு விட வாய்ப்புண்டு. சக்கரங்களை வெளிப்படுத்தா விட்டால் மோதலோடு கூடிய இறக்கத்தின் போது விமானத்தின் வால்ப்பகுதி சேதமடைந்து அதில் நிரப்பி வைக்கப்பட்டுள்ள எரிபொருள் காரணமாக விமானம் தீப்பற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் மீறி விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டாலும் கூட மீள அதைக் கிளப்புவது என்பது சாத்தியமில்லாத விடயம்.
கசகஸ்தான்   


இந்த விமானத்தின் தேடுதல் வடக்குப் பக்கமாக கசகஸ்தான் வரை விஸ்தரிக்கப்பட்டதால் பாலைவனப்பகுதிகள் நிரம்பிய இந்த நாட்டில் தரை இறக்கப்பட்டிருக்கலாம் என்று அனுமானிக்க இடமுண்டு.விமானத்தை இறக்குவதற்கு கடற்கரைப் பகுதிகளை விட பாலைவனப்பகுதிகள் பாதுகாப்பானவையே என்று பெரும்பாலான விமானிகள் கருதுகின்றனர். ஆள் நடமாடமில்லாத இடத்தில் விமானத்தை இறக்க வேண்டுமென்று யாரும் கருதியிருந்தால் அவர்களுக்கு இந்த இடம் ஒரு சிறப்பான தெரிவாக இருந்திருக்கலாம். ஆனால் இந்த நாட்டில் இறக்க வேண்டுமாயின் ராடார் கருவிகளின் நோட்டமும்,இராணுவ அழுத்தமும் அதிகமுள்ள இந்தியா, பாகிஸ்த்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் மேலால் பறந்திருக்க வேண்டும். ஆயினும் என்ன தான் ராடார் கருவிகளின் நோட்டம் இருந்தாலும் ஆசிய நாடுகளின் ராடார் கருவிகளில் ஏற்படும் வழமையான  சிறு தவறுகள் அல்லது கோளாறுகள் இங்கேயும் ஏற்பட்டிருக்கலாம். உதாரணத்திற்கு பெரிய பறவைகள் கூட்டத்தை விமானம் என்று கருதும் ராடார்கள் இருக்கும் பட்சத்தில் இந்த விமானத்தை  பறவைக்கூட்டம் என்று கருதியிருக்க வாய்ப்பிருக்கிறது. ‘Manifest’ என்று அழைக்கப்படும் விமானத்திலுள்ள பொருட்களின் பட்டியல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாததற்கு விமானத்தில் ஏதேனும் மனித குலத்திற்கு ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு கண்டுபிடிப்பு ஒரு விஞஞானியாலோ அல்லது ஒரு விலையுயர்ந்த ஒரு பொருள் ஒரு செல்வந்தராலோ எடுத்துச் செல்லப்பட்டிருக்கக் கூடும். இதனை மோப்பம் பிடித்த யாரும் விமானத்தைக் கடத்தியிருக்கலாம்.
அவுஸ்திரேலியாவின் வடக்குப் பக்கக் கடல்
செயற்கைக்கோள் மூலமாகக் கிடைக்கப்பெற்ற தகவலிலிருந்து மலேசிய ராடார் கருவிகளிருந்து நீங்கிய பின் 5 முதல் 6 மணித்தியாலங்களுக்கு இந்த விமானம் பறந்திருக்கிறது.இதனை வைத்துப் பார்க்கும் போதும் ஏனைய நாட்டு ராடார் கருவிகளில் இதனை அவதானித்திருக்க முடியவில்லை என்பதை வைத்துப் பார்க்கும் போதும் இது பெரும்பாலும் தெற்கு நோக்கி அதாவது அவுஸ்திரேலியாவின் வடக்குப் பக்க கடலுக்கு மேலாக எரிபொருள் தீரும் வரை பறந்து பின்பு கடலில் மூழ்கியிருக்கலாம்.
வட மேற்கு சீனாவிலுள்ள டக்லமகான் பாலைவனம்
239 பயணிகளில் 153 பேர் சீனர்களாக இருந்தது இன்னொரு அனுமானத்திற்கு வழிகோலியிருக்கிறது. அதாவது சீனாவில் பிரிவினை கோரும் உய்குர் தீவிரவாதிகள் விமானத்தைக் கடத்தி சீனா, கிருகிஸ்தான் எல்லையிலுள்ள உலகத்திலேயே மணல் நிரம்பிய பாலைவனங்களுள் ஒன்றாகக் கருதப்படும்  டக்லமகான் பாலைவனத்தில் தரையிறக்கியிருக்கலாம் என்பதே அது. ஆனாலும் எத்தனையோ நாடுகளின் ராடார் கருவிகளின் அவதானத்திற்குத் தப்புவதும் சாத்தியக்குறைவான விடயம் தான்.
