திங்கள், 14 ஏப்ரல், 2014

கடல் நீச்சல்




கடல் நீச்சல் என்றதும் நீச்சல் தெரிந்தவர்களின் மனதில் கூட  இலேசாக அச்சம் தோன்றுவது இயற்கையானதே. இதற்குக் காரணம் பெரும்பாலானவர்கள் நீச்சல் பழகுவது பாதுகாப்பான நீச்சல் குளங்களிலும்  மற்றும் ஆழம் குறைந்த குளங்களிலும் தான். அதுவும் நீச்சல் குளங்களில் மட்டும் நீந்தியிருந்தால் அச்சம் இன்னும் சற்று அதிகமாகவே தோன்றக்கூடும். ஏனெனில் சுற்றிவர சுவர்கள், கடமையிலுள்ள உயிர்க்காவலர் (நீச்சல் குளங்களில் நீந்துபவருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் பாய்ந்து காப்பாற்றுபவர்), அனேகமான நீச்சல் குளங்களில் காணப்படும் கயிறு போன்ற மிதக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், அடிப்பகுதி துல்லியமாகத் தெரியும் தெளிவான நீர், முக்கால்வாசிக்கும் மேற்பட்ட பகுதி நெஞ்சளவுக்கும் கீழான நீர் மட்டம், நீந்திக்கொண்டிருக்கும் போது பயம் தோன்றினால் பக்கத்திலுள்ள சுவரைப் பிடித்துக் கொள்ளக் கூடிய தன்மை  போன்ற பல்வேறு காரணிகளால் நீச்சல் பழகுபவருக்கும் கூட  நீச்சல் குளம் மிக மிகப் பாதுகாப்பாகத் தோன்றக்கூடும். இந்த வசதிகள் எல்லாமே கடல் நீச்சலில் இல்லை.


தூரத்தில் தெரியும் கட்டிடங்கள், உயிர்ப்பாதுகாவலர் ஒருவருமே இல்லாத நிலைமை, களைத்துப் போனால் ‘கப்’பென்று பிடித்துக்கொள்ள தோதாக  ஒன்றுமே இல்லாமை, சில நேரங்களில் எவ்வளவு ஆழமென்றே தெரியாத தன்மை, நாங்கள் நீந்திக் கொண்டிருக்கும் இடத்தின் நீரினடியில் என்ன இருக்கிறது என்று வெளிக்காட்டாத நீரின் நிறம், (அப்படியே சிரமப்பட்டுப் பார்த்தாலும், ஏதாவது கறுப்பாகத் தெரிந்தால் முதலையாகவோ சுறாமீனாகவோ,குட்டித் திமிங்கிலமாகவோ கற்பனை பண்ணிக்கொண்டு பதறியடித்துக் கொண்டு நீந்திய அனுபவம் எனக்கு உண்டு.  அது சரி, கடலில் முதலை இல்லையென்று உனக்குத் தெரியாதா என்று நீங்கள் நினைக்கக் கூடும்.  எனக்குத் தெரியும்.ஆனால் முதலைக்குத் தெரியுமா? ) போன்ற எல்லாமே கடல் நீச்சல் என்றால் மனதில் பீதியை உண்டாக்கும் காரணிகள். முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கொண்டு  நீந்தி விளையாடுபவர்கள் எனக்குக் கடலென்றால் பயமே இல்லை என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இவன் பாவி, ஏற்கனவே எங்களுக்கு உள்ள பயத்தை இன்னும் அதிகப்படுத்துகிறான் என்று நீங்கள் நினைக்கக் கூடும். ஆனால் அதுவல்ல என் நோக்கம். அதற்காக கடல் நீச்சல் என்றால் அல்வா சாப்பிடுவது போல். மிகவும் சுலபம். பயப்படவே தேவையில்லை என்றெல்லாம் பொய் சொல்லப்போவதில்லை. என்னைப் பொறுத்தவரை அதுவொரு அற்புதமான, அட்டகாசமான, அருமையான, அலாதியான அனுபவம். ஆனால் அப்படியானதொரு அனுபவத்தை நீங்கள் பெறுவதற்கு நீங்கள் தகுதியாக இருப்பதோடு எல்லா விதத்திலும் பாதுகாப்பாக இருப்பது அவசியமல்லவா? அதற்காக உங்களுக்குச் சில யோசனைகள்.

 
எல்லாவற்றுக்கும் முதலில், மிக மிக அவசியமானது பயிற்சி தான். உங்களுக்கு எட்டும் கடல் நீரில் நின்று கொண்டு நீந்திப்பழகி,  நீர் அச்சம் உங்களுக்கு இருந்தால் அதைப்படிப்படியாகப் போக்கிக் கொள்ள வேண்டும். நீச்சல் குளத்தில் அடிப்பகுதியில் இருப்பது போல் தடிப்பான கறுப்புக்கோடு, நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று வழி காட்டாது. ஆகையால் எங்கே போகிறீர்கள் என்ற அவதானம் தேவை. தலையைத்தூக்கி வைத்துக்கொண்டு நீந்துபவர்கள்(இரண்டு கைகளால் தலையைத் தூக்குவது போல் கற்பனை செய்ய வேண்டாம். நான் சொன்னது நீர் மட்டத்திற்கு மேல் தலை தெரியுமாறு நீந்துபவர்கள்)  என்றால் பிரச்சனையில்லை.ஆனால் தலையை தண்ணீருக்குள் அமிழ்த்தியவாறு நீந்துபவர்களுக்கு சற்றுக்கூடிய அவதானம் தேவை.
 
 
நீச்சல் நன்கு கை வரும் முன்பு உங்களை மூழ்கடிக்கக்கூடிய அளவு இடத்திற்குப் போக வேண்டாம். கடலில் நிகழ்ந்த அனேக அவச்சாவுகளுக்கு இதுவே பிரதான காரணம். விரலுக்குத் தக்க வீக்கம் வேண்டும். உங்கள் நீச்சலுக்குத் தக்க ஆழத்தில் நீந்திப் பழகுங்கள்.உதாரணமாக நீங்கள் கிட்டட்டதட்ட 20 மீற்றர் களைக்காமல் நீந்தப் பழகி விட்டீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.கடலில் உயரப்போக விரும்பினால் 10 மீற்றரை விடக் குறைவாகத்தான் போக வேண்டும்.ஏனென்றால் திரும்பி வர வேண்டுமல்லவா?


 
என்ன தான் கடல் நீர் உங்களுக்குப் பரிச்சயமாகி விட்டாலும், அபரிதமான தன்னம்பிக்கை இருந்தாலும்  உங்களோடு ஒரு படகோ அல்லது கட்டுமரமோ வந்தாலேயொழிய தனியே நீந்த வேண்டாம். அதாவது உங்கள் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையை மூட்டை கட்டி கரையில் வைத்து விட்டுத்தான் கடலில் இறங்க வேண்டும். உங்களோடு எப்போதுமே ஓரிருவராவது நீந்துவது அவசியம்.ஆனால் அப்படி வருபவர்கள் “ டேய், முதலையிண்ட வால் மாதிரி ஏதோ என்ட கால்ல ஏதோ பட்ட மாதிரி இருக்குது” என்றோ அல்லது “ஏண்டா, தூரத்தில ஏதோ கறுப்பாத்தெரியுது. சுறாமீனா இருக்குமோ?” என்று பேதியைக் கிளப்பாதவர்களாக இருப்பது அவசியம். உங்களுக்கு ஏதேனும் நிகழ்ந்தால் உங்களை ஒரு கையில் ஏந்தியவாறு ஒரு கையால் நீந்துமளவிற்கு அவர்கள் மிகுந்த பலசாலிகளாகவோ நீச்சலில் படு சூரர்களாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. மனதுக்குத் தெம்பூட்டுபவர்களாக இருந்தாலே போதுமானது. “என்ட கால்ல ஏதோ பட்ட மாதிரி இருக்குதடா” என்று நீங்களே வெருண்டாலும் கூட “ சும்மா இருடா கோமாளி. அது என்ட கால் தாண்டா” என்று சொல்லக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.


 

கடலில் காற்று கடுமையாக அடித்து அலைகள் ருத்திர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் போது நீந்த வேண்டாம். கடலன்னைக்கு நாங்கள் எப்போதுமே ஒரு அற்பத்தூசு  என்பதை மறக்க வேண்டாம். உங்கள் அம்மா கோபமாக இருக்கும் போது நீங்களும் கோபமாக எதிர்த்து வாக்குவாதம் செய்வீர்களா அல்லது அந்த நேரம் பேசாமல் இருந்து விட்டு அம்மா சாந்தமாக இருக்கும் போது கதைப்பீர்களா? நான் உவமான உவமேயத்துக்கு எடுத்துக்கொண்ட விடயம் பொருத்தமானதில்லை என நினைக்கிறேன். ஒன்றிரண்டு விதிவிலக்குகளைத்தவிர அனேகமானவர்கள் அம்மா சத்தம் போட்டால் அதற்கு மேலால் சத்தம் போடுபவர்களாகத்தான் தான் இருப்பார்கள். ஆனால் கடலன்னையுடன் அந்த விளையாட்டு வேண்டாமே. சின்னமலையில், அராபிய நாடொன்றில் வேலை செய்து விட்டு விடுமுறையில் வந்த இளைஞன் ஒருவன் 2009 மார்கழி மாதக் காற்றுக்கடலில் நீந்தப்போய் அவனது உடல் கூடக் கண்டுபிடிக்கப்படவில்லை. அவ்வாறான கடலில் நீந்துவது நீச்சலில் உங்களைப் படுசூரனாக்கும் என்று தப்புக்கணக்குப் போட வேண்டாம். நீச்சல் போட்டிக்குப் பயிற்சி எடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டாலும் கூட அப்படியான சந்தர்ப்பங்களில் யாருமே நீச்சல் போட்டிகள் வைப்பதில்லை என்பதையும் ஞாபகத்தில் கொள்ளுங்கள்.

