ஞாயிறு, 27 நவம்பர், 2016

யானைகளின் இடுகாடு


இவ்வுலகில் பிறந்த எல்லாருக்குமே இறப்பு என்பது நிச்சயம் என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும். அது மனிதர்களாக இருக்கட்டும்,மிருகங்களாக இருக்கட்டும் பறவைகளாக இருக்கட்டும். எல்லாவற்றுக்குமே இறப்பு என்பது பொது விதி தான். ஆனால் எங்களுக்கு எப்போது இறப்பு நேரும் என்று யாருக்கும் தெரியாது. என்ன தான் முதுமை, நோய், இயலாமையுடன் இருப்பவர்களுக்குக் கூட தங்கள் மரணம் எப்போதென்று  நிச்சயமாகத் தெரியாது. இதற்குச் சில விதிவிலக்குகள் இருக்கின்றன. தற்கொடைப் போராளிகளைக் கூறலாம். என்ன தான் அவர்களின் எண்ணம் அழிவாக இருந்த போதிலும், தம் இனத்துக்காகவும், அவர்களின் எதிர்கால நன்மைக்காகவும் என்ற நம்பிக்கையில் இந்த வாழ்க்கையை விட்டுக்கொடுத்துத் தமது உடலைக் கொடூரமான வகையில் அர்ப்பணிக்கும் உயர் தியாகத்தை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது. அதைத் தவிர திரைப்படங்களில் சிலருக்கு (பெரும்பாலும் கதாநாயகர்களுக்கு) வைத்தியர்கள் காலக்கெடு வழங்குவதையும் அவர்கள் தண்ணியடித்துத் தாடி வளர்த்துத் திரிவதையும், காதலியை வேறு யாருக்கும் தியாகம் செய்வதையும் பார்த்துக் கண்ணீர் வடித்திருப்போம்.

மிருகங்களில் யானைகளுக்கு தாம் இறக்கப்போகும் காலம் தெரிய வருவதாகப் புத்தகங்களில் வாசித்திருக்கிறேன். இரண்டு வாரங்களுக்கு முன் ‘விலங்குகளின் கிரகம்’(Animal Planet) என்ற தொலைக்காட்சி வரிசையில் ‘தந்தப் புதையலைத் தேடி’ (‘Searching Of Ivory Treasure’) என்ற நிகழ்ச்சியில் இதனைப்  பற்றி மேலும் சில சுவாரசியமான தகவல்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. அந்த நிகழ்ச்சியில் பெற்றுக் கொண்ட தகவல்களையும், இணையத்தில் இது சம்பந்தமாகக் கிடைத்த தகவல்களையும் ஏற்கனவே வாசித்தறிந்த தகவல்களையும் தொகுத்துத் தருகிறேன்.

தம்மை மரணம் நெருங்கி வருவதை உணர்ந்து கொள்ளும் யானைகள் தங்கள் கூட்டத்திலிருந்து விலகி மரணத்தை அமைதியாகத் தழுவிக் கொள்வதற்கு  அதற்கென உள்ள விசேடமான, ரகசியமான இடத்தை நோக்கிச் செல்லுமாம். மனித விளக்கத்துக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யமான சக்தி மூலம் அந்த இடத்தை அறிந்து கொள்வதாக ஆபிரிக்க நாட்டுக் கதைகளில் சொல்லப்படுகிறது.  சில பழைய ‘டார்ஸான்’ படங்களிலும் மற்றும் 1994 இல் வெளி வந்த ‘The Lion King’ படத்திலும் கூட இதைப்பற்றி சுவாரசியமாகச் சித்திரிக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.
விஞ்ஞானிகளால் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டாத இந்நிகழ்வைப் பலர் மறுத்துரைக்கிறார்கள். அதாவது கூட்டமாக யானையின் மண்டையோடு,எலும்புகள் என்பவற்றைக் கண்டால் அவற்றை யானைகளின் இடுகாடாக நினைக்கத் தேவையில்லை என்று அவர்கள் கருதுகிறார்கள். மிகவும் பெறுமதியான ஒன்றாகக் கருதப்படும் யானைகளின் தந்தங்களுக்காக வேட்டைக்காரர்கள் அவற்றைக் கூட்டமாக வேட்டையாடியிருக்கலாம். அல்லது வேட்டைக்காரர்கள் நீர்நிலைகளில் நஞ்சு கலந்து கூட்டமாகக் கொன்றிருக்கலாம் அல்லது  ஒரு இடத்தில் உணவு கிடைக்காமல், அந்த இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கூட்டமாக  உணவு தேடி வந்த வேளை  மிகவும் பலவீனமாகி இறந்திருக்கலாம் அல்லது  அல்லது வறட்சி போன்ற காலநிலை மாற்றத்தினால் இறந்திருக்கலாம் அல்லது சமவெளிகளில் வீசும் கடுமையான காற்று ஆங்காங்கு காணப்படும் எலும்புகளை ஒரு இடத்தில் குவித்திருக்கலாம் அல்லது காடுகளில் அகழ்வுகளை மேற்கொண்ட மனிதர்கள் கண்டெடுத்த எலும்புகளை ஒரு இடத்தில் குவித்திருக்கலாம் என்றும் கருதுகிறார்கள்.

ஏனைய விலங்குகளின் எலும்புகளில் ஆர்வம் காட்டாத ஆனால், தங்கள் இனத்தின் எலும்பை மோப்பம் மூலமாக உணர்ந்து கொள்ளும் யானைகள் அவற்றைத் தூக்கி வந்து வேறு இடங்களில் போடுவதும் மேலும்  பலவீனமான (கல்சிய சத்துக் குறைவான?) சில யானைகள் போஷாக்கை  தங்கள் உடலில் ஏற்றிக் கொள்வதற்காக தங்கள் இனத்தின் எலும்பை வாயிலிட்டு மெல்வதும் கூட அவதானிக்கப்பட்டிருக்கிறது. இவ்வினோதமான போக்கு முள்ளம்பன்றிகள் மற்றும் ஆமைகளிடமும் கூட காணப்படுகிறது.