தீ அல்லது வேறு ஏதேனும் விமானக் கோளாறுகளிலிருந்து தப்புவதற்கு லங்காவி தீவை நோக்கி   
அப்படி ஏதேனும் ஏற்பட்டிருந்தால், போக வேண்டிய பாதையிலிருந்து விலகி இடப்பக்கமாகத் திருப்பி அருகே உள்ள விமான நிலையத்தை அடைய எடுத்த முயற்சி சரியான செயலென்றே அனேகமான விமானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். சரி,அப்படி ஏதும் ஏற்பட்டிருந்தால் கோலாலம்பூருக்கே திரும்பியிருக்கலாமே என்று சிலர் நினைக்கக் கூடும். ஆனால் அப்படித் திரும்பி வரும் போது 8000 அடி உயரமான மலைத்தொடர்களை எதிர் கொள்ள வேண்டிய ஆபத்து உண்டு.  ஆகவே இரவு நேரத்தில் அவ்வாறான ஆபத்தைத் தவிர்த்து பரிச்சயமான, தடைகளற்ற கடற்பரப்பின் மேலே லங்காவி தீவை நோக்கிப் பறப்பது ஒப்பீட்டு ரீதியில் ஆபத்துக் குறைவானது என்று விமானிகள் கருதியிருந்தால் அது சரியானது தான். ஆனாலும் துரதிஷ்டவசமாக போய்ச் சேர நினைத்த இடத்தை அடைவதற்கு முன்னமே அனர்த்தம் நிகழ்ந்து விமானம் கடலில் வீழ்ந்து மூழ்கியிருக்கலாம்.
ஆனாலும் இந்த அனுமானத்தில் உள்ள முரண்பாடு என்னவெனில், அப்படியான ஆபத்துக்கள் நேரும் போது விமானிகள் பெரும்பாலும் தானியங்கி மற்றும் கணனிக்  கட்டுப்பாட்டை விடுத்து விமானத்தைக் கைகளால் தான் செலுத்த விரும்புவார்கள். ஆயினும் இங்கே தலைமை விமானிக்கும் முதல் அதிகாரிக்கும் இடையே முழங்கால் அளவு உயரத்தில் இருந்த கணனியின் விசைப்பலகையில் ஏழு அல்லது எட்டு எழுத்துக்கள் தட்டச்சு செய்யப்பட்டு அந்தக் கணனி உத்தரவின் மூலமே விமானத்தின் போக்கு மாற்றப்பட்டிருக்கிறது. ஆகவே இதனை ஒரு சதிச்செயலாகக் கருதவும் இடமுண்டு.
பாகிஸ்தான்
இதுவரை விமானங்கள் கடத்தப்படாமல் விபத்துக்காகாமல் மர்மமாக மறைந்த சம்பவங்கள் எத்தனையோ சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. என்றாலும் பெரும் எண்ணிக்கையில் பயணிகள் மறைந்த சம்பவம் இதனைப்போல் மிகச்சில தான். பின் லாடன் நீண்டகாலம் மறைந்து வாழ்ந்த வடக்குப் பாகிஸ்தானுக்கு விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று ஒரு இலேசான அனுமானம், கடத்தப்பட்டிருந்தால் இவ்வளவு காலம் கோரிக்கை எழாமல் இருந்திருக்காது என்ற வாதத்தாலும் இது அதிகூடிய இராணுவ ராடார்களின் அவதானம் இருக்கும் இந்திய பாகிஸ்தான் எல்லை என்பதால் அந்த ராடார்களின் நோட்டத்திற்குத் தப்பி விமானத்தை இறக்கியிருக்க முடியாது என்ற வாதத்தாலும் அடிபட்டுப்போகிறது.
இன்னொரு விமானத்தின் நிழலில்
சாத்தியம் மிகக் குறைந்த அனுமானம். அதாவது சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட SIA68 விமானம் மற்றும் MH370 விமானத்தின் பாதையையும்,நேரத்தையும் அவதானிக்கும் போது கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் ஒரே நேரத்தில் ஒரே  திசையில் பறந்த அபூர்வமான நிகழ்வைக் அவதானிக்க முடிகிறது. ராடார் கருவியில் இலகுவாக தனது உருவத்தை வெளிப்படுத்திக்கொள்ள உதவும் ‘டிரான்ஸ்பொண்டர்’ கருவியை இயக்காமல் MH370 பறந்திருக்குமாயின்  இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் மேலாக இந்த இரு விமானங்களும் பறக்கும் போது இரு ‘பீப்’ ஒலி கேட்காமல் ஒரு ‘பீப்’ ஒலியுடன் விமானம் ஒன்று பறப்பதாக இனங்காணப்பட்டிருக்கலாம். ஒரு கட்டத்தில் இரு விமானங்களின் பறப்புப் பாதையும் வேறுபட்ட பின் MH370 சீனாவின் சின்சியாங் அல்லது கிருகிஸ்தான் நாடுகளில் இறக்கப்பட்டிருக்கலாம்.