நீங்கள் சிறந்ததொரு குடிமகனாக இருப்பது அவசியம் தான். ஆனால் அதற்காக ‘குடி’மகனாகக் கடலில் இறங்க வேண்டாம். அதாவது தண்ணியில் இருக்கும் போது தண்ணியில் இருப்பது கூடாது என்கிறேன். வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு அப்படியொரு பழக்கம் இருப்பதை அனுபவபூர்வமாகக் கண்டிருக்கிறேன். வெளிநாடுகளில் குளிர்க்கடலில் இறங்குவதற்கு முன்னர் அப்படியான குடி வகைகள் மூலம் உடலைச்சூடேற்றுவது ( உண்மையில் சூடேறுமா என்று அனுபவபூர்வமாக அறிந்ததில்லை)  ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். ஆனால் எங்கள் ஊரைப்போன்ற ஒரு வெப்பபூமிக்கு அது தேவையில்லை. குடித்து விட்டு நிதானம் தவறி, அவதானமில்லாமல்  நடந்து கொள்ளும் நிறையப்பேரைப்பார்த்திருக்கிறேன். நீச்சலுக்கு, அதுவும் கடல் நீச்சலுக்கு நிதானம் மற்றும் அவதானம் நிரம்பவே தேவை. “வீதிகளில் ‘Drink and drive’ செய்தால் போக்குவரத்துப்பிரிவு காவல்துறையிடம் மாட்டுவோம்.ஆனால் ‘Drink and swim’ செய்தால் ஒருவரிடமும் மாட்டிக்கொள்ள மாட்டோம் தானே” என்று நினைக்க வேண்டாம். யமதர்ம ராஜனின் எருமைமாடு நீரிலும் நீந்தி வரும் ஆற்றல் படைத்தது.

இனி வரும் பகுதிகள் நீச்சல் கை வந்து(அத்துடன் கால் வந்து) நீந்தத் தொடங்கியவர்களுக்கானது. உங்களுக்கு அறிவுரை சொல்லுமளவுக்கு நான் இல்லை என்றாலும் கூட அவை சில வேளைகளில் நீங்கள் நினைத்துப்பார்க்காத விடயங்களாக இருக்கக்கூடும். சிறு துரும்பும் பல்லுக்குத்த உதவும் தானே.
கரையிலிருந்து விலகி சற்றுத்தூரம் நீந்துவதில் பரிச்சயமாகி விட்டீர்களா?  மிகவும் நல்லது. ஆனால் நீங்கள் நீந்தத் தொடங்கும் போது கரையில் ஏதாவது ஒரு தெளிவான அடையாளம் ஒன்றை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். உதாரணத்துக்கு ஏதாவதொரு கோபுரத்துக்கு நேரே நீங்கள் நீந்தத்தொடங்குகிறீர்கள் என்றால் நீரோட்டத்தின் காரணமாக நீங்கள் சற்று விலகிப்போயிருந்தாலும் திரும்பி வரும் போது அதை நோக்கியவாறே நீந்தி வரலாம்.

 
 
கறுப்பாக ஏதாவது பார்த்து விட்டு அதை இலக்காகக் கொண்டு நீந்தும் போது ‘என்ன தான் நீந்தினாலும் அந்தக்கறுப்பு தள்ளிப் போகிறதே,ஒருவேளை நீரோட்டம் என்னை இழுத்துப்போகிறதோ என்று பதற வேண்டாம். அந்த கறுப்பு  ஒரு மாடாக இருக்கக்கூடும். அது அதன் பாட்டுக்கு புல் மேய்ந்து கொண்டிருக்கக்கூடும். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் அசையும் பொருட்களை அடையாளமாகக் கொண்டு நீந்த வேண்டாம்.இதை நான் தட்டச்சும் போது 1992 இல் ஒரு முறை எனது நண்பர்களுடன் கடலில் நீந்திய ஞாபகம் வருகிறது. நாங்கள் கடலில் கட்டுமரத்துடன் இறங்கியது வல்வெட்டித்துறை சுங்க வீதிக்கு நேரே. அப்போது சுங்க வீதிக்கு நேரே தான் நவீன சந்தைக் கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் ‘கலைச்சோலை’ புத்தகக்கடை இயங்கி வந்தது. நாங்கள் கட்டுமரத்தில் போய் குதித்து விளையாடி நீந்தி விட்டு திரும்பி வரும் போது, கலைச்சோலையை இலக்காகக்கொண்டு தான் துடுப்பை வலித்தோம். ஆனால் நீரோட்டத்தின் அதிக வேகம் காரணமாக அடிக்கடி ‘கலைச்சோலை’ தெரிவதும் மறைவதுமாக இருந்தது. ’வலிப்பது’ என்பதன் சரியான அர்த்தம் அப்போது தான் புரிந்தது. துடுப்பு வலிப்பதில் அனுபவம் இல்லாததால் எல்லோருக்கும் கைகள் முழுவதும் வலி. அப்போது என்னுடன் இருந்த நண்பர்கள் வாசன், சின்னன், டொப்பன், கருணா, அரவிந்தன், சேகர் என்று ஞாபகம்.
மழை காலங்களில், குளிர்காலங்களில் கடலில் இறங்குவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அப்படியில்லாமல் இறங்கத்தான் போகிறீர்கள் என்று தீர்மானித்து விட்டால் இலேசாக உடற்பயிற்சி செய்து,உடலின் வெப்பநிலையை சற்று அதிகரித்து விட்டு இறங்குங்கள். இது உடலின் வெப்பநிலை குறைவடைந்து நீங்கள் பாதிக்கப்படுவதைத் தடை செய்யும்.உடல் வெப்ப நிலை குறைவடைந்து பலவீனமடைவதை ஹய்போதேமியா(hypothermia) என்று சொல்வார்கள். எங்களது வெப்ப நாட்டில் அதற்கான சாத்தியம் இல்லையென்றாலும் கூட இலேசான உடற்பயிற்சியோடு இறங்குதல் சிறப்பாகும். அதற்காகக் கடும் உடற்பயிற்சி நிச்சயமாகச் செய்யக்கூடாது.

சிலர் என்ன தான் நீந்தத்தெரிந்தவர்களாக இருந்த போதும் தலையை நீர் மட்டத்திற்கு மேல் உயர்த்தியே வைத்திருப்பார்கள். இதில் சக்தி சற்று அதிகமாக விரையமாகி விரைவில் நாங்கள் களைப்புக்குள்ளாவது சில வேளைகளில் நீங்கள் அறிந்திராத விடயமாக இருக்கக்கூடும். அதற்குப் பதிலாக உங்களால் மூச்சுப்பிடிக்கக்கூடிய அளவுக்கு அதாவது ‘தம்’ பிடிக்கக்கூடிய அளவுக்கு  தலையை நீருக்குள் அமிழ்த்தியவாறு துடுப்பு போட்டு…… சுவாசிப்பதற்குத் தலையைத்தூக்கி..... பின்பு மீண்டும் தலையை நீருக்குள் அமிழ்த்தி......இவ்வாறே மாறி மாறிச்செய்து கைகளால் வலித்து நீந்திப்பார்த்தால் உங்கள் வேகம் சற்று அதிகமாக இருப்பதைக் காண்பீர்கள். நீச்சல் போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு இது அவசியம் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று. என்றாலும் இதிலும் சில பிரச்சனைகள் இருக்கின்றன.  அதைல் பிரதான பிரச்சனை தலையைத் தண்ணீருக்குள் அமிழ்த்தி வைத்திருப்பதால் எங்கு போய் முட்டிக்கொண்டு விடுவோமோ என்ற பயம் எழக்கூடும். கடல் போன்ற பரந்த இடத்தில் எங்கேயும் போய் முட்டிக்கொண்டு விடுவோமோ என்ற பயம் தேவையில்லை. என்ன தான் பக்கத்தில் ஆட்கள் இருந்தாலும் எவ்வாறு அவர்களை விலக்கிக்கொண்டு நீந்துவது எப்படியென்று சில நாட்கள் பயிற்சியின் போதே உங்களுக்குத் தெரிய வந்துவிடும். அது தவிர தண்ணீருக்குள் மூச்சடைத்துக்கொண்டு நீந்துவதில் சிரமம், மற்றும் கண் எரிவு என்பன இருக்கக்கூடும். இது தவிர சிலர் இதனை முயற்சி செய்து பார்க்கும் போது கடல் தண்ணீரை மடக்குமடக்கென்று குடித்து விட்டு அவஸ்தைப்படக்கூடும்.இந்த நீச்சலின் போது வாய் மூடியிருக்க வேண்டுமென்பது இதன் பாலபாடம். ஆனால் கண் எரிவு  மற்றும் ‘தம்’ பிடிப்பதில் உள்ள சிரமங்களை போக்கிக்கொள்ள முடியாது. ஆனால் பழகிக்கொள்ள முடியும்....தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம். இந்த நீச்சல் உங்களுக்குக் கை வந்து விட்டால் உங்கள் வேகம் இரண்டு அல்லது மூன்று மடங்காக அதிகரித்திருப்பதைக் காண்பீர்கள் அதன் பின்பு நீங்கள் தலையை நீருக்குள் அமிழ்த்தியவாறு ஐந்து முதல் ஏழு துடுப்புகள் வரை போடக்கூடியதாக இருக்கும். நீச்சல் போட்டிகளின் போது இதை விட இரண்டு மடங்கிற்கும் மேலாக தலையை நீருக்குள் அமிழ்த்தியவாறு துடுப்புப்போடுவதைக் கண்டிருபீர்கள்.அதற்குக் காரணம் தீவிர பயிற்சி தான்.

சிலர் குறுந்தூரமாயின் தலையைத் தண்ணீருக்குள் அமிழ்த்தாமல் ஒவ்வொரு துடுப்புக்கும் முகத்தில் நீர் மோதுவதைத்தவிர்க்க தலையை இரு பக்கமும் வெடுக்குவெடுக்கென்று திருப்பியவாறு நீந்துவதைக் கண்டிருப்பீர்கள். குறுந்தூரத்திற்கு இது ஏற்புடையதாயினும் சிலர் ஏதாவது ஒரு பக்கம் தலையைத் திருப்பும் போது மட்டுமே சுவாசித்துக் கொள்வார்கள். இது சில வசதியீனங்களை ஏற்படுத்தும் என்பதால் இரண்டு பக்கமும் சுவாசிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். அது தவிர இந்த நீச்சல் நீந்தும் போது கழுத்துப்பிடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். அதனால் நீங்கள் ஒரு பக்கம் திருப்பிய தலை, மீண்டும் அடுத்த பக்கம் கொண்டு வருவதற்கு அல்லது சாதாரணமாக நடுப்பகுதிக்குக் கொண்டு வருவதற்குச் சிரமமாகலாம்.  