இது தவிர, தங்கள் கூட்டங்களால் ஒதுக்கப்படும் யானைகள் சில உயிர் வாழப் பிடிக்காமல் உணவைத் தவிர்த்து  பலவீனமடைந்து இறந்து  விடுகின்றன என்றொரு விடயமும் கென்யா நாட்டு வனப்பாதுகாப்புப் பிரிவினரால் பல தடவைகளுக்கு மேல் அவதானிக்கப்பட்டிருக்கிறது. இளம், முதுமையடையாத, எந்தக் காயங்களுக்கும் உட்படாத யானைகளே இவ்வாறு உணவு தவிர்ப்பை மேற்கொள்ளுகின்றன என்றும் ஆனால் இவ்வாறான யானைகள் மரணிப்பதற்காக இரகசியமான இடங்களைத் தேடிச் செல்வதில்லை என்றும் கூட அவதானிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இதற்கும் ‘யானைகளின் இடுகாடு’ என்ற விடயத்திற்கும் சம்பந்தமில்லை.    
தந்தங்களைத் தேடி யானைகளை வேட்டையாடுபவர்கள் யானைகளின் இடுகாட்டைப் பொக்கிஷமாகக் கருதுவதால் தங்கள் உயிரை மதிக்காமல் அப்படியான இடங்களைத் தேடிப் புறப்படுகிறார்கள். அவ்வாறு செல்பவர்களில் அனேகர் திரும்ப வருவதில்லை என்ற விடயமும் திரும்ப வந்தவர்கள் யானைகளின் இடுகாட்டைக் கண்டதில்லை என்ற விடயமும் குறிப்பிடப் பட வேண்டிய விடயங்களாகும். அத்துடன் திரும்ப வந்தவர்களும் வயதான, பலவீனமான தனித்துச் சென்ற யானைகளைத் தாங்கள் ரசியமாகப்  பின்தொடர்ந்ததாகவும், அவை தாங்கள் யாராலோ பின்தொடரப்படுகிறோம் என்று அறிந்தோ என்னமோ அவை சுற்றிச்சுற்றி தங்களைக் குழப்பத்திற்குள்ளாக்கியதுடன் ஆபத்தான இடங்களின் மூலம் சென்றதாகவும் இதனால் தங்கள் குழுவில் பலர் உயிரிழக்க நேரிட்டது என்றும் கூறியிருக்கிறார்கள்.
இது தவிர, தங்கள் கூட்டங்களால் ஒதுக்கப்படும் யானைகள் சில உயிர் வாழப் பிடிக்காமல் உணவைத் தவிர்த்து  பலவீனமடைந்து இறந்து  விடுகின்றன என்றொரு விடயமும் கென்யா நாட்டு வனப்பாதுகாப்புப் பிரிவினரால் பல தடவைகளுக்கு மேல் அவதானிக்கப்பட்டிருக்கிறது. இளம், முதுமையடையாத, எந்தக் காயங்களுக்கும் உட்படாத யானைகளே இவ்வாறு உணவு தவிர்ப்பை மேற்கொள்ளுகின்றன என்றும் ஆனால் இவ்வாறான யானைகள் மரணிப்பதற்காக இரகசியமான இடங்களைத் தேடிச் செல்வதில்லை என்றும் கூட அவதானிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இதற்கும் ‘யானைகளின் இடுகாடு’ என்ற விடயத்திற்கும் சம்பந்தமில்லை.    
தந்தங்களைத் தேடி யானைகளை வேட்டையாடுபவர்கள் யானைகளின் இடுகாட்டைப் பொக்கிஷமாகக் கருதுவதால் தங்கள் உயிரை மதிக்காமல் அப்படியான இடங்களைத் தேடிப் புறப்படுகிறார்கள். அவ்வாறு செல்பவர்களில் அனேகர் திரும்ப வருவதில்லை என்ற விடயமும் திரும்ப வந்தவர்கள் யானைகளின் இடுகாட்டைக் கண்டதில்லை என்ற விடயமும் குறிப்பிடப் பட வேண்டிய விடயங்களாகும். அத்துடன் திரும்ப வந்தவர்களும் வயதான, பலவீனமான தனித்துச் சென்ற யானைகளைத் தாங்கள் ரசியமாகப்  பின்தொடர்ந்ததாகவும், அவை தாங்கள் யாராலோ பின்தொடரப்படுகிறோம் என்று அறிந்தோ என்னமோ அவை சுற்றிச்சுற்றி தங்களைக் குழப்பத்திற்குள்ளாக்கியதுடன் ஆபத்தான இடங்களின் மூலம் சென்றதாகவும் இதனால் தங்கள் குழுவில் பலர் உயிரிழக்க நேரிட்டது என்றும் கூறியிருக்கிறார்கள்.

இது மிக அதிகளவில் நிகழும் ஆபிரிக்காக் கண்டத்தில், இவ்வாறான இடங்களை யானைகள் தங்களின் புனித இடங்களாகக் கருதுகின்றன என்றும் அந்த இடங்களின் பாதுகாப்புக்குத் முதுமையடையாத, பெரிய தந்தங்களையுடைய  யானைகள் காவலுக்கு நிற்கும் என்றும் அவை தந்தங்களைத் தேடிச் செல்பவர்களைக் கொன்று விடுகின்றன  என்றும் கதைகள் வழிவழியாகக் சொல்லப்பட்டு வருகின்றன. அதை விட, இன்னும் சற்று அதிகப்படியாக யானைகளின் இடுகாடுகளில் புனிதமான, மகிமை வாய்ந்த, மந்திர உச்சாடனங்களைக் கொண்ட  புத்தகங்கள் இருக்கின்றன என்றும்  அவை வாழ்வின் துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு வழிகாட்டுகின்றன என்றெல்லாம் கூட சொல்லப்பட்டு வருகின்றன. மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் உள்ள சம்பந்தம் கூட யானைகளுக்கும் புத்தகங்களுக்கும் இல்லையென்பதால் ஒரு சுவாரசியத்துக்காக அதனை உள்வாங்கிக் கொள்ளலாம்.
எப்படியாயினும் ‘யானைகளின் இடுகாடு’ என்பது உண்மையா இல்லையா என்பது இன்னும் கேள்விக்குரிய ஒன்றே. உயிரோடு இருக்கும் போதும் தனது கூர்மையான ஞாபகசக்தி, அசாத்தியப் பலம் ஆகியவற்றால் மனிதனை வியப்புக்குள்ளாக்கும் யானைகள் தமது இறப்பின் பின்பும் மனிதனை வியப்புக்குள்ளாக்குவதற்கு இந்த விடயத்தைப் பயன்படுத்துகின்றன எனக் கொள்ளலாம். 

 



உத்தேசிக்கப்பட்டுள்ள தீருவில் நீச்சல் குளமும், நாங்கள் உல்லாசமாகச் சுற்றித் திரிந்த தோட்டக்கிணறுகளும்,குளங்களும்


இந்த வருடத்தின்(2016) பதினோராம் மாத ஆரம்பத்தில் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் போது வல்வெட்டித்துறையில் அமையவுள்ள நீச்சல் குளத்திற்கு 25 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதை செய்திப்பத்திரிகையில் பார்த்தபோது எனது ஞாபகங்கள் பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தன. அவை என்ன ஞாபகங்கள் என்று இந்தக் கட்டுரையின் தலையங்கத்தைப் பார்த்தால் தெரியும்.அந்த ஞாபகங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்பு நீச்சல் குளம் சம்பந்தமான தகவல்களைப் பார்ப்போம்.

இந்தச் செய்தியானது valvettithurai.org  இணையத் தளத்தின் மூலம் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்பட்டு வந்தது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். இந்த மாதம் 13ம் திகதி கூட (அதாவது வரவு செலவுத் திட்டத்தின் பின்) இதைப் பற்றிய செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. தெரியாதவர்களுக்கு அந்தச் செய்தி பற்றிச் சுருக்கமாக...........

