வியாழன், 6 ஜூன், 2013

வஜ்ராசனம்


                                   
                                                          வஜ்ராசனம்
 
 

 
 

வஜ்ரம் என்றால் வைரம் என்று பொருள்படும். வஜ்ராசனத்தைச் செய்பவரின் உருவம் வைரத்தின் அமைப்பில் தோன்றுவதாலும், இதைச் செய்பவர்களுக்கு வைரமான அதாவது உறுதியான உடலமைப்பு கிடைக்கும் என்பதாலும் இந்த ஆசனத்திற்கு வஜ்ராசனம் என்ற பெயர் உண்டாகியிருக்கலாம். புராண காலப் பாத்திரங்களுள் இந்திரனின் மிகப் பெரிய பலமாக விளங்கியது வஜ்ராயுதமாகும். அமர்ந்தவாறே செய்யக்கூடிய ஆசனங்களுள் ஒன்று வஜ்ராசனம். மிகுந்த சிரமப்பட்டுச் செய்கின்ற ஆசனங்களை விட இலகுவாகச் செய்கிற சில ஆசனங்கள் நல்ல பலனைத் தரும். அவற்றில் ஒன்றாக வஜ்ராசனத்தைக் கருதலாம். இதன் இன்னொரு சிறப்பு என்னவெனில் எந்த நேரமும் செய்யக் கூடிய அதாவது சாப்பிட்ட பின்னரும் கூடச் செய்யக் கூடிய ஆசனம் இதுவாகும்.

செய்யும் முறை

இந்த ஆசனத்தைச் செய்யக்கூடிய முறை பற்றி அகத்திய முனிவர் பின்வருமாறு விளக்குகிறார்.

"சாரப்பா வஜ்ஜிர ஆசனத்தைக் கேளு

சங்கையுடன் பரடுமேல் பரடு போட்டு

சேரப்பா புட்டத்தில் கூடி கால் வைத்து

செம்மையுடன் தானிருக்கத் திறந்தானாமே."

 

இதனை வாசித்து விளங்காதவர்கள் ......

யாரப்பா அகத்தியன்? நீ

சொல்லப்பா விளங்குகிற மாதிரி.

என்று கேட்க நினைக்கக் கூடும். 

அதாவது இரண்டு கால்களிலும் முட்டி போட்டு அமர்ந்து, இரண்டு கால் பாதங்களின் மேற்பக்கமும் தரையில் படுமாறு, இரண்டு காற் பெருவிரல்களும் ஒன்றையொன்று பார்க்குமாறு வைத்துக் கொண்டு பின் பக்கங்களை குதிக்கால்களால் தாங்கியவாறு கைகளைத் தொடையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு தியானத்திலோ அல்லது சாதாரணமாகவோ இருக்கலாம்.இதைச் செய்யும் போது முள்ளந்தண்டும் பார்வையும் நேராக இருத்தல் வேண்டும்.

இதன் நன்மைகள்.

1.   தட்டையான பாதங்கள் சரியான வடிவத்தைப் பெறும்.

2.   விரல்களில் வலி, குதிகால்வலி, தசைச்சுளுக்குக்கு அற்புதமான மருந்து.

3.   முழங்கால் நெகிழ்வுதன்மையானதாகவும், அதே சமயம் வலிமையானதாகவும் மாறும்.

4.   சமிபாட்டுக்கு உதவி செய்யும்.

5.   மனோதிடம் உண்டாகும்,

6.   உடலில் தேங்கும் கழிவு நீரை வெளியேற்றும்.

7.   காலில் நரம்பு சுருண்டிருந்தால் அது நீங்கும்.

8.   பிறப்பு உறுப்புக்களுக்குக் கூடுதலான குருதி பாய்வதால் அவற்றிலுள்ள சில குறைபாடுகள் நீங்குவதற்கான வாய்ப்புண்டு.   

 
இது ஒரு மிகச் சாதாரணமான யோகாசனம் என்ற போதும் கூட ஆண்கள்... அதுவும் இளம் வயதைத் தாண்டியவர்களுக்குச் சற்று சிரமமானதாகவே இருக்கும். பொதுவாகப் பெண்களுக்கு அப்படியல்ல. எங்கள் நடைமுறை வாழ்வில், மங்கள அமங்கல வைபவங்களின் போது ஆண்கள் கதிரைகளில் அமர்ந்து சளசளத்துக் கொண்டிருப்பதையும்  பெண்கள் வஜ்ராசனத்திலிருந்து சற்றே வேறுபட்டு இரண்டு பாதங்களையும் ஏதாவது ஒரு பக்கமாக வைத்துக் கலகலத்துக் கொண்டிருப்பதையும் காணலாம். “நாங்க ஆசனங்களில மட்டுமில்ல, வஜ்ராசனத்தில கூட அமர்வோமில்ல” என்று முயற்சிக்கும் ஆண்களில் அனேகம் பேர் முறிவு, நெரிவு சிகிச்சைக்குப் போக வேண்டியிருக்கும். இதை வாசிக்கும் போது கூட “இவன் கிடக்கிறான். நான் செய்து காட்டுகிறேன் பார்” என்று சிலருக்கு வெறியே வரக் கூடும். இதனைச் சடாரெனச் செய்ய முயற்சித்தால் படாரெனக் கால் முறிந்து தடாரென வைத்தியரிடம் போக வேண்டியிருக்கும்.
 சரி, அப்படியாயின் இதனைச் செய்வதற்கு என்னதான் வழி என்று நீங்கள் நினைக்கக் கூடும். கதிரையில் அமர்ந்து கொண்டே கூட இதற்கான ஆரம்பப் பயிற்சியைச் செய்யலாம். கதிரையில் அமர்ந்து கொண்டே பாதத்தைச் சற்று வளைத்து நகப்பக்கம் தரையில் படுமாறுகொஞ்சம் கொஞ்சமாக வளைத்து வந்தாலே சிறிது காலத்தில் இந்த ஆசனம் கைகூடி வந்து விடும். ஆனால் அதற்காக வஜ்ராசனம் செய்கிறேன் பேர்வழி என்று வைபவங்களில் பெண்களுடன் போய் இருந்து விடாதீர்கள். அதன் பின்பு விழும் தர்ம, அதர்ம அடிகளில் இருந்து தப்புவதற்கு கைவசம் ஆசனங்கள் எதுவுமில்லை. யோகாசனத்தை அப்படியே மெய்வல்லுனர் நிகழ்வாக மாற்றி நீளம் பாய்தல், அகலம் பாய்தல், ஓடுதல், தடை தாண்டி ஓடுதல் ஆகியவற்றைச் செய்து தான் தப்பிக்க வேண்டி வரும்.     
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உதயமாகிறது புதிய சேவை!