இதற்கு ஓரளவு சாத்தியம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் கூட சாதாரண பொதுவான ராடார் கருவிகளிலேயே இந்தத் தவறு நடக்க வாய்ப்பு இருக்கிறது. நாட்டின் அதியுயர் பாதுகாப்புக்காகப் பாவிக்கப்படும் இராணுவ ராடார் கருவிகள் ‘டிரான்ஸ்பொண்டர்’ கருவிகளை இயக்காமலே விமானத்தை அடையாளம் கண்டு கொள்ளக்கூடியன.1000 மீற்றருக்கும் குறைவான இடைவெளியில் இரு விமானங்களும் பறந்திருக்குமாயின் மட்டுமே இராணுவ ராடார் கருவிகளில் இனங்காணத் தவறியிருக்கலாம்.1000 மீற்றர் என்பது எங்களுக்குப் பெரிதாகத் தோன்றினாலும் விமானங்களைப் பொருத்த வரை இது ஒரு மிகக் குறுகிய தூரமே.  விமானத்தைக் கடத்துபவர்கள் இவ்வளவு கச்சிதமாதத் திட்டமிட்டு செயற்பட்டிருந்தாலும் கூட இப்படியானதொரு ஆபத்தை எதிர் கொள்ளத் துணிந்திருப்பார்களா என்பது மெய் சிலிர்க்க வைக்கும் கேள்வி தான்.
விமானத்தினுள்ளே  கலவரம்.....?  
எப்படிப் பார்த்தாலும் ஒரு விதமான இடையூறுகளும் அல்லது சதித்திட்டமும் இன்றி விமானம் காணாமல் போயிருக்கக்கூடிய சாத்தியம் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். ஒரு கட்டத்தில் பறக்கக் கூடிய அதியுயர் எல்லையையும் மீறி 13700 மீற்றர்(45,000 அடி) பறந்த விமானம் இன்னொரு கட்டத்தில் மிகத் தாழ்வாகப் பறந்தது கோலாலம்பூரின் விமானக் கட்டுப்பாட்டுக் கோபுரத்தில் பதிவாகியிருக்கிறது. விமானிகளின் அறை வெளியே இருந்து திறக்க முடியாதபடி இருந்தாலும் கூட கடத்தல்காரர்கள் வன்முறையைப் பாவித்து உள்ளே நுழைந்ததைத் தொடர்ந்து அவர்களை நிலைகுலையச் செய்ய இந்த உபாயம் கைக்கொள்ளப்பாட்டிருக்கலாம். 45,000 அடி உயரத்தில் பறந்த போது பயணிகளுக்கு உயிர்வாயு தேவைப்பட்டு, உயிர்வாயு முகமூடி பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இவை 12 முதல் 15 நிமிடங்கள் வரை தான் பயன்படுத்தப்படலாம்.அத்துடன் மிக அதிக உயரத்துக்கும், மிகக் குறைவான உயரத்துக்கும் குறுகிய நேரத்தில் போய் வரும் போது ஏற்பட்டிருக்கக்கூடிய அழுத்தமும் பயணிகளின் உயிரைக் காவு கொண்டிருக்கலாம்.
9/11 ஒத்த தாக்குதலை நடத்துவதற்குத் திட்டம்...?
 இதுவும் மக்கள் மத்தியில் பரபரப்பாகக் கதைக்கப்பட்ட அனுமானம் தான். அதாவது 2001 ஆம் ஆண்டு அல் குவைதா தீவிரவாதிகள் மூலம்  நான்கு பயணிகள் விமானங்கள் கடத்தப்பட்டு அமெரிக்காவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மோதித் தாக்குதல் நடத்தப்பட்டது போல் இன்னொரு இடத்தில் தாக்குதல் நடத்துவதற்கு ஏதாவதொரு தீவிரவாத இயக்கத்தால் இந்த விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அனுமானம் தான் அது. விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்குவதையும் அதனை மறைத்து வைப்பதையும் சாத்தியக் குறைவான விடயங்கள் என்று கருதினாலும் கூட நடக்க முடியாத விடயங்கள் அல்ல. ஆனால் அதே சமயம் விமானத்தில் எரிபொருளை நிரப்பிக் கொண்டு மீண்டும் பறப்பதென்பது சாத்தியமே இல்லாத விடயம் என்று விமானிகளும் விமானத்துறை சார்ந்த வல்லுனர்களும் தெரிவிக்கிறார்கள்.
இராணுவம் சுட்டு விழுத்தியதா...?      
 விமானத்தில் ஏற்பட்ட அசாதாரணமான நிலைமையைத் தொடர்ந்து அல்லது கடத்தல்காரர்களால் விமானம் கடத்திச் செல்லப்பட்டு பாதை மாறிச் செல்லும் வழியில்  ஏதேனும் ஒரு நாட்டு இராணுவம் சுட்டு விழுத்தியிருக்கலாம்.. இது மற்ற அனுமானங்களைப் போல் சாத்தியக் குறைவான விடயம் அல்ல. தவறுதலாக என்றாலும் பயணிகள் நிறைந்த விமானத்தைச் சுட்டு விழுத்தியிருந்தால் எந்த ஒரு நாட்டு இராணுவமும் பெருமையுடன் உரிமை கோரப் போவதில்லை. ஆனாலும் அப்படிச் செய்திருந்தால் கூட அது ஒருத்தர் மட்டும் சார்ந்த தாக்குதலாக இருக்காது என்பதால் இவ்வளவு காலம் அதனை மறைத்து வைத்தல் சாத்தியமா என்பது ஒரு நியாயமான கேள்வி தான். ஒருவேளை ஏதாவது ஒரு நாடு அப்படித் தாக்குதல் நடத்தியிருந்து பின்பு ஒரு காலத்தில் தெரிய வந்தால் தாக்குதல் நடத்தியதை விட இவ்வளவு காலம் மறைத்து வைத்தது தான் பெருங்குற்றமாகக் கருதப்பட்டு அந்த நாடு கடும் கண்டனங்களை எதிர் நோக்க வேண்டியிருக்கும்.       