வல்வெட்டித்துறை நகர சபைக்குச் சொந்தமான இந்தக் காணியில்  சர்வதேசத் தரத்தில் ஒரு நீச்சல் குளத்தை அமைத்துத் தருமாறு முதலில் வேண்டுகோள் விடுத்தது வட மாகாண பாராளுமன்ற உறுப்பினரான திரு சிவாஜிலிங்கம் தான். பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த  மற்றும் வேறும் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான ஆழிக்குமரன் ஆனந்தனின் ஞாபகார்த்தமாகவே இதனை அமைத்துத் தருமாறு அவர் முன்பு பதவியிலிருந்த அரச அதிபரான திரு வேதநாயகத்திடம் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். பின்னர் இருவரும் இணைந்து மேற்கொண்ட முயற்சியின் காரணமாக விளையாட்டுத்துறையின் பணிப்பாளரும் வேறு சில அங்கத்தவர்களும்  வந்து தீருவிலைப் பார்வையிட்டுத் தமது சம்மதத்தை வழங்கியிருந்தனர். அதன் பின்னர்  திரு சிவாஜிலிங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வல்வெட்டித்துறை நகர சபையின் செயலாளர், வடக்கு மாகாண சபை முதலமைச்சரின் எழுத்து மூலமான சம்மதம் கிடைத்த பின் இதன் பூர்வாங்க வேலைகளை ஆரம்பிக்குமாறு கடிதம் மூலம் அறிவித்திருந்தார். இது தான் அந்தச் செய்தியின் சாராம்சம்.
தீருவில் குளம்....எதிர்காலத்தில் சர்வதேசத் தரத்தில் நீச்சல் குளம் அமைக்கத் தெரிவு செய்யப்பட்டுள்ள இடம்.
சுற்று வட்டாரத்தில், இயற்கையாகவே அமைந்த, கோவில்களைச்  சாராத, சுற்ற வரக் கட்டுக்கள் இல்லாத குளம் என்றால் அது தீருவில் குளம் என்று தான் நினைக்கிறேன். சிலருக்குக் கெருடாவிலிலுள்ள  விறாய்ச்சிக் குளம் ஞாபகத்துக்கு வருமென்று நினைக்கிறேன். ஆனால் அது அதனுடைய விசாலத்தன்மை காரணமாக அதனை ஒரு சிறிய உள்ளூர் ஏரியாகக் கருத இடமுண்டு.
அதனை நாகரீகமாகத் தீருவில் குளம் என்று சொன்னாலும் ஊர் மக்கள் மத்தியில் அது வேறொரு பெயரில் தான் அழைக்கப்படுகிறது. என்னதான் இப்போது இலங்கை அரசாங்கம் வேறொரு நாட்டிடம் கடன் வாங்கி சர்வதேச தரத்திலான நீசசல் குளத்தைக் கட்டி, அந்தக் கடனை எவ்வாறு கழிக்கப் போகிறது என்று யோசித்துக் கொண்டிருந்தாலும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் அதனை இயற்கைக் கடனைக் கழிக்கத் தான் பயன்படுத்தினார்கள், பயன்படுத்துகிறார்கள் என்பது ஒரு கசப்பான உண்மையாகும். அந்தக் கசப்பான உண்மையே தீருவில் குளம் இன்னொரு பெயரில் அழைக்கப்படுவதற்குரிய காரணமாகும்.
நெடியகாட்டுக் குளத்தின் தற்போதைய தோற்றம்
1988 முதல் 1994 வரை  ஊர் நண்பர்களுடன் பிரதானமாகக் கடலில் நீந்தி வந்தாலும் கூட உபரியாக அல்லது மேலதிகமாக பூச்சிபுத்தான், வேலாகாட், நெற்கொழு, கெருடாவில், கம்பர்மலை போன்ற இடங்களில் அந்தந்த இடங்களைச் நண்பர்களுடன் தோட்டக் கிணறுகளில் குதித்துக் குளித்த அனுபவங்கள் ஏராளம் உண்டு. அப்போது சில நண்பர்கள் கடலை, மனைவிக்கும் தோட்டக்கிணறுகளை, சின்ன வீடுகளுக்கும் ஒப்பிட்டுக் கதைத்த கதைகள் ஞாபகத்துக்கு வருகின்றன. ஒரு விதத்தில் உண்மை தான்.  வயதான காலத்தில் சின்ன வீடுகளை எல்லாம் விட்டுவிட்டு மனைவியோடு மட்டும் தொடர்பில் இருப்பது போல இப்போது கடலோடு மட்டும் தான் தொடர்பு.
தோட்டக் கிணறுகளில் குதித்துக் குளிக்கும் பழக்கம் எப்படி வந்தது என்று சிலர் யோசிக்கக்கூடும். நீச்சலில் ஆர்வமுள்ள சிலருக்குக் கடலிலும்,குளங்களிலும் இறங்கப் பயமாக இருந்திருந்ததால் இந்தப் பழக்கம் ஆரம்பித்திருக்கக் கூடும் அல்லது பாய்தல், கரணமடித்தல் போன்ற இன்னபிற சாகசச் செயல்களுக்கு கிணறே ஏற்றது என்று நினைத்திருக்கக்கூடும். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு நீர்நிலைகளும் ஒவ்வொரு விதமான பரவசத்தைத் தரக் கூடியன.
தோட்டக் கிணறுகளிலுள்ள இன்னுமொரு சாதகம், தனிப்பட்ட தன்மை. அதாவது கடலில், குளங்களில் நாங்கள் நீந்தப் போனால் அங்கு வேறு பல குழுக்களும் நீந்திக் கொண்டிருக்கும். ஆனால் தோட்டக் கிணறுகளில் நாங்கள் ஏகபோக உரிமை கொண்டாடுவதற்கான வாய்ப்பு அதிகம். அத்துடன் தனியே எங்கள் நண்பர்களுடன் இருக்கும் போது தான் புதுப்புது முறைகளில் தயக்கமில்லாமல் பாய்ந்து பழகலாம். மூன்றாம் நபர்களுடன் இருக்கும் போது புதிய முயற்சிகளில் ஈடுபட்டுப் பிழைத்து விட்டால் கோமாளித்தனமாகப் போய் விடும் என்ற தயக்கம் இருக்கும்.
சிவன் கோயில் குளத்தில் இடமிருந்து வலமாக சதீஷ், தீபன், ராஜநந்தன் (எனது தம்பியின் நண்பர்கள்)
இங்கே நாங்கள் பலவிதமான போட்டிகளில் ஈடுபடுவோம். யார் கிணற்றில் குதித்து விரைவாக அடியில் இருக்கும் பெரிய கல்லைத் தூக்கி கிணற்று மேல்மட்டத்துக்குக் கொண்டு வருவது, யார் நீருக்குள் அதிக நேரம் மூச்சடக்கி இருப்பது, யார் கிணற்றை விட்டு அதிக அதிக தூரம் தள்ளி நின்று கிணற்றுக்குள் பாய்வது என்றெல்லாம் பலவிதமான போட்டிகள் நடக்கும். இதை விட, ஒவ்வொருத்தரம் ஒவ்வொரு விதமான முறைகளில் பாய மற்றவர்களும் அதே போல் பாய முயற்சிப்போம். கிணற்றுக்கட்டைக் பிடித்துக் கரணமடித்துப் பாய்தல்,பின் கரணமடித்தல், செத்த வீட்டுப் பாய்ச்சல் முறை,(ஒப்பாரி வைப்பது போல் இரு கைகளையும் தலையில் வைத்துக் கொண்டு பாய்தல்), கிணற்றுக் கட்டில் பத்மாசன முறையில் அமர்ந்தவாறு தலைகீழாகப் பாய்தல், இரண்டு கைகளையும் வணங்கியவாறு தலைக்கு மேலே உயரத் தூக்கி, ஒரு காலைத் தூக்கி மற்றக் காலின் தொடையில் வைத்து  விருட்சாசன முறையில் பாய்தல் என்றெல்லாம் விதம் விதமாகச் செய்து பார்போம்.
  சாதாரணமாக நின்று, முன் கரணமடித்துப் பாயும் முறையில் எங்கள் நண்பன் குமரன் பாய்வதைப் பார்க்க எனக்கு மிகவும் விருப்பம். ஆஜானுபாகுவான உடலைக் கொண்டிருந்தாலும் ஒரு முழு வட்டம் சுழன்று கால்கள் கனகச்சிதமாகத் நீருக்குள் இறங்கும் காட்சி அற்புதமாக இருக்கும். நாங்கள் அதைப் பார்த்து மூக்கில் விரல் வைப்போம். நாங்கள் மட்டுமல்ல. குமரனும் கூட. அதாவது ஒரு முழு வட்டம் சுழன்று நீருக்குள் இறங்க முன்பு எப்படியோ குமரனின் கையொன்று மூக்கைப் பொத்திக் கொண்டு விடும். அதே போல் எங்கள் நண்பன் சந்திரகுமாருக்கும் மற்றவர்களால் பாய முடியாத, கண்ணுக்கு விருந்து தரும் கவர்ச்சியான, அருமையான பாய்ச்சல் முறையொன்று இருந்தது. நின்ற இடத்திலிருந்து கால்களால் துள்ளி உயரக் கிளம்பி, சடாரென தலைகீழாகத் தொண்ணூறு பாகையில் திரும்பி தலைகீழாகப் பாயும் முறையை சந்திரகுமார் மறந்தாலும் என்னால் மறக்க முடியாது. எங்கள் நண்பன் சேது தலையை இரு பக்கமும் வேகமாகத் திருப்பியவாறு நீந்துவதைப் பார்க்க அழகாக இருக்கும். எங்கள் நண்பன் ராசியின் நீச்சல் இன்னொரு அழகு. நீரை மிகக் குறைவாகச் சிதறச் செய்து பாயும் முறையும் கையை நீருக்குள் வீசும் போது நீரை மிகக் குறைவாக வெளியேற்றும் முறையும் பார்க்க அருமையாக இருக்கும். இந்த இருவரும் அதிகத் தூரம் நீந்தக் கூடியவர்கள். இவர்களோடு கிணற்றில் குதித்த ஞாபகம் இல்லை. ஆனால் கடலில் நீந்திய அனுபவங்கள் ஏராளம் உண்டு .92 முதல் 94 வரையான காலப்பகுதியில் எங்கள் நண்பன் வாசனோடு அதிகத் தடவைகள் கடலில் நீந்திய ஞாபகங்கள் இருக்கின்றன. நாயோடு சேர்ந்தால் குரைக்கத் தானே வேண்டும் என்ற ரீதியில் வாசன் என்னோடு நீந்த வருவதை இப்போது நினைத்துப் பார்க்கச் சிரிப்பாக இருக்கிறது.