                                        உதயமாகிறது ஒரு புதிய சேவை!


உங்களுக்குத் தேவைப்படும் பொருட்களை யாழ்ப்பாணத்திலிருந்து பெற்றுக் கொள்ளவும், முக்கியமான நாட்களில் உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பரிசுகளை வீட்டிற்கே அனுப்பிக் கொள்ளவும் வாய்ப்பான ஒரு சேவை!
யாழ்ப்பாணத்திலிருந்து ஏதேனும் பொருட்கள் உங்களுக்குத் தேவைப்படுகிறதெனில் அல்லது ,யாழ்ப்பாணத்தில் இருக்கும் உங்கள் அன்புக்குரியவர்கள் யாருக்கேனும் ஏதேனும் பொருட்களை யாழ்ப்பாணத்திலேயே வாங்கி அவர்களிடம் சேர்ப்பிக்க விரும்புகிறீர்களெனில் உங்கள் தொடர்புகளுக்கு........
பெயர்                                               : ஆ.தீபன்
கைத்தொலைபேசி இலக்கம்: 0094777115876
மின்னஞ்சல் முகவரி               : theebanvalvai@yahoo.com
வங்கி விபரங்கள்                        :இலங்கை வங்கி,வல்வெட்டித்துறைக் கிளை,
                                                              நடைமுறைக் கணக்கிலக்கம் 73307443   

 