(இந்தக் கட்டுரை எழுதப்படுவதற்கான தகவல்களும் படங்களும் பி.பி.சி இணையத் தளத்திலிருந்தும், டெலிகிராஃப் இணையத் தளத்திலிருந்தும்,விக்கிபீடியா கலைக்களஞ்சியத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.)



மறைந்த லயன் எயார் விமானத்தின் எஞ்சியுள்ள மர்மம்


1998ஆம் ஆண்டு ஒன்பதாம் மாதம் 28ஆம் திகதி 48 பயணிகளுடனும் 5 விமான சிப்பந்திகளுடனும் 2 விமானிகளுடனும் தனது வழமையான நேர அட்டவணையின் படி மதியம் 1:40 க்குக் கொழும்பு நோக்கிப் புறப்பட்ட லயன் எயார் விமானத்திற்கு அது இறுதிப் பறப்பாக அமைந்த துன்பியல் நிகழ்வு உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?. மறந்தவர்களுக்கு அதனை ஞாபகப்படுத்துவதும் மறக்காதவர்களுக்கு அது சம்பந்தமாக மேலதிகமான தகவல்கள் மற்றும் அதன் மறைவைச் சூழ்ந்திருந்த மர்மம், அதைப் பற்றி வெளியான பரபரப்பான கட்டுக்கதைகள், செய்திப்பத்திரிகையில் வெளியான தகவல்கள் ஆகியவற்றைத் தொகுத்து வழங்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
“மறைந்த மலேசியன் விமானமும் மறையாத அதன் மர்மங்களும்” என்ற கட்டுரையை எழுதி முடிக்கும் போது தான் லயன் எயார் விமானத்துக்கு நேர்ந்தது ஞாபகத்துக்கு வந்தது.’எங்கோ நடந்த ஒன்றைப் பற்றி எழுதியிருக்கிறேன். இங்கு நடந்ததைப் பற்றி தகவல்களைத் தேடி எழுதினால் என்ன’ தோன்றிய எண்ணத்தின் விளைவே இந்தக் கட்டுரை.
இலங்கையின் வட பகுதிக்கும் ஏனைய பகுதிகளுக்குமான தரைவழிப் போக்குவரத்து முற்றுமுழுதாகத் துண்டிக்கப்பட்ட நிலையில், ஒப்பீட்டு ரீதியில் நீண்ட நேரம் எடுத்துக்கொண்ட கப்பற்போக்குவரத்தை விட தனியார் விமான சேவை நிறுவனத்தினரால் பலாலிக்கும் ரத்மலானைக்கும் இடையில் நடத்தப்பட்டு வந்த விமான சேவையை அனேகமான மக்கள் விரும்பியிருந்த காலப்பகுதியில் தான் இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.
அந்த 48 பயணிகளுக்கும் கொழும்பில் என்னென்ன முக்கியமான அலுவல்கள் இருந்ததோ, என்னென்ன எண்ணங்களுடன், என்னென்ன கனவுகளுடன் விமானம் ஏறினார்களோ அவ்வளவும் அந்த அன்ரநோவ்-AN 24RV  விமானத்துடன் சேர்த்து காணாமல் போயின. எங்கள் ஊரைச் (வல்வெட்டித்துறை)  சேர்ந்த பரமசிவம் என்ற வைத்தியரும் கூட அந்த விபத்தின் போது காணாமற்போயிருந்தார்.

சாதாரணப் பயணிகளுடன் கூடவே சில உயர் இராணுவ அதிகாரிகளுடன் பிற்பகல் 1:40 க்குப் புறப்பட்ட அந்த விமானம்  கிளம்பிப் பத்து நிமிடங்களில் விமானத்தில் அழுத்தம் குறைவதாக பலாலி கட்டுபாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட அந்த விமானத்தின்  விமானியிடமிருந்து தகவல் கிடைக்கப்பெற்ற சிறிது நேரத்தில் விமானத்தின் தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டன. இவ்விமானமானது பெலாரஸ் நாட்டின் விமானியையும் (Matochko Anatoli), உப  விமானியையும் (Lysaivanov Siarhei) வழித்தட அவதானிப்பாளரையும் (Kozlov Sergei), விமானப் பொறியியலாளரையும் (Anapryienka Siarhei) மற்றும் லயன் எயார் விமான நிறுவனத்தின் விமானப் பணிப் பெண்ணையும் (Dharshini Gunasekera),சிப்பந்தியையும் ( Chrishan Nelson),கடை நிலை ஊழியரையும் (Vijitha) விமானப் பணியாளர்களாகக் கொண்டிருந்தது.      