ரேவடி ‘வெள்ளை’ கடற்பகுதியில் இடமிருந்து வலமாக பரணீதரன், தீபன், சேகர், அரவிந்தன்








எத்தனையோ தோட்டக்கிணறுகளில் குதித்திருந்தாலும் விறாய்ச்சிக் குளத்துக்கு அருகிலிருந்த சதுரக் கிணற்றிலும், நெற்கொழு  வைரவர் குளத்துக்கு  அருகிலிருந்த ஜம்புலிங்கம் (நண்பன் ஸ்ரீ வைத்த பெயர்) கிணற்றிலும் குதித்து நீந்தியதை மறக்க முடியாது.அதிலும் சதுரக்கிணற்றுத் தண்ணீரின் குளிர்ச்சி மிகவும் அருமையாக இருக்கும்.  
நெற்கொழு வைரவர் கோயிலுக்கு அருகிலுள்ள ‘ஜம்புலிங்கம்’ கிணற்றில் இடமிருந்து வலமாக குமார், ஸ்ரீ, தீபன், நகுலன், ரவி, தவச்செல்வன், கண்ணன், மற்றும் சேட்டை விடக்கூடாது என்று அம்மா சொன்னதை உறுதியாகக் கடைப்பிடித்த சுதாகரன்


ஒரு முறை ஜம்புலிங்கம் கிணற்றில் நாங்கள் பாயத் தயாரான போது தோட்டக்காரன் செம்மொழியால் திட்டியவாறு ஓடிவர நாங்கள்  கல்லுக்குள்ளும் முள்ளுக்குள்ளும் துவிச்சக்கர வண்டியை உருட்டிக்கொண்டு பதறியடித்து ஓடிவந்ததை நினைக்கும் போது ‘எப்படியிருந்த நாங்கள் இன்று எப்படி இருக்கிறோம்’ என்று தோன்றுகிறது.
ஒரு தடவை நெற்கொழுவில் பிடித்துக் கொண்டு ஏறுவதற்குப் பிடிமானம் இல்லாத கிணறொன்றில் ஆர்வக்கோளாறு காரணமாக யோசிக்காமல் குதித்து விட்டேன். எப்படியும் என் நண்பர்கள் என்னை வெளியில் எடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன். ஆனால் உள்ளே ஒரு ஆபத்து காத்திருந்தது. இரண்டு நீர்ப்பாம்புகள் (என்று நண்பர்கள் சொன்னது ஞாபகமிருக்கிறது) பிணைந்தவாறு இருந்தன. ஒரு பாம்பு என்னை நோக்கி வர, அதற்குள் கிணற்றின் வெளியிலிருந்த நண்பர்கள் நீளமான தென்னோலை ஒன்றை சரியான நேரத்தில் கீழே நீட்ட அதைப் பிடித்துக் கொண்டு ஒரே மூச்சில் ஏறி வந்து விட்டேன். எனது நண்பர்கள் சற்குணபாலனும், ரவீந்திரராசாவும்  அந்நேரத்தில் என்னுடன் இருந்ததாக ஞாபகம்.  
ஒரு முறை இவ்வாறு  தோட்டக்கிணறு ஒன்றில் நீந்தி விட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தோம். அப்போது நான் தீருவில் குளத்தில் இறங்க முயற்சித்த போது “ நீ இறங்குவதானால் இறங்கு. ஆனால் நாங்கள் ஓடி விடுவோம்” என்று நண்பர்கள் சொல்ல நான் மனமில்லாமல் நண்பர்களுடன் திரும்பினேன். அந்த நண்பர்களுள் பாலன், ரவீந்திரன், மனோகர், கஜேந்திரபதி, பிரகாஷ், ரவீந்திரராசா ஆகியோர் இருந்த ஞாபகம். அப்போது ‘இந்த இடத்தில் ஒரு அழகான நீச்சல் குளம் வந்தால்.....?’ என்று சிறுபிள்ளைத்தனமாக நினைத்திருக்கிறேன். இப்போது எனது அந்த சிறுபிள்ளைத்தனமான  நினைப்பு, உண்மை ஆவதற்கான பேச்சுவார்த்தைகள்  வல்வெட்டித்துறையின் நகர சபை, இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ். அரச அதிபர், இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர்  என்ற ரீதியில் உயர்மட்டத்தில்  பிரஸ்தாபிக்கப்பட்டிருப்பதோடு இலங்கையின் வரவு செலவுத் திட்ட உரை வரை சென்றிருப்பதனை  நினைத்தால் மகிழ்ச்சி தான். இனி வெளிநாடுகளிலிருந்து நண்பர்கள் வரும் போது  அங்கும் போய் நீந்தலாம் என்று நினைத்தாலும் அதற்கு எவ்வளவு காலம் எடுக்கப் போகிறதோ தெரியாது. அத்துடன் சர்வதேசத் தரத்திலான நீச்சல் குளம் என்று சொல்லப்பட்டிருப்பதனால் நாங்கள் தோட்டக் கிணறுகளில் விழுவதைப் போல் விழ முடியாதென்றும் அதற்கெனக் கட்டுப்பாடுகள் இருக்குமென்றும் நினைக்கிறேன். எப்படியாயினும், எங்கள் காலத்தில் வருமென்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.






புதன், 16 ஏப்ரல், 2014

வணக்கம்

                                                   வல்வை அலையோசை


‘வல்வை அலையோசை’யை ஆர்வமாகப் படிப்பவர்கள், நான் விடும் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்கள், குட்டித் திருத்துபவர்கள், அதிலுள்ள நல்ல விடயங்களுக்காக தட்டிக் கொடுப்பவர்கள் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் வணக்கங்கள்.

‘வல்வை அலையோசை’க்கு ஓய்வு கொடுத்து விட்டு ‘அக்கடா’ என்றிருப்போம் என்று இடைக்கிடை யோசித்தாலும் கூட எழுத்தின் மேலுள்ள ஆர்வம் என்னை ஓய விடாது என்று தான் நினைக்கிறேன். எனக்கு  இன்னொரு விடயத்திலுள்ள ஆர்வம் இந்த ஆறாவது இணைய சஞ்சிகையில் பரவலாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒன்றிரண்டு ஆக்கங்களைத் தவிர ஏனைய எல்லாவற்றுக்கும் மையப்பொருள், கருப்பொருள், ஆய்வுப்பொருள் ஒன்றாகவே இருப்பதைக் காணலாம். அது என்னவென்று நீங்களே கண்டுபிடியுங்கள்.

ஐந்தாவது அலையோசைக்கும் ஆறாவது அலையோசைக்கும் இடையில் 10 மாத இடைவெளி. அதாவது குழந்தை உண்டாகியிருந்தால் அது பிறந்துமிருக்கும். ரொம்பவும் வேலை மும்முரத்தில் நான் இல்லை தான். இவ்வளவு பெரிய இடைவெளிக்கு சோம்பல் தான் காரணம். அதோடு இதை வெறும் blog  ஆக இல்லாமல் இணைய சஞ்சிகையாக (குறைந்தது பத்து ஆக்கங்களுடன்) வெளியிட வேண்டுமென்ற எனது ஆர்வமும் இவ்வளவு பெரிய இடைவெளிக்குக் காரணம். இதை நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருக்கிறேன்..