மேற்கொண்டு, இதனைப் பற்றி அறியவும்  இதற்கான எண்ணம் எப்படி உதயமானது என்று  அறியவும் விரும்புபவர்கள் தொடர்ந்து படியுங்கள். 
வல்வை  அலையோசையின் முதலாவது இதழ் வெளிவந்து சில நாட்களில் எனது நண்பன் ஒருவனுடன்  வல்வை அலையோசைக்குக் கிடைத்த வாழ்த்துக்கள், அறிவுரைகள், கருத்துக்கள் பற்றி மகிழ்ச்சியாகக் கதைத்த போது யதார்த்தவாதியான அந்த நண்பன் கேட்ட கேள்வி “இதை வெளியிடுவதால் ஏதேனும் பண ரீதியான நன்மை கிடைக்கிறதா?” என்பது தான். நானும் “அப்படி ஒன்றுமில்லை. ஒரு மனத்திருப்திக்காகத் தான்” என்று பதிலளித்தேன். “அதற்காக இவ்வளவு நேரம் இதற்காகச் செலவழிக்க வேண்டுமா?” என்று மீண்டும் கேட்க நானும் “நாங்கள் செய்யும் எல்லாவற்றுக்காகவும் பணத்தை எதிர்பார்க்க முடியுமா?ஆத்ம திருப்திக்காகவும் நாங்கள் சில காரியங்களைச் செய்வதுண்டு தானே, ஏன் நீங்கள் அப்படி ஒன்றும் செய்வதில்லையா?” என்று வாக்குவாதப்பட்டதுடன் அந்தக் கதை அப்படியே முடிந்து விட்டது.
அதன் பின்பு வேறு ஒருத்தரும் அந்த விடயம் பற்றிக் கதைக்காமல் விட்டாலும் அப்போது எழுந்த உறுத்தலானது மனதின் ஓரத்தில் அப்படியே நின்று விட்டது. வல்வை அலையோசை ஆரம்பிக்கும் முன்னரே ஒரு இணையத்தளம் ஆரம்பித்து எனது கட்டுரைகளை அதில் பிரசுரிப்பதன் மூலம் எனது எழுத்தையும் மெருகூட்டி(?) அதே சமயம் ஏதேனும் வழியில்(விளம்பரம்) அந்த இணையத்தளம் மூலமாக உழைத்தால் மனத்திருப்திக்கு மனத்திருப்தியுமாயிற்று, வருமானத்துக்கு வருமானமுமாயிற்று என்று யோசித்திருக்கிறேன். ஆனால் திருப்தியான ஒரு எண்ணமும் உதயமாகவில்லையாதலால் இப்போது மனத்திருப்திக்காகச் செய்வோம். பின்னர் சந்தர்பம் கிடைக்கும் போது வருமானத்தைப் பார்த்துக் கொள்வோம் என்று தான் வல்வை அலையோசையை ஆரம்பித்தேன். இது சம்பந்தமாக முதலாவது இதழில் பிரஸ்தாபித்ததாக ஞாபகம்.
அதன் பின்பு “வல்வை அலையோசை “மூலமாக உழைப்பதற்கான ஒரு வாய்ப்புத் தானாகத் தேடி வந்தது   வந்தது. வெளி நாட்டிலுள்ள எனது நண்பன் ஒருவன் மூலமாக. வல்வை அலையோசையை ஒரு வர்த்தக ரீதியான இணையத் தளமாக்குவதற்கான செலவையும், விளம்பரங்கள் தேடித்தரும் பொறுப்பையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும் கிடைக்கும் இலாபத்தை ஏதேனும் ஒரு உடன்பாட்டுக்கு வந்து பிரித்துக் கொள்வோம் என்றும் அந்த நண்பன் கூறிய போது உள் மனது சந்தோசத்தில்  பரபரத்ததென்னவோ உண்மை தான். ஆனால் எனது பலவீனம் பற்றி எனக்குத் தெரியும் தானே. வர்த்தக ரீதியான இணையத் தளத்தில் எழுதுமளவுக்கு எனது எழுத்தில் ‘கனம்’ இல்லை. எனது எழுத்தை நம்பி முதலிடும் விஷப்பரீட்சையை நான் செய்யலாம். ஆனால் மற்றவர்களைச் செய்யவிடக் கூடாது என்று நான் உடன்படவில்லை.   
அண்மையில் அவுஸ்திரேலியாவிலுள்ள எனது நண்பனொருவனுக்கு விருப்பமான பொருள் ஒன்றை பொதியனுப்பும் சேவை மூலமாக அனுப்பிய போது தான் இந்த எண்ணம் உதயமாயிற்று. பொதியனுப்பும் சேவை வழங்கும் எத்தனையோ நிறுவனங்கள் இருப்பினும் அவர்கள், பொருட்களை யாராவது வாங்கிக் கொண்டு போய் ஒப்படைத்தால் தான் அனுப்புவார்கள். வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு ஏதேனும் பொருட்கள் இங்கிருந்து தேவைப்படுகிறதெனில் அவர்கள் எல்லோருமே தங்கள் குடும்பம் மூலமாகவோ அல்லது சொந்தம் மூலமாகவோ பெற்றுக் கொள்ள விரும்புபவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்களுக்குச் சிரமத்தைக் கொடுக்காமல் இதைத் தொழிலாக மேற்கொள்பவர்களிடம் இந்த வேலையை ஒப்படைக்க விரும்புபவர்கள்  ஒரு சிலராவது இருக்கக் கூடும். அதே போல் இங்குள்ளவர்களுக்கு ஏதேனும் பரிசுப் பொருட்களை அனுப்ப விரும்புபவர்கள் இருக்கக் கூடும். வெளிநாட்டிலிருந்து பரிசுப்பொருள் அனுப்புவதானால் நிறையப் பணம் செலவாகும். அதற்குச் செலவிடுவதிலும் பார்க்க எத்தனையோ மடங்கு குறைவாகச் செலவிட்டால் இங்கேயே நல்ல திருப்தியான பரிசு வாங்கி விட முடியும். இதனையும் தங்களுக்குக்குத் தெரிந்தவர்கள் மூலம் செய்விக்க விரும்பாது, அதாவது அவர்களைச் சிரமப்படுத்த விரும்பாது செய்ய விரும்புபவர்கள் இருக்கக் கூடும். அதோடு சிலருக்கு இவ்வளவு உரிமையாகச் சொல்லிச்  செய்விப்பதற்கு ஆட்களும் இருக்க மாட்டார்கள். அவர்களுக்கென ஒரு சேவையை ஆரம்பித்தால் என்ன என்று தோன்றியது.
உதாரணத்திற்கு ஜெர்மனியில் இருக்கும் ஒருவர் என்னை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கைத்தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு கைதடியிலிருந்து ஒரு சித்த வைத்திய மருந்தொன்று தேவைப்படுகிறது. மருந்தின் விலை தெரிந்திருக்கும் பட்சத்தில், அதன் விலை, போக்குவரத்துச் செலவு உள்ளடங்கலாக எனது சேவைக் கட்டணம்(வெளிநாட்டு நாணயத்தில் மாற்றிப் பார்க்கும் போது உங்களுக்கு எனது சேவைக் கட்டணம் ஒன்றுமில்லாததாகத்  தோன்றக் கூடும்),மற்றும் அதனை அனுப்புவதற்கான செலவு (உங்கள் விருப்பத்திற்கேற்ப சாதாரண தபாற் சேவை, சாதாரண courier சேவை, விரைவு courier சேவை) என எல்லாச் செலவுகளுமாகச் சேர்த்து இவ்வளவு என்று ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தைத் தெரிவிப்பேன். அவருக்கு அதில் உடன்பாடாயின் அந்தப் பணத்தை இலங்கையிலுள்ள எனது வங்கிக் கணக்கு ஒன்றுக்கு வைப்புச் செய்ய வேண்டும். பணம் கிடைத்ததும் அவருக்குரிய பொருள் அனுப்பி வைக்கப்படும். பொருளின் பற்றுச் சீட்டு,(கிடைத்திருந்தால்) பொதியனுப்பும் சேவையின் பற்றுச் சீட்டு என்பனவும் பொருளோடு சேர்த்து  அனுப்பி வைக்கப்படும் அல்லது அவருக்கு மின்னஞ்சல் இருக்குமாயின் scan பண்ணி அனுப்பி வைக்கப்படும்.
 