ஆரம்ப கட்ட அறிக்கைகளின்படி விடுதலைப் புலிகள் தோளில் வைத்து இயக்கும் விமான எதிர்ப்பு ஏவுகணையான  மான்பாட்(Manpad) என்றழைக்கப்படும் Man Portable Air Defense System அல்லது Sam என்றழைக்கப்படும் Surface to Air Missile  என்ற தோளில் வைத்து இயக்கும் ஏவுகணையைப் பயன்படுத்தியே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இராணு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனாலும் விடுதலைப்புலிகள் இதற்கு உரிமை கோரவில்லை. அவர்கள் பொதுமக்களை நிச்சயம் இலக்கு வைத்திருக்க மாட்டார்கள். அப்படி இலக்கு வைத்திருந்தாலும் கூட விமானத்தில் யாரேனும் இராணுவ உயரதிகாரிகள் இருந்திருப்பார்கள் என்று மக்கள் நம்பும் அளவுக்கு, அதாவது விடுதலைப்புலிகள் விடும் தவறுகளை நியாயப்படுத்தும் அளவுக்கு மக்களைக் கொண்டிருந்தது அவர்களின் படைபலத்தை விட மிகப்பெரும் பலமாகக் குறிப்பிடலாம்.
கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களுக்கு முன் இதே போல் தாக்குதல் முறையைப் பயன்படுத்தி இரண்டு அவ்ரோ 748 ரக விமானங்களை விடுதலைப் புலிகள் தாக்கியிருந்த போதிலும் அதற்கு உரிமை கோரியிருந்தனர். இந்நிகழ்வுகள் 1995 ஆம் ஆண்டு நான்காம் மாதம் 28ஆம் திகதியும் 29ஆம் திகதியுமாக அடுத்தடுத்த நாட்களில்  இடம்பெற்று,  இலங்கை இராணுவ மற்றும் விமானப் படையினருக்குக் கிலியை ஏற்படுத்தி, இனி இராணுவம் சார்ந்த விமானங்கள் பறக்க முடியுமா என்றதொரு சந்தேகத்தைக் கிளப்பியிருந்தன.
விமானம் காணாமல் போவதற்குக் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முன்பு லயன் எயார் விமான நிறுவனத்துக்கு தமிழீழ நிர்வாக சேவை என முத்திரையிடப்பட்ட எச்சரிக்கைக் கடிதம் ஒன்று கிடைக்கப் பெற்றிருந்தது. இராணுவத்தினரை விமானத்தில் ஏற்ற வேண்டாம் என்ற தங்களின் வேண்டுதல் தொடர்ந்து புறக்கணிக்கப் படுவதாகவும், அது தொடர்ந்து இடம்பெற்றால் ஒன்பதாம் மாதம் 14ஆம் திகதிக்குப் பின்னர் விமானம் தாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்  லயன் எயார் நிறுவனம் அது தன்னுடைய போட்டி நிறுவனத்தின்செயல் எனக் கருதி அந்த எச்சரிக்கையை உதாசீனப்படுத்தியிருந்தது. (அப்போது லயன் எயார்   நிறுவனத்துக்குப் போட்டியாக இயங்கிய செரண்டிப் எயார் லைன்ஸ் பின்னர் ஏரோலங்கா  என்றும் பெயர் மாற்றம் பெற்று இயங்கியது என்பதும் அதன்  நிர்வாக முகாமையாளராக 2005, 2006 காலப்பகுதியில் நான் பணி புரிந்தேன் என்பதும் உதிரியான விடயங்கள்) 
காணாமற்போன லயன் எயார் விமானம் சம்பந்தமாக செய்திப்பத்திரிகையில்  தேடல்களை மேற்கொண்ட போது 2012 ஆம் ஆண்டு நான்காம் மாதம் 6ஆம் திகதி ‘ரிவிர’ என்ற சிங்களப் பத்திரிகையில் வெளியான ஒரு செய்தி என் கவனத்தைக் கவர்ந்தது. இது  உறுதிப்படுத்தப்படாத செய்தியெனினும் சில சுவாரசியமான விடயங்கள் உள்ளதனால் இதனையும் சேர்த்துக் கொண்டேன். இதன் தலைப்பு “ பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான லயன் எயார் விமானத்தின் ரகசியம்”
இதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது “ அதன் பின்பு லயன் எயார் விமான விபத்தைப் பற்றி நிறைய வதந்திகள் பரவின. 24 வயதான இளைஞன் ஒருவன் விமானத்தைக் கடத்தி, இந்தியாவில் தரையிறக்கினான்  என்று கூறப்பட்டது.
இன்னுமொரு வதந்தியாக அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு நபரின் உறவினர்களுக்கு வவுனியாவில் செஞ்சிலுவைச் சங்கத்தின் நோயாளர் ஊர்தியின் ஓட்டுனர் ஒருவர்  பயப்பட வேண்டாமென்றும் புலிகள் விமானத்தை இரணைமடுவில் தரையிறக்கி விட்டார்கள் என்று கூறியதாகவும் சொல்லப்பட்டது..
அதன் பின்னர் இந்த விமானம் பற்றி பல்வேறு வதந்திகள் உலாவியபோதும்  ஒன்றுக்கும் ஆதாரங்கள் இல்லை. எல்லாமே கட்டுக்கதைகள் அல்லது அனுமானங்கள் என்று பெரும்பாலும் எல்லோரும் நினைக்குமளவுக்கு நம்பகத்தன்மை அற்றவையாக இருந்தன.