இவ்வளவு பெரிய இடைவெளி வராமல் இருப்பதற்கு ‘ வல்வை அலையோசை’யின் வாசகியும், விமர்சகியுமான திருமதி தனுஜா முகுந்தன் வழங்கிய யோசனையைச் செயற்படுத்த நினைக்கிறேன். தனித்தவில் வாசிக்காமல் ஏனைய தவில் மற்றும் நாதஸ்வர வித்துவான்களையும் வாசிக்க விடுவது தான் அவர் கூறிய யோசனை. சிறந்த படைப்பாளிகளின் ஆக்கங்களுக்கு ஊக்கம் வழங்குவது சிறப்பான எண்ணம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதோடு தொடர்ந்து எனது எழுத்தைப் படிப்பதால் ஏற்படும் சலிப்புக்கு மருந்தாகவும் இருக்கும் ஆனால்...... யார் ‘வல்வை அலையோசை’யை  நம்பி ஆக்கங்கள் வழங்கப்போகிறார்கள்? நான் ‘வல்வை அலையோசை’யை ஓட்டைக்கப்பலாக வர்ணித்து ‘ஓட்டைக்கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள் அவசியமா?’ என்று நான் கேட்ட கேள்விக்கு ‘ஒட்டைக்கப்பலுக்குத் தான் ஒன்பது மாலுமிகள் அவசியம், அதனைத் திருத்திச் செப்பனிட்டுப் பாதுகாப்பாகச் செலுத்துவதற்கு.’ என்று அவர் அடித்த நெற்றியடி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வேறு ஒருத்தரும் ஆக்கங்கள் வழங்கா விட்டாலும் அவரிடமிருந்தாவது ஆக்கங்களைப் பெறலாம் என்று நம்பிக்கை ஏற்பட்டது. ஆக, எழுத்தில் ஆர்வமுள்ள வாசக வாசகிகளுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுவது என்னவெனில், உங்கள் ஆக்கங்களைப் பிரசுரிப்பதற்கு ‘வல்வை அலையோசை’ ஓரளவேணும் பரவாயில்லை என்று நீங்கள் கருதுவீர்களாயின் நீங்கள் உங்கள் ஆக்கங்களைத் தாராளமாக அனுப்பலாம்.

இப்போது நான் உங்களை எழுதக்கேட்பது போல், எல்லா வல்வை  மக்களாலும்   விரும்பிப் பார்க்கப்படும் valvettithurai.org இணையத் தளத்துக்கும் ஏதாவது எழுதுமாறு திரு ரஞ்சித், திரு ஆதவன் ஆகியோர் கிட்டத்தட்ட ஏழெட்டு மாதங்களுக்கு முன்னரே என்னைக் கேட்டிருந்தார்கள். அதை எனக்குக் கிடைத்த கெளரவமாக நான் கருதிய போதும் எனது எழுத்திலிருந்த நம்பிக்கையீனம் என்னைக் கட்டிப் போட்டிருந்தது. அதாவது வல்வை மக்களால் நேசிக்கப்படும், விரும்பிப் பார்க்கப்படும் ஒரு பொதுவான இணையத்தளத்தில் எழுதுமளவுக்கு எனது எழுத்தில் தரமும் கனமும் இல்லை  என்று நான் கருதியது ஒரு முக்கியமான காரணம். அது தவிர என்ன எழுதுவது என்ற குழப்பம் அடுத்த காரணம்.

எனது எழுத்தில் எனக்கு நம்பிக்கை ஊட்டியதற்கும், இன்று (14/04/2014) ‘அக்கரை மக்கள் மீது அக்கறை வேண்டாமா? என்று எனது ஆக்கத்தை ‘valvettithurai.org’ இல் பிரசுரித்ததற்கும் ஆதவன் அண்ணாவுக்கு எனது நன்றியை ‘வல்வை அலையோசை’ மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு அவர் நம்பிக்கையூட்டிக் கதைத்தபோது ‘valvettithurai.org’ இனை ஆரம்பிப்பதற்கு வல்வை அலையோசையும் ஒரு விதத்தில் தூண்டுகோலாக இருந்தது என்று குறிப்பிட்டதை நினைத்துப் பார்க்க வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

உள்ளடக்கம்.

1.   பத்மா Aunty க்கு எழுதிய கடைசிக்கடிதம்.

2.   அக்கரை மக்களிடம் அக்கறை வேண்டாமா?

3.   கடல் சம்பந்தமான விசேட சொற்றொடர்கள்.

4.   கடல் நீச்சல்.   

5.   சுனாமி 2004(தொடர்கதை)

6.   கடலின் கருந்துவாரங்கள்

7.   சுப்த வஜ்ராசனம்

8.   பையின் வாழ்க்கை –Life Of Pi

9.   தொண்டைமானாற்றுக் கழிமுகப்பகுதி

10.  சதுரங்கத்தை ஒரு குழுவாக விளையாடுதல் சாத்தியமா?           



திங்கள், 14 ஏப்ரல், 2014

பத்மா Aunty க்கு எழுதிய கடைசிக்கடிதம்



Thanks for your message;   I'm feeling a little bit better for the past few days. Going for chemotherapy tomorrow.

 Love Pathma Aunty


அன்புள்ள பத்மா Aunty, தவம் சித்தப்பா,

மேலே உள்ள ஒன்றிரண்டு வசனங்களும் நீங்கள் எனக்குக் கடைசியாக Facebook மூலமாக அனுப்பிய தகவல். நீங்கள் மறைந்து விட்ட செய்தி அறிந்து நான் அழுது ஓய்ந்ததும் Facebook இற்குப் போய் இதை எடுத்துப் பார்த்தால் கவலை சற்றுக் குறையும் என்று நினைத்து எடுத்துப் பார்த்தேன். இதைக் கணனியில் அடித்து அனுப்பிய விரல்கள் ஓய்ந்து விட்டன என்று நினைத்த போது வேதனை இன்னும் அதிகமானதே தவிர குறையவில்லை.

உங்களிடமிருந்து வந்த  தகவலைப் பார்த்ததும் முதலில் உங்களுக்கு அனுப்பிய நீண்ட கடிதத்தைப் போல் இன்னுமொரு நீண்ட கடிதம் அனுப்பினேன். அதை நீங்கள் வாசித்தீர்களா இல்லையா என்று கூடத் தெரியாது. உங்களுக்குச் சொல்ல நினைத்ததை, உங்களுக்குச் சொல்ல நினைப்பதை இந்தக் கடிதம் மூலமாக சொல்லி விட நினைக்கிறேன். இது முட்டாள்தனமென்று புத்தி சொன்னாலும்  மனதுக்குத் தெரியவில்லை.

உங்களது தகவலைப் படித்ததும் மனதில் மிகுந்த சந்தோஷமும் நம்பிக்கையும் தோன்றியது. அப்போது தோன்றிய நம்பிக்கை நீங்கள் தவம் சித்தப்பா, அபியுடன் கடைத்தெருவுக்குப் போனதை, நீண்ட நாட்களாக நீராகாரத்துடன் இருந்த நீங்கள் இடியப்பம் சாப்பிட்டதை, உங்கள் வீட்டுத் தோட்டத்தில் 2 மணித்தியாலங்கள் வேலை செய்ததை, அம்மாவுடன் தொலைபேசியில் கதைத்ததை எல்லாம் அறிந்து கொண்ட போது மனதிலிருந்த நம்பிக்கை பல மடங்கு அதிகரித்தது. போதாததற்கு புற்று நோய் வந்த பின்னரும் சிகிச்சையின் பின்  பத்து, இருபது வருடங்களுக்கும் மேலாக சுகமாக வாழ்ந்து வருபவர்களின் கதையைக் கேட்ட பின்னர் இன்னும் கொஞ்ச நாட்களில் எங்கள் பத்மா Aunty வழமைக்குத் திரும்பி விடுவா என்றே உறுதியாக நம்பத் தொடங்கி விட்டேன்.