 

அதே போல் பிரான்சில் இருக்கும் ஒருவர் வல்வெட்டித்துறையிலுள்ள தனது தாயின் பிறந்த நாளன்று ஏதேனும் பரிசுப் பொருளைச் சேர்ப்பிக்க விரும்புகிறார் எனில் என்ன மாதிரியான பொருள் என்றும், எவ்வளவு தொகைக்குள் வாங்க விரும்புகிறார் என்று தெரிவித்தால் பொதியனுப்பும் சேவைக்கும் எனது சேவைக்குமான கட்டணத்தைத் தெரிவிப்பேன். அவர் அதற்கு உடன்பட்டு எனது வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்புவாராயின் உரிய நேரத்தில் அவ்வேலை செய்து முடிக்கப்பட்டு  மின்னஞ்சல் தரப்பட்டிருக்குமாயின்  உரிய பற்றுச் சீட்டுகள் scan பண்ணி அனுப்பி வைக்கப்படும்.
 

 
ஆரம்பத்தில் இவ்வேலையைத் தெரிந்தவர்கள், அறிந்தவர்களுக்கு மட்டும் தான் செய்ய எண்ணியிருக்கிறேன். சரியாகச் சொல்வதானால் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் மட்டும் தான் என்னை நம்பி வேலையை ஒப்படைக்கக் கூடும். ஏனெனில் ‘வல்வை அலையோசை’யில் மட்டுமே  இது பற்றி அறிவிக்கவிருக்கிறேன்.  என்னென்ன நடைமுறைப் பிரச்சனைகள் இருக்கின்றன என்று அறிவதற்கும், அனுபவம் பெறுவதற்கும்  இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி கொண்டு வெளி வட்டத்திற்கு நகரலாம் என்று யோசிக்கிறேன்.
 நண்பர்கள், உறவினர்கள், ஏனைய என்னை அறிந்த, தெரிந்தவர்கள், ‘வல்வை அலையோசை’யைப் படிப்பவர்கள் அனைவருக்கும் எனது தாழ்மையான வேண்டுகோள்....  உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் இப்படி ஒரு சேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பதை, வாய்ப்புக் கிடைக்கும் போது தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக இந்த சேவை யாருக்குப் பொருத்தமோ அவர்களிடம் பிரஸ்தாபிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி !

 
 
 
 





 

புதன், 5 ஜூன், 2013

தெருமூடிமடம்


                                                            தெருமூடிமடம்
 
ஒரு காலத்தில் நீங்கள் வாழ்ந்த இடத்திற்கு அருகில் இருப்பதாலும்(அனேகமான வாசகர்களைக் குறிப்பிடுகிறேன். சில விதிவிலக்குகள் இருக்கக்கூடும்), சற்று வித்தியாசமான பெயராக இருப்பதாலும் பெரும்பாலோனோருக்கு இந்தப் பெயரும் சிலருக்கு இந்த இடமும் கூடப் பரிச்சயமானதாக இருக்கக் கூடும். இது அமைந்திருப்பது பருத்தித்துறை நகரப் பகுதியில், தும்பளைக்குப் போகும் வீதியில். அதன் பெயரே இந்த மடம் எப்படிப்பட்ட அமைப்பைக் கொண்டிருக்கிறது என்று சொல்லி விடும். தெருவின் இரு பக்கமும் அமைந்துள்ள மடத்தை ஒரே கூரை மூடியிருப்பதால் உண்டான காரணப் பெயரே தெருமூடிமடம்.


புராதன இலங்கையில் பருத்தித்துறை புகழ்பெற்ற நகரமாயிருந்ததற்குக் காரணம் கொழும்பு காலியிலிருந்து மட்டுமல்ல இந்தியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, பர்மா முதலான நாடுகளிலிருந்தும் பல்வேறுபட்ட பொருட்கள்(பருத்தித்துணி, பட்டுத்துணி தந்தத்தினால் செய்யப்பட்ட பொருட்கள், வாசனைத்திரவியங்கள், கோதுமை) அங்குள்ள துறைமுகத்தில் இறங்கியதும் அதுபோல் பல்வேறுபட்ட பொருட்கள்( அரிசி, வெங்காயம், புகையிலை) அங்கிருந்து ஏற்றப்பட்டதும் தான். அதாவது சரித்திரத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே பொருட்களை ஏற்றுபவர்களுக்கும், இறக்குபவர்களுக்கும் பருத்தித்துறையில் நல்ல வேலை வாய்ப்புக் காணப்பட்டது. முக்கியமாக, இலங்கையில் நிலவும் காலநிலைக்கு ஏற்ற துணியாகையால் பருத்தித்துணி அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டது. பருத்தி அதிகளவில் இறக்கப்பட்ட துறை என்பதாலேயே பருத்தித்துறை என்ற காரணப் பெயர் உண்டாயிற்று என்ற விடயம் அனேகர் அறிந்ததே.
 