ஆனால் 2011 ஆம் ஆண்டு ஆறாம் மாதம் 13ஆம் திகதி மானிப்பாயில் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினரான அருண் என்றொருவரின் கைதைத் தொடர்ந்து சில திடுக்கிடும் தகவல்கள் செய்திப்பத்திரிகையில் வரத் தொடங்கின. அருணை மேலதிக விசாரணை செய்த பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இந்தத் தாக்குதலுக்கு அருண், கடற்புலிகளின் மிலிந்தன் மாஸ்ரரினால் நியமிக்கப்பட்டதாகவும் தாக்குதல் நடந்த அன்று காலை மிலிந்தன் மாஸ்ரர் அருணைப் படகு மூலம் இரணைதீவில் கொண்டு சென்று விட்டதாகவும் பின்னர் அருண் சாம் ஏவுகணை மூலம் விமானத்தைத் தாக்கி விழுத்திய பின், தாக்குதலை உறுதிப்படுத்துவதற்காக விமானம் விழுந்த இடத்துக்குச் சென்ற மிலிந்தன் மாஸ்ரர், அங்கு மிதந்து கொண்டிருந்த பயணிகளின் சில பொதிகள் மற்றும் சிறிய பணப்பை ஆகியவற்றை மீட்டுக்கொண்டு வந்து பணத்தை அருணுடன் பகிர்ந்து கொண்டதாகவும், பின்னர் இருவரையும் கௌரவிப்பதற்காக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இரவு உணவுக்கு அழைத்ததாகவும்  ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்தனர். மேலும் இன்னொரு விமானத் தாக்குதலுக்கு அருணை விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாகவும் ஆனால் குறி தவறியதனால் தண்டனைக்குட்படுத்தப்பட்டதாகவும் பின்னர் 2005 ஆம் ஆண்டளவில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு விலகி தொழில் நிமித்தம் டோஹா கட்டாருக்குச் சென்று விட்டதாகவும், 2011இல் விடுமுறையில் வந்து நின்ற போதே பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாகவும் அருண் கூறியதாகத் தெரிவித்தனர்.       
அதன் பின்னர் இலங்கைக் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் மூலம் இவ்விமானத்தின் சிறு சிதைவுகள் இரணைதீவில் 2012ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் மீட்கப்பட்டது. அதன்பின்பு இடைக்கிடை இங்கு தேடுதல் நடத்திய இலங்கைக் கட்ற்படையினரின் சுழியோடிகள் ஏழு மாதங்களின் பின்பு 2013 ஆம் ஆண்டு ஐந்தாம் மாதம் 5ஆம் திகதி இந்த விமானத்தின் இயந்திரம் அடங்கலான பாரிய சிதைவை இரணைதீவிலிருந்து ஒன்றரை கடல் மைல் தூரத்தில் 25 அடி ஆழத்தில் மீட்டனர்.  
மேலும் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இரணைதீவுக் கடற்பகுதியில் அப்பகுதி மீனவர்களால்  கண்டெடுக்கப்பட்ட 33 சடலங்கள் உரிய முறைப்படி  செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அறிவிக்கப்படாமல் கௌதாரிமுனையில் தகனம் செய்யப்பட்டன என்று அப்பகுதியில் கிராமசேவையாளராகக் கடமையாற்றிய திருநாவுக்கரசு சுப்பிரமணியம்  என்பவரின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு தெரிவித்தனர். 

அத்துடன் லயன் எயார் விபத்தின் மர்மம் முடிவுக்கு வந்ததாகவே கருதப்பட்டது. ஆனாலும் பதினான்கு வருடங்களாகக் கடலுக்கு அடியில் கிடந்த விமானத்தின் சிதைவுகளுக்கு மத்தியில் கண்டெடுத்ததாகக் கூறப்பட்ட சில ஆடைகள், கடிதங்கள், நகைகள், மற்றும் ஒரு தேசிய அடையாள அட்டை( இந்த அடையாள அட்டைக்குரிய பெண்ணான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  திருமதி குணமணி பாலசுப்பிரமணியம் தான் இந்த விமானத்தில் பயணம் செய்யவில்லையென்றும்  தன்னிடம் அடையாள அட்டையைச் சேர்த்து விடுவதற்காக அந்த விமானத்தில் பயணித்த ஒருவரிடம் தன்னுடைய உறவினர் கொடுத்து விட்டதாகவும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.)    என்பன நல்ல நிலைமையில், காணாமற் போன விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினரிடம் கையளிக்கப்பட்ட நிகழ்வு எல்லோர் மத்தியிலும் ‘இது எப்படி சாத்தியம் என்ற கேள்விக்குறியை எழுப்பியிருந்தாலும்  அந்தக் ‘கேள்விக்குறி’ ‘ஆச்சரியக்குறி’ ஆனதோடு நின்று விட்டது. அதனை ‘முற்றுப்புள்ளி’யாக்கும் முயற்சிகள்..... ஏன் குறைந்தபட்சம் ‘கமா’வாக்கும் முயற்சிகள் ஊடகத்துறையினரால் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலைக்குரியதே.