 அப்படியிருந்த போது இந்த மாதத் தொடக்கத்தில் நீங்கள் கடும் சுகவீனமாக இருப்பதாக செய்தி வந்த போது மனம் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தது. நீங்கள் மறைந்து விட்டதாகத் தகவல் வந்த போது கூட இந்தத் தகவல் பொய்யாக இருந்து விடக் கூடாதா என்று என்று ஏற்பட்ட எண்ணம் இன்னுமே மனதை விட்டு அகல மறுக்கிறது. மரணம் என்பது எல்லோருக்கும் சர்வ நிச்சயம். அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்புடன் இருந்தாலும் கூட எங்களுக்கு நெருக்கமானவர்களின், எங்களுக்குப் பிரியமானவர்களின் மரணங்களின் போது அந்த நினைப்பு செல்லுபடியாவதில்லை
நீங்கள் சுகவீனமாக இருந்த போது உங்களுடன் கதைக்க வேண்டும், உங்களது மென்மையான குரலைக் கேட்க வேண்டுமென்ற ஆவல் இருந்தாலும் உங்களுக்குத் தொந்தரவாக இருக்கும் என்பதால் ஆவலை அடக்கிக் கொண்டு கடிதம் அனுப்பி விட்டு இருந்து விட்டேன். ஆனால் நேற்று இந்திரா மாமி கதைத்த போது, இன்று செல்வம் மாமி கதைத்த போது தங்களுடன் நீங்கள் நீண்ட நேரம் கதைத்ததாக அவர்கள் சொன்ன போது கடைசி நாட்களில் உங்கள் குரலைக் கேட்காமல் போய் விட்டேனே என்ற எண்ணம் என்னை வாட்டுகிறது.

அப்பாவின்  மரணச் செய்தி அறிந்ததும், இரண்டு நாட்களிலேயே இங்கே  வந்து சேர்ந்து, எங்கள் துயரத்தில் பங்கு கொண்டீர்கள். உங்கள் மரணத்தின் போது அங்கே போய் தவம் சித்தப்பா, ஹரன் தரனுக்கு  ஆறுதல் சொல்ல எங்களால் முடியவில்லை. எங்களுக்குப் பதிலாக அம்மா இருப்பதாகத் திருப்திப்பட்டாலும், அம்மாவுக்கும் கடைசி நேரம் உங்களை உயிருடன் பார்க்க முடியாமற் போனது மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கும்.

உங்கள் உயிர் பிரிந்த அன்று காலை, வைத்தியர் தவம் சித்தப்பாவை அழைத்து நீங்கள் எங்களை விட்டு மீள முடியாத தூரத்திற்குப் போய்க் கொண்டிருப்பதாகவும், விரைவிலேயே உங்கள் உயிர் பிரிந்து விட்டால் நல்லது என்று சொன்னதாகவும் அறிந்த போது அந்த நேரம் உங்கள் உடல் அடைந்த வேதனையையும், தவம் சித்தப்பாவின் உள்ளம் அடைந்த வேதனையையும் நினைத்துப் பார்க்கும் போது நெஞ்சம் அடைத்துக் கொள்கிறது.


அப்பா எங்களை விட்டுப் பிரிந்த போது நீங்கள் எங்களுடன் வந்திருந்த நாட்களில் நீங்கள்  இனிமையாக நல்ல இசையுடன் ஓதிய சிவபுராணம், கடைசியாக ஊரிலிருந்து யாழ்ப்பாணம் புறப்பட்ட போது தவம் சித்தப்பா சொன்ன பகிடிக்கு நீங்கள் சிரித்த சிரிப்பு, ஓவியாவுடன் கதைத்த கதைகள் எல்லாம் என் காதுக்குள் கேட்டுக் கொண்டேயிருப்பது போல் ஒரு பிரமை.

  நீங்கள் எங்களோடு வந்து நிற்கும் நாட்களில் நாங்கள் எல்லோருமே எங்களின் ஏதாவதொரு மருத்துவப் பிரச்சனையைச் சொல்லிக்  கொண்டு உங்கள் முன் வரிசையாகப் போய் நிற்கும் நாட்கள் ஞாபகத்துக்கு வருகையில், இனி எங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்ல நீங்கள் வரப் போவதில்லை என்ற உண்மை உறைக்கும் போது கண்ணீர் பெருகுகிறது.

நாங்கள் சாதாரணமாக எங்கள் வழமையான கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். என்றாலும் உங்கள் நினைவு வந்ததும் மனம் இடிந்து போய் விடுவதைத் தவிர்த்துக் கொள்ள முடியாத அளவுக்கு உங்கள் நினைவுகள் மனதைப் பாதித்திருக்கின்றன. சற்று நாட்களில் நாங்கள் எங்களைச் சமாளித்துக் கொண்டு விடுவோம். ஆனால் தங்கள் மனைவியில் எங்கே குற்றம் காணலாம் என்று அனேகமான ஆண்கள் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கும்  இப்போதைய நாட்களில், எப்போதுமே உங்களை உயர்வாகச் சொல்லிப்பெருமைப்பட்டுக் கொண்ட (உண்மையிலே நீங்கள் அப்படித்தான் என்பது ஒருபுறமிருக்க) தவம் சித்தப்பா எப்படி உங்கள் பிரிவைத் தாங்கிக் போகிறார் என்பது எங்கள் எல்லோருக்கும் உள்ள கேள்வி. அதற்கான  மனதைரியத்தை நீங்கள் தான் கொடுக்க வேண்டும்.
 

தவம் சித்தப்பாவுக்கு அடுத்ததாக, நீங்கள் நீண்ட காலம் இருக்கப் போவதில்லை என்ற உண்மையை வேதனையோடு மனதில் சுமந்து கொண்டு உங்களைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்ட கமலா Aunty க்கும்  காலம் தான் மருந்தாக வேண்டும்.
 பத்மா Aunty, நான் உங்களுடன் கதைக்க நினைத்ததெல்லாம் எழுதி முடித்து விட்டேன். போய் வாருங்கள் பத்மா Aunty. ஒருத்தருக்கும் உங்களுக்கு விடை கொடுக்க விருப்பமில்லை. ஆனாலும் வேறு வழியில்லாமல் மனம் நிறைந்த வேதனையுடனும், விழிகள் நிறைந்த கண்ணீருடனும்  உங்களுக்கு விடை தருகிறோம். உங்கள் ஞாபகங்கள்  என்றும் எங்கள் நெஞ்சில் பசுமையாக இருக்கும்.  
அன்புடன்
தீபன்







அக்கரை மக்களிடம் அக்கறை வேண்டாமா?


அக்கரை என்பது தொண்டைமானாறு பாலத்தைத் தாண்டி அச்சுவேலி நோக்கிச்செல்லும்போது வலப்பக்கத்தில், பிரதான வீதியிலிருந்து  கிட்டத்தட்ட 250 மீற்றர் தொலைவில் மண்பாதையின் முடிவில் அமைந்துள்ள கிராமமாகும். இரண்டு மாதங்களுக்கு முன் அந்தப்பகுதியிலிருந்து இராணுவம் வெளியேறிய பின்பு தான் அவர்களின் குடியேற்றம் பற்றி ஏனையவர்கள் அறியக்கூடியதாக இருந்ததெனினும் 2013 ஆடியிலேயே அந்தக்கிராமம் அவர்களிடம் கையளிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் மிக மிக அடிப்படையான வசதிகள் எதுவுமற்ற நிலையிலேயே அவர்கள் அந்தப்பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள்.



அக்கரையின் சூழலிலேயே அவர்களின் பூர்வீக வாழ்க்கை ஆரம்பமானதெனினும் இப்போது இந்த மக்கள் வாழ்ந்து வரும் இடம் ஒரு வீட்டுத்திட்டம் மூலமாக  1978 இலேயே அவர்களிடம் கையளிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். 1978 இல் வல்வெட்டித்துறை சிவன் கோவிலுக்குச் சொந்தமாக இந்தப்பகுதியில் இருந்த 16 ஏக்கரில் 9 ஏக்கர் அரசாங்கத்தால் கொள்வனவு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு 1983 இல் 50 வீடுகள் அந்தக் கிராமத்தவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.