 
இவ்வாறு பொருட்களை ஏற்றுபவர்களும், இறக்குபவர்களும் இளைப்பாறுவதற்காகக்  கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மடமே தெருமூடிமடமாகும். இங்கு தங்கி இளைப்பாறுபவர்கள் தமது களைப்பை இறக்கி வைத்து உற்சாகத்தை ஏற்றிக் கொள்வார்கள். சிலர் போதையை ஏற்றிக் கொண்டு சுயநினைவை இறக்கி வைப்பார்கள். இன்னும் சிலர் கவலைகளை  இறக்கி வைத்து மகிழ்ச்சியை ஏற்றிக் கொள்வார்கள். ஆக மொத்தத்தில் ஏற்றியிறக்கும் மக்களுக்காகக் கட்டப்பட்ட இந்த மடமும் கூட, ஒரு ஏற்றியிறக்கும் இடமாகத் தான் காணப்பட்டது.
 

மனிதர்கள் இல்லாத தேசம்-பொஸ்னியத் திரைப்படம்


         No Man’s Land (மனிதர்கள் இல்லாத தேசம்)-பொஸ்னியத் திரைப்படம்

கண்ணிவெடி பற்றி உங்களுக்குத் தெரிந்தது என்ன? A9 வீதியால் போகும் போது, வடமராட்சிக் கிழக்குப் பக்கம் போகும் போது ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’என்ற பழமொழியைப் பொய்யாக்கிக் கொண்டு கண்ணிவெடி அகற்றிக் கொண்டிருக்கும் மனிதநேயப் பணியாளர்களைப் பார்த்திருப்பீர்கள். அவை இலங்கை ராணுவத்தால், விடுதலைப்புலிகள் தங்கள் எல்லைக்குள் ஊடுருவாமல் இருப்பதற்காக  அல்லது விடுதலைப்புலிகளால், இலங்கை ராணுவத்தினர் தங்கள் எல்லைக்குள் ஊடுருவாமல் இருப்பதற்காக நிலத்தில் புதைக்கப்படும் ஆட்கொல்லிகள். பின்பு எதிரி, அல்லது பொது மக்கள், அல்லது சில வேளைகளில் கண்ணிவெடியை விதைத்தவர்களே அப்பகுதியினுள் நுழையும் போது   அழுத்த விசையால் தானாகவே தூண்டப்பெற்று வெடித்து அங்க சேதங்களை(பெருப்பாலும்) அல்லது உயிர்ச் சேதங்களை(மிகச் சில வேளைகளில்) விளைவிக்கும் குண்டுகள். இதெல்லாம் தெரிந்தது தானே என்று அனேகர் நினைப்பீர்கள். சரி, ‘கால் வைத்தவுடன் கண்ணிவெடி வெடிக்குமா?’ என்று கேட்டால் உங்களில் சிலர் ‘பின்னே வெடிக்காமல் என்ன செய்யும்?’ என்று கேட்பீர்கள். அப்படியாயின் நீங்கள் கண்ணிவெடி பற்றிப் பிழையாக அறிந்து வைத்திருக்கிறீர்கள் என்றாகிறது. ஆமாம். கால் வைக்கும் போது கண்ணிவெடி வெடிக்காது. வைத்து விட்டு எடுக்கும் போது தான் வெடிக்கும். ‘சரி தான். வைக்கும் போது வெடித்தால் என்ன, எடுக்கும் போது வெடித்தால் என்ன? வைத்தவன் எடுக்காமல் இருக்க முடியுமா? எப்படியோ சாவது நிச்சயம் தானே.’ என்று அலட்சியமாக நினைக்க வேண்டாம். கண்ணிவெடியைக் கையாண்டவர்களுக்கும், களத்தில் நின்றவர்களுக்கும் தான் இந்தத் தகவல் எவ்வளவு முக்கியமானது என்று தெரியும். மிகவும் நுண்ணிய, அதே சமயம் மிக முக்கியமான இந்த விடயத்தை மையமாக வைத்து பொஸ்னியர்களுக்கும் சேர்பியர்களுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டுப் போரின் பின்னணியில் பொஸ்னியாவில் எடுக்கப்பட ஒரு திரைப்படம் தான் ‘No man’s land’
 

மிகவும் மோசமாகப் பனி சூழ்ந்திருக்கும் ஒரு பிரதேசத்தில் எதிரியை நோக்கிச் செல்லும் வீரர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் இதற்கு மேல் செல்ல வேண்டாமென்று நினைத்து இரவு அந்த இடத்தில் தங்குகிறார்கள். அடுத்த நாள் காலை, மெல்ல மெல்லச் சூரிய ஒளி பரவும்போது தான் எதிரிகளுக்கு மிகவும் அருகில் இருப்பதை அறிகிறார்கள். அவர்கள் சுதாரித்துக் கொள்வதற்குள் எதுரிகளின் துப்பாக்கிகள் அவர்களை நோக்கி ரவைகளை உமிழ்கின்றன. சூடு பட்டவர்கள் செத்து விழ ஏனையவர்கள் தங்கள் நாட்டுப் பகுதியை நோக்கி ஓட அவர்களை நோக்கி பீரங்கிகளும் முழங்குகின்றன. இந்தத் தாக்குதலில் இருவரைத் தவிர ஏனையோர்கள் மடிய, அவர்களிருவரும் அருகிலுள்ள நீண்ட கால்வாயை நோக்கித் தூக்கி வீசப்படுகிறார்கள்.
யாரேனும் உயிரோடு இருந்தால் அவர்களைத் தீர்த்துக் கட்டுவதற்காக நினோ என்ற எதிரி வீரனும் இன்னொருவனும் அனுப்பப்படுகிறார்கள். எதிரிகள் வருவதை அறிந்து சிக்கி என்ற வீரன் ஒளிந்து கொள்ள சீரா என்ற வீரன் காயமடைந்து சுயநினைவிழந்து கிடக்கிறான். சுயநினைவிழந்திருக்கும் சீராவின் உடலுக்குக் கீழே கண்ணிவெடியை வைத்து விட்டு இருவரும் எழும் போது ஒளிந்திருந்த சிக்கி அவர்களை நோக்கிச் சுடுகிறான். நினோ காயம்பட்டு விழ மற்றவன் இறந்து விடுகிறான்.
நினோவைப் பணயக் கைதியாக வைத்துத் தப்பிக்க நினைக்கும் சிக்கி அவனைக் கொல்லாமல் விடுகிறான். இதற்கிடையில் நினைவு திரும்பும் சீரா எழ முயற்சிக்கும் போது சிக்கி கண்ணி வெடி ஆபத்தைப் பற்றி எச்சரித்து அவனைத் தொடர்ந்து படுத்திருக்குமாறு சிக்கி கூறுகிறான்.
அதன் பின்னர் இரண்டு எதிரிகளும் ஒரு முடிவுக்கு வந்து கால்வாயை விட்டு வெளியேறி வந்து தங்கள் பனியனைக் கழற்றி தங்கள் தங்கள் பகுதிகளை நோக்கி அசைத்துக்  காட்டுகிறார்கள். இரண்டு எல்லையில் இருப்பவர்களும் அவர்களைப் பார்த்து விட்டு ஐக்கிய நாடுகள்  சபைக்குத் தகவல் தெரிவிக்கிறார்கள்.
 