(இந்தக் கட்டுரை எழுதப்படுவதற்கான சில தகவல்களும்,படங்களும்  இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத் தளத்திலிருந்தும், சூரியன் F.M இணையத் தளத்திலிருந்தும், ’ரிவிர’ செய்திப்பத்திரிகையிலிருந்தும் மற்றும் ‘விக்கிபீடியா’ கலைக்களஞ்சியத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்றன)





உயிரோடு (ALIVE)- ஆங்கிலத் திரைப்படக் கதை

பீரிஸ் போல் ரீட் என்பவர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதிய ‘Andees Survivors’ (அந்தீஸ் மலையில் உயிர் பிழைத்தவர்கள்) என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட இந்தத் திரைப்படத்தை கத்லீன் கென்னடி, ரொபேர்ட் வாட்ஸ் ஆகியோர் தயாரிக்க, ஃபிராங்க் மார்ஷல் இயக்க முக்கிய பாத்திரங்களில் ஏதேன் ஹக்,வின்சென்ட் ஸ்பனோ,  ஜோஸ் ஹாமில்டன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்தத் திரைப்படம் ஒரு கல்லூரியின் ரக்பி அணி எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றைப் பற்றி விபரிப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது.1972 ஆம் ஆண்டு பத்தாம் மாதம் 13ஆம் திகதிக்கு கதை பின்னோக்கி நகர்கிறது. உருகுவே நாட்டின் விமானப்படையினரின் விமானமொன்றில் அந்நாட்டின் ரக்பி அணியும் அணி வீரர்களின் உறவினர்கள், நண்பர்கள் அடங்கலாக தென்னமெரிக்காவின் சிலி நாட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தீஸ் மலைத்தொடரின் அழகை ரசித்தவாறும், இன்னும் இருபது நிமிடங்களில் தரை இறங்கப் போவதையும் நினைத்து மகிழ்ச்சியுடன் இருக்க அந்த மகிழ்ச்சியான நிலைமையைத் தலைகீழாக்குகிறது திடீரென எதிர்ப்படும் ஒரு புயல். அந்தப் புயலின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் விமானம் ஒரு மலையுடன் மோதுகிறது. மோதலின் போது விமானத்தின் வாற்பகுதி, இறக்கைகள் என்பன தனித்தனியாகின்றன. அத்துடன் மோதிய விமானம் சரிவொன்றில் வேகமாகக் கீழிறங்கி வரும் போது  இருக்கைகளில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி செயற்பட ஆறு பயணிகளும், ஒரு விமான சிப்பந்தியும் விமானத்துக்கு வெளியே தூக்கியெறிந்து கொல்லப்படுகிறார்கள்.அதிர்ச்சியிலிருந்து ஒருவாறு மீண்ட ஏனைய பயணிகள் ரக்பி அணித்தலைவன் அன்ரானியோவின் தலைமையின் கீழ் இரு மருத்துவ மாணவர்களின் உதவியோடு காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் சற்று நேரத்துக்குள்ளாகவே தலையில் கடுமையான காயங்களுக்குள்ளான இன்னும் ஆறு பேரின் உயிர் பிரிகிறது. தலையில் கடுமையாகக் காயமடைந்த நந்தோவின் உடல் ஆழ்மயக்க நிலையை (கோமா) நிலையை அடைகிறது.  
சூரிய அஸ்தமனம் நெருங்க மிஞ்சியுள்ள பயணிகள் இரவுக்கான தயார்படுத்தலில் இறங்குகிறார்கள். இருக்கைகளின் மேலுறைகளைக் கழற்றிப் போர்வைகளாகப் பாவிக்கலாம் என்று அறிந்து கொள்கிறார்கள். விமானத்தின் உடைந்த பகுதிகளைப் பொதிகளைக் கொண்டு அடைத்து, உறைய வைக்கும் பனிக்குளிரிலிருந்து தப்புவதற்காக ஒருவரோடொருவர் ஒட்டிப் படுத்துக் கொள்கிறார்கள். பனிக்குளிரின் தீவிரத்தன்மை காரணமாகவும், காயங்களின் கடுமை காரணமாகவும் இன்னும் இரண்டு பேர் அன்றிரவு இறந்து போகிறார்கள்.

அந்தப் பனி மலையில் உணவாகத் தேடி கொள்வதற்கோ, அல்லது வேட்டையாடுவதற்கோ ஒன்றும் இல்லாததால் விமானத்தில் என்ன உணவு அல்லது குடிபானம் கிடைக்கிறதோ அவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று அன்ரானியோ கூறுகிறான். அப்போது தாழப்பறந்து செல்லும் ஒரு விமானத்தைக் கண்ட எல்லோரும், விரைவில் எல்லோரும் காப்பாற்றப்பட்டு விடுவோம் என்று  குதூகலிக்கிறார்கள். இதன் காரணமாக அன்ரானியோவும் இன்னும் இரண்டு பேர்களையும் தவிர ஏனையோர் மீதமிருக்கும் இனிப்புக்களை உண்டு விடுகிறார்கள்.

அடுத்த நாள் தங்களைக் காப்பாற்றும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்தவர்களுக்கு கடுமையான பனிப்புயலின் காரணமாக அந்நடவடிக்கை கைவிடப்பட்டதாக அறிந்து கடும் ஏமாற்றத்துக்குள்ளாகிறார்கள். ஏமாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட விரக்தியினால், இனிப்புக்களை உண்டு முடித்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது.