1986 மாசி மாதம் 19ஆம் திகதி. அவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட நாள். இராணுவத்திற்கு உதவியதாக இந்தக்கிராமத்தவர்கள் இருவர் சுடப்பட்ட சம்பவமே அவர்கள் முதன்முதலில் அந்தக்கிராமத்தை விட்டு வெளியேற்றியதாகவும் . ஆனாலும் அந்த நாட்களில், தாம் அடிக்கடி வந்து தங்கள் இருப்பிடங்களை பார்த்துச்சென்றதாகவும் அவர்கள் நினைவு கூர்கிறார்கள்.

அதன் பின்பு வடமராட்சியில் இடம்பெற்ற “Operation Liberation” இராணுவ நடவடிக்கையின் பின், இவர்களின் இருப்பிடங்களை இந்தியா இராணுவம் ஆக்கிரமித்திருந்தது. அதன் போது இவர்களின் இருப்பிடங்களைப் பார்த்துச்செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. ஆனாலும் 1989 இன் இறுதிப்பகுதியில் இந்தியா இராணுவத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, 1990 தை மாதம் முதல் ஆனி மாதம் வரை 10 குடும்பங்கள் வரை தற்காலிகமாகக் குடியேறியதாகவும், ஆனி மாதம் பலாயிலிருந்து இராணுவம் முன்னேறியபோதே தாங்கள் அந்த இடத்தை விட்டு நிரந்தரமாக வெளியேறியதாகவும் தெரிவிக்கிறார்கள். அதன் போது இவர்கள் தொண்டைமானாறு, கெருடாவில், உடுப்பிட்டி, அச்சுவேலி ஆகிய இடங்களில் குடியேறியிருக்கிறார்கள்.


சொந்த இடத்தை விட்டு வெளியேறி இன்னொரு இடத்தில் இருக்கும் போது எத்தனை வகையான இடர்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்பதை  இலங்கையின் வடபகுதியிலுள்ள சில விதிவிலக்கானவர்களைத் தவிர ஏனையோர் அறிந்திருந்தாலும் கூட இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சொந்த இடத்தைப் பார்க்கக்கூட  முடியாமல் இருப்பதென்பது கொடுமையிலும் கொடுமை தான்.அந்தக் கொடுமையை இந்த மக்கள் தாராளமாகவே அனுபவித்திருக்கிறார்கள்.
2011 கார்த்திகை இறுதிப்பகுதியில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளடக்கப்பட்டிருந்த வளலாய் பகுதியில் மக்கள் குடியேற அனுமதிக்கப்பட்ட போது தான் மீண்டும் இந்த மக்கள் தங்கள் வீடுகளைப்பார்க்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். உடனே அந்த இடத்தில் முழுமையாகக் குடியேற முடியாதவாறு மிதிவெடிகள் அவர்களை அச்சுறுத்தியபோதும் தங்கள் இடத்தின் மேலுள்ள பற்று காரணமாக உயிரைப் பணயம் வைத்து அங்கு திருத்தவேலைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
அதன் பின்னர் அவர்கள் விடுத்த தொடர்ச்சியான வேண்டுகோளின் பின் அந்தப் பிரதேசம் 2012 ஆவணியில் மிதிவெடிகளை அகற்றுவதற்காக ‘Halo Trust’ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அந்நிறுவனப் பணியாளர்களின்  தொடர்ச்சியான அர்ப்பணிப்பான சேவையின் மூலம் 2013 தை 13 ஆம் திகதி தைப்பொங்கலுக்கு முதல் நாள் (சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு) இந்த இடம் மிதிவெடிகள் இல்லாத பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த இடம் உத்தியோகபூர்வமாக வைபவரீதியாக இந்த மக்களிடம் கையளிக்கப்பட்டது 2013 ஆடி மாதம் 11ஆம் திகதி தான். அந்த நிகழ்வின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ,வட மாகாண ஆளுனர் சந்திரசிறி, வடமாகாண கட்டளைத்தளபதி ஹத்துருசிங்க ஆகியோர் வருகை தந்திருக்கிறார்கள்.
1986 இல் அந்த வீட்டுத்திட்டத்திலுள்ள 50 குடும்பங்களும், அது தவிர அந்த சூழலில் தங்கள் சொந்த இடத்தில் வாழ்ந்து வந்த 26 குடும்பங்களுமாக மொத்தமாக 76 குடும்பங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறியிருக்கின்றன. பின்னர் அந்தக்குடும்பங்களில் நிகழ்ந்த பிறப்பு , இறப்புக்களின் அடிப்படையில்  96 குடும்பங்கள்  மீண்டும் குடியேறியிருக்கின்றன. ஆண்கள் 175 பேரும், பெண்கள் 181 பேருமாக  மொத்தமாக 356 பேர்.  96 குடும்பங்கள் குடியேறியிருக்கின்றன என்று ஒரு பேச்சுக்குச் சொன்னாலும் கூட  அவர்களில் முக்கால்வாசிக்கு மேற்பட்டோர் மாலை நேரத்தில் தாங்கள் வசித்து வந்த தற்காலிக இடங்களுக்குச்சென்று காலை நேரத்தில் திரும்புபவர்களாகத் தான் இருக்கிறார்கள். குடிநீர் சந்நிதியிலிருந்து உழவியந்திரம் மூலம் கொண்டுவரப்படுகிறது  கழிப்பிடம் ஒன்றுமே இல்லை. 96 குடும்பங்களும் கை, கால் கழுவுவதற்கும், துணி தோய்ப்பதற்கும், குளிப்பதற்கும் ஒரேயொரு கிணறு இவர்களின் குடியிருப்பிற்கும் கடற்கரைக்குமிடையில் 50 மீற்றர் தூரத்தில் அமைந்திருக்கிறது.   மிக மிக அடிப்படை வசதிகளான குடிநீர், கிணறு, கழிப்பிடம் என்பன இல்லாத நிலையில் எப்படித்தான்      இவர்கள் நிரந்தரமாகக் குடியேறுவது?

இது போக, 50 குடும்பங்கள் இந்த வீட்டுத்திட்டத்திலும் அதாவது வல்வெட்டித்துறை சிவன் கோயில் நிர்வாகத்திடம் அரசாங்கத்தால் வாங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 9 ஏக்கரிலும்,  16 குடும்பங்கள் அயலில் தங்கள் சொந்தக்காணியிலும் வசிக்க, எஞ்சியுள்ள 30 குடும்பங்களும் மிதிவெடிகள் அகற்றப்பட்டதாக இன்னும் அறிவிக்கப்படாத, அத்துடன் வல்வெட்டித்துறை சிவன் கோயில் நிர்வாகத்திடம் அரசாங்கத்தால் வாங்கப்படாத காணியில் பற்றைகளைத்துப்பரவு செய்து, குப்பைகளை எரித்து  குடியேறியிருக்கிறார்கள். ‘Halo Trust’ பணியாளர்கள் அந்தக் குறிக்கப்பட்ட 9 ஏக்கர் காணியில் மிதிவெடிகளை அகற்றிய போது இந்த 6 ஏக்கர் காணியிலும்    3 இடங்களில் மிதிவெடிகள் அகற்றப்பட வேண்டுமென்று குறித்து வைத்திருப்பதாகத் தெரிவித்ததோடு இப்போது அவர்களுக்குத் தாங்கள் தாங்கள் அதில் குடியேறியிருப்பதாக அறிவித்திருப்பதாகவும் விரைவில் அந்த 3 மிதிவெடிகளும் அகற்றப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் மக்கள் தெரிவித்தார்கள்.அதோடு அந்தக்காணி சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் இன்னும் நிறைவு செய்யப்படாததால் அதன் காரணமாகவும் ஏதேனும் பிரச்னைகள் உண்டாகுமோ என்று அஞ்சுவதாகவும் தெரிவித்தார்கள்.