 
சற்று நேரத்தில் அங்கு வரும் ஐக்கிய நாடுகள் சபையின் கவச வண்டியில் நீல் என்றொரு அதிகாரி வருகிறார். அங்கிருக்கும் நிலைமை பற்றி மேலிடத்திற்கு அறிவித்ததும், வீரர்கள் மூவரையும் அப்படியே விட்டு விட்டு  உடனே கிளம்பி வருமாறு அவருக்கு உத்தரவு கிடைக்கிறது. அவர் புறப்படும் போது அவரோடு கிளம்பிச் செல்ல முனையும் நினோ மீண்டும் சிக்கியால் காலில் சுடப்படுகிறான்.

நீல் செல்லும் வழியில் அவரது வாகனத்தை ஒரு பெண் நிருபர் வழிமறித்து நீல் மேலிடத்துடன்  தொலைத்தொடர்புக் கருவி மூலம் நடத்திய உரையாடலை ஒட்டுக் கேட்டதாகவும் வீரர்களைக் காப்பாற்ற முயற்சி எடுக்காததைப் பற்றித் தொலைக்காட்சியில் தெரிவிக்கப் போவதாகவும் தெரிவிக்க நீல் மீண்டும் மேலிடத்துடன் தொடர்பு கொண்டு நிருபரை மேலிடத்துடன் கதைக்கச் சொல்கிறார். நிறுபரின் மிரட்டலுக்குப் பண்ணியும் மேலதிகாரி கண்ணிவெடி செயலிழக்கச் செய்யும் நிபுணரோடு சில ஐ.நா வீரர்களையும் அனுப்புவதாகக் கூறி நீலை மீண்டும் அவ்விடத்திற்குப் போகுமாறு பணிக்கிறார்.

இதற்கிடையில் பெண் நிருபர் அனுப்பிய தகவல் மூலம் அங்கு நிறைய நிருபர்கள் வந்து சேர்க்கிறார்கள். இதன்போது  சிக்கியின் கவனம் கவனம் திசை திரும்பி விட அதனைப் பயன்படுத்தி தன்னைச் சுட்டதற்குப் பழி வாங்குவதற்காக நினோ அவனைக் கத்தியால் குத்துகிறான். ஐ.நா வீரர்கள் அவர்களைச் சமாதானம் செய்து பிரிக்கிறார்கள்.
 

நிலைமையின் தீவிரம் அறிந்து காண்ணிவெடி அகற்றும் நிபுணருடன் ஐ.நா மேலதிகாரியும் அங்கு வருகிறார். கால்வாயின் ஏனைய பகுதிகளிலும் கண்ணிவெடிகள் இருக்கலாம் என்பதால் ஒருத்தரும் கால்வாயினுள் இறங்க வேண்டாமென்று கட்டளையிடும் அவர் அந்த இடத்தை விட்டுத் தூர விலகிப் போகுமாறு கூறுகிறார். ஐ நா வீரர்கள் சிக்கியையும் நினோவையும் கூட அங்கிருந்து வெளியேற்றுகிறார்கள். சீராவுக்குத் தான் மேலே இருப்பதாகவும் நிலைமை விரைவில் சீராகி விடும் என்றும் கூறி சிக்கி தான் சிக்கியிருந்த கால்வாய்க்கு வெளியே வருகிறான்.
கண்ணிவெடி நிபுணர் கவச உடையுடன் கால்வாயினுள் இறங்குகிறார். அசையாமற் படுத்திருக்கும் சீராவுக்கருகில் குனிந்து கண்ணிவெடியைப் பற்றிப் பரிசோதிக்க முயற்சிக்கிறார். அருகில் படுத்திருக்கும் சீராவைச் சற்றுக் கூட அசைக்காமல் கண்ணிவெடியைப் பற்றி அறிந்து கொள்ள அவருக்கு முடியாமற் போகிறது
 