 
இனி நீச்சல் போட்டிகளின் போது நீந்துபவர்களுக்கு ஒரு இணையத்தளத்தில் ‘Swimming Tips To Triatletes’ என்ற பகுதியில் கொடுக்கப்பட்ட சில அறிவுரைகளைத் தருகிறேன். Triathlon என்பது முப்போட்டியாகும். அதாவது நீச்சல், ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம்  என்பன அடங்கிய போட்டியாகும். அதில் ஈடுபடுபவர்களைத்தான் டிரயத்லெட்டீஸ் (Triatletes) என்று அழைப்பார்கள். வல்வெட்டித்துறையில்  கடந்த வருடம் ‘உதயசூரியன்’ விளையாட்டுக்கழகத்தின் பொன்விழாவை முன்னிட்டு  நடத்தப்பட்ட விளையாட்டுப்போட்டிகளில் முதன்முறையாக இந்த விளையாட்டுப்போட்டி நடத்தப்பட்டிருந்தது.   
நீங்கள் சற்றுக்கூடிய தூரம்  தலையை அமிழ்த்தியவாறு நீந்தப் பழகி விட்டீர்களெனில் நீங்கள் கூட்டமாக நீந்தும் வேளைகளில்..... முக்கியமாக நீச்சல் போட்டிகளில், முன்னே செல்லும் நீச்சல் வீரனின் மூச்சுக்குமிழ்களைப் பின் தொடர்ந்து சற்றுத்தூரம் தலையைத் தூக்காமலே நீந்திச்செல்லலாம். அதாவது போகும் திசை பற்றிய கவலை தேவையில்லை. ஆனால் அதற்கு நீங்கள் அந்தக்கூட்டத்தில் முன்னுக்குச் செல்லும் நீச்சல் வீரனாய் இல்லாமலிருத்தல் அவசியம். ஆனாலும் ஒரு சின்ன அறிவுரை. முழுக்க முழுக்க அவர்களை நம்பியிராது போட்டிகளின் போது கடலில் போடப்பட்டிருக்கும் மிதவைகளையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் முன்னால் நீந்துபவர்கள் திசை மாறினால் நீங்களும் திசை மாறக்கூடிய வாய்ப்பிருக்கிறது.

 
 

நீச்சல் போட்டிகளின் போது முன்னே போகும் நீச்சல் வீரர்களைத் தொடரும் போது  மூச்சுக்குமிழ்களைப் பின் தொடர்ந்து சிரமப்படாமல் திசையறிந்து போகும் நன்மையை விட இன்னொரு முக்கியமான நன்மை இருக்கிறது. அதாவது நல்ல வேகமாக நீந்தும் ஒரு நீச்சல் வீரனுக்குப் பின்னால் நீந்துபவர் அதிக சிரமப்படாமல் நீந்தலாம் என்று சொல்லப்படுகிறது. அதாவது முன்னால் நீந்துபவரின் துடுப்பு வலிப்பின் போது நீர் முன்னுக்கு இழுக்கப்படுவதால்  பின்னால் நீந்துபவரின் உடலும் சற்று இழுக்கப்படுவதால்(pulling effect) அவர் அதிகச் சிரமப்படத் தேவையில்லை கடலில் நீங்கள் நீந்திக்கொண்டிருக்கும் போது ஒரு வேகப்படகு உங்களுக்கு அருகால் சென்றால்  நீங்கள் அதனை நோக்கி இழுக்கப்படுவதை இன்னும் தெளிவாக உணரலாம். நீங்கள் கடைசியாகச் சொல்லப்பட்ட இரண்டு விடயங்களையும் நான் அனுபவபூர்வமாக அறிந்ததில்லை. ஆரம்பத்தில் ஒன்றாக நீந்தினாலும் சற்று நேரத்தின் பின், நல்ல நீச்சல் வீரர்கள் எல்லோருமே வேகமெடுத்து இந்த இரண்டு நன்மைகளையுமே நான் பெற முடியாத தொலைவுக்குச் சென்று விடுவது இதன் காரணமாக இருக்கலாம்.   
கடல் நீச்சல்..... என்னைப் பொறுத்தவரை அதுவொரு அற்புதமான, அட்டகாசமான, அருமையான, அலாதியான அனுபவம். ஏற்கனவே அதில் ஆர்வம் உள்ளவர்களைத் தவிர ஏனையவர்களுக்கு இந்தக்கட்டுரைஒரு தூண்டுகோலாக அமைந்தால் அது எனக்கு மகிழ்ச்சி.       



சுனாமி 2004(ஆறாம் அத்தியாயம்)


சுனாமி 2004(ஆறாம் அத்தியாயம்)

ஏழெட்டு நிமிடங்களுக்கு பந்து கால் மாறிக்கொண்டிருந்ததே தவிர சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் நிகழவில்லை. வீமண்ணாவும் வியூகங்களை மாற்றி மாற்றி ‘எங்களை அங்கே போ இங்கே போ’ என்று விரட்டிக் கொண்டிருந்தாலும் ‘பறக்கும் பருந்துகள்’ பேற்றுக் காவலனின் கைகளுக்குப் பந்து போகவில்லை. எதிர்ப்பக்கமும் அதே நிலைமை தான். இப்படியே சற்று மந்தமாகப்போய்க்கொண்டிருந்த விளையாட்டை மாற்றியது ‘பறக்கும் பருந்துகள்’ கடுகு தான். மைதானத்தின் நடுப்பகுதியிலிருந்து கொஞ்சம் முன்னால் கடுகின் கால்களுக்குப் பந்து கிடைத்ததும் வெட்டி விளையாடாமல் ஒரே அடி. என் வலது காதுக்குப் பக்கத்தில் பந்து கூவிக்கொண்டு போனது. மோகன் அண்ணாவுக்கு பிடிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்காமல் போக, அவர் தட்டிவிட்ட பந்து துரதிஷ்டவசமாக அடித்த வேகத்துடன் ஓடி வந்து கொண்டிருந்த கடுகின் கால்களிலேயே தஞ்சம் புக, மீண்டும் ஒரு ‘கிண்’ என்ற அடி. பார்வையாளர்களின் ஆரவாரத்தையும் மீறிக்கொண்டு பந்தைப்பிடிக்கப்பாய்ந்து முடியாமற்போய் மோகன் அண்ணா விழுந்த சத்தம் கேட்டது. “ என்னடா கேசவா, பந்தைத் தலையால் முட்டியிருக்கலாம் தானே “ என்று வீமன் அண்ணா என்னைக் கடிந்து கொண்டார்.

எனக்கென்றால் பந்தைத் தலையால் முட்டுவது என்றாலே அலர்ஜி. நெற்றிக்குச் சற்று மேற்பட்ட பகுதி தான் இதற்குப் பாவிக்க வேண்டுமென்றாலும்  அந்தப் பகுதியைப் பாவிக்கும் போது கண்கள் இறுக மூடிக்கொண்டு விடும். அதன் பின் பந்து எங்கே போகிறது என்றும் தெரியாது. உச்சி மண்டையைப் பாவித்தாலோ வேறொரு பிரச்சனை. தலை சற்று நேரத்துக்குக் கிறுகிறுப்பதோடு ஒவ்வொருத்தரும் இரண்டிரண்டு  பேராய்த்தெரிவார்கள். ‘என்னடா, இவ்வளவு பேர் மைதானத்துக்குள் என்ன செய்கிறார்கள்’ என்று யோசிக்க வேண்டியிருக்கும்.

அதன் பின்பு இடைவேளைக்கு முன்னர், வீமன் அண்ணா இலாவகமாக வெட்டிக்கொண்டு வந்து வினோத்தின் கால்களுக்கு அனுப்ப வினோத்தின் மிக வேகமான அடி ‘பறக்கும் பருந்துகள்’ பேற்றுக் காவலனால் மிக அனாயசமாகப்பிடிக்கப்பட்டது. கண்ணனின் மட்டையடிக்கும் சரியான வாய்ப்புக்கள் அமையவில்லை.

இடைவேளையின் போது தண்ணீரைக் குடிக்கும் போது  தலையை  அண்ணாந்து கடைக்கண்ணால் நளினியின் வீட்டைப் பார்த்தேன். கொடிகள் ஒன்றும் தெரியவில்லை. ‘பின்னே, எனது விளையாட்டுக்குப் போய் யாராவது கொடி காட்டுவார்களா’ என்று நினைத்துக்கொண்டேன். அருகில் வந்து தண்ணீர்ப்போத்தலை வாங்கிக் கொண்ட கண்ணன் ‘ கொடி அசைந்ததும் நினைப்பு வந்ததா, நினைப்பு வந்ததும் கொடி அசைந்ததா?’ என்று பாடி விஜயகாந்த் மாதிரி நாக்கைக் கடித்துக்கொண்டு கண்ணடித்தான். கண்ணன் ப்ரியாவின் ஒன்று விட தம்பி. ஏற்கனவே எங்களுக்கிடையிலிருந்த ஈர்ப்பு அவனுக்கு லேசாகத் தெரிந்தே இருந்தது. போதாததற்கு ப்ரியா இன்று எனது விளையாட்டை பார்க்கப்போவதாக வேறு அவனுக்குச் சொல்லியிருக்கிறாள். இனி இவனின் வெறும் வாய்க்கு இந்த விடயம் மெல்லும் அவலாகத்தான் இருக்கப் போகிறது.

இடைவேளை முடிந்து மீண்டும் விளையாட்டுத் தொடங்கியபோது எங்கள் கழக வீரர்களிடம் அதிகமான சுறுசுறுப்பைப் பார்க்க முடிந்தது. அந்த சுறுசுறுப்பு என்னையும் தொற்றிக்கொள்ள  இரண்டு எதிர்த்தரப்பு வீரர்களை இலாகவமாகத் தவிர்த்துக்கொண்டு முன்னேறி கண்ணனுக்கு வாய்ப்பாகப் பந்தைத்தட்ட, கண்ணனின் மட்டையடி தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் பேற்றுக்காவலனின்  கால்களுக்கு இடையில் அற்புதமாகப் புகுந்தது. எல்லோரும் சந்தோஷத்துடன் கண்ணனைக் கட்டிக்கொண்டோம். அவன் என் முதுகில் தட்டி ‘”பந்த நல்ல வழமாத் தந்தீங்கள் கேசவனண்ணா..எல்லாரும் கவனிச்சு வையுங்கோ. பந்த மேலால் அடிச்சு கோல் போடுறத விட இது தான் சரி போல இருக்கு” என்றான்.