அக்கரை மக்களின் கிராமசேவகர் பிரிவு J/283. கிராமசேவகரின் பெயர் திரு சாந்தரூபன். அச்சுவேலி வடக்கு, வளலாய், இடைக்காடு ஆகிய 3 பகுதிகள் அவர் பொறுப்பில் இருப்பதாகவும், இடைக்காடு என்ற பிரிவிலேயே அக்கரை அடங்குவதாகத் தெரிவித்த மக்கள்  அவர் மூலம் கோப்பாய் பிரதேச செயலரிடமும், பிரதேச செயலர் மூலம் யாழ். அரசாங்க அதிபரிடமும் தங்கள் பிரச்சனைகள் பற்றிக் கதைத்ததாகவும் அவர்கள் தங்களுக்கு மூன்றாவது கட்ட இந்திய வீட்டுத்திட்டம் தங்களுக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்ததாகவும் தெரிவித்ததோடு தற்போது இரண்டாம் கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன என்றும் கூறினார்கள். அத்துடன்  தொண்டைமானாற்றின் பிரதான நீர்த்தாங்கியிலிருந்து குடிநீர் பெற்றுக்கொடுப்பதற்காக குழாய்கள் பொருத்தும் வேலைக்காகவும், அக்கரைக்கு மின்சாரம் பெற்றுக்கொடுப்பதற்காகவும் பெருந்தொகைப்பணம் ஒதுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவர்களிடம் கூறியிருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.
அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம்(UNHCR) கடந்த வருடம் மார்கழி மாத இறுதிப்பகுதியில் தங்கள் யாழ்ப்பாண அலுவலகத்தை மூடிக்கொண்டு கிளிநொச்சிக்கு தங்கள் அலுவலகத்தை மாற்றுவதற்கு ஒன்றிரண்டு நாட்கள் இருக்கும்போது அக்கரை மக்களுக்கு பாத்திரம்,குவளை, பாய், படுக்கை விரிப்பு, துவாய், கத்தி, அலவாங்கு, குப்பைவாரி, சுத்தியல் முதலானவற்றை வழங்கியிருக்கிறார்கள். இது தவிர மீள்குடியேற்ற அமைச்சினால் ஒரு வீட்டுக்கு 12 தகரங்கள், 8 சீமெந்துப்பைகள், மற்றும் 50 வீடுகளுக்குமாக 5 நிலையிடும் சாதனத்துடன் கூடிய நீர்த்தாங்கிகளையும் விநியோகித்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் இங்கிருந்து இடம்பெயர்ந்தவர்களில் சிலர் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். அக்கரையில் குடியேறுவதற்கு முன்னர்,அதனை  மீண்டும் பெற்றுக் கொள்வதற்கும், அக்கரை இவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்ட போது ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்திற்கும் அவர்கள் தான் செலவுகளைப் பொறுப்பேற்றிருக்கிறார்கள். 
இந்த மக்களின் வாழ்வாதாரங்களாக மீன்பிடித்தொழில், விவசாயம் கட்டுவேலை ஆகியவற்றைக்  குறிப்பிட்டுக்கூறலாம். என்ன தான் இவர்கள் அக்கறையில் குடியேறினாலும் தொழில் நிமித்தம் அதாவது மீன்பிடி, விவசாயம், கட்டுவேலை எல்லாவற்றுக்கும் இவர்கள் தொண்டைமானாற்றுக்குத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. இவர்களுள் உழவியந்திரம் வைத்திருக்கும் திரு ஸ்ரீஸ்‌கந்தராசா என்பவரின் சொந்த செலவிலேயே இவர்களுக்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது.


இந்த 356 பேரில் பாடசாலை செல்லும் மாணவ மாணவிகள் ஏறத்தாழ 60 முதல் 70 பேரளவில் இருப்பதாகவும், அவர்களில் அனேகமானவர்கள் தனியார் வகுப்புக்களும் செல்வதாகவும்,சிலர் தனியார் வகுப்புக்களுக்குச் செல்வதற்கு ஆர்வமிருந்தும் வசதியில்லாத காரணத்தால் செல்வதில்லை என்றும் அறியக்கூடியதாக இருந்தது.
ஒரு வாரத்துக்கு முன்பு தொண்டைமானாற்று ஒற்றுமை விளையாட்டுக்கழகம் நடத்திய சிறுவர்களுக்கான  மரதன் ஓட்டப்போட்டியில் முதலாவது இடமும் ஏழாவது இடமும் பெண்களுக்கான மரதன் ஒட்டப்போட்டியில் முதலாவது இடமும் நான்காவது இடமும்  கிடைக்கப்பெற்றிருக்கிறது. இவ்வளவு இடர்களுக்கு மத்தியிலும் விளையாட்டுக்களில் இவ்வளவு ஊக்கம் இருப்பது பாராட்டுதற்குரியது. அது தவிர இனிமேல் நடைபெறவிருக்கும் கயிரிழுத்தல், கட்டுமரம் வலித்தல், நீச்சல் ஆகிய போட்டிகளிலும் ஆர்வத்துடன் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்  என்றும் அக்கரை மக்கள் தெரிவித்தார்கள்.
புத்தூர் பிரதேச சபையால் தொண்டைமானாற்றுப் பாலத்தின்  மின்சாரச்செலவுகள் பொறுப்பேற்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டு, விளக்குகள், ஆளிகள் என்பன பொருத்தப்பட்ட நிலையிலும் இன்னும் இதற்கான மின்சாரம் வழங்கப்படவில்லை என்பதும் இவர்களுக்கு ஒரு குறை தான். பாலம் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டு ஏழு மாதங்கள் ஆகின்றன  என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 
பாலத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டால் பாலம் ஒளிமயமாகும். பிறக்கவிருக்கும் வருடத்தில் தங்கள் வாழ்க்கை ஒளிமயமாகாவிட்டாலும்,    தங்கள் வாழ்வைப் பீடித்துள்ள இருள் சற்றேனும் விலகாதா  என்பதே இங்குள்ள மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு.
......ஆ.தீபன்
 
 

கடல் சம்பந்தமான சில விசேட சொற்றொடர்கள்.




51. Sea legs: கடலில் கப்பலின் ஆட்டத்துக்குப் பழக்கப்பட்டு விட்ட கால்கள்.

52. At sea: மிகவும் குழம்பிய நிலையில் இருத்தல்.

53. Between the devil and the deep blue sea: ஒரே சமயத்தில் இரண்டு பாரிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தல்.

54. Sea change: மிகப்பெரிய மாற்றம்.

55. Son of a sea biscuit: ஆங்கிலேயர்கள் திட்டுவதற்கு அடிக்கடி பாவிக்கும் “பெண் நாயின் மகன்” என்பதற்குப் பதிலீடாகப் பாவிக்கப்படும் சற்றுக் கடுமை குறைந்த சொற்றொடர்.

56. There are plenty of (other) fish in the sea: ஏதாவது ஒரு விடயத்தில் ஏராளமான தெரிவுகள் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்தும் வாக்கியம்.

57. From sea to shining sea: கடற்கரையோரப் பிரதேசங்களில் ஏதாவது ஒரு செய்தி அல்லது வேறு ஏதாவது ஒரு விடயம் பரவுதல் இந்தச் சொற்றொடர் மூலம் குறிக்கப்படுகிறது.

58. Go to sea: மீனவன் ஆதல் அல்லது மாலுமியாதல் அல்லது ஏதேனும் ஒரு விதத்தில் கடலுக்கு வாழ்க்கையை அர்ப்பணித்தல்.

59. Sea level: கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் ஒரு குறிப்பிட்ட இடம் அமைந்திருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தும் சொல்.
60. Go to sea for pleasure, would go to hell for a pastime: கடலுக்குப் பொழுதுபோக்கிற்காகப் போகும் மனிதர்கள் நிச்சயம் பைத்தியக்காரர்களாகத் தான் இருப்பார்கள் (கடல் வாழ்க்கையிலுள்ள சிரமத்தை எடுத்துக் காட்டுகிறது) என்று நகைச்சுவையாக யதார்த்தத்தை எடுத்துக் காட்டும் வாக்கியம்.