வெளியே வரும் நிபுணர் முதலில் அது என்ன மாதிரியான கண்ணிவெடி என்று முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்று சொல்ல, நீல் அது போன்ற ஓர் கண்ணிவெடியைக் காட்டுகிறார். அதனைப் பார்த்ததும் நிபுணர் மனம் தளர்ந்து ‘இது போன்ற கண்ணி வெடிகளை ஒரு முறை வைத்தால் பின்பு அதனைச் செயலிழக்கச் செய்வது இயலாத காரியம் என்று சொல்கிறார்.
இதற்கிடையில் நிலைமையின் தீவிரம் அதிகமாகியதால் ஐ.நா அமைதிப் படையின் தலைவர் ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார். அவரிடம் விஷயம் சொல்லப்படுகிறது. சீராவைக் காப்பாற்ற முடியாது என்று நிருபர்களிடம் சொன்னால் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் ஒரு நாடகமாடத் திட்டமிடுகிறார்கள். அதன்படி  மீண்டும் கண்ணிவெடி நிபுணர் ஐ.நா அமைதிப்படையின் தலைவரின் கூற்றுப்படி கால்வாயினுள் இறங்கி சீராவின் அருகில் போய் அமர்கிறார்.
ஐ.நா அமைதிப் படைத் தலைவர் அந்த இடத்தை விட்டு  சற்று விலகி வரும் பொது அவரைச் சூழ்ந்து கொள்ளும் நிருபர்கள் கண்ணிவெடியின் மேல் படுத்திருக்கும் சீராவைப் பற்றிச் சரமாரியாகக் கேள்விகள் கேட்கிறார்கள். அவரும் சீராவை மீட்கும் பணிகள் நடந்து கொண்டிருப்பதாகவும் காப்பாற்றிய பின் தானே அவர்களுக்கு அறிவிப்பதாகவும் சொல்கிறார். எல்லோரதும் கவனம் அவரில் இருந்த நேரம் தன்னைக் கத்தியால் குத்திய நினோவைப் பழி வாங்குவதற்காக சிக்கி அவனைச் சுடுகிறான். ஐ.நா படை வீரர்கள் பாதுகாப்புக்காக சிக்கியைச் சுட இருவரும் இரண்டு விடுகிறார்கள்.
சற்று நேரத்தில் கண்ணிவெடி செயலிழக்கச் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. காப்பாற்றப்பட்ட சீராவைப் பார்க்க விரும்புவதாக நிருபர்கள் கேட்க, சீராவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் உடனே வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவேண்டியிருப்பதால் இப்போது அவர்களிடம் காட்ட முடியாது என்றும் இது சம்பந்தமாக விரைவில் ஓர் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாகவும் அப்போது எல்லாச் சந்தேகங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு கூறி அவர் ஹெலிகாப்டரில் ஏறிச் செல்கிறார். போகும் போது பொஸ்னிய ,சேர்பிய தரப்பினர்களுக்கு தொலைத்தொடர்புக் கருவி மூலம் அந்தக் குறிப்பிட்ட இடம் அன்றிரவு கைப்பற்றப்படவிருப்பதாக ஒரு பிழையான தகவலையும் கூறி விடுகிறார்.  அன்றிரவு அந்த இடம் பலத்த பீரங்கித் தாக்குதலுக்கு உள்ளாகும் பட்சத்தில் அப்படியொரு சம்பவம் நடந்ததற்கான தடயங்கள் இல்லாமற் போய் விடுமென்ற எண்ணத்தில். 
இருட்டி விட்டால் அங்கிருந்து கிளம்புவது கடினம் என்று கூறி ஐ. நா படை வீரர்கள், நிருபர்கள் எல்லோரையும் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறுகிறார்கள். எல்லோரும் சென்றதும் கடைசியாக இது வரை ஒன்றும் பேசாமல் இருந்த நீல் புறப்பட்டுச் செல்கிறார்.
எல்லா வாகனங்களும் கிளம்பிச் சென்று கொண்டிருக்க உலகின் பார்வையில் காப்பாற்றப்பட்டதாகச் சொல்லப்பட்ட சீரா கண்ணீர் வழியும் முகத்துடன் தனது மனைவியின் புகைப்படத்தைப்ப பார்த்துக் கொண்டிருக்க மனதைக் உருக்கும் இசையுடன் திரைப்படம் நிறைவடைகிறது.
2001 ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம்  பிரான்ஸின் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது பெற்றதுடன் சிறந்த அயல்நாட்டுப் படத்திற்கான ஒஸ்கார் விருதும் பெற்றது. இதன் இயக்குனரும், இசையமைப்பாளருமான  டணிஸ் டனோவிக், ‘இந்தப் படத்தில் கதாநாயகன் யாருமில்லையே’ என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் “சாதாரணமான நடைமுறைச் சாத்தியமான இந்தக் கதைக்கு நடைமுறைச் சாத்தியமில்லாத, குதித்துப் பாய்ந்து பறந்து சண்டையிடும் கதாநாயகன் தேவையில்லை. நிஜ வாழ்க்கையில் அப்படி யாருமே செய்வதில்லை.” என்று பதிலளித்திருந்தார்.
இந்தக் கதையில் சீராவைக் காபாற்றுவது சாத்தியமில்லை என்று தான் அவனை விட்டு விட்டுப் போகிறார்கள்.அது பரவாயில்லை. ஆனால் எங்கள் நடைமுறை வாழ்வில் போர், சாலை விபத்து, இயற்கை அனர்த்தம் என்று காப்பாற்றக் கூடிய நிகழ்வுகளிலிருந்து எத்தனை பேரைக் காப்பாற்றத் தவறுகிறோம், தயங்குகிறோம் என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள்.      