அதன் பின் இன்னும் சற்று உற்சாகத்துடன் நாங்கள் விளையாடினோம். ஆனாலும் வீமண்ணாவின் நுணுக்கமான அடி, வினோத்தின் முரட்டுத்தனமான அடி எல்லாமே பெற்றுக் காவலனின் கைகளுக்குள் தான் தஞ்சம் புகுந்தது.அதேபோல் எதிர் வீரர்கள் அடித்த பந்தும் மோகன் அண்ணாவின் கைகளிலிருந்து தப்பவில்லை.. விளையாட்டு முடிவதற்கு ஓரிரண்டு நிமிடங்கள் இருக்க, வீமண்ணா தூக்கியடித்த பந்து என்னை நோக்கி வந்தது. “ Head பண்ணுடா கேசவா” என்று வீமண்ணாவின் குரலும் கேட்டது. என் மூலமாக எங்கள் அணி வெல்வதற்குக் கடைசி நேரத்தில் நேரத்தில் கிடைத்த வாய்ப்பு என்று என் மனதுக்குள் பட்சிகள் கூவ, அந்த நேரத்தில் எனக்குக் காட்டப்பட்ட பச்சைக்கொடியும் ஞாபகத்துக்கு வர என் வாழ்வில் முதல்முறையாக கண்ணைத்திறந்து கொண்டு பந்தை அப்படியே நெற்றியால் உள்வாங்கி திசையை மாற்றி பேற்றுக்கம்பத்தின் மூலையினுள் செலுத்தினேன். ‘பறக்கும் பருந்துகள்’ பேற்றுக் காவலன் பெயருக்கேற்றாற்போல் பறந்து பிடிக்க முயற்சி செய்தும் அவனை ஏமாற்றி விட்டு பந்து வலையினுள் நுழைய என்னுடலில் சிலிர்ப்பு, புல்லரிப்பு, ரோமாஞ்சணம், புளங்காகிதம் என இன்னபிற உணர்ச்சிகள் ஒரே நேரத்தில் ஏற்பட்டன.  நான் எங்கள் கழகத்துக்கு  விளையாடத்தொடங்கிய பின் எனக்குக் கிடைத்த முதலாவது பேறு. பந்து வலையினுள் சிக்கிக்கொள்ள, நான் எனது கழக வீரர்களின் அன்புப்பிடியினுள் சிக்கிக் கொண்டேன். எங்கள் பேற்றுக் காவலனான மோகன் அண்ணா கூட ஓடி வந்து முதுகைத் தட்டி தலையைத்தடவி விட்டுப்போனார்.

ஒருவாறு எல்லாம் ஓய்ந்து, பந்தைத் தட்டுவதற்கு, தீப்பிடித்தாற்போல் நின்ற  ‘பறக்கும் பருந்துகள்’ வீரர்களுக்கு வாய்ப்புக்கொடுக்கப்பட்டது. எங்கள் முன்னணி வீரர்களை  இலாவகமாத் தவிர்த்துக்கொண்டு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஓங்கி அடித்த பந்து பேற்றுக்கம்பத்திற்கு இரண்டு அடிகள் மேலால் பறக்க, சரியாக அந்தக்கணத்தில் விசிலும் ஊதப்பட்டது.

அதுவரை காத்திருந்த ரவி, நாதன், உதயன், மகேஷ் எல்லோரும் ஓடி   வந்து கட்டிக் கொண்டது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. வீமனண்ணா வந்து முதுகைத்தட்டி விட்டு “கேசவன், வாய்ப்புக்கிடைக்கக்குள்ள  பயன்படுத்தினாத்தான் hero. இல்லாவிட்டால் zero. நீ இண்டைக்கு hero” என்று சொல்லி விட்டுப்போனார். மகேஷ் “டேய் கேசவா, நீ உன்ன நோக்கி வந்த பந்த வேணாம் என்று தலையாட்ட அது எதேச்சையாக உன்ட தலையில பட்டு goal post க்குப் போனது எனக்கு மட்டும் தான் தெரியும். ஆனா நான் ஒருத்தருக்கும் சொல்ல மாட்டன்” என்று வெறுப்பூட்ட, நான் செய்ய நினைத்ததை விமலன் செய்தான். “ஆ”   என்று கத்திய மகேஷ் “ டேய் குண்டா,உனக்கு என்னடா?” என்று கேட்க மீண்டும் ஒரு அடி விழுந்தது.

“டேய், உங்கட சண்டய பிறகு வச்சுக் கொள்ளுங்கோடா . கேசவன் அடிச்ச முதல் goal அ கொண்டாட வேணும். இண்டைக்கு இரவு என்ட செலவில எல்லார்க்கும்  கொத்து ரொட்டி’’ என்று ரவி அறிவிக்க  “ இண்டைக்கு  வெள்ளிக்கிழமடா. நாளைக்கு கடல்ல நீந்தி விட்டு ஒரு change க்கு மத்தியானம் கொத்துச்சாப்பிடுவம்” என்ற உதயன்  ஒரு கடல் விலங்கு.ஒரு நாள் முழுவதும் கடலில் நீந்தி விட்டு ‘சரி இப்ப போவமா?’ என்று கேட்டாலும்   இன்னும் கொஞ்ச நேரம் நீந்துவமா’ என்று கேட்கும் ஒரு கடல் பிசாசு. அவனைப்பொறுத்தவரை என்ன கொண்டாட்டம் என்றாலும் அன்று கடலில் நீந்தினால் தான் கொண்டாட்டம் முழுமை பெறும். எங்களில் வினோத்தைத்தவிர மற்ற எல்லோருக்குமே நீச்சலில் ஓரளவு விருப்பம் என்றாலும் அவனளவுக்கு வெறி கிடையாது. 

இதற்கிடையில் கலைந்து சென்று கொண்டிருந்த பார்வையாளர்களும், ஆதரவாளர்களும் எங்கள் வெற்றிக்கு வாழ்த்தியவாறும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்த கண்ணனையும் என்னையும் பாராட்டியவாறும் சென்று கொண்டிருக்க கடுகு என்று அழைக்கப்படும் விஜயன் தன்னுடைய நண்பனையும் என்னிடம் அழைத்து வந்தான். அவன் தான் ப்ரியாவுடன் சேட்டை விட்டதாக ரவி முன்பே காட்டியிருந்தான். “ super ஆ head பண்ணின  மச்சான். இவனும் உன்னப் பாராட்டோணுமாம் எண்டு வந்தவன்.. இவன் கமல்” என்று கடுகு அறிமுகப்படுத்தினான். இருவரும் கை கொடுத்துக்கொண்டோம். “ நல்லா விளையாடுறீங்கள். உங்கட முதல் goal எண்டு கதச்சவங்கள். அதான் வாழ்த்திட்டுப் போக வந்தனான்” என்றான். அவனது வாழ்த்தில் உண்மையாகப் பாராட்டும் தொனி தெரிந்தது. “யார, இவனையோ நல்லா விளையாடுற எண்டு சொல்ற? வெறும் பெட்ட விளையாட்டு. முட்டாம, மோதாம விளையாடுறதுக்கு இது என்ன கிரிக்கெட்டோ?கை பந்தத்தொடக்கூடாதே தவிர மற்றப்படி ரக்பி மாதிரி விளையாடோணும்” என்று முரட்டுக்குரல் கேட்க திரும்பிப் பார்த்தேன். வினோத்தின் அப்பா.அவர் கிட்டே வர முன்பே சாராய நெடி அடித்தது. கமலின் முதுகில் தட்டி “ Thanks, நீங்களும் நல்லா விளையாடுறீங்கள்’ என்றேன். “ சரி,பிறகு சந்திப்பம்” என்று அவர்கள் புறப்பட “தம்பி, நான் இப்படி வெளிப்படையாச் சொல்லுறன் என்று கோபப்படுறியோ?” என்று என்று என் கையைப் பிடித்துக்கொண்டு வினோத்தின் அப்பா கேட்டார். “ இல்ல ஐயா ,நீங்க சொன்னா அது சரியாத்தானிருக்கும். எனக்குக் கோபம் இல்ல” என்றேன். 20 வருடங்களுக்கு முன்னர் அவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரர். உயிரைக் கொடுத்து விளையாடுவார். என்றும் அவர் விளையாடியதை விட கால் கை முறித்து கிடந்த நாட்கள் தான் அதிகம் என்றும்  என்று அனேகர் சொல்லி அறிந்திருக்கிறேன். தான் நேசித்த ஒரு விளையாட்டு சம்பந்தமாக கருத்து வெளியிட, அறிவுரை சொல்ல அவருக்கு உரிமை உண்டு என்பது எனது கருத்து.. அவர் என் கையைப் பிடித்துக்கொண்டு மேலும் கதைக்க முயற்சிக்க “அப்பா, வீண் பிரச்சன வேணாம். உடனே வீட்ட போங்கோ” என்று வினோத் வெருட்ட அதோடு உதயனும் ரவியும் “ஓம் அங்கிள். நீங்க வெளிக்கிடுங்கோ” என்று சொல்ல உடனே பெட்டிப்பாம்பாக அடங்கி அந்த இடத்திலிருந்து வெளியேறினார்.   

“ஏண்டா, இப்படிப்பேசிக்கலைக்கிற? அவர் என்னிலல அக்கற இருக்கிறதால தானே அறிவுர சொன்னவர்.” என்றேன்.  இவர்களுக்கெல்லாம் அப்பா இருப்பதால் அப்பாவின் அருமை தெரியாது என்று நினைத்துக்கொண்டேன்.

“ சரிடா, நான் வெளிக்கிடப்போறன். நாளக்கு எத்தன மணிக்கு கடல் குளிப்பம்?” என்று கேட்க உதயன்   “கடல் குளிக்க எண்டு சொல்லக்கூடாது. கடல்ல நீந்த எண்டு சொல்லோணும்” என்று திருத்தினான். “ போடா இவனே. நாங்கள் எல்லாரும் கடல் குளிக்கத் தான் நீ மட்டும் தான் நீந்த” என்று மகேஷ் அவனைத் திருத்தினான். எல்லோரும் ஏக மனதாக 9 மணி என்று முடிவெடுத்ததும்  நான் கிளம்ப ரவியும் என்னுடன் புறப்பட்டான். நளினி வீட்டைத் தாண்ட முன்பு திரும்பிப் பார்க்க,  வாசலில்  நளினி நிற்பது தெரிந்தது. துவிச்சக்கர வண்டியை நிறுத்துவோமா என்று யோசிக்கும் போதே “ கேசவன் கொஞ்சம் நிக்கிறீங்களா?” என்று நளினியின் குரல் கேட்க நான் ரவியைத் திரும்பிப்பார்க்க “ நல்லதே நடக்கும் மச்சான். நாளக்குச் சந்திப்பம்.” என்றவாறு போய் விட்டான். “ஆக்கள் போய்வாற இடம். உள்ள வாரீங்களோ? எங்கட வீட்ட ஆக்கள் இல்ல” என்று நளினி  மீண்டும் அழைக்கவும் என் தயக்கம்  விலகாமல் தயங்கி நின்றேன். இப்ப நீங்கள் உள்ள வரப்போறீங்களோ இல்லையோ? என்று உள்ளேயிருந்து ப்ரியாவின் குரல் கேட்டது.

(தொடரும்)                   

கடலின் கருந்துவாரங்கள்

 

அண்டவெளியில் உள்ள கருந்துவாரங்கள் பற்றி நீங்கள் சில வேளைகளில் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதன் பெயர் உங்களை வேறு மாதிரி நினைக்கத் தூண்டினாலும் இது கண்ணுக்குப் புலப்படாத ஒரு வெற்று வெளியாகும். மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பெரிய பொருள் ஒரு சிறிய வடிவமாக ஒடுக்கப்பட்ட பிரதேசமாகும். உதாரணத்துக்கு சூரியனைப் போல பத்து மடங்கு அளவிற் பெரிதான ஒரு நட்சத்திரம் ஏதோ ஒரு காரணத்தினால் அமுக்கத்துக்கு உள்ளாகி அழிவடைந்து அதன் நடுப்பகுதி யாழ்ப்பாண மாவட்டம் அளவு கோளமாக இருக்கும் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். சரி அப்படியானால் ஏன் அது கண்ணுக்குப் புலப்படுவதில்லை என்று கேட்பீர்கள். மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பொருள் ஒரு சிறிய வடிவமாக ஒடுக்கப்படும் போது அதிலிருந்து வெளிப்படும் அளவிட முடியாத புவியீர்ப்பு விசையிலிருந்து ஒன்றுமே .....ஏன் ஒளி கூடத் தப்ப முடியாது என்பது தான் இதன் சிறிய தத்துவம்.இந்த நிகழ்வின் போது பல்வேறு சக்திகள் தோன்றினாலும் அவை எல்லாவற்றையும் விட மேலோங்கும் புவியீர்ப்பானது எல்லாவற்றையும் தனக்குள் அடக்கிக் கொண்டு விடும்.  அதாவது தனது ஒளியைத் தானே விழுங்கிக் கொண்டு அரூபமாக நிற்கும் ஒரு மர்ம சமாச்சாரம் தான் இது. அதாவது சுருக்கமாகச் சொல்லப் போனால் ஒரு நட்சத்திரத்தின் முடிவு ஒரு கருந்துவாரத்தின் ஆரம்பம் எனக் கொள்ளலாம். விளங்குகிற மாதிரியும் இருக்கும். விளங்காத மாதிரியும் இருக்கும். இது வரை  உங்களுக்கு சுருக்கமாகச் சொன்னது அண்டவெளியில் உள்ள கருந்துவாரங்கள் பற்றி. நாங்கள் பார்க்கப் போவது கடலின் கருந்துவாரங்கள் பற்றி. ஏற்கனவே ‘வல்வை அலையோசை’யின் முதலாவது இணைய இதழில் ‘பெர்முடா முக்கோணப் பிரதேசத்தின் தீர்க்கப்படாத மர்மம்’ என்ற பகுதியில் இந்தக் கருந்துவாரங்கள் பற்றி ஒரு இடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இந்தக் கருந்துவாரங்கள் கடலிலும் குறிப்பாக தெற்கு அட்லாண்டிக் சமுத்திரத்தில் இருப்பதாக தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார்கள். தெற்குப் பக்க இவை அதிகம் ஏற்படுவதாலேயே வடக்கு அண்டார்டிக் கடலில் இளஞ்சூடான உப்புத்தன்மையுள்ள நீர் இடம் மாற்றப்பட்டிருக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதற்கு அவர்கள் செல்லமாக ‘எடி’ என்று பெயரும் இட்டிருக்கிறார்கள். ‘எடி’ என்பது நீர்ச்சுழலுக்கு ஒப்பானது. அதன் மையப் பகுதியே கருந்துவாரம் என்று அழைக்கப்படும். இறுக்கமான நீர்ப்பாதைகளால் சூழப்பட்ட இதிலிருந்து ஒன்றுமே தப்பமுடியாது என்பது ஒரு புறமிருக்க இந்த நீர்ச்சுழல் சூழ்ந்த கருந்துவாரங்கள் சில வேளைகளில் மாதக்கணக்கில் நீடிக்கும் என்பதும் அப்போது அந்த நீர்ச்சுழலில் கோடிக்கணக்கான தொன் எடையுள்ள நீர் சுற்றிச் சுழலும் என்பதும் வியக்கத் தக்க, நினைத்துப் பார்த்தால் திகில் தரக் கூடிய விடயங்களாகும்.

இவை சிறிய கடல்களிலோ நீரிணைகளிலோ அல்லது கால்வாய்களிலோ ஏற்படுவதில்லை.பெரிய சமுத்திரங்களிலேயே ஏற்படும். இந்த எடிக்கள் சமுத்திரச் சூழலின் சீதோஷ்ணத்தையே மாற்றக் கூடியன. தென் துருவங்களில் பனிக்கட்டிகள் உருகுவதால் ஏற்படும் தீய விளைவுகளை இவை கணிசமாகக் குறைக்கின்றன என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஆனால் எடிக்களின் எல்லைகள் தெரியாததால் இவை எவ்வளவு தூரம் பாதிப்பைக் குறைக்கின்றன என்றுஅவர்களுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.   கணித ரீதியில் இவை அண்டவெளியின் கருந்துவாரங்களுக்கு ஒப்பானவை என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். அதாவது அண்டவெளியில் ஒளிக்கு ஏற்படும் கதியே இங்கு இந்த இராட்சத நீர்ச்சூழலில் அகப்படும்  நீருக்கும் ஏற்படும்.

இவை எவ்வாறு உருவாகின்றன என்று விஞ்ஞானிகள் செயற்கைக்கோள் மூலம் கிடைத்த படங்களைக் கொண்டு ஆராய்ந்த போது இந்து சமுத்திரத்தின் தென்கிழக்கில் நகரும் “அகுலாஸ்” எனப்படும் நீரோட்டமானது ஆபிரிக்காவின் கிழக்குப் கரையோரப் பகுதியில் பலமாக நெருக்கப்பட்டு சாதாரண கடர்சுழியாகத் தோற்றம் பெற்று தெற்கு அட்லாண்டிக் நோக்கி நகரும் போது ராட்சச ‘எடி’க்களாக மாறுகின்றன என்று தெரிய வந்திருக்கிறது.    

இது சம்பந்தமாக மேலதிகத் தகவல்கள் திரட்டுவதற்காக விஞ்ஞானிகள் இராட்சத நீர்ச்சுழல் ஒன்றினுள் பெரிய ஒளிக்குமிழ் ஒன்றை விட்டு  செயற்கைக்கோள் மூலம் அவதானித்தனர். இதன் போது சுழலின் உள்ளே  சற்றுத் தூரம்சென்ற அந்த ஒளிக்குமிழ் மீண்டும் வெளியே வந்து ஒரு வட்டமான சுற்றுப் பாதையில் தொடர்ந்து சுற்றக் கண்டனர். ஐன்ஸ்டீனின் ‘போடோன்’ கோளத் தத்துவத்தின்படி ஒரு சக்தி, நீரை மட்டும் உள்ளிழுத்துக் கொண்டு ஏனைய கடினமான பொருட்களை வெளித்தளளுவதாகவும், சில இராட்சத எடிக்களில் ஒரேயளவு நீர், சூழலை விட்டு வெளியே செல்லாமல் ஒரு வருடத்திற்கும் மேலாகச்  சுழன்று கொண்டிருப்பதாகவும் அவதானித்தனர்.

இவ்வாறாக நீரை சுழலுக்கு வெளியே விடாத ‘எடி’க்களே கணித சூத்திரத்தின்படி அண்டவெளியின் கருந்துவாரத்துக்கு ஒப்பிடப்படுகின்றன. உதாரணத்துக்கு ஆறு மாத காலமுடைய எடிக்களில்  ‘போடோன்’ கோளங்களைக் காண முடியும் என்றும் இன்னும் சிறிது காலத்தின் பின் உதாரணமாக ஒன்பது மாத காலமுடைய ‘எடி’க்களில் ‘போடோன்’ கோளங்களைக் காண முடியாது என்றும்  ஏனெனில் அவை நீரை சுழலுக்கு வெளியே விட ஆரம்பித்திருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.    

 இவற்றுள் ஆராய்ச்சிகளை மேற்கொள்வது சிரமமானதும் ஆபத்தான பணியுமாக இருப்பதால்  மந்த கதியியிலேயே ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆராய்ச்சியின் முடிவில் கடல் காலநிலை, கடற்சூழல் மாசடைதல் பற்றிய அறிய தகவல்கள் கிடைக்கப்பெறும் என்று  விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.       

 

சுப்த வஜ்ராசனம்

 


சுப்த என்றால் மல்லாந்து படுத்தல் என்று பொருள்படும். வஜ்ரம் என்றால் வைரம் என்று பொருள்படும். அதாவது இந்த ஆசனத்தில் இருக்கும் போது கிடையாக வைக்கப்பட வைரம் போல் தோன்றுவதால் இந்தப் பெயர் உண்டாகியிருக்கலாம்.

மகாபாரதத்தில் அர்ஜுனன் எய்த அம்புகள் பீஷ்மரின் உடலெங்கும் தைத்து அவர் அம்புப்படுக்கையில் சுப்த வஜ்ராசனத்திலேயே 59 நாட்கள் இருந்ததாகவும்  பாண்டவர்களும் கௌரவர்களும் அந்த அம்புகளை அகற்ற முனைந்த போது பீஷ்மர் அவர்களை,அதனைச் செய்ய விடாமல் தடுத்து இந்த நிலையில் மரணம் எய்துவது ஒரு சுத்த வீரனுக்கு அழகு என்று கூறியதாகவும்  புராணங்கள் கூறுகின்றன. தான் நினைத்த போது தனது உயிரைப் போக்கிக் கொள்ளும் ஆற்றல் பீஷ்மரிடம் இருந்ததால் மகாபாரதப் போருக்குத் தேவையான ஆலோசனைகளை  பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் வழங்கிய பின்னரே உயிரைப் போக்கிக் கொண்டார் என்றும் புராணங்கள் மேலும் கூறுகின்றன.

செய்யும் முறை

கடைசியாக வெளி வந்த “வல்வை அலையோசை”யில் வஜ்ராசனம் பற்றிப் பார்த்திருந்தோம்.அதாவது பாதங்களின் மேற்பகுதி தரையில் படுமாறு, முழங்காலிட்டபடி அமர்ந்திருப்பது வஜ்ராசனம். அப்படியே பின்னுக்குச் சரிந்து கைகளைத் தலைக்கு அணையாக வைத்துக் கொண்டோ அல்லது கைகளை முடிந்த அளவு பின்னால் நீட்டிய நிலையில் படுத்திருப்பது சுப்த வஜ்ராசனம் எனப்படும். சாயும் போது வெளி மூச்சும் நிமிரும் போது உள் மூச்சும் வாங்குதல் சிறப்பு. கழுத்துப் பிடிப்புள்ளவர்கள், மூட்டுப் பிடிப்புள்ளவர்கள், இதய நோயுள்ளவர்கள் இதனைத் தவிர்க்க வேண்டும்.


இதன் நன்மைகள்
1.   தொடை, இடுப்புப் பகுதியிலுள்ள தேவையற்ற சதையைக் கொழுப்பைக் குறைக்கும்.
2.   கூன் முதுகு நிமிரும்.
3.   வயிறு,இடுப்பு என்பன நன்கு நீட்டப்பட்டு உரம் பெறும்.
4.   வாயுத்தொல்லை,மலச்சிக்கலுக்கு நல்ல ஆசனம்.
கால்களை மடக்கி அமர்ந்து பின்னால்  முழுமையாகச் சரிய முடியாதவர்கள், கைகளை ஊன்றி அல்லது முழங்கையை ஊன்றி படிப்படியாகச் செய்து பார்க்கலாம்.

 
மிகவும் சிரமப்பட்டு முயற்சி செய்ய வேண்டாம். பின்பு ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி’ கதையாகி விடும். “ஏதோ கொஞ்சம் சள்ளையாக இருந்தாலும் கூட ஒரு நோவும் இல்லாமல் இருந்தேன். இந்தப் பாவியினுடைய கதையைக் கேட்டு,சள்ளையைக் குறைப்பதற்காக இந்த யோகாசனத்தைச் செய்யப் போய் இப்படியாகி விட்டேன்” என்றோ அல்லது “எப்படி இருந்த நான் இப்படியாகி விட்டேன்” என்றோ வருந்தும்படி இல்லாமல் முயற்சி செய்வது உங்கள் பொறுப்பு.

பையின் வாழ்க்கை –Life Of Pi




கனடாவில் வாழும் ஒருவர் பாண்டிச்சேரியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த போது நிகழ்ந்த சம்பவத்தை எழுத்தாளர் ஒருவருக்கு விபரிப்பதாகக் கதை ஆரம்பிக்கிறது.

சிறு வயது முதலே கடவுள் யார் என்ற தேடலை உடைய பை எனப்படும் பிஸ்ஸின் என்ற சிறுவன் தனது அம்மா,அப்பா,அண்ணாவுடன் பாண்டிச்சேரியில் வாழ்ந்து வருகிறான். அவனது அப்பா பாண்டிச்சேரியில் சிறிய அளவிலான ஒரு மிருகக்காட்சி சாலையை நடத்தி வருகிறார்.

ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு நல்ல விடயத்தைக் காணும் பை எல்லா மதங்களையும் தனது வாழ்வில் பின்பற்றத் தொடங்குகிறான். மாமிச உணவுகளைத் தவிர்த்து சைவ உணவுகளையே உட்கொள்கிறான்.

ஒரு நாள் பையின் குடும்பத்தவர்கள் அனைவரும் மிருகக்காட்சி சாலையிலுள்ள மிருகங்கள் எல்லாவற்றையும்  ஒரு சிறிய கப்பலில் ஏற்றிக் கொண்டு கனடாவுக்குக் குடிபெயர்கிறார்கள். கப்பலில் உள்ள சமையல்காரன் அந்தக் குடும்பத்தின் மீது துவேஷத்தைக் காட்டுகிறான். இன்னொரு சீன நாட்டுக்காரன் அந்தக் குடும்பத்தில் குறிப்பாக பையின் மீது அன்பையும் நட்பையும் காட்டுகிறான்.

இவ்வாறாக இருக்க ஒரு நாள் இடி மழையுடன் மாறத் தொடங்கும் வானிலை சூறாவளி என்ற உச்சக் கட்டத்தை அடைகிறது. பையின் குடும்பத்தவர்கள் அனைவரும் கப்பலின் கீழ்த்தளத்தில் ஆழ்ந்த உறக்கத்திலிருக்க பை மட்டும் சூராவளியைப் பார்த்து ரசிக்க மேல் தளத்துக்கு வார அந்த சமயம் பார்த்து ஒரு ராட்சச அலை அந்தச் சிறிய கப்பலைப் புரட்டிப் போட்டு விடுகின்றது.அந்த அனர்த்தத்துக்குப் பையின் குடும்பத்தவர்கள் அனைவரும் பலியாகி விடுகின்றனர். பை மட்டும் ஒரு சிறிய படகில் தப்பிக்கொண்டு விட அவனோடு சேர்ந்து கொண்டு ஒரு காயமடைந்த வரிக்குதிரையும்,ஒரு குரங்கும் ஒரு ஓநாயும்(ஓநாய்ப்புலி?) கடைசி நேரத்தில் அவனோடு சேர்ந்து தொற்றிக் கொள்கின்றன.


கடலின் ஆக்ரோஷம் தணிந்த பின் ஓநாய் தனது சுயரூபத்தைக் காட்டத் தொடங்குகிறது.முதலில், காயமடைந்த வரிக்குதிரையையும் பின்பு குரங்கையும் கடித்துக் கொல்கிறது. ஓநாய் பை மீது பாய முற்பட தரப்பாளுக்கு அடியில் படுத்துக் கிடக்கும் புலி பாய்ந்து ஓநாயைக் கொல்கிறது. அப்போது தான் புலி அந்தப் படகில் இருப்பதே தெரிய வருகிறது.
இப்போது அந்தப் படகில் பையும் புலியும் மட்டும் தான். இறந்து கிடக்கும் ஒவ்வொரு மிருகமாகச் சாப்பிட்டு முடித்து விட்டு புலி ஒரு கட்டத்தில் பை மீது பாய முற்பட கடலில் குதித்து விடும்  பை, கடலில் மிதக்கும் மரங்களைச் சேர்த்து ஒரு மிதவை தயாரித்துக் கொண்டு அதைப் படகோடு இணைத்துக் கொண்டு அதிலேயே தங்கி விடுகிறான். இடைக்கிடை  புலியின் கவனம் வேறெங்காவது திரும்பியிருக்கும் அல்லது புலி தூங்கும் கணங்களில் அந்தப் படகுக்குப் போய் தனக்குத் தேவையான உணவுப் பதார்த்தங்களை எடுத்துக் கொள்கிறான். மாமிச உணவு இல்லாவிட்டால் தன்னை வேட்டையாடிவிடுமென்ற பயத்தில் புலிக்கு மீன் பிடித்துக் கொடுக்கிறான்.

ஒரு நாள் ஒரு ராட்சசத் திமிங்கிலத்தின் பாய்ச்சலில் படகில் இருந்த  எல்லா உணவுகளுமே கடலில் விழுந்து விடுகின்றன. வேறு வழியில்லாமல் பையும் மீன் பிடித்துச் சாப்பிடத் தொடங்குகிறான். மிதவையில் தொடர்ந்து இருப்பது ஆபத்து என்று நினைத்து கொஞ்சம் கொஞ்சமாகப் புலியைப் பழக்கிக் கட்டுப்படுத்தப் பழகிக் கொண்டதும் படகிலேயே தங்கி விடுகிறான்.  
வினாடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்தியாலங்களாகி,மணித்தியாலங்கள் நாட்களாகி, நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகின்றன. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பரந்து கிடக்கும் கடலில் ஒரு சிறிய படைகையேனும் காணாமல் சில நாட்களாக மீன்களும் ஒன்றும் பிடிபடாமல் பசி மயக்கத்தின் உச்சத்தில் மரணத்தை வரவேற்கத் தொடங்கும் தருவாயில் ஒரு நாள் ஒரு தீவை அடைகிறார்கள். அங்கே அவர்களுக்குத் தேவையான கிழங்கு வகைகள்,நல்ல தண்ணீர் எல்லாமே கிடைக்கின்றன. ஆனால் இரவு வேளைகளில் நல்ல தண்ணீர் இரசாயன மாற்றங்களுக்கு உட்பட்டு விஷமாகி விடுவதுடன், அங்கே உள்ள தாவரங்களும் மாமிச பட்சணிகள் ஆகி விடுகின்றன என்பது தெரிய வந்ததும் அந்தத் தீவை விட்டு பை ஒடித்தப்பி படகில் ஏறிக்கொள்ள புலியும் கூடவே ஏறிக் கொள்கிறது  

இன்னும் சில மாதங்களுக்குப் பயணம் நீடிக்கிறது. கடைசியாக 227 நாட்களின் பின் ஒரு வழியாக கரீபியன் தீவொன்றில் கரை ஒதுங்குகிறார்கள். கரையில் களைத்து விழும் பை ஏக்கத்தோடு புலியைப் பார்க்க, அது அவனைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் காட்டுக்குள் நுழைகிறது.   

அங்குள்ள மக்கள் அவனை ஒரு வைத்தியசாலையில் சேர்க்கிறார்கள். வைத்தியசாலையில் என்ன நிகழ்ந்தது என்று அவனை விசாரிக்க அவன் தனது கதையைச் சொல்கிறான். அதனை அவனை நம்ப முடியாது என்று சொல்ல அவன் வேறொரு கதை சொல்கிறான்.
அந்தக் கதையில்  கப்பல் விபத்தின் பின் பையும் அவனது அம்மாவும், துவேஷமுள்ள சமையல்காரனும், நட்பான சீனாக்காரனும் படகில் தப்புகிறார்கள். தப்பும் போது காயமடைந்த சீனாக்காரனைக் கொன்று அவனையே தூண்டிலாகப் பாவித்து மீன் பிடிப்பதோடு சீனாக்காரனைச் சாப்பிடவும் செய்கிறான்.. இதைப் பார்த்து விட்டு  பையின் அம்மா அவனைத் தப்பச் சொல்லி விட்டு அந்த சமையல்காரனோடு சண்டை போட அவன் அவளைக் கொன்று விட ஆத்திரமடைந்த பை பாய்ந்து சமையல்காரனைக் கொன்று விடுகிறான்.
இந்த இரண்டு கதைகளையும் கேட்ட எழுத்தாளர் முதலாவது கதையை ஏற்றுக் கொள்ள திரைப்படம் நிறைவுறுகிறது.
இதில் காயமடைந்த சீனக்காரன் வரிக்குதிரைக்கும்,சமையல்காரன் ஓநாய்க்கும்,பையின் அம்மா குரங்குக்கும் பை புலிக்கும் ஒப்பிடப்படுவதை ஊகிப்பதில் சிரமமில்லை. அப்படியானால் முதலாவது கதையில் வரும் பை யாரென்று மனதில் எழும் கேள்விக்கு நாஸ்திகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் விடையாகக் கிடைக்கிறது.  

தொண்டைமானாற்றுக் கழிமுகப் பகுதி


நீங்கள் கடற்கரையைப் பார்த்து ரசித்திருப்பீர்கள். ஆற்றங்கரையைப் பார்த்து ரசித்திருப்பீர்கள். இயற்கையழகு கொஞ்சும் இடங்களைப் பார்த்து ரசித்திருப்பீர்கள். இந்த மூன்றையும் ஒன்று சேரப் பார்த்து அனுபவித்திருக்கிறீர்களா? அட்டகாசமாக  இருக்கும். பார்க்கிறீர்களா? பார்க்கிறீர்களா? பார்க்கிறீர்களா?(‘சிங்கம்’ punch dialog இன் பாதிப்பு)


அச்சுவேலியிலிருந்து தொண்டைமானாறு வரும் போது தொண்டைமானாற்றுப் பாலத்தின் இடப்பக்கமாகவும், தொண்டைமானாற்றிலிருந்து அச்சுவேலி போகும் போது தொண்டைமானாற்றுப் பாலத்தின் வலப்பக்கமும் பார்த்திருக்கிறீர்களா?அது தான் தொண்டைமானாற்றுக் கழிமுகப் பகுதி அல்லது ஆற்று முகப் பகுதி. கிட்டத்தட்ட 250 மீற்றர் அல்லது 300 மீற்றர் ஆற்றின் நீரோட்டத்தையும் அதன் பின்பு கடலையும் காணலாம். மாரி காலங்களில் மட்டுமே ஆற்று நீர் கடலுடன் கலக்கிறது.


ஆம். அதாவது வெய்யில் காலங்களில் கடல் கணவனுடன் ஊடல் கொண்டு தள்ளி நிற்கும் ஆற்று மனைவி மழை காலங்களில் ஆவலோடு ஓடி வந்து கடல் கணவனை ஆரத் தழுவிக் கொள்கிறாள். அப்போது சற்று மேட்டுப்பாங்கான ஒரு சின்னப் பகுதி மட்டுமே தீவு போல் இருக்க சுற்றிலும் ஆற்று நீர் கடலை நோக்கிப் பாய்கிறது. மழை மிக அதிகமாகப் பெய்யும் காலத்தில் அந்த மேட்டுப்பகுதியையும் காணக்கிடைக்காது.

ஆனால் கடந்த வருடம் மழை மிகக் குறைவாதலாலும், அத்துடன் தொண்டைமானாற்றின் நிரந்தரமான பாலம் அமைக்கப்படுவதற்கு முன்னர் தற்காலிகமாகப் போடப்பட்டிருந்த இரும்புப்பாலம் பெயர்த்தெடுக்கப்பட்ட போது உடைந்து ஆற்றுக்குள் விழுந்த கட்டிடச் சிதைவுகளாலும் கடந்த மாரியில் கூட ஆற்று மனைவி கடல் கணவனுடன் ஊடலுடன் தான் இருந்திருக்கிறாள். இனி எப்போது கூடல் நிகழப் போகிறதோ தெரியவில்லை.

தொண்டைமானாறு சந்தியிலிருந்து வல்வெட்டித்துறை நோக்கி வரும் பிரதான பாதையில் 200 மீற்றருக்குள் வரும் எல்லா குச்சு ஒழுங்கைகள் மூலமாகவும் இந்த கழிமுகப் பகுதியை அடையலாம். மனதைக் கவரும் மனோரம்யமான இடம். கசூரினா,சாட்டி போன்ற சுற்றுலாப்பயணிகள் அதிகம் போய்வரும் இடங்களை விட அழகாக இருந்தாலும் கூட இது பிற ஊர் ஆட்களால் அதிகமாக அறியப்படாத பகுதியாக இருப்பது ஆச்சரியம் தான்.

பிரதான பாதையிலிருந்து 50 மீற்றருக்குள் இருந்தாலும் நெருக்கமான மக்கள் குடியிருப்புக்கள் இந்த இடத்தை மறைத்து இருப்பது தான் இது மக்கள் மத்தியில் பெரிதும் அறியப்படாத பகுதியாக இருப்பதற்குரிய காரணமாக இருக்கக் கூடும். அதுவும் நல்லதற்குத் தான் .இல்லா விட்டால் இந்தப் பிரதேசமும் கசூரினா,சாடி போன்று பிளாஸ்டிக், பொலித்தீன், கண்ணாடிக் குப்பைகள் நிறைந்து மாசடைந்து போயிருக்கும்.

வழக்கமாக நாங்கள் கடற்கரைக்குப் போனால் ஒரு பக்கம் கடலும் மூன்று பக்கம் நிலப்பகுதியும் இருக்கும். இங்கே எதிர்மாறாக ஒரு பக்கம் நிலப்பகுதியும் இரண்டு பக்கம் கடலும் ஒரு பக்கம் ஆறும் இருப்பது கண் கொள்ளாக் காட்சி. அங்கே நடமாடுபவர்கள், மீனவர்களின் கால்கள் அடிக்கடி படும் இடங்களைத் தவிர ஏனைய கடற்கரை மண்ணுள்ள பகுதிகளில்  ஒற்றுமையின் உயர்வுக்கு உவமானமாகக் கூறப்படும் அடம்பன் கொடிகள் திரண்டு மிடுக்காகக் காணப்படுகின்றன.


ஆங்காங்கே ஒன்றிரண்டு, பெரும்பாலும் அந்தப் பகுதியிலிருந்தே வந்த குடும்பங்கள், ஆற்றங்கரைப் பக்கமாக விளையாடிக்கொண்டிருக்கும் சில சிறுவர், சிறுமிகளைத் தவிர வேறு பொழுது போக்கிற்காக வந்த ஆட்கள் அங்கு பெரும்பாலும் தென்பட மாட்டார்கள். ஆனால்  தொழிலுக்காக அல்லது வயிற்றுப்பாட்டிற்காக இடுப்பளவு கடல் நீரில் நின்று கொண்டு கரைவலை வீசி மீன் பிடிக்கும்  ஏழெட்டு மீனவர்களையும்,மீன் அதிகமாக மாட்டினால் கட்டு மரத்தைக் தள்ளிக் கொண்டு போய் மீன் ஏற்றி வரக் கரையில் தயாராக இருக்கும் ஒன்றிரண்டு மீனவர்களையும் பார்க்கக் கூடியதாக இருக்கும்.

 
மீன்பிடித்தொழிலைத் தவிர ஆற்றுநீர் வெள்ளம் மேவிப் பாய்ந்த போது அங்கு குறிப்பிடத்தக்க அளவு நன்னீர் றால் வளர்ப்புத் தொழிலும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்ததாக அங்கிருந்த மீனவர்கள் மூலம் அறியக்கிடைத்தது.    
இயற்கையாகவே எங்கள் கடற்கரைப்பகுதிகளில்,அலையின் சீற்றத்தைக் குறைப்பதற்காகக் காணப்படும் முருகைக்கற்களை இந்தக் குறிப்பிட்ட பகுதியில் காண முடியாது. அது ஒரு விதத்தில் ஆபத்துத் தான் என்றாலும், சாதாரணமாக நீந்தக் கூடியவர்களுக்கு இந்த அம்சம் அனுகூலம் தான். ஏனெனில் எங்கள் கடற்கரைகளில் நீந்தத் தொடங்குவதற்கு முன் சற்றுத்தூரம் நடந்து கொண்டு போவதற்கிடையிலேயே எங்கள் பாதங்களைப் பாறைகள் பதம் பார்த்து விடும் வாய்ப்புக்கள் அதிகம். இங்கே அந்த ஆபத்து இல்லை. பாறைகள் தான் இல்லையே தவிர, பொதுவாகக் கடற்கரைகளில் காணப்படும் சிப்பி, சோகி, ஊரிக்கற்கள் என்பன  கால்களை உறுத்தும் அளவுக்கு குறிப்பிட்டளவு தூரம் கடலில் பரவிக் காணப்படுகின்றன. ஆற்றின் நீரோட்டம் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

அக்கரை என்று தொண்டைமானாற்று மக்களால் அழைக்கப்படும் தொண்டைமானாற்றுப் பாலம் தாண்டிய பிரதேசத்தில் முகாம் அமைத்து வசித்து வந்த ராணுவத்தினர் இந்த வருட மாசி மாத ஆரம்பத்தில் அந்த இடத்தை விட்டு நீங்கியது அந்தப் பகுதி மக்களுக்கு அண்மைக் காலத்தில் மிகவும் மகிழ்ச்சியைத் தந்ததொரு விடயமாக அந்தப் பகுதி மக்கள் குறிப்பிடுகிறார்கள். இக்கரைப் பகுதியில் தற்காலிக வீடுகளில் தங்கியிருந்த கிட்டத்தட்ட ஐம்பது குடும்பங்கள் மீண்டும் அக்கரைப் பகுதியில் தங்கள் சொந்தக் காணிகளில் தற்காலிகமாகக் கொட்டகைகள் அமைத்துக் கொண்டு தங்கியிருப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள். இந்தப் பகுதியில் கரை வலை வீசி மீன் பிடிப்பதும் அவர்கள் தான்.

கடைசியாக இன்னும் ஒரு புராண கால சுவாரசியமான தகவல்.முதலாம் குலோதுங்க  சோழனின் காலத்தில் (கி.பி 1070-1120) அவனது தளபதியாக இருந்த கருணாகரத் தொண்டைமான் இலங்கை மீது படையெடுத்து வந்து இலங்கையை வென்றதாகவும், இவன் யாழ்பாணத்தில் கரணவாய் என்னும் இடத்தில் உப்பு தேவைக்கு அதிகமாக விளைந்து வீணாவதைக் கண்டு இவற்றை சோழ நாட்டுக்கு அனுப்ப முயற்சி எடுத்ததாகவும்  அதன் பிரகாரமே அந்தக் காலத்திற்கும் முற்பட்ட தொன்மை வாய்ந்த வல்லி நதியினை(வல்லி நதி ஓடிய வல்லிப் பெருவெளியே இப்போது வல்லை வெளி என்று அழைக்கப்படுகின்றது) இன்னும் வெட்டி இன்னும் நீளமாக்கி கடலுடன் இணைத்தான் என்று கூறப்படுகிறது. இதன் மூலமாக கடற்காற்று மிகவும் உக்கிரமாக வீசும் காலங்களில் கூட அவனது உப்பேற்றும் மரக்கலங்கள் பாதுகாப்பாக தொண்டைமானாற்றுப் பகுதியில் ஒதுங்கி நிற்க முடிந்தது.( கடலதை நாங்கள் வெல்வோம் என்று ஒரு காலத்தில் எம்மால் அடிக்கடி முணுமுணுக்கப்பட்ட பாடலில் வரும் கடாரம்(மலேசியா) வென்ற சோழன் குலோதுங்க சோழன் அல்ல ராஜேந்திர சோழன் என்பது உங்களுக்கு ஒரு உதிரித் தகவல்.)  
இந்தத் தகவல் ஞாபகம் வந்த போது, இந்த இடங்களிலெல்லாம் கருணாகரத் தொண்டைமான் மற்றும் ஏனைய சோழர்களின் பாதங்கள் பட்டிருக்கும் என்று நினைத்த போது என்னுள் லேசான ஒரு சிலிர்ப்பு. அந்த சிலிர்ப்புடனே அந்த இடத்தை விட்டகன்றேன்.       

சதுரங்கத்தை ஒரு குழுவாக விளையாடுதல் சாத்தியமா?


அண்மையில் எனது மாமா ஒருவருடனும் அத்தான் ஒருவருடனும் கதைத்துக்கொண்டிருந்தேன். இப்போது பெரும்பாலான பாடசாலைகளில் சதுரங்க விளையாட்டுப்பயிற்சிகள், போட்டிகள் என்பனவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன என்ற ரீதியில்  கதை போய்க்கொண்டிருந்த போது தான்  அந்த எண்ணம் எனக்கு உதயமானது. இதை நான் எனது மாமாவிடமும் அத்தானிடமும் சொல்ல அது முடியவே முடியாது என்று அடித்துக் கூறி விட்டார்கள். தலையங்கத்தை வாசித்ததும் அனேகமானவர்கள் நான் அவர்களுக்கு என்ன சொன்னேன்,உங்களுக்கு என்ன சொல்லப்போகிறேன் என்று யூகித்திருப்பீர்கள்.

சரி ,யூகிக்காதவர்களுக்கு......நீங்கள் சதுரங்கம் விளையாடியிருக்கிறீர்களா? இதற்கு உங்களில் அனேகம் பேர் ஆமாம் என்று தான் சொல்வீர்கள் என்று நினைக்கிறேன். ஒன்றிரண்டு விதிவிலக்கானவர்களும் கூட அதன்  விதிமுறைகள்,காய்களை நகர்த்தும் முறைகள் பற்றி அறிந்திருப்பீர்கள்.

சரி எனக்கு ஏற்பட்ட எண்ணத்தை அல்லது சந்தேகத்தைச் சொல்கிறேன். குழுவாக சதுரங்கம் விளையாடுதல் சாத்தியமா? அதாவது சோடி சோடியாக அல்ல. இரு மூளைகள் தானே சதுரங்கத்தில் மோதிக்கொள்ளும். அதற்குப் பதிலாக ஒரு பக்கம் பதினாறு மூளைகளும், அடுத்த பக்கம் பதினாறு மூளைகளும் மோதிக்கொள்ளுதல் சாத்தியமா? அதாவது காய்களுக்குப் பதிலாக மனிதர்கள், கட்டங்களில் இருந்து நகர்ந்து தங்களுக்குள் மோதிக்கொள்ளுதல் சாத்தியமா?

சிறு வயதில் எனது நண்பன் சந்திரகுமாரிடம் வாங்கிப்படித்த சித்திரக்கதைகளுள் ‘சதுரங்க வெறியன்’ என்று ஒரு புத்தகம் படித்ததாக ஞாபகம்.அதில் Spider என்றழைக்கப்படும் சிலந்தி மன்னனும் அவனது எதிரி ஒருவனும் தங்கள் படைவீரர்களை சதுரங்க விளையாட்டில் ஈடுபடுத்தி மோதிக்கொள்வது எனது ஞாபகத்துக்கு வருகிறது.
இதை நடைமுறைப்படுத்தப் புறப்பட்டால் எக்கச்சக்கமான பிரச்சனைகள் வருமென்பது திண்ணம். ஆயினும் ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய தீர்வும் இருக்குமென்பது எனது எண்ணம்.
உதாரணத்துக்கு யார் நகர்வது என்று தீர்மானிப்பது யார்? ஒவ்வொருத்தரும் தம்பாட்டில் நகரப் புறப்பட்டால் சில சமயங்களில் ஒரே சமயத்தில் பல நகர்வுகள் வருமே?  சதுரங்க விளையாட்டில் மிகவும் திறமையானவர்களைக் கொண்டு விளையாடும் போது அதாவது தங்களின் தவறான ஒரு நகர்வே விளையாட்டின் போக்கை மாற்றிவிடும் என்று அவர்கள் உணர்ந்திருக்கும் பட்சத்தில் இது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கப்போவதில்லை என நான் நினைக்கிறேன்.


அப்படியில்லாமல் எல்லோரையும் ராஜாவோ அல்லது ராணியோ கட்டுப்படுத்துவதாக வைத்துக்கொள்ளலாம். அல்லது வெளியிலிருந்து ஒருவர் அனைவரையும் இயக்குவதாகவும் வைத்துக்கொள்ளலாம்.

இதை வாசிப்பவர்கள், இதில் என்னென்ன சாத்தியங்கள் இருக்கின்றன, என்னென்ன அசாத்தியங்கள் இருக்கின்றன அவற்றைத் தீர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் என்ன என்று உங்கள் மனதில் தோன்றும் பெறுமதியான எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?               

வியாழன், 6 ஜூன், 2013

வணக்கம்


 
வணக்கம் ,

நீண்ட நாட்களுக்குப் பின் “வல்வை அலையோசை”யின் ஐந்தாவது இதழ் வெளி வருகிறது. இப்படி ஒன்று வெளி வந்தது என்றே மறந்து போகும் அளவுக்கு, நீண்ட நாட்களின் பின். ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ஆக்கங்களும் இதில் அடங்குகின்றன. அது தான் பிரச்சனை. இந்தப் பிரச்சனை சம்பந்தமாக உங்களுடன் எனது எண்ணங்களைப் பகிர விரும்புகிறேன்.

Blog- அனேகர் தங்கள் எண்ணங்கள், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும், அதே சமயம் தங்கள் எழுத்துத் திறமைகளை வெளிப்படுத்திக் கொள்ளும் தளம். நான் அந்தத் தளத்தைச் சற்று வித்தியாசமாக, கதம்பமாக சில ஆக்கங்களைக் கொடுத்து சஞ்சிகையாக வெளியிட்டேன். ஒவ்வொரு இதழிலும் ‘உலகின் மர்மங்கள்’ என்ற பகுதியைத் தவிர அனைத்துமே சொந்த ஆக்கங்கள். அதைக் கூட ஐந்தாறு இணையத் தளங்களிலிருந்து தகவல்களைத் திரட்டி, அவற்றில்  மிகவும் சுவாரசியமான பகுதிகளைத் தெரிவு செய்து, அவற்றைத் தொகுத்து மொழி பெயர்த்து வழங்கியிருந்தேன். இப்படி எனது ஆக்கங்களைக் கதம்பமாகத் தொகுத்து சஞ்சிகையாக வெளியிட வேண்டும் என்று ஆசைப்படுவதால் (10 ஆக்கங்களுடன்)  ஒவ்வொரு வெளியீட்டுக்கும் பாரிய இடைவெளி ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ள முடியாமலிருக்கிறது.

எனது ஆக்கங்களைத் தனித்தனியாக வெளியிட்டால் வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.(தொகுத்து வெளியிடுகையில் எல்லோரும் எல்லா ஆக்கங்களையும் படிக்க மாட்டார்கள்) அதோடு இவ்வளவு பெரிய இடைவெளி வராது என்ற எனது மனைவியின், சில நண்பர்களின் வாதம் மிகச் சரியானது தான். ஆனால் சஞ்சிகையாக வெளியிட வேண்டும் என்ற எனது நீண்ட கால விருப்பம் நிறைவேறாமல் போய் விடும். இதற்கு உங்கள் மனதில் ஏதேனும் தீர்வு இருந்தால் தயவு செய்து எனக்குத் தெரிவிப்பீர்களா?

‘வல்வை அலையோசை’ 01.01.2012 வெளியிடப்பட்டதிலிருந்து இன்று வரை, அதாவது ஒரு வருடமும் 5 மாதங்களும் வரையான காலப்பகுதி வரை இதற்குக் கிடைத்த ‘பார்க்கப்பட்ட பக்கங்களின்’ (pageview) எண்ணிக்கை 7010. பெரிய இணையத் தளங்களுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமே இல்லை தான். என்றாலும் மிகக் குறுகிய வாசகர் வட்டத்தைக் கொண்ட ‘வல்வை அலையோசை’ இந்த இலக்கை எட்டியதே என்னைப் பொறுத்த வரை பெரிய விடயம் தான். இலக்கு என்று பெரிதாக ஒன்றுமே நான் நிர்ணயித்துக் கொள்ளவில்லை என்ற போதிலும் வருடத்திற்கு 2000 pageview வந்தாலே போதும் என்று தான் நான் நினைத்திருந்தேன். எப்படியோ, நான் நினைத்ததை விட மிக அதிகமாகப் பங்களித்த வாசகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.    

நான் பகுதி நேர வேலையாகச் செய்ய உத்தேசித்திருக்கும் ஒரு சேவை பற்றி “உதயமாகிறது ஒரு புதிய சேவை” பகுதியில் தெரிவித்திருக்கிறேன். அதை வாசித்து விட்டு உங்களுக்கோ அல்லது நீங்கள் அறிந்தவர்களுக்கோ அந்த சேவை தேவைப்படும் போது தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

“சுனாமி 2004” தொடர்கதை வாசித்தவர்கள் பெரும்பாலும் கதையை மறந்திருப்பீர்கள். அதற்காக முன் கதைச்சுருக்கம் நான் தரப் போவதில்லை. தயவு செய்து மீண்டும் ஒரு முறை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கதையைப் படித்தவர்கள் சிலர் ‘இது உங்கள் கதையா’ என்று கேட்கிறார்கள். நிச்சயமாக இல்லை. ஆனால் ஒன்றிரண்டு சம்பவங்கள் எனக்குச் சில வேளைகளில் பொருந்தக் கூடும். அதே போல் எனது நண்பர்கள், மற்றும் அறிந்தவர்களுக்கும் சில சம்பவங்கள் பொருந்தக் கூடும். அந்த ஒன்றிரண்டு சம்பவங்களைத் தவிர இது முழுக்க முழுக்க எனது கற்பனையில் உதயமானது தான்.

‘ஆனந்தி என்ரபிரைசஸ்’ விளம்பரத்தை தனது வேலைப்பளுவுக்கு மத்தியிலும் மிக அழகாக வடிவமைத்துத் தந்த சதுர்ஷனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

இனி... வாசியுங்கள்.

உள்ளடக்கம்       

1.இது தான் IELTS.

2.தொண்டைமானாற்றுப் பாலத்தின் பொறியியலாளருடன் ஒரு நேர்காணல்.

3.தொண்டைமானாறு, அச்சுவேலி பாதையின் அவலம்......... தொடர்கிறது.

4. பிரமிக்க வைக்கும் பிரமிட்டுக்கள்.

5. சுனாமி 2004 (ஐந்தாம் அத்தியாயம்)

6. வஜ்ராசனம்

7. உதயமாகிறது ஒரு புதிய சேவை.

8. தெருமூடிமடம்

9. மனிதர்கள் இல்லாத தேசம்.

10. சில விசேட சொற்றொடர்கள்.