இதற்கிடையில் ஆழ்மயக்க நிலைக்குச் சென்ற நந்தோ அவனுடைய இரண்டு நண்பர்களது கவனிப்பின் காரணமாக சுயநிலைக்குத் திரும்புகிறான். தனது தாயின் இறப்பை அறிந்து கவலையடையும் அவன் கடுமையான காயத்துக்குள்ளாகியிருக்கும் தனது தங்கையைக் பத்திரமாகக் கவனித்துக் கொள்கிறான். தனது தங்கை விரைவில் இறந்து விடுவாள் என்பதை உணர்ந்து கொள்ளும் நந்தோ எப்படியாவது இந்த மலையை விட்டு வெளியேற உறுதிகொள்கிறான். அதற்கு உணவு தேவை என்று அவனது சகா ஒருவன் நினைவூட்ட நந்தோ ஒரு மிகவும் சர்ச்சைக்குரிய கருத்தை முன் வைக்கிறான்.  அதாவது இறந்த சக பயணிகளின் உடல் சதையை உணவாகக் கொள்ளலாம் என்ற கருத்தே அது. இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டுச் சிறிது நேரத்துக்குள் அவனுடைய தங்கையும் இறக்கிறாள்.
கடுமையான வாதப்பிரதி வாதங்களுக்கு உள்ளாகும் அந்த சர்ச்சைக்குரிய கருத்து இறுதியில் பயணிகள் மத்தியில் வேறு வழியில்லாமல் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்படுக்கிறது. அதன் பின்னர் செர்பினோ, ராஃபில், மார்டினோ ஆகிய பயணிகள் விமானத்தின் வாற்பகுதியைத் தேடிப் புறப்படுகிறார்கள். அதனைத் தேடி கண்டுபிடித்து அங்குள்ள மின்கலங்களைத் தேடி எடுத்து செயலிழந்திருக்கும் தங்களுடைய  வானொலியை இயங்க வைத்து தங்களுடைய இருப்பிடத்தை அறிவதற்கு சமிக்ஞைகள் அனுப்புவதே அவர்களுடைய நோக்கம். அவர்கள் தேடிச் சென்ற இடத்தில் ஏனைய சக பயணிகளின் உடல் கிடைக்கிறதே தவிர அவர்கள் தேடிச் சென்ற மின்கலங்கள் கிடைக்கவில்லை. ஏமாற்றத்துக்குள்ளாகி அவர்கள் திரும்பி வந்து சிறிது நேரத்தில் கடுமையான பனிச்சரிவு அந்தப் பிரதேசத்தைத் தாக்குகிறது. அவர்கள் பாதுகாப்பாக இருந்த விமானத்தின் பகுதி பனியினால் நிறைய, அனேகமானவர்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் தப்ப சிலர் பனியில் சிக்கி உறைந்து இறந்து விடுகிறார்கள்.




இழப்பின் காரணமாகச் சோர்ந்து விடாமல் மீண்டும் நந்தோ, அன்ரானியோ, கனேசா, டின்டின்  ஆகியோர் மீண்டும் விமானத்தின் வாற்பகுதியைத் தேடிப் புறப்படுகிறார்கள். அவர்கள் அந்த வாற்பகுதியைத் தேடிக் கண்டுபிடித்தும் அந்த மின்கலங்களைக் கழற்ற முடியாமல் திரும்பி வந்து தொழில்நுட்ப விடயங்களில் அறிவுள்ளவனாகக் கருதப்பட்ட ரோய் என்ற ஒருவனை மீண்டும் அழைத்துச் செல்கிறார்கள். ஆனால் ரோயாலும் மின்கலங்களைக் கழற்றியெடுக்க முடியாமற் போக தோல்வியுடனும் மனவேதனையுடனும் திரும்புகிறார்கள்       

அதன் பின்பு இன்னும் சிலர் இறந்து போக மீண்டும் நந்தோ, ராஃபில், டின்டின் ஆகியோர் வெளியேறும் வழி தேடிப் புறப்படுகிறார்கள். இரண்டு நாட்கள் பயணத்தின் பின்னர் அவர்கள் உணவுக்காகக் கொண்டு சென்ற சக பயணிகளின் இறைச்சி மூன்று பேருக்குப் போதாது என்று கருதியதால் டின்டின்னை மீண்டும் அனுப்புகிறார்கள். பன்னிரெண்டு நாட்கள் கடுமையான பயணத்தின் பின் மலைகளைத் தாண்டி ஒரு நகரப் பகுதியை அடைந்து உயிரோடு எஞ்சியுள்ள தங்கள் சக பயணிகள் பற்றி அறிவிக்கிறார்கள். ஒரு உலங்கு வானூர்தி அந்தக் குறிப்பிட்ட பனி மலையை அடைந்து எஞ்சியிருந்த 14 பேரை மீட்கிறது.

அந்த 14 பேரும் மீண்டும் அந்த இடத்திற்கு வந்து இறந்த தங்களின் சகாக்களின் உடல்களை கற்குவியல்களுக்கு மத்தியில்  ஒரு சிலுவை அடையாளத்துடன் புதைக்கிறார்கள்.



உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படம் அந்த விபத்தில் இறந்த 29 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவே எடுக்கப்பட்டது.