 

சில விசேட சொற்றொடர்கள்-5(தொடர்ச்சி)


                                          சில விசேட சொற்றொடர்கள்-5 (தொடர்ச்சி)


41.Conversation piece: பொதுவாக எல்லோரும் ஆர்வமாகக் கதைக்கும்  ஓர் சுவாரசியமான அல்லது ஓர் வித்தியாசமான விஷயம். 

42.Jump to conclusion: போதுமான தரவுகள் அல்லது தகவல்கள் இன்றி ஒரு நிலைமையை ஊகித்தல்.

43.Be on a collission course: எதிர் காலத்தில் ஒரு முரண்பாட்டைத் தரக் கூடிய விஷயம் பற்றிக் கதைத்தல் அல்லது அதனைச் செய்தல்.

44.Every cloud has a silver lining: ஒரு துயரமான அல்லது கவலையான நிலையிலும் கூட ஒரு சின்ன மகிழ்ச்சியான விஷயம் இருக்கும்.

45.Be the brains behind: வெற்றிகரமான நடவடிக்கையைப் பின்னாலிருந்து இயக்கிய அதன் சூத்திரதாரி.

46.Back the wrong horse: தோல்வியடையும் சாத்தியம் அதிகமாக இருக்கும் ஒரு நபருக்கு ஆதரவு தெரிவித்தல்.

47.Turn the sword into plough shares: போருக்குப் பயன்படுத்திய பணத்தை அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குப் பயன்படுத்தல். 

48.Storm in a tea cup: முக்கியத்துவமே இல்லாத விஷயமொன்றுக்குக் கோபப்படுதல் அல்லது கவலைப்படல். 

49.Safety valve: மற்றவர்களின் மனம் பாதிக்காத வண்ணம் தனது கோபத்தையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் முறை. 

50.Turn the page: சிரமங்கள், துயரங்களிலிருந்து மீண்டு புதிதாக வாழ்க்கையைத் தொடங்குதல்.

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

வணக்கம்

வல்வை அலையோசை      

வணக்கம்,
ஒரு பெரிய சஞ்சிகை ஆசிரியரைப் போல,அல்லது பத்திரிகை ஆசிரியரைப் போல, அல்லது ஏதோ ஒரு பெரிய கூட்டம் எனது கதையை வாசிப்பது போல ஆசிரியர் பக்கத்தில் அல்லது ஆசிரியர் தலையங்கத்தில் உங்கள் எல்லோருடனும் அளவளாவுவதில் ஒரு சந்தோஷம். வைரமுத்து எழுதிய “காதலித்துப்பார்” எனும் கவிதையின் ஒரு பகுதி ஞாபகத்துக்கு வருகிறது.
“காக்கை கூட உன்னைக் கவனிக்காது. ஆனால் இந்த உலகமே உன்னைக் கவனிப்பதாய் உணர்வாய்.”
ஆனாலும் எழுதுவதற்குத் தேவையான எண்ணத்தைப் பெறுவதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணி.
“வல்வை அலையோசை”யின் மூன்றாவது இதழ் வெளிவந்து சரியாக நான்கு மாதங்களாகின்றன. தனியே blog business என்றாள் இந்த இடைவெளி வந்திருக்காது. Blog business உடன் block business உம் ஆரம்பித்தது, அதன் பின் ஏற்றுக் கொண்ட புது வேலை, அதன் மூலம் கிடைத்த பொறுப்புக்கள், அதோடு சேர்ந்து வந்த கற்பித்தல் தொழில் என்பன இந்த இடைவெளிக்குக் காரணமாகி விட்டன.
நண்பனொருவன் எவ்வளவு காலத்துக்கு ஒரு தடவை “வல்வை அலையோசை” வெளியாகவிருக்கிறது என்ற கேள்விக்கு ‘நேரம் அனுமதித்தால் ஒரு மாதத்துக்கு ஒரு தடவை’ என்று கூறியிருந்தேன். அது சாத்தியமில்லை என்று புரிந்து விட்டது. ஆனால் இனியும் கூட எவ்வளவு காலத்துக்கு ஒரு தடவை என்று திட்டமிட்டுக் கூற முடியாதிருக்கிறது. இதை வெளி விடும்போது வாசிக்கும் ஒன்றிரண்டு பேர்களுக்கும் எப்படியாவது அறிவித்து விடுகிறேனே. இனி தொடர்ந்து வாசியுங்கள்.
1.       முன்னாள் போராளிகளிடம் சில கேள்விகள்
2.       தொலைந்த நகரம்-அட்லாண்டிஸ்
3.       தொண்டைமானாறு அச்சுவேலி பாதையின் அவலம்
4.       இப்போது சொர்க்கம்-பாலஸ்தீனத் திரைப்படம்
5.       வல்வையின் வரலாற்று ஆவணக் காப்பகம்
6.       சில விசேட சொற்றொடர்கள்-தொடர்ச்சி
7.       சுனாமி 2004-நான்காவது இதழ் தொடர்ச்சி
8.       பஸ்சிமோத்தாசனம்
9.       ஊரணி தீர்த்தம்
10. வல்வை மக்களை ஒன்றிணைத்து உருவாகவிருக்கும் ஒரு புதிய அமைப்புக்கான அபிப்பிராயம் அறிந்த கூட்